விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு

.
சொல் – மனம் – மொழி:


“இந்த விஷ்ணுபுரமே இடைவிடாது காலப்பெருக்கில் நிகழ்ந்து கொன்டிருக்கும் தியான மந்திரம் தான். ஒரு சொல் பிறக்கும். ஒலித்து ஓய்ந்து மவுனத்திற்குத் திரும்பும். மறுசொல் பிறந்து வரும். யாருடைய தியானம் இது?”

காவியம், கவிதை, இலக்கியம் எல்லாவற்றுக்குமான கச்சாப் பொருள் மொழி. அதன் அடிப்படை அலகு சொல். இவையனைத்தும் சிருஷ்டிகர செயல்பாட்டில் இயல்பாகப் பீறிட்டெழும் விஷயங்களா? அல்லது அடிப்படையில் மொழி என்பது ஒரு கட்டுமானம் மட்டும் தானா? எண்ணம், சொல், பொருள், மொழி இவற்றுக்கிடையே உள்ள உறவு என்ன? நாதம், த்வனி, இசை இவற்றுக்குள் உள்ள உறவு என்ன? போன்ற கேள்விகள் நாவலின் ஊடாக தத்துவார்த்த தளங்களில் எழுந்து வருகின்றன.

“ஒருவேளை இப்போதே என் மனம் தடுமாறி விட்டிருக்கிறதா? சொற்களுக்காகத் தவமிருந்தவன் நான். இப்போது சொற்களை வெறுக்கிறேன். இச்சொற்பிரவாகத்தை ஒரு கணம் நிறுத்தி விட்டு தூங்கினால் போதும். பெருமாளே ஓர் இரவு என்னை மறந்து தூங்கினால் போதும்” என்று அலைபாய்கிறான் சங்கர்ஷணன்,

ஒரு கட்டத்தில் படைப்பாளியின் சொற்கள், அவனது மொழி, அவனது ஆளுமையையும் மீறிச் சென்று விடுகிறது. அத்துமீறிப் போய்விடுகிறது. அப்போது அவனிடம் குடிகொள்ளும் வெறுமை, அதைத் தான் இந்த வரிகள் தொட்டுக் காட்டுகின்றன.

மொழியின் கட்டற்ற தன்மையைக் காட்டும் இன்னொரு இடம் மணிமுடிக் காண்டத்தில் வருகிறது. ஆரிய தத்தரின் கடைசிக் காலம். பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று வாக்கு நான்கு கட்டங்களாக முகிழ்த்தெழுவது பற்றிய ஒரு அதீதமான வர்ணனை அதில் உள்ளது.

சொல் முதலில் மனதின் விதையாக, சிந்தனையாக முளைக்கிறது – பரா. அதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொள்கிறது. அகத்திலிருந்து ஒரு சொல் கிளம்பி வருகிறது. சொல்லின் ஜனனம். உண்மையில் நாம் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குழந்தை பிறப்பது போல. பிறகு அது கடைசியாக வாய்மொழியாக, வைகரியாக வெளிப்படுகிறது. ஆரிய தத்தரின் அந்தக் கணங்களில் அவரது அகம் முழுதாக விழித்திருக்கிறது. ஆனால், அது சொல்லாக வெளிப்பட முடியவில்லை. அந்தத் தவிப்பு! அது சாதாரணமாக வாய்பேச முடியாத ஒருவனின் ஆற்றாமையாக அல்ல, இன்னும் ஆழமான தளங்களுக்கு உள் சென்று அந்தத் தவிப்பு விவரிக்கப் படுகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு அவஸ்தையின் குறியீடாகவே அங்கு அது வருகிறது.

கலை:


“மனிதக் காமம்… மனிதனுக்குத் தான் மாமிசம் போதவில்லை. சிற்பி சொல்வதுண்டு, காமத்தில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்த பிறகு தான் மனிதன் கலைகளையும் இல்க்கியத்தையும் படைத்தான் என்று. கவிஞனுக்கு பூமி மீது பெண்னே இல்லை என்பார்..”

மனதில் ஒரு சொல் பிறக்கும் உள்முக ஓட்டத்தைக் கீறிக் காண்பிப்பது மட்டுமல்ல, அதன் நீட்சியாக ஒரு கலைப் படைப்பு உருவாவதில் உள்ள அவஸ்தை பற்றியும் பேசுகிறது விஷ்ணுபுரம்.


“உன்னுடைய கவித்துவத்தின் எல்லையற்ற கருணையின் நிழலாக அதைவிட அழுத்தமான குரூரம் உள்ளது என்பது அவளுடன் மண்ணோடு மறையப் போகிற ரகசியம்
” என்று தனக்குள் புலம்புகிறான் சங்கர்ஷணன்.

ஒவ்வொரு கவிஞனும், கலைஞனும் படைப்பாளியும் ஏதோ ஒரு விதத்தில் தன்னை சிதைத்து அழித்து உருமாற்றித் தான் தன் படைப்பை உருவாக்குகிறான், கலையை வளர்த்தெடுக்கிறான். இதனூடாக நிகழும் கலைஞனின் மனக்கொந்தளிப்புகள் அவனைச் சுற்றுயுள்ள சூழலிலும் கொந்தளிப்புகளை உருவாக்குகின்றன. இது ஒருவகை குரூரம் தான். ஆனால் இந்தக் குரூரத்திலிருந்து தான் உன்னதமான, அழகான கலை, இலக்கியப் படைப்புகள் பிறக்கின்றன.

எந்த ஒரு நல்ல கலைஞனும் தன் கலை மீது, படைப்புகள் மீது அபரிமிதமான பெருமிதமும் கர்வமும் கொள்வான். அது இயல்பானதே. ஆனால் உன்னத கலைஞன் அதோடு நின்று விடுவதில்லை. அவன் மேலும் மேலும் உயரத்துக்குப் போக ஆசைப் பட்டுக் கொண்டே இருப்பான். தனது கலை வடிவத்தின் சட்டகங்களையும் இலக்கணங்களையும் மீறிய படியே இருப்பான். அவனது கலை அதன் முழுமையின் விளிம்பில் சென்று முட்டிக் கொள்ளும் கணத்தில் அவன் அடையும் விரக்தியும் வெறுமையையும் கூட சேர்ந்தது தான் அவனது வாழ்க்கை.

ஈடிணையற்ற சிற்ப அற்புதம் ஒன்றை படைத்து காலத்தில் பதித்து விட வேண்டும் என்ற லட்சியம் இருந்த்து. ஆனால் ஒரு கட்டத்தில் சிற்பியின் பிரக்ஞை தர்க்கத்தால் கட்டப்பட்டுள்ளது என அறிந்தேன். பூமியிலுள்ள சிற்பங்கள் எல்லாம் தத்துவத்தின் மூர்த்திகரணங்கள். சிற்பிகள் தத்துவத்தை ஒருபோதும் முழுக்கப் புரிந்து கொள்ள முடியாது, அப்படியானால், கழுத்துக் கயிற்றால் வழி நடத்தப்படும் பசு போன்றது தானா கலை? என்னால் அதை ஏற்க முடியவில்லை. என் கலை வழியாக நான் பிரபஞ்ச தரிசனத்தை அடைய வேண்டுமென உணர்ந்தேன். ஆகவே இலக்கணங்களை உதறினேன்” – இது பிரசேன சிற்பியின் வாக்குமூலம்.

“லங்கா தகனம்” நாவலில் வரும் கதகளி ஆசான் இறுதியில் தனது திருஷ்டிப் பொட்டை அழித்து விட்டு மேடையை நோக்கி நடந்து செல்கிறார். பூரண அலங்காரத்துடன் பார்ப்போரை பித்துக் கொள்ளச் செய்யும் லலிதாங்கியின் கையில் கட்டப் பட்ட திருஷ்டிக் கயிறு கூட்டத்தில் செல்கையில் கழன்று விடுகிறது. கலை தனக்குத் தானே இட்டுக் கொண்ட தன் அனைத்து வரம்புகளையும் உடைத்தெறிந்து பூரண நிலையை அடைகிறது. அத்தகைய கலை ஆக்கவும், அழிக்கவும் சக்தி படைத்ததாகிறது. ஆசான் லங்கையை எரிக்கிறார். லலிதாங்கி திருவடிக்கு விஷ்ணு தரிசனத்தைக் காட்டுகிறாள்.

[மேலும்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு
அடுத்த கட்டுரைகடிதங்கள்