ஒருங்கிணைதலின் வழி

விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளமான புதினம் ஜூன் எட்டு 2009 அன்று வெளியிட்டிருக்கும் இந்தக் கட்டுரை [ராஜதந்திரம் பேணலே தமிழர் வாழ்வை தோற்றுவிக்கும். ராஜவர்மன் http://www.puthinam.com/full.php?2b24OOy4b33q6DLe4d45Vo6ca0bc4AO24d3SSmA3e0dC0Mt1ce03f1eW0cc3mcYAde]  மிக முக்கியமான ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. நிதானமான மொழியில் அபாரமான யதார்த்தபோதத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இது. வரும் காலத்தில் ஜனநாயக வழிமுறைகளையும் ராஜதந்திர அணுகுமுறைகளையும் கொண்டு பரந்துபட ஒற்றுமையை உருவாக்கி ஈழத்தமிழர் நலனுக்காக போராட இக்கட்டுரை அறைகூவல் விடுக்கிறது.

சிலருக்காவது இது காலம் கடந்த ஒரு அழைப்பாகத் தோன்றலாம். ஆனால் ஒரு சமூகத்தின் பரிணாமவரலாற்றில் காலம்கடந்த என்பதே இல்லை. ஐம்பதாண்டுக்காலம் என்பதுகூட நீண்டதல்ல. உரிமைகளுக்கான போராட்டத்தில் இன்னும்சென்றாகவேண்டிய தூரம் மிக அதிகமாக இருக்கிறது. இப்போதும் பல லட்சம் மக்கள் ஈழத்தில் வாழ்கிறார்கள். அவர்களின் உரிமைகள் முழுமையாகும் வரை போராட்டம் முடிவுக்கு வரப்போவதுமில்லை. எந்த ஒரு சமூகமும் தொடர்ச்சியான போராட்டம் மூலமே வளரமுடியும்.

சு.ராஜவர்மன் சொல்கிறார் ” …இந்நிலையில் மௌனித்துப்போன அல்லது வேண்டுமென்றே மௌனத்தைக் கடைப்பிடிக்கின்ற அனைத்துலகத்தின் போக்கைக் கண்டித்து மேற்குலகின் குடிகளான தமிழர்கள் பரந்துபட்ட ஒற்றுமையின் மூலம் தாம் வதியும் நகரங்களில் போராட்டங்களை மீண்டும் மையப்படுத்தி விட்டனர்.

போராட்டத்தின் வடிவம் மாத்திரமல்ல இப்போது போராட்டத் தளமே மாற்றம் கொள்ளத்தொடங்கிய ஒரு புதுயுகமாக இந்த வருடம் பிறப்பெடுத்துள்ளது.

தமிழகத்தைப்போல கற்பனையான சமாதானங்களிலும் பொய்யான உணர்ச்சிக்கொந்தளிப்புகளிலும்  தங்கி நிற்காமல் யதார்த்ததுக்கு வந்துபேசும் இக்கட்டுரையில் ராஜவர்மன் சொல்கிறார் ”…இந்த ஆறுதலுக்கான தேடலும் துயரப் பகிர்தலுக்கான ஆதங்கமும் அனைவரையும் ஒருமித்து எமது மக்களுக்கான குரலாக ஓங்கியொலிக்க வைத்தாலும் அது செல்கின்ற வழிகுறித்த செயற்திட்டம் ஒன்றுக்கான தேவையை நாம் தவறவிடாமல் பின்பற்ற வேண்டியது அவசியம் என்கிற செய்தியை இன்றுவரை நடைபெற்ற போராட்டங்கள்; எமது மேற்குலக சாத்வீகப் போராட்டங்கள் சுட்டி நிற்கின்றன

ஈழத்தமிழர் மீது நடந்த பேரழிவுத்தாக்குதல் நம் கண்முன் நடந்த ஒரு வரலாற்று சோகம். கடந்த பல மாதங்களாக அந்த வரலாறுநிகழ்வின் போக்குக்கு எதிராக வெற்று உணர்ச்சிகளை மட்டுமே கொட்டுபவர்களையே கண்டுவந்தோம். அந்த உணர்ச்சிகள் பெரும்பாலும் கசப்புகளை உருவாக்குபவைகளாக, பேதங்களை வளர்ப்பவைகளாக இருந்தன. அந்த உணர்ச்சிகளில் இருந்து சமநிலைக்கு மீண்டிருப்பதற்கான ஆதாரமாகவே இக்கட்டுரை எனக்குப் படுகிறது.

இந்த அழிவுக்கு இலங்கை அரசை வசைபாடுவதில், சாபம் இடுவதில், கொந்தளித்து எழுதித்தள்ளுவதில் பொருளே இல்லை. உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களும் செய்த, செய்யவிருக்கிற விஷயம்தான் இது. உலகில் உள்ள அத்தனை அரசுகளும் தங்கள் எதிரிநாட்டவரை விட அதிகமான அளவுக்கு சொந்தக் குடிமக்களையே கொன்றிருக்கும். ஒரு விதிவிலக்கு கூட உலகில் இருக்க வாய்ப்பில்லை.

உலகின் மாபெரும் ஜனநாயகவாதியான ஆபிரகாம் லிங்கன் உள்நாட்டுப்போரை பெரும் மானுட அழிவுகள் மேல் நிகழ்த்தி முடித்தார். பிரிட்டன் அயர்லாந்து, ஸ்காட்லாந்து விடுதலைப்போர்களை ஒடுக்கியிருக்கிறது. ஸ்பெயின் உள்நாடுப்போரில் அழிவுகளை உருவாக்கியிருக்கிறது. ·பிரான்ஸ¤ம் இத்தாலியும் தங்கள் தீவுகளின் போராட்டங்களை குருதியால் ஒடுக்கியிருக்கின்றன. ருஷ்யா செசன்யாவிலும் சீனா தென்மேற்கு மாகாணங்களிலும் இன்றும் இதையே செய்துவருகிறது.

இந்தியாவில் பிறந்த என் வயதுள்ள ஒருவர் இரு பெரும் உள்நாட்டு ஒடுக்குமுறைகளுக்கு சாட்சியம் வகித்திருப்பார். ஒன்று, 1968 முதல் நிகழ்ந்த நக்சலைட் எழுச்சி. இந்தியாவெங்கும் கிட்டத்தட்ட 70000 பேரைக் கொன்று அந்தக் கிளர்ச்சியை ஒடுக்கியது நம் ஜனநாயக அரசு. வங்கத்தில் 50000 பேரைக்கொன்ற சித்தார்த்த சங்கர் ரே மீண்டும் வென்று முதல்வரானார். அதன்பின் பஞ்சாப் கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள்.

இலங்கை அரசு ஒடுக்கும் இரண்டாவது உள்நாட்டுப்போர் இது. முதல் ஜனதா விமுக்தி பெருமுனே கிளர்ச்சியில் எழுபதாயிரம் பேர் வரை அரசால் கொல்லப்பட்டார்கள். இப்போது இந்தபோரில் மொத்தம் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கடைசிக்கட்ட அழிவை கண்டு அதிர்ச்சி உறுகிறோம். ஆனால் முப்பது வருடங்களாகவே இலங்கை அரசு மக்கள் வாழ்விடங்கள் மேல் வான்வழித்தாக்குதலைத் தொடுத்து வந்திருக்கிறது .வருடம் பத்தாயிரத்துக்கு குறையாத மனிதர்களைக் கொன்று குவித்திருக்கிறது.

எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டுப்போர் பேரழிவை உருவாக்குவதாகவே இருந்திருக்கிறது. மிகப்பெரிய உள்நாட்டு அழிவென்பது 1968 ல் நைஜீரியா அரசு பையாப்ரா குடியரசுக்கான போராட்டத்தை ஒடுக்கியதையே சொல்லவேண்டும். அப்போது அந்நாட்டுக்கு எதிராக எந்த ஒரு ஐரோப்பியநாடும் குரலெழுப்பவில்லை. பொதுவாக உள்நாட்டுப் போர்களை ஒடுக்கும் நாடுகளை அண்டைநாடுகள் ஆதரித்தே வந்திருக்கின்றன. ஏனெனில் உள்நாட்டுப்போர்கள் அரசு என்னும் அமைப்புக்கு எதிரானவை. அவற்றை அண்டை அரசுகள் விரும்புவதில்லை.

உலகநாடுகளைப் பொறுத்தவரை ஈழத்து அழிவு அங்கே நடக்கும் இரண்டாவது மானுட அழிவு. முதல் அழிவுக்கு அவை என்ன எதிர்வினையாற்றினவோ அம்மாதிரியே இப்போதும் செய்யலாம். ஓர் அக்கறைக் குரல், விசாரணைக்கான ஒரு முயற்சி, ஒப்புக்கு ஒரு விசாரணை. தங்கள் தேசிய வருவாயில் எண்பது சதவீதத்தை ஆயுத உற்பத்தி – விற்பனை மூலம் அடையும் இந்நாடுகளின் சமாதானக்குரலுக்கு என்ன மதிப்பு? தங்கள் நாட்டின் உள்நாட்டுச் சிக்கல்களை முழுமையாகவே சமரசம்செய்துகொண்டு மூன்றாமுலக நாடுகளுக்கு இனவாத– பிரிவினைக்கருத்துக்களை ஏற்றுமதி செய்யும் இவர்களின் அறிவார்ந்த நாணயத்தின் மதிப்பு என்ன?

ஒரு நிலத்தில் வாழும் மக்கள் கூட்டம் அந்தப்பகுதியின் உரிமையாளர்களாக உணர்வதில் இருந்து தேசிய உருவகம் ஆரம்பிக்கிறது. தங்கள் உள்முரண்பாடுகளை மறந்து அவர்கள் ஒருங்கிணைகிறார்கள். அப்பகுதியில் ஒரு கூட்டு வாழ்க்கையை உருவாக்குகிறார்கள். அந்தத் தேசிய உருவகத்தின் ஆயுதம் ஏந்திய முனைதான் அதன் அரசு. அந்த அரசு அதனுள் ஓடும் பல்வேறு அதிகார சக்திகள் நடுவே உள்ள சமரசப்புள்ளியாக இருக்கும். சாதாரணமாக அது அந்தத் தேசியத்தின் உள்சிக்கல்களை சமரசம்செய்தபடி செயல்படும்.

ஆனால் அந்த தேசிய உருவகம், அதன் எல்லைகள் கேள்விக்குரியதாக்கப்படுமென்றால் அரசின் வன்முறை வெளியே வரும். உள்ளிருந்தானாலும் ,வெளியே இருந்தானாலும். அந்த எதிர்ப்புகளை அது அடக்காவிட்டால் அதன் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். ஆகவே அதன் பற்களும் நகங்களும் வெளியே வருகின்றன. எங்கும் இதுவே கதை. இப்போதும் அதுவே நடந்திருக்கிறது.

வரலாற்றை நான் கவனிக்க ஆரம்பித்த இந்த இருபது வருடங்களில் நான் அறிந்த ஒரே உண்மை, மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதே. ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சாதாரணமாக சாவு எண்ணிக்கையைச் சொல்வதாகவே நம் வரலாறுகள் இருந்திருக்கின்றன. வரலாற்றின் எல்லா தரப்பும் அப்படித்தான் செயல்பட்டிருக்கிறது. அரசும் சரி, அரசு எதிர்ப்பாளர்களும் சரி.

எவ்வகையிலும் மானுட அழிவை உருவாக்கும் எந்தவகையான கருத்தியல்களும் பெரும்பிழைகள் என்றே நான் எண்ணுகிறேன். பெரும்பாலும் அவை அதிகாரவிருப்புடன் செயற்கையாக உருவாக்கி மக்களிடையே கொண்டுசெல்லப்படுகின்றன. உள்ளடக்கத்தில் வெறுப்பு உள்ள எந்த ஒரு கருத்தியலையும், மக்களிடையே பேதத்தை உருவாக்கும் எந்த ஒரு சிந்தனையையும், வன்முறை நோக்கிச்செல்லும் உந்துதல் கொண்ட எந்த எண்ணத்தையும் ஆரம்பத்திலேயே நிராகரிக்க துணிவதே கொல்லப்பட்ட அந்த முகமறியா ஆயிரங்களுக்கு நாம் செய்யும் கடமை

