அன்புள்ள ஜெ ,
தேடல் கொண்டவனாக ஒரு கட்டத்தினை அடைந்து விட்டேன் .ஆனால் என் வேலை சார்ந்த தளத்தினை மிக சிக்