உவேசாவும் ஃபெட்னா அவதூறும்

Dear Jeyamohan,

Thanks for publishing my letter.

tamizhacchi delivered another speech in FeTNA (http://www.youtube.com/watch?v=xnQDXECjfLc). That and her speech on July 8th (where she spoke on Gandhi) she narrated two key incidents. The first was about Ziegenbalg, German missionary who worked in Tranquebar in the 18th century. I am a Christian, as I say in my blog (http://contrarianworld.blogspot.com/2012/07/thamizhachis-fetna-speeches-uvesa.html) and I’ve ties into the Lutheran church so I am familiar with Ziegenbalg. I am sure you would agree that Ziegenbalg learned Tamil more for converting hindus by speaking in their native tongue than out of any love for Tamil. Thamizhachi makes it appear as if he came to Tranquebar to study Tamil. I disagree. Also, as with her talk on Gandhi, this is all deliberate pre-meditated speech. So it should be judged carefully and scrutinized carefully.

Coming to U.ve.Sa. Today a friend shocked me by asking “would you agree that U.Ve.Sa is being credited more than what he deserved”. Thamizhachi for her share has contributed to thinking less of U.Ve.Sa. From my blog “A friend of U.Ve.Sa called on him one day and used a Tamil word to denote something for which a Sanskrit word was more in vogue. U.Ve.Sa ribbed the visitor “what happened to you, you are also talking like those self-respect movement guys”. The audience, ideologically sympathetic, tittered.”

I am not suggesting we blindly worship anybody or that we should sweep under the carpet the failings and mistakes of the great. But I find that ‘criticism’ is often a tactic to merely smear and run. If Thamizhachi had narrated some incident that helped the audience to better understand, as the quote from Ki.Va.Ja does in my blog, why U.Ve.Sa is considered to have rendered a great service to Tamil.

I’d be glad if you could write something and explain for contemporary audience the contributions of U.Ve.Sa,

I felt compelled to write in detail and refute Thamizhachi for the above too http://contrarianworld.blogspot.com/2012/07/thamizhachis-fetna-speeches-uvesa.html .

Such canard should not go unchallenged saying ‘let us ignore’. After nearly 40 years of ignoring we are at a stage where people think U.Ve.Sa only copied out texts and printed on paper. I hope you and other readers understand that I wrote both of this and sought you out only so that this kind of stuff does not go unchallenged.

Thanks
Aravindan Kannaiyan

உ.வே.சாமிநாதய்யர்


ஃபெட்னாவும் காந்தியும்

அன்புள்ள அரவிந்தன்,

உ.வே.சா அவர்களின் சாதனையை இன்று புதியதாக நிறுவவேண்டியதில்லை. அவரும் அவர் காலகட்ட அறிஞர்களும் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார்கள்.

ஒருகாலகட்டத்தில் நம் மரபிலக்கியங்களின் பெயர்கள்கூட எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவற்றைத் தற்செயலாக அறிந்தபின் அச்சேற்ற நினைத்து அதில் ஈடுபட்டவர்கள் நமது முன்னோடிப் பதிப்பாசிரியர்கள். நவீன காலகட்டத்தில் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த முதல்பெரும் அறிவியக்கம் இது.

ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, வித்வான் தாண்டவராய முதலியார்,மழவை மகாலிங்கையர், சௌரிப்பெருமாள் அரங்கன், வ.உ.சிதம்பரம்பிள்ளை, களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், கெ.என்.சிவராஜபிள்ளை, வையாபுரிப்பிள்ளை, ந.மு.வேங்கசாமிநாட்டார், மயிலை சீனி. வேங்கடசாமி என பதிப்பாசிரியர்களின் வரிசை மிக நீண்டது. அந்த அறிவலையின் முதன்மையான பெயர் உ.வே.சாமிநாதய்யர்.

நாட்டார் இலக்கியங்களை மீட்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சாமித்தோப்பு ஆறுமுகநாடார் இந்தவரிசையில் வரவேண்டியவர். [அவரைப்பற்றிய முதல் கட்டுரையை சொல்புதிது வெளியிட்டது. அ.கா.பெருமாள் எழுதியிருந்தார்] அவரையே அந்தப்பேரலையின் கடைசித்துளி என்பேன்.

இந்த தளத்தில் நிகழ்ந்த ஒட்டுமொத்தமான பண்பாட்டியக்கத்தை இன்றும்கூட விரிவாக ஆராய்ந்து எவரும் எழுதவில்லை. சாதிக்காழ்ப்பு இல்லாமல் இந்த முன்னோடிகளைப்பார்க்கவும் சாய்வில்லாத ஓர் ஆய்வை எழுதவும் நமக்கு முதிர்ச்சி கைகூடவில்லை. ஆகவே இந்தப் பெரும் அறிவியக்கம் வெறுமே ஏட்டில் இருப்பதை அச்சில் கொண்டுவரும் நகலெடுப்பு வேலை என்றுகூட மேடை ஏறிச் சொல்லும் காலம் வந்துவிட்டிருக்கிறது.

இந்தப் பணியின் வரலாற்றுமுக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எழுதவேண்டும். ஒரு எளிய பின்புலச்சித்திரத்தை மட்டும் அளிக்கிறேன். பொதுவாசகர்களுக்காக.

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே தமிழின் அறிவியக்கத்தில் ஒரு தேக்கநிலையைக் காணலாம். இங்கே நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்த அறிவியக்கம் மிக விரிவானது. உலகில் இருந்த மாபெரும் அறிவியக்கத்தில் அது ஒன்று. அதைப் பேணியவை அரசர்கள், நிலப்பிரபுக்கள், மடங்கள், கோயில்கள் போன்ற அமைப்புகள். தொடர்ந்த படைஎடுப்புகளாலும் உள்நாட்டுப்போர்களாலும் அவை அழிந்து உருவான அராஜகநிலையால் அறிவியக்கம் தேங்க ஆரம்பித்தது. அந்தத் தேக்கம் வெள்ளையர் வருகையாலும் அவர்கள் தங்கள் சுரண்டல்மூலம் உருவாக்கிய மாபெரும் பஞ்சங்களாலும் முழுமையடைந்தது.

பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக்கல்வி மூலம் நாம் உலக அறிவியக்கத்தைப்பார்க்கும் வாய்ப்பை அடைந்தோம். நம்முடைய மரபைப் பற்றிய விழிப்புணர்ச்சி உருவானது. நாம் நம் வரலாற்றை எழுதவும் பண்பாட்டை அறியவும் முயன்ற தருணம் இது. அப்போது தெரிந்தது நம் பாரம்பரியத்துக்கும் நமக்கும் இடையே பிரம்மாண்டமான அகழி ஒன்று இருப்பது. நம்முடைய மரபில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டிருந்தோம். மரபைப் புரிந்துகொள்ளமுடியாதவர்களாக ஆகியிருந்தோம்.

இந்தத் துண்டிப்பு நமது சிற்பம், வைத்தியம், தத்துவம் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்திருந்தது. இந்த இடைவெளி இன்னும்கூட நிரப்பப்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் இடிந்து கிடந்த தஞ்சைப் பெரியகோயிலைப்பற்றி விசாரித்த ஆங்கிலக் கலைவரலாற்றறிஞர் லார்ட் சிவெல் அந்தக்கோயிலைக் கட்டியது யார் என்று தஞ்சையில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் பதிவுசெய்கிறார். அதுவே நம் நிலையாக இருந்தது

இந்த சூழலில்தான் ஒருபெரிய பண்பாட்டு மீட்பியக்கம் இந்தியா எங்கும் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்தே நம் தேசியமறுமலர்ச்சி உருவானது. நாம் நவீன காலகட்டத்தில் நின்றுகொண்டு, அது அளித்த எல்லா ஆய்வுக்கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு மறைந்து போன பண்பாட்டை மீட்டு உருவாக்கம் செய்யும் பெரும் சவாலை ஏற்றுக்கொண்டோம். அதற்கு இந்தியவியலை உருவாக்கிய ஆரம்பகால ஐரோப்பிய அறிஞர்கள் வழிகாட்டியாக அமைந்தனர்.

இவ்வாறுதான் வேதங்களும் உபநிடதங்களும் மீட்கப்பட்டன. காளிதாசனும் ஃபாசனும் கண்டெடுக்கப்பட்டனர்.பௌத்த, சமண நூல்கள் மீட்கப்பட்டன. அவ்வாறு தமிழில் நிகழ்ந்த ஒரு பிரம்மாண்டமான பண்பாட்டு மீட்பியக்கமே நம்முடைய பதிப்புச்செயல்பாடு. சொல்லப்போனால் அதற்குபின் அதற்கிணையான ஒரு அறிவுலக அலை நம்மிடம் நிகழவே இல்லை. அந்த அலை உருவாக்கிய பேரறிஞர்களைப்போன்ற ஆளுமைகள் பிறகு உருவாகவுமில்லை. அந்த அறிஞர்கள் சொன்னதை வைத்து நாம் இன்றுவரை காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

இந்தப் பண்பாட்டு மீட்பியக்கம் செய்த வேலை சாதாரணமானதல்ல. என்ன ஏது என்று அறியாத ஓர் இறந்த காலத்தை மொழியில் கிடைத்த உதிரி ஏடுகளைக்கொண்டு ஊகித்து வாசித்து பொருள்கொண்டு படிப்படியாகக் கட்டி எழுப்புவது ஒரு மாபெரும் அடித்தளக்கட்டுமான வேலை. இந்திய மரபை எந்தத் தளத்தில் கற்க ஆரம்பித்தாலும் நாம் முன்னோடிகளின் அந்த பிரம்மாண்டமான உழைப்பை, அதன்பின்னாலிருந்த அர்ப்பணிப்பைக் கண்டு பிரமித்து தலைவணங்குவோம்.

உதாரணமாக உ.வே.சா காலகட்டத்தில் சங்க இலக்கியங்களின் பெயர்கள் அறிஞர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. ஐம்பெருங்காப்பியங்களை அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. முன்பு அந்நூல்களைப் பேணிவந்தது இங்கே இருந்த ஒரு சமூக அமைப்பு. அதைக் கவிராயர் மரபு என்று சொல்லலாம். அது தலைமுறைகளாக நீளும் பண்டிதர்களால் ஆன ஒரு வரிசை. அந்தப்பண்டிதர்களை பிரபுக்களும் மன்னர்களும் பேணிவந்தனர். அவர்களைப் பேணிய அமைப்புகள் சிதைந்து அழிந்தபின் அந்தப் பண்டிதர்குடும்பங்கள் தமிழ்க்கல்வியைக் கைவிட்டு வேறுவேலைகளுக்குச் சென்றன. சுவடிகள் குப்பையாகப் பரண்களில் குவிக்கப்பட்டன

ஏடுகள் தொடர்ந்து பிரதி எடுக்கப்படவேண்டும். அதற்கான செலவை சமூகம் அளிக்கவேண்டும். சமூகத்தால் கைவிடப்பட்ட கவிராயர்குடும்பங்கள் ஏடுகளை ஒதுக்கிவிட்டன. பல தருணங்களில் கடைசிக் கவிராயர் இறந்ததும் ஏடுகளை அவரது சடலத்துடன் சேர்த்து சிதையில் வைத்தார்கள். நீர்க்கடன் கழிக்கையில் ஆற்றில் விட்டார்கள். அதை உ.வே.சா விவரித்திருக்கிறார். ஏடுகள் எல்லாம் செல்லரித்து சிதிலமாகி அழிந்த நிலையில் பரண்களில் குவிக்கப்பட்டிருந்தன

அந்தகுப்பைக்குவியலில் இருந்தே பதிப்பாசிரியர்கள் நூல்களை மீட்டார்கள். பெரும்பாலான நூல்கள் அரைகுறை ஏடுகளாகவே கிடைத்தன. வெவ்வேறு ஏடுகளைத் தேடி எடுத்து நூலை முழுமைசெய்யவேண்டும் அவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்து பிரதியை உருவாக்கி எடுக்கவேண்டும். அத்துடன் இன்னொன்றும் உண்டு. உ.வே.சா தலைமுறைக்கு நம்முடைய ஏடுகளின் எழுத்துமுறை இருநூறாண்டுகள் பழையதாக இருந்தது. அவ்வெழுத்துக்களைப் பெரும்பாலும் ஊகித்தும் கற்பனைசெய்தும் பிற ஏடுகளுடன் ஒப்பிட்டும்தான் வாசிக்கமுடிந்தது.

ஆகவேதான் இவ்வளவு பாடபேதங்கள் இவற்றில் உருவாயின. என்னிடம் இருக்கும் உவேசாப்பதிப்பு சங்கநூல்களில் நூலைவிடப் பெரியதாகப் பாடபேதக் குறிப்பகராதி உள்ளது. அவை முன்னோடிகள் நமக்களித்துப்போன சவால். அவற்றிலிருந்து மேலும் மேலும் பொருத்தமான பிரதியை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. நாம் அப்பக்கமே நகரவில்லை.

உவேசா பிரதிதான் எடுத்தார் என்று சொல்லும் அறிவிலிகள் அவர் அப்பண்டை நூல்களுக்கு உரையும் எழுதினார் என்றாவது அறிந்திருக்கிறார்களா தெரியவில்லை. ஒரு புராதன நூலுக்குப் பொருள்கொண்டு உரையளிப்பதென்றால் என்ன அர்த்தம் என அவர்களுக்கெல்லாம் யார் சொல்லிப் புரியவைக்கமுடியும்?

சங்ககால வாழ்க்கைக்கும் நமக்கும் இடையே பல்லாயிரம் வருட தூரம். அந்தத் தொலைவைக் கடந்து அவற்றைப் புரிந்துகொள்வது எளியவேலை அல்ல. ‘மூவா முதலா உலகம்’ என்ற சிந்தாமணியின் முதல் வரியைப் பொருள்கொள்ள உவேசா மொத்த சமண,பௌத்த தத்துவத்தையும் வாசிக்கிறார். அந்த அவைதிக தத்துவ மரபு இன்னொருபக்கம் அப்போதுதான் பால் காரஸ், ரய்ஸ் டேவிஸ், ஆல்காட் போன்றவர்களால் அதேபோல படிப்படியாக மீட்டு எடுக்கப்பட்டிருந்தது. பழம்பாடல்களைப் பொருள்கொள்வதில் அன்று நிகழ்ந்த விவாதங்கள் எவ்வளவுபெரிய ஒரு நிகழ்வு அது என்பதைக் காட்டுகின்றன.

இந்தப் பதிப்பியக்கத்தின் இரு பெரும் முகங்களாக உ.வே.சாமிநாதய்யரும் சி.வை.தாமோதரம்பிள்ளையும் அறியப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஆற்றிய பணி ஒப்பீட்டளவில் மிகப்பெரியது. அத்துடன் அவர்கள் ஒரு மாணவர் வரிசையையும் உருவாக்கினார்கள். குறிப்பாக உ.வே.சா பதிப்பித்த நூல்கள் அவற்றின் பண்பாட்டுமுக்கியத்துவத்தாலும் அறிவார்ந்த ஆய்வுமுறையாலும் முதன்மை வகிப்பவை. ஆகவே நம் பதிப்பியக்கத்தின் பொதுமுகமாக அவர் அறியப்படுகிறார்.

உவேசா பதிப்பித்த நூல்கள் ஆய்வாளர்களால் முன்னோடியாகக் கொள்ளப்படுவதற்கான காரணங்களில் முதன்மையானவை அவரது பாரபட்சமின்மையும் அறிவியல்நோக்கும்தான். அவர் உறுதியான சைவராக இருந்தாலும் சமணநூலான சீவகசிந்தாமணியைத் துல்லியமான உரைக்குறிப்புகளுடன் அச்சேற்றினார். அதற்காக சமணநூல்களை விரிவாக கற்று சமண தத்துவங்களை ஆராய்ந்தார். தன்னை விலக்கிக்கொண்டு, சமணர்களின் நிலைப்பாட்டில் நின்று அதற்கு உரை எழுதினார்.

உவேசா அவரது நூல்களில் பாடபேத ஒப்புமைகள் , சொற்பொருள்கோடல், உரைக்குறிப்புகள் போன்றவற்றை அன்றிருந்த சர்வதேச பதிப்புத்தரத்தில் அமைத்திருக்கிறார் என்பதை இன்றும்கூட வியப்புடனேயே அணுகமுடிகிறது. அவருக்குப்பின்னால்கூட அத்தகைய நேர்த்தியான நூல்பதிப்புகள் தமிழில் நிகழவில்லை. அதன் முக்கியத்துவத்தைப்புரிந்துகொள்ள நாம் நம் பாரம்பரியத்தையே பார்க்கவேண்டும். எழுத்துவடிவ மூலப்பிரதிஆய்வு என்பதற்கு இந்தியாவில் ஒரு மரபு கிடையாது. முன்னுதாரணங்களும் கிடையாது. நமக்கிருக்கும் மூலப்பிரதி பேணுதல் என்பது செவிவழியாக வேதங்கள் முதலியவற்றை ஒப்பித்துப் பேணும் மரபுதான்.

உண்மையில் நவீன மூலப்பிரதி உருவாக்க முறைமை என்பது கிறித்தவப்பெருமரபால் வளர்த்தெடுக்கப்பட்டது. பைபிளின் துல்லியமான மொழியாக்கம் மற்றும் தூயபிரதிக்கான தேடலில் இருந்து அது பிறந்து வந்தது. பிரதிஒப்பீடு , பிழையகற்றல் போன்றவற்றில் அவர்கள் புறவயமான முறைகளை நிறுவினார்கள். அவை இலக்கியத்தில் விதிகளாக மாறின. அந்த வழிமுறைகளை உவேசா துல்லியமாகக் கடைப்பிடித்திருக்கிறார். அவர் ஆய்வுசெய்து முடிவுகளுக்குப் போன முறை அகவயமானதல்ல. புறவயமாக அவரது நூல்களில் அந்த வழி உள்ளது. நாம் அதைப் பரிசீலிக்கலாம், மேம்படுத்தலாம்.

இந்த வழிகாட்டிச்சாதனைக்காகவே உவேசா கொண்டாடப்படுகிறார். இன்று உவேசா பிரதிகளை, உவேசா முறைகளை விமர்சனம்செய்யலாம்தான். அதைச்செய்பவர்கள் ,செய்யும் தகுதி கொண்டவர்கள் ஆய்வாளர்கள். அமலாபாலை தமிழ்ப் பண்பாட்டின் பிரதிநிதிகளாக எண்ணும் அயல்நாட்டு அசடுகள் அல்ல. அப்படித் தப்பித்தவறி அறிஞர் எவருக்காவது உவேசா மிகையாகக் கொண்டாடப்படுவதாகத் தோன்றினால் அவர் உவேசா விட்டுச்சென்று எவராலும் தொடரப்படாத பணிகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு மிகச்சிறிய பங்களிப்பையாவது ஆற்றிவிட்டு மேலே பேசட்டும்.

நம்முடைய கையில் உள்ள சங்க இலக்கியங்கள் போன்றவை முன்னோடிகளால் கடும் உழைப்பால் ‘உருவாக்கப்பட்டவை’ . அவற்றில் உள்ள திணை துறை பகுப்புகள் அந்த முன்னோடிகளே எழுதிச்சேர்த்தவை. அந்த அறிவியக்கம் ஏறத்தாழ 1950களுடன் மெல்ல முடிவுக்கு வந்தது. அதன்பின் அவர்கள் விட்டுச்சென்ற பணி முன்னெடுக்கப்படவில்லை. இன்றுவரை தமிழாய்வில் உதிரி முயற்சிகளைத் தவிர்த்தால் நிலவுவது ஒரு மாபெரும் சோர்வு மட்டுமே.

நமது பழந்தமிழ் இலக்கியங்களில் பல நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. முன்னோடிகளுக்குக் கிடைத்தற்றில் பல அவர்களால் முழுமைசெய்யப்படவில்லை என்பதே உண்மை. உதாரணமாகப் புறநாநூறு. அதன் பல பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. நமது பதிப்ப்பு முன்னோடிகள் மறைந்து முக்கால்நூற்றாண்டு தாண்டிவிட்டது. அவர்கள் விட்ட இடத்தில் இருந்து ஒரு அடிகூட வேலை முன்னால் நகரவில்லை. சென்னை கீழ்த்திசை ஆவணக்காப்பகத்திலும் சரஸ்வதி மகாலிலும் இன்னும் வாசிக்கப்படாத சுவடிகள் நிறைய உள்ளன. இன்னும்கூட எவ்வளவோ சுவடிகள் நம் தொல்லியல்காப்பகங்களில் உள்ளன. அவற்றை வாசித்தால் ஒருவேளை நாம் இந்த வேலையை முழுமைசெய்யக்கூடும். ஆனால் எதுவுமே செய்யப்படவில்லை.

கணிசமான பௌத்த நூல்கள் திபெத்திய மொழியாக்கங்களில் இருந்து திரும்ப பாலிக்குக் கொண்டுவரப்பட்டன. அப்படி நாமும் முயன்றால் பிராகிருத-பாலி மொழி சுவடிகளில் இருந்து நமக்குக் கிடைக்காமல் போன சூளாமணி, குண்டலகேசி போன்ற காப்பியங்களை மீட்க முடியலாம். தமிழிலக்கியத்துக்கும் சமண.பௌத்த மரபுகளுக்குமான உறவு நம் நூல்களை பாலி,பிராகிருதம், சம்ஸ்கிருதம் மொழிகளில் உள்ள நூல்களுடன் ஒப்பிடுவதன்மூலமே அறியமுடியும். அப்படி ஒரு பணி ஆரம்பிக்கப்படவேயில்லை. அப்படி இருமொழி அறிந்த ஆய்வாளர்களே நம்மிடமில்லை.

உவேசாவின் சிந்தாமணி உரையையே எடுத்துக்கொள்வோம். அந்த உரை மகத்தானதோர் சாதனை. ஆனால் இன்றைய சமண வாசகனாகிய எனக்கு அதில் பல பொருட்கோடல்கள் போதாதவையாக, சில சமயம் பிழையானவையாக தெரிகின்றன. இந்த முக்கால்நூற்றாண்டில் வெளிவந்த சமண ஞானநூல்களை ஆராய்ந்து இன்னும் விரிவான ஓர் உரை எழுதப்பட்டிருக்கவேண்டும். உவேசாவே அதைத்தான் கோருகிறார். ஆனால் அது நிகழவில்லை. அதற்கான தகுதிகொண்ட எவரும் நம்மிடம் இல்லை. ஆனால் நமக்கு உவேசாவுக்கு புகழ் கொஞ்சம் ஜாஸ்தியோ என்று ஐயம்வேறு கிளம்பிவிட்டது.

தமிழுக்கான வேலைகள் குவிந்து கிடக்கின்றன. மலையாளத்திலும் கன்னடத்திலும் நடக்கும் பண்பாட்டு ஆய்வுகளைப் பார்க்கையில் பிரமிப்பும் சிறுமையும் தோன்றுகிறது. அங்குள்ள அரசு வெளியீடுகளின் பட்டியலே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் காட்டும். இங்கே நாம் ஒரு சிறு அடிப்படைவேலைகூடச் செய்வதில்லை. நம் பல்கலைகளில் நிகழ்வதெல்லாம் கீழ்த்தரச் சாதிச்சண்டையும் அதிகார அரசியலும் மட்டுமே. தமிழாய்ந்த முன்னோடிகளையே சாதிக்கண் இல்லாமல் பார்க்கமுடியாத இழிமக்களாக ஆகிவிட்டிருக்கிறோம். ஓரு வாசகன் கையால் சீந்தும் தரமுள்ள ஒரு ஆய்வைக் காண்பது அரிதாகிவிட்டிருக்கிறது.

ஏன், செம்மொழி ஆகிவிட்டது தமிழ் என்றெல்லாம் கும்மியடித்தார்களே? பலகோடி ரூபாயில் மாநாடுகள் கூட்டினார்களே!. கோடிக்கணக்கான ரூபாய் அதற்காக அள்ளி இறைக்கப்பட்டதே? இன்றைய ஒரே தேவையான இந்த தமிழ்ப்பணியை முன்னெடுக்க என்ன வேலை செய்தார்கள்?

உவேசா போன்ற முன்னோடிகள் பிரசுரித்த நூல்களுக்கு ஒரு மறு அச்சு கொண்டுவரவே நம்மிடம் ஆளில்லை என செம்மொழி நிறுவனத்தலைவர் சொல்கிறார். மெய்ப்பு நோக்குமளவுக்கு தமிழ் தெரிந்தவர்கள் இல்லையாம். பிரித்துப்போட்டு நகலச்சு எடுத்துப்போடுவதிலேயே பல்லாயிரம் குளறுபடிகள். ‘செம்மொழி யுகத்தில்’ ஒரு நூலுக்குக்கூட ஒழுங்கான மறுபதிப்பு வரவில்லை. பொருட்படுத்தும்படியான ஒரு நூலடைவைக்கூட நம்மால் உருவாக்கமுடியவில்லை. அதற்கான அர்ப்பணிப்புடன் வேலைசெய்பவர்களுக்கும் எளிய அறிமுகமும் ஊக்கமும் கூட இல்லை.

அப்படியென்றால் செம்மொழிக்காக வந்த கோடிகள் என்னாயிற்று? அந்தக்கோடிகளை வாங்கியவர்கள் யார்? முன்னோடிகளின் வேலையை முழுமைசெய்யத் துப்பில்லாதவர்கள் அவர்களை இழிவுபடுத்தித் ‘தமிழ்விழா’ கொண்டாடுகிறார்கள்.

ஜெ


தாய்மொழி செம்மொழி

 

சிந்தாமணி

தன்வரலாறுகள்


என் சரித்திரம் இணையத்தில்


பெட்னா கடிதம்

முந்தைய கட்டுரைபத்தினியின் பத்துமுகங்கள்
அடுத்த கட்டுரைகாந்தமுள்