இன்று வாழும் ஈழ மக்களுக்கு உலகமெங்கும் வாழும் தமிழர் செய்யக்கூடிய பெரும் கடமைகள் பல இருக்கின்றன. ஆவேசமான போர்க்கூச்சல்களில் அவை அமிழ்ந்துபோகக் கூடாது. பொருளற்ற நிலைபாடுகளால் அங்கே வாழும் மக்கள் மேலும் துன்பங்களில் சிக்கிக்கொள்ளும்படி ஆகக்கூடாது.

சமாதானபூர்வமான ஜனநாயக வழிமுறைகளின் வலிமையை, தவிர்க்கமுடியாமையைக் கண்டடைந்துள்ளது உக்கட்டுரை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

‘’’…போராட்டக்களம் புதிது. போராடும் நோக்கும் புதிது. எனவே நேச நிலையற்று போகும் தன்மையை ஏற்படுத்தி போராட்டத்தின் திசையை மாற்றும் பழியை நாமே செய்தவாகளாகக்கூடாது.

மாணவர்களிடம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் அவர்களின் விடுதலைக்கான வேகம் நிறையவே இருக்கிறது. அத்துடன், தற்போது நாம் இணைக்கவேண்டியது விவேகம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

விவேகம் இல்லாத வேகம் வலியை அதிகப்படுத்துமே தவிர வரவேற்பைப் பெறாது என்பதை அவர்களைச் சார்ந்துள்ளவர்கள் எடுத்துக்கூற வேண்டும்

முகாம்களில் இருப்பவர்களுடன் மூன்றுமுறை பேசமுடிந்தது. எல்லாமே அவர்கள் வெளியே ஆஸ்பத்திரிக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுமதிக்கப்பட்டபோது. அவர்கள் அங்கு அதீதமான நெரிசலில் அரசாங்கங்களுக்கே உரிய உதாசீனத்தில் விடப்பட்டிருக்கிறார்கள். சில கிறித்தவ நிறுவனங்களின் உதவிகள் உள்ளன. விரக்தி, உயிர்தப்பியதன் மகிழ்ச்சி என கலவையான மனநிலையில் இருக்கிறார்கள்.

நண்பர் கருணாகரனின் சோர்ந்த தாடிநரைத்த முகமுள்ள, முகாமில் எடுத்த, புகைப்படம் ஒன்றை யாழ்ப்பாண நண்பர் அனுப்பியிருந்தார். போரின் சாட்சியம்போலிருந்தது அந்த முகம். அதில் தெரியும் விரக்தி. விடுபட்ட தன்மை. அந்த முகம் அங்குள்ள அனைவருடைய முகம்.

இந்தக் காலகட்டத்தின் வேகம் அணைந்ததுமே  இலங்கை அரசு முகாம்களை அப்படியே மறந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். முகாம்களில் இருப்பவர்கள் திரும்பத்திரும்பக் கூறும் கவலை இதுவே. ஏனென்றால் எல்லா அரசும் செய்வது அதைத்தான். சமாதான காலகட்டத்தில்கூட. இந்தியாவில் ஹிராகுட் அணைக்கட்டு போன்ற வளர்ச்சித்திட்டங்களுக்காக குடிபெயரச்செய்யப்பட்ட பழங்குடிகள் அப்படியே மறக்கப்பட்டு பெருநகரங்களில் உதிரிகளாக மாறி மறைந்தார்கள் என்பது வரலாறு.

அந்நிலை ஈழத்தமிழருக்கு வராமலிருக்க திட்டவட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு குரலெழுப்பும் தமிழர் அமைப்புகள் உலகமெங்கும் உருவாகவேண்டும். இலங்கை அரசுடன் பேசி வற்புறுத்தும் தலைவர்கள் வரவேண்டும். போராட்டத்தின் வெற்றி என்பதே போராடுபவர்கள் படிப்படியாக வலிமை பெறுவதன் வழியாக உரிமைகளை அடைவதுதான். மேலைநாடுகளோ அல்லது உலக சமூகமோஅளிப்பது அல்ல அந்த வெற்றி. 

இன்றைய சூழலில் உலகளாவிய ஒரு மாபெரும் ஜனநாயக-ராஜதந்திர அமைப்பாக தமிழர்கள் திரள்வது சாத்தியம்தான் என்றுதான் நான் நினைக்கிறேன். முன்பு ஆயுதமேந்திய காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் துப்பாக்கியை திருப்பிக்கொண்டவர்கள்கூட அதில் ஒருங்கிணைய முடியும். நட்புடன் இணைந்துசெயலாற்ற முடியும்.  விரோதத்தின் காலகட்டங்களை எளிதில் மறக்கவும் முடியும்.

இதைச் சொல்லும்போது அபத்தமான கற்பனையாகத் தோன்றும் ஆனால் உலகமெங்கும் இதற்கிணையான விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஏனென்றால் வரலாறு முன்னால் சென்றுகொண்டுதான் இருக்கிறது. எங்கும் அது நின்றுவிடுவதில்லை. வாழ்க்கை முடிந்து போகுமா என்ன? எப்படியும் செய்யவேண்டிய வரலாற்றுக்கடமைகளை செய்துதானே ஆகவேண்டும்?

இக்கட்டுரையில் சு.ராஜவர்மன் வெளிப்படுத்தும் குரல் நம்பிக்கையை உருவாக்குகிறது. “எமக்கான தொடர்பாடல் புள்ளிகளை வலுவாக ஏற்படுத்தி எமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமே தவிர ஊடகங்கள் மூலமாக செய்திகள் சென்றடையும் என்கிற நிலையை மாற்ற வேண்டும்.

போராடிக்கொண்டிருக்கிற இனமாக இருந்தோம் என்பதை உள்வாங்கி இனி இராஜதந்திர அரங்கில் நாம் புதுவடிவோடு புகவேண்டிய காலம் இது

ஓர் உலகளாவிய விவாதத்துக்கும் யதார்த்தபூர்வமான கூட்டுச்செயல்பாடுகளுக்கும் இனிமேலும் வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அப்படி நிகழுமென்றால் ஈழத்தின் போராட்டம் அங்குள்ள மக்கள் தங்கள் உரிமைகளை பூரணமாக அடைவதில், அந்தமண்ணில் தங்கள் வேர்களையும் கிளைகளையும் விரிப்பதில் மட்டுமே நிறைவுறுவதாக அமைய முடியும்.

ஒரு கையறு நிலையில் வன்மத்தை வளர்த்துக்கொள்வதும் கற்பனை எதிரிகளை உண்டுபண்ணிக்கொள்வதும் மிகமிக எளிய செயல். அதையே மேலோட்டமான மனங்கள் எப்போதும் செய்கின்றன. போரில் ஈடுபடுத்தப்பட்ட சமூகம் முதலில் இழப்பது அதன் சிந்தனையின் சமநிலையை. பிரச்சாரங்களையே அது கருத்துக்களாக அறிகிறது. ஒற்றைபப்டை வேகத்தை மட்டுமே சிந்தனையாகக் கொள்கிறது. வெறுப்பையே நெஞ்சில் நிறைத்துக்கொள்கிறது.

இன்று அந்த மனநிலைகளில் இருந்து மீண்டுவரவேன்டிய காலம். நிதானமாக சிந்தனைசெய்யவேண்டிய தருணம். மாற்றுக்கருத்துக்கள் அனைத்தும் உள்வாங்க்கிகொண்டு ஓர் மாபெரும் உரையாடலை உருவாக்கவேண்டியிருக்கிறது.  உள்விவாதங்கள் மூலம் பேதங்கள் சமன்செய்யபப்ட்டு ஒரு பெரும் ஒற்றுமை உருவாகவேண்டியிருக்கிறது. அந்த சக்தி மிகப்பெரிய ஆயுதமாக துணைநிற்கும்.

 

முந்தைய கட்டுரைகவிதை ஒன்றுகூடல்
அடுத்த கட்டுரைராஜமார்த்தாண்டன் கடிதங்கள்