ஆப்ரிக்க யானைடாக்டர்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது. இதன் உள்ளடக்கம் எனக்கு யானைடாக்டரின் இறுதிப்பகுதியை நினைவூட்டியது. அதை உங்களிடம் பகிர விரும்பினேன்

அன்புடன்

ராகவ்

லாரன்ஸ் ஆண்டனி

அன்புள்ள ராகவ்


செய்திக்கு நன்றி

யானைடாக்டர் வெளிவந்தபோது சிலர் அதிலுள்ள நிகழ்ச்சிகள் சாத்தியமா என்றெல்லாம் எழுதியிருந்ததை வாசித்திருக்கிறேன். செந்நாய்களுடன் டாக்டர் பழகுவதையும் யானைகள் கடைசியில் தேடி வருவதையும் சுட்டிக்காட்டித் தாங்களறிந்த தகவல்களைக்கொண்டு அவை சாத்தியமேயில்லை என்று கருத்துச்சொல்லி நிபுணத்துவத்தைக் காட்டிக்கொண்டார்கள்

உண்மையில் அப்போதே நான் லாரன்ஸ் ஆண்டனியின் நூலை வாசித்திருந்தேன். என்னுடைய நேரடி அனுபவத்தில் யானைகளுடன் நுட்பமாக உரையாடும் பல பாகர்களைப் பார்த்துமிருந்தேன். ஆனாலும் நான் அவர்களுக்கு பதிலோ விளக்கமோ கொடுக்க முற்படவில்லை.

இலக்கியம் என்பது ஒருபோதும் ‘அப்பட்டமான’ யதார்த்தம் அல்ல. அந்தவகை யதார்த்தத்தை உருவாக்க இலக்கியம் என்ற வடிவம் தேவையும் இல்லை. இந்த எளிமையான விஷயம் நம்மூரில் மட்டும் அறிவுஜீவிகளுக்கு இன்னும் புரியவில்லை

புனைகதைக்கு ஒரு விஷயம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்தாலே போதும். அதாவது நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான முகாந்திரம் இருந்தாலே போதும். அதிலிருந்து அது தன் புனைவு மூலம் தன்னுடைய சொந்த யதார்த்ததை உருவாக்கிக்கொள்ளும். அதைப் புனைவுயதார்த்தம் என்று சொல்வார்கள்.

புறவயமாக நிரூபிக்கப்பட்ட திட்டவட்டமான தகவலுண்மைகள் எல்லாருக்கும் தெரிந்தவை. அவற்றைத் திரும்ப எழுதுவது இலக்கியத்தின் பணி அல்ல. அவற்றை வைத்துக்கொண்டு உருவாக்கும் எளிய யதார்த்தமல்ல இலக்கியம் கோருவது. அந்த நிபந்தனையைப்போட்டால் உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகளைத் தூக்கிப்போடவேண்டியிருக்கும்.

எல்லா இலக்கியப்படைப்புகளும் அடிப்படையில் தொன்ம உருவாக்கத்தையே செய்கின்றன. ஒரு மனிதரை அல்லது நிகழ்ச்சியை ஒரு விழுமியத்துக்கான அடையாளமாக மாற்றியமைப்பதுதான் இலக்கியத்தின் நோக்கம். அதன் மூலம் அம்மனிதரை அல்லது நிகழ்ச்சியை அவை தொன்மமாக ஆக்குகின்றன. நவீன இலக்கியம் நவீனத் தொன்மத்தை உருவாக்குகிறது.

ஹெமிங்வேயின் சாந்தியாகோவும் [கிழவனும் கடலும்] ஹெர்மன் மெல்வில்லின் இஷ்மேய்லும் [மோபி டிக்] அத்தகைய நவீனத் தொன்மங்கள் என்பதை நாம் காணலாம்.

வாழ்க்கையை அறிந்து மதிப்பிடுவதில் உண்மையான வரலாறும் அறிவியலும் ஒரு வழி என்றால் புனைவு மூலம் உருவாகிவரும் தொன்மம் இன்னொரு வழி. இரண்டுக்கும் அவற்றுக்கே உண்டான இலக்குகள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று நிரப்பக்கூடியவை

விழுமியம் அல்லது விமர்சனம் ஒன்றை முன்வைப்பதற்காக புறவய யதார்த்தத்தைப் புனைகதை மிகைப்படுத்துகிறது, திரிக்கிறது, சம்பவ ஓட்டத்துக்கு ஒரு மையத்தைக் கற்பனைசெய்கிறது, சிலவற்றைத் தவிர்த்து சிலவற்றை முன்னிறுத்துகிறது, சிலசமயம் முழுமையாகவே மாயத்தன்மையைக் கொடுக்கிறது. இவையெல்லாம் உலகமெங்கும் புனைகதையில் அங்ககீகரிக்கப்பட்டவை.

இங்கே இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர் முன்வைத்த விமர்சனங்களுக்குப்பதிலாக இவற்றை எல்லாம் சொல்லலாம் என்றால் அவர்களுக்கு தாங்கள் சென்றுசேர நேர்ந்த துறைக்கு அப்பால் அடிப்படை அறிவோ அக்கறைகளோ கிடையாது என்று தெரிந்தது. தங்கள் கையிலிருக்கும் எளிமையான தகவல்களில் ஆழமான நம்பிக்கையும் அதன் வழியாக கிடைக்கும் அபாரமான தன்னம்பிக்கையும் மட்டுமே அவர்களின் பலம். நம்முடைய பிற எந்த துறைகளிலும் காணப்படுவதுபோல அறிவே அறியாமையாக ஆகும் ஒரு நிலை.

இந்தச்செய்தியை வாசிக்கும்போது நான் மீண்டும் நினைத்துக்கொண்டேன். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவின் மர்மங்களில் மிகச்சிறிய ஒரு பகுதியே நமக்குத் தெரியும். தெரியாத பெருவிரிவைத் தெரிந்தவற்றைக்கொண்டு கற்பனைசெய்யவே இலக்கியம் முயல்கிறது. யானைடாக்டரும் அதையே செய்கிறது

அந்தப் புனைவை உருவாக்குவதற்கு அவசியமான அனுபவப்பின்புலம் எனக்கு உண்டு. நான் என் இளமையில் காட்டுமிருகங்களுடன் ஆழமான தொடர்பு கொண்ட காட்டு மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.உதாரணமாக யானைடாக்டரில் வருவதுபோல காட்டுச்செந்நாய்களை நோக்கிச்சென்று அவற்றுடன் உரையாடி வரும் வேலன்காணி என்ற காணிக்காரரை எனக்கு நன்றாகத் தெரியும். நானே அவர் சென்று விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் செந்நாய்கள் மனிதர்களுடன் பழகவே பழகாது, புத்தகத்தில் போட்டிருக்கிறது என ஒருவர் எனக்குக் கடிதம் எழுதினார். யானைகள் மனிதர்களைத் தேடி வரவே வராது என ஒருவர் எனக்கு அறிவுரை சொல்லிக் கட்டுரை எழுதியிருந்தார். நான் அவர்களைப் பொருட்டாகவே எண்ணவில்லை.

லாரன்ஸ் பற்றிய இந்தச்செய்தி மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையே உள்ள உறவின் அறியப்படாத ஆழத்தை மீண்டும் எனக்குக் காட்டியது. மிருகங்களின் உள்ளுணர்வுகளின் விரிவை. நாம் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய வெளியின் தொடக்க விளிம்பை. யானைடாக்டரில் நான் அதை சரியாகத்தான் தொட்டிருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன்.

இச்செய்தியின் கறாரான உண்மை என்ன என்பதை விட இவ்வளவு சாத்தியங்கள் உள்ளன என்பதே எனக்கு முக்கியமானதாகப்படுகிறது. யானைடாக்டர்கள் உலகம் முழுக்க நிகழக்கூடும். யானை டாக்டருக்கும் யானைகளுக்குமான உறவின் பல நுட்பங்கள் இன்னும் ஆழமாகக்கூட உலகமெங்கும் அறியப்படுகின்றன என்பதே எனக்கு முக்கியம்.

ஜேன் குடால் , சிம்பன்ஸியைப்பற்றி எழுதும் வரை ஒரு பெரும்கும்பல் சிம்பன்ஸிக்களுக்கு உள்ளுணர்வும் அறிவுத்தர்க்கமும் கிடையாதென்றே உலகமெங்கும் சொல்லிக்கொண்டிருந்தது. எந்தப் புனைவெழுத்தாளனும் அந்த சராசரிக்கும்பலை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டான். அவன் ஜேன் குடாலை மட்டுமே கவனிப்பான். அவருடன் செல்லவே தன் கற்பனையை விரிப்பான்.

லாரன்ஸ் ஆண்டனி ஒரு ஆப்ரிக்க யானைடாக்டர். உங்கள் கடிதம் மூலமே அவர் இறந்த செய்தி எனக்குத் தெரியவந்தது. அவருக்கு ஓர் அஞ்சலியாகவும் இந்தக் குறிப்பு அமையட்டும்

அவரது மகத்தான வாழ்க்கையின் செய்தி இயற்கை என்பது தகவல்களின் திரட்டு என்று புரிந்து வைத்திருப்பவர்களால் உள்வாங்கிக்கொள்ளமுடியாதது. என்றாவது அவரைப்பற்றி விரிவாக எழுதவேண்டும்.

ஜெ

செய்தி


Incredibly Amazing and Touching!

Lawrence Anthony, a legend in South Africa and author of 3 books including the bestseller The Elephant Whisperer, bravely rescued wildlife and rehabilitated elephants all over the globe from human atrocities, including the courageous rescue of Baghdad Zoo animals during US invasion in 2003.

On March 7, 2012 Lawrence Anthony died. He is remembered and missed by his wife, 2 sons, 2 grandsons numerous elephants. Two days after his passing, the wild elephants showed up at his home led by two large matriarchs. Separate wild herds arrived in droves to say goodbye to their beloved man-friend.

A total of 20 elephants had patiently walked over 12 miles to get to his South African house.

Witnessing this spectacle, humans were obviously in awe not only because of the supreme intelligence and precise timing that these elephants sensed about Lawrence ‘s passing, but also because of the profound memory and emotion the beloved animals evoked in such and organized way: Walking slowly – for days – making their way in a solemn one-by-one queue from their habitat to his house. Lawrence’s wife, Francoise, was especially touched, knowing that the elephants had not been to his house prior to that day for well over a year! But yet they knew where they were going.

The elephants obviously wanted to pay their deep respects, honoring their friend who’d saved their lives – so much respect that they stayed for 2 days 2 nights. Then one morning, they left, making their long journey back home.

 


யானைகளுடன் பேசுபவந் சொல்வனம் கட்டுரை


லாரன்ஸ் ஆண்டனி பற்றி


லாரன்ஸ் ஆண்டனி ஒரு அஞ்சலி


யானைடாக்டருக்கு ஒரு இணையதளம்


யானைடாக்டர் கடிதம்


யானைஓதுநர்

முந்தைய கட்டுரைவாழையும் விஷமும்
அடுத்த கட்டுரைஅகிம்சை