விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு

கவித்துவ தரிசனம்


“கவியின் கண் காலத்தின் கண் அல்லவா?“

– சங்கர்ஷணன்.



[தொடர்ச்சி]

ஒரு உண்மையான தரிசனம் என்பது ஒருபோதும் தருக்கத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியாது.. அது ஒரு கவிதையாகவோ கலையாகவோ மட்டுமே இருக்க முடியும் என்று அஜிதன் ஓரிடத்தில் சொல்கிறான். விவாதத்தின் போது, எந்த எதிர்த் தரப்பையும் அத் தரப்பின் கவித்துவ தரிசனத்திற்கு செல்ல விடாமல் எதிராளியை முற்றிலும் தர்க்கச் சுழல்களில் சிதறடித்து நிலைகுலைய வைத்து, எதிராளி தடுமாறும் தருணம் தனது தரப்பின் கவித்துவ தரிசனத்தால் அதை முறியடிப்பது தான் பவதத்தரின் உத்தி என்பதையும் சரியாகக் கணிக்கிறான் அஜிதன். இதே உத்தியை பவத்தருக்கு எதிராகப் பயன்படுத்தி வெற்றியும் காண்கிறான்.

தர்க்கமும் அது சார்ந்த வாள் சுழற்றல்களும் அடிப்படையில் வாதிப்பவனின் அகங்காரத்தின் வெளிப்பாடுகளே. ஆனால், கவிதை அப்படியல்ல, அது தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவின் வெளிப்படு தருணம், எனவே அது எப்போதும் தர்க்கத்தை விட ஒரு படி உயர்ந்த தளத்திலேயே உள்ளது. நேரடியாக சொல்லப் படாவிட்டாலும் கௌஸ்துப காண்டத்தில் உறுதியாக இக்கருத்து கோடிட்டுக் காட்டப் படுகிறது. ஞானத் தேடல் கொண்டு மெய்யுணர்வின் முழுமையை தரிசித்து அதைப் பாடுபவனை ரிஷி, கவி என்ற இரண்டு சொற்களாலும் வேறுபாடின்றியே வேத இலக்கியம் குறிப்பிடுகிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

தர்க்கங்களின் தடைகளை உடைப்பது கவிதை. தர்க்கங்களும் எதிர்த் தர்க்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் திரைகளை விலக்குவது கவிதை. அதனால் தான் விஷ்ணுபுரத்தின் ஞான தாகிகள் தங்கள் தரப்புக்காகத் தீவிரமாகப் பேசும்போதுகூட, எதிர்த் தரப்பின் கவித்துவ தரிசனத்தை நிராகரிப்பதில்லை. அது மட்டுமல்ல, சமயங்களில் அதனை விதந்தோதவும் செய்கிறார்கள்.

நசிகேத ரிஷி தன் தளிர்க்கரங்களால் மரணத்தின் கதவைத் தட்டினார்” என்கிறார் பௌத்த ஞானி அஜித மகாபாதர். அவர் பேசுவது வேதாந்த மரபைச் சேர்ந்த உபநிஷத ஞானம். “குசப்புல்லில் துளித்துளியாக நீர்மொண்டு கடலை வற்றவைப்பது போன்றது மனக்கொந்தளிப்பை தர்க்கத்தால் பின்தொடர்வது…” மிருகநயனிக்கு அருகில் அஜிதர் தீவிரமாக விசாரம் செய்யும்போது அவர் நினைவில் எழும் இந்தச் சொற்கள் அத்வைத மகா குருவான கௌடபாதர் வாய்மொழியாக வந்தவை.

“நான் என்று கூறும்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கி குறுக்காதே” என்று பிங்கலனுக்கு உபதேசிப்பவர் சிரவண மகாப்பிரபு. சுயமைய நோக்கு கொண்டது என்றும் குறுக்கல்வாதம் என்றும் அஜிதனால் குற்றம் சாட்டப் படும் வேதாந்த மரபின் பிரதிநிதி. ஆனால் அவரது இந்தச் சொற்கள் அஜிதன் பகரும் ஆலய விஞ்ஞானத்தின், மகா தர்மத்தின் சாரத்தைத் தான் உண்மையில் எடுத்துரைக்கின்றன.

