வேளாண்மை- கடிதங்கள்

ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன்.

வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே குறிக்கோளைத் தவறவிட்டுப் பன்னாட்டு உரம், பூச்சிமருந்து, விதை கம்பெனிகளின் தரகர்களாக மாறிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ரூ. 4 கோடி பணம் தரப்பட்டதாக தகவல் உண்டு. இந்தப்பணம் அநேகமாகப் பன்னாட்டு நிறுவனத்தின் பணமாகத் தான் இருக்கும். இப்போது பதவியில் இருந்து விலகிய ஒரு துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இப்போதும் இந்தக் காலியிடத்துக்கு பலத்த அடிதடி நடக்கிறது.

வேளாண் பல்கலையில் பல செய்தி சேகரிப்பு நிகழ்வுகளுக்கு ஒரு நிருபராக நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகள் சில நிறுவனங்களால் ‘ஸ்பான்சர்’ செய்யப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் முகவர்கள். பலகோடி செலவில் இயங்கும் பலகலைக்கழகம் இதுபோன்ற கருத்தரங்குகளை சொந்த செலவில் செய்ய முடியாதா?

முடியும். ஆனால், பல்கலையில் உள்ள தாசர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதன் பின்விளைவாகவே, மரபணு மாற்றப்பட்ட நெல் எந்த அனுமதியும் இன்றிப் பரிசோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை வயலில் விளைவிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் பெரும் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்பட்டது.

கோவை வேளாண் பல்கலையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட பலநூறு பயிர் ரகங்களில் இன்றும் உபயோகத்தில் உள்ளவை எவை என்று கேட்டால் அங்குள்ளவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. மொத்தத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் அரசு நிதியை விழுங்கவும், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்கான விவசாயப் பட்டம் வழங்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படவுமே வேளாண் பல்கலைக்கழகங்களால் இயலும்.

பசுமைப் புரட்சி மட்டுமல்ல, இனிவரும் எந்த விவசாய முன்னேற்ற திட்டமும் இத்தகைய முதுகெலும்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படுமானால் எந்த நற்பயனும் விளைவது சந்தேகமே.

வ முமுரளி

அன்புள்ள முரளி

நம்மாழ்வார் அடிக்கடி ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார்

ஒரு விருந்தில் பரிமாறப்பட்ட திராட்சைப்பழங்களை வேளாண் பல்கலைத் துணைவேந்தர் ஜெயராஜ் உண்ண மறுத்துவிட்டார். அவை ஒரு பூச்சிக்கொல்லிக்குள் ஊறப்போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்றார். அவற்றுக்குள் பூச்சிக்கொல்லி ஊடுருவியிருக்கும், ஆஸ்துமா உருவாக்கும் என்றார்

ஏன், அந்த மருந்து தீங்கற்றது என்றுதானே பல்கலைக்கழகம் பிரச்சாரம் செய்கிறது என்று நம்மாழ்வார் கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தாராம்

ஜெ

அன்புள்ள ஐயாறெட்டு அவர்களுக்கு,

எழுதி நீண்ட நாட்களாயிற்று.

இந்திய வேளாண்மையின் துயரக்காவியம் வாசித்தேன். சமீபத்தில் நான் வாசித்த அற்புதமான கட்டுரை. அது கட்டுரை போலவே இல்லை.

அற்புதமான புனைவாக இருந்தது. கட்டுரையின் முதல் பாகம், கிளி சொன்ன கதைக்கு மீண்டும் சென்றதைப் போலிருந்தது.

இந்திய வேளாண்மை மெல்லச் சாவது குறித்து அடிக்கடி என்னுள்ளும் வினாக்கள் எழுவதுண்டு. நான் விவசாயப் பின்புலத்தைச் சேர்ந்தவனல்லன்.

இருப்பினும் பசுமைப் புரட்சி என்கிற பெயரில் மண் விஷமாக்கப்படுவதும், விவசாயிகள் நலன் தொடர்ந்து புறக்கணிப்படுவதும் என் போன்ற பொதுமக்களில் ஒருவரும் உணருமாறுதான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்டுரை நூலை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தளராது இது போன்ற கட்டுரைகளை அளித்து எங்கள் சிந்தனைக்குத் தூண்டுகோலாக இருப்பதற்கு நன்றி.

சமீபத்தில் என் முகநூல் நண்பர் ஒருவர் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றின் பத்தியைத் தான் எழுதியதைப் போல் வெளியிட்டிருந்தார். ( ரைட்டர் என்றேன், எந்த ஸ்டேஷன்ல என்றார் என்கிற பத்தி). அதை ரசித்து கமெண்டுகளும் வந்திருந்தன. எனக்கு சுட்டிக் காட்டுவதா வேண்டாமா என்று குழப்பம். உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.

ரொம்ப நாள் கழித்து உங்களுக்கு எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்ற மாதம் இந்தியா வந்திருந்தேன். வழக்கம் போல உங்களைச் சந்திக்க ஆசையாகவும், கூச்சமாகவும் இருந்தது. அலைபேசியில் உங்கள் எண்ணை அழுத்தி விட்டு, துண்டித்து விட்டேன். உங்களது நாவல் கோட்பாடும், நவீனத் தமிழிலக்கிய அறிமுகமும் வாசித்து முடித்தேன். நவம்பரில் வரும்போது சந்திக்க ஆசையாக இருக்கிறது. கூச்சமாகவும்.

நாவல் எழுத வேண்டுமென்று நெடுநாளாக ஆசை. ஆரம்பிக்கலாமா என்று என் எழுத்து லட்சணத்தைப் பார்த்து சொல்ல முடியுமா? நேரம் கிடைக்கையில். http://jegadeeshkumark.blogspot.com/

ஜெகதீஷ் குமார்

அன்புள்ள ஜெகதீஷ் குமார்

உங்கள் கடிதம்

இன்றைய விவசாயத்தின் வீழ்ச்சி குமரிமாவட்டம் போல ஏற்கனவே விவசாயம் ஓங்கியிருந்த இடங்களில்தான் கண்கூடாகத் தெரிகிறது

குமரிமாவட்டத்தில் நாற்பது வயதுக்கு குறைவான விவசாயத் தொழிலாளர்களை பார்ப்பதே அரிதாகிவிடுகிறது. இப்போதிருக்கும் விவசாயத் தொழிலாளார்கள் வயதாகி ஓய்வுபெற்றபின் என்ன செய்வார்கள்? விவசாய ஞானம் என்பது அறுபட்டுப் போய்விடாதா?

உங்கள் கதை வாசித்தேன். சரளமாக உள்ளது. எழுதியபின்னர் அதில் வழக்கமான சொல்லாட்சிகள் , வழக்கமான பாணி என ஏதாவது உள்ளதா என்று பார்த்துத் திருத்தலாம். அது நடையைப் புதியதாக ஆக்கும்

ஜெ

முந்தைய கட்டுரையூத்து- கடிதம்
அடுத்த கட்டுரைவிழியில் விழுந்த கவிதை