“கற்றபடி இரு. மனிதர்களை முடிவின்றி மன்னித்தபடி இரு. மனங்களை ஒன்று சேர்த்தபடி இரு. மகா இயற்கையிலிருந்து ஆசி பெற்றபடி இரு. எளிய உயிர்களுக்கு அந்த ஆசியை அளித்தபடி இரு” – இந்த நாவலின் சாரமாகத் திரண்டு வரும் “ததாதகதரின் பெருங்கருணை”யே நம் முன்நின்று உரைப்பது போன்ற சொற்கள். ஆனால் இந்த உபதேசத்தைத் தன் மரணத் தருவாயில் சீடனுக்கு வழங்குபவரோ விஷ்ணுபுர மகாவைதீகரான பவதத்தர்.

கவிதை:

“இப்போது தான் இந்தக் கனவிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் கூட அக்கனவின் ஒரு பகுதி எனவே ஆயிற்று… காற்றில் மிதந்தபடி, சிவப்பான உதய ஒளி படர்ந்த வானத்தின் கீழ்மூலை நோக்கிச் சென்றபோது எங்கோ ஒருவனின் கனவுக்குள் புகுந்து, அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப் பட்டேன்..”

இலக்கிய வடிவங்களிலேயே கனவுக்கு மிக நெருக்கமாக உள்ளது கவிதை. விஷ்ணுபுரம் நாவலும் அப்படிப் பட்டதே என்பதால், அதில் கவிதைக் கூறுகள் மிகுதியும் உள்ளன. நாவலின் உரைநடை நெடுகிலும் கவித்துவம் ததும்பி நிறைந்து வழிகிறது. லலிதாங்கி போலப் பூரண ஆபரணங்கள் பூண்டு வசீகர நடனமாடிக் கொண்டிருக்கும் உரைநடை ஜிவ்வென்று அப்படியே ஒரு துள்ளு துள்ளி வெண்பறவையாக வானில் பறக்கிறது. கனவு வெளியை அளைந்து களைத்தயர்ந்து மிக லாகவமாக மண்ணில் இறங்கி யானைக் கொட்டிலிலும் கூச்சல் பெருத்த ஊட்டுப்புரைகளிலும் சஞ்சரித்துக் கொட்டமடிக்கிறது.

அது தவிர்த்து, வெளிப்படையான கவிதை வரிகளும் நாவலில் பல இடங்களில் பயின்று வருகின்றன.

“இருட்டால் போர்த்தப் பட்ட வெளி
வேறுபடுத்தும் அடையாளங்களின்மையால்
ஏதுமின்மையாக ஆகிவிட்டிருந்த வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வடிவமற்ற வெறுமையினால் மூடப்பட்டிருந்தது
தன் சுயமான மகிமையினால்
முதல் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக மாறியது.. “

ஞானசபை விவாதத்தின் தொடக்கத்தில் ரிக்வேத பண்டிதர் பாடும் சிருஷ்டி கீதத்தின் சில வரிகள் இவை. இது போன்று, இன்னும் சில வேத, உபநிஷத மந்திரங்களும் உயிரோட்டம் ததும்பும் கவிதை வடிவில் ஞான சபை விவாதங்களின் பகுதியாக வருகின்றன. வேத இலக்கியத்தின் அற்புதமான தொல்கவிதைகளை ஒரு நவீனத் தமிழ் வாசகனுக்கு அதன் தூய வடிவில் எடுத்துச் செல்வதற்கு மிகச் சிறந்த வழி இத்தகைய கவிதையாக்கமே என்று எனக்கு உணர்த்தியது விஷ்ணுபுரத்தின் இந்தப் பகுதிகள் தான். எனது சமீபத்திய வேத கவிதையாக்க முயற்சிகளுக்கு உந்துதல் அளித்ததும் விஷ்ணுபுரம் நாவலின் இந்தப் பகுதிகள் தான்.

இன்னொரு வகை மாதிரி தரிசன மரபுகளின் சாரத்தை அழகிய கவிதைகளாக நாவலின் போக்கில் வடித்திருப்பது. கால தரிசன சூத்திரத்தை பிட்சு பாடும் ஓர் அற்புதமான கவிதை –

“வழி தவறிய குழந்தையொன்று
பிஞ்சுக்கால் பின்ன அலைகிறது
அழுத கண்களில் வான் நீலம் கரைகிறது
குழந்தை உனது பெயரென்ன?
பெயரிடப்படாத குழந்தை அது
குழந்தை உனது ஊரென்ன?
அது மண்ணின் உப்பை அறியாதது.
குழந்தை உனது தாய் யார்?
தாயன்றி அது வேறு ஏதும் அறியவில்லை.
அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே
நீ அன்னையாகி வருக.
காலமே உனக்கு வணக்கம்.”

பௌத்த ஞானி எழுதியதாக வரும் “தச தர்சன சங்கிரஹம்”, ஜைன முனியின் ஆக்கமான “சத பிரஸ்ன மாலிகா” ஆகிய அத்தியாயங்கள் உயர் தத்துவம் கவிதையாகி வரும் அழகுக்கு சிறந்த உதாரணங்கள்.

மூன்று மகத்தான கவிதைகள்:

மூன்று பாகங்களிலும் அவற்றின் சாரமாக முத்திரை பதித்து வரும் கவிதைகள். இந்த மூன்று கவிதைகளும் மிக நுட்பமான, அந்தரங்கமான அக அனுபவங்களை ஆழ்ந்த படிமங்களாக குறியீடுகளாக சொல்லில் வடித்துக் காட்ட முயலும் அமானுஷ்ய முயற்சிகள். பிரக்ஞையின் விளிம்பில் நின்று மொழியின் எல்லைகளுக்கும், சாத்தியங்களுக்கும் சவால் விடும் எழுத்து இது என்று உறுதியாகக் கூறலாம்.

முதல் பாகத்தில் வரும் கவிதை சதுப்பு நிலத்துக்குள் புகுந்த திருவடியின் தியானம் (41-வது அத்தியாயம்). “இசை – வெளி – நடனம்” என்பது தியான மந்திரம்.

“…. சிலிர்த்த வரிகளில் உன் புரியாத காவியம்
இசைக்கும் வெளி உன் நடனம்
அடி, என் சாகரத் திரைச்சீலை விலக்கிப்
புன்னகைக்கும் பெருமுகம், விண்ணலைகள்
கூடும் பிரிய கோஷம், பிரதிபலித்து
வெளிப்பது உன் விழி நாதம் ….
…. உன் கூந்தல் மலர் எனப் புலரி
உன் பாதத் தடமென சொற்கள்
எங்கும் விரிந்த உயிர்ப்பின்
கிளைகளில் ஊசலாடி எழும்
தூய்மையின் புலரி மந்திரம்…
… நீலமெனப் பெருவெளி இள
நீலமெனக் காலம் இள
நீலமென ஓங்காரம்… “

இரண்டாம் பாகம், கௌஸ்துப காண்டத்தில் வரும் கவிதை (31ம் அத்தியாயம்) மிருக நயனியின் நீழலில் அஜிதனின் தியானம். “வெண்மை – காலம் – இன்மை” என்பது தியான மந்திரம்.

“ஆயிரம் காதத் திரையை
செவ்வலகால் கிழித்து வந்து
என் முன் அமர்ந்து நொடிக்கும்
இவ்வெண் பறவையின் முன்
செயலற்று அமர்ந்திருக்கிறேன்…
.. ஒரு நூறு பாதங்கள் ஊன்றி
வானாகிக் கவிழ்ந்து
வெளியில் தலைதூக்கி
எண்ணற்ற முலைநுனிகளால்
அமுதூட்டும் கருணை..
… இன்மையின் சாரமெனக் காலம்
எனும் இன்மையின் சாரமென
இன்மை.”

மூன்றாம் பாகம் மணிமுடிக் காண்டத்தில் வரும் கவிதை (22-ம் அத்தியாயம்). பாவகனின் தியானம். “உனது மகத்தான தனிமை” என்பது தியான மந்திரம்.

“.. ஊறும் ஈரத்தில் முளைத்த வனம்
எங்கும் அதிரும் வலிக்கொப்புளங்கள்
எழுந்து சிகரம் எழுப்பி உயர்ந்த
மௌனத்தில் வழியும் மந்திரச் சொற்களின்
வெண்மையில் ஒளிரும் விலகும்
உனது மகத்தான தனிமையின் காலம்…
…இக்கணம் பூத்தெழும் முடிவின்மையில்
எது உன் பெயராகும்? எது
உன் அமர மந்திரம்? எது
நீ வெளித்த ரூபம்? எண்ணும் பொருள்களின்
வான் விளிம்பில் வடிவங்களெனப் பிறந்த
இவ்வனைத்திலும் திமிறும் பிழை நீ…
தசையெரிக்கும் வெப்பம் கண் அழிக்கும் ஒளி
உனது அலையற்ற பெருமவுனத்தில் எஞ்சுவது
உன் மகத்தான தனிமை.”

இந்த மூன்று கவிதைகளையும் ஒருசேர எண்ணிப் பார்க்கும் போது திருவாய்மொழியின் கடைசிப் பாசுரம் நினைவில் எழுகிறது –

“சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.”

முடிவில் பெரும் பாழேயோ – என்கிறான் பாவகன்.

பர நன் மலர்ச் சோதியோ – என்கிறான் திருவடி.

சுடர் ஞான இன்பமேயோ – என்கிறான் அஜிதன்.

இவர்கள் அனைவரும் விடுபட்ட நிலையின் விளிம்பு வரை வந்து நின்றுவிட்டவர்கள். “அவா அறச் சூழ்ந்தாயே” என்று நம்மாழ்வார் பாடும் இறுதி நிலையை அடைந்தவன் சுடுகாட்டுச் சித்தன் ஒருவனே.
அவனது தியானம் நாவலில் இவ்வாறு கவிதையாக விரித்தெழுதப்படவில்லை. “சட்டியும் பானையும் போயாச்சு – சூளை மண் மட்டுமே மிச்சமாச்சு” போன்ற அவனது தெருப்பாடல்களும், விஷ்ணுபுர வீதிகளில் அவன் சீடனுடன் ஆடிச் செல்லும் திகம்பர நடனத்தின் அசைவுகளுமே அவனது ஞானத்தின் சுவடுகளாக, அவன் விட்டுச் சென்ற கவிதையாக எஞ்சுகின்றன.

இந்தக் கவிதைகளை எல்லா வகையிலும் ஸ்ரீஅரவிந்தரின் “சாவித்ரி”யுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. அந்த முழுநீளக் காவியமும் இது போன்ற அக அனுபங்களால் தூண்டப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவே எழுதப் பட்டது. ஆன்ம தாகம் கொண்ட ஒரு ஆத்மாவின் அகப் பயணத்தையும் அது கடந்து செல்லும் பரிணாம நிலைகளையும் “சாவித்ரி” குறிப்பதாகவும், ஐம்பதாண்டுகள் அந்தக் காவியத்தின் கரு தன்னுள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த்தாகவும் ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். “Savitri is the record of a seeing, of and experience which is not of the common kind and is often very far from what the general human mind sees and experiences” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சாவித்ரி”யை எம்.பி.பண்டிட் அவர்களின் வழிகாட்டி நூலின் உதவியுடன் நான் படிக்க முயன்றபோது அதன் சில அத்தியாயங்களின் சில பாடல்களுக்கு மேல் செல்வது சலிப்பாகவும், கடினமாகவும் எனக்கு இருந்தது. ஒரு இலக்கிய வாசகனாக தொடர்ந்து இதே போக்கில் வந்து கொண்டிருந்த அதன் நீள்கவிதை என்னை தீவிரமாக வசீகரிக்கவில்லை. ஆன்ம அனுபவத் தேடல் என்ற அளவில் அதனை அணுக உதவக் கூடிய வழிகாட்டுதல்களும் எனக்கு வாய்க்கவில்லை. அதற்கு நான் முயற்சி செய்யவுமில்லை.

ஆனால், இந்தக் கவிதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போது அவை மேலும் மேலும் நெருங்கி வருவதாக உணர்ந்த படியே இருக்கிறேன். அவை பித்துக் கொள்ளச் செய்கின்றன. விஷ்ணுபுரத்தின் கதைப் பின்னணியில் வைத்து வாசிக்க முடிவதால் இந்தக் கவிதைகள் தரும் திறப்புகளை நாம் இன்னும் அந்தரங்கமாக, எளிதாக அணுக முடிகிறது என்று தோன்றுகிறது.

[மேலும்]

முந்தைய கட்டுரைவழி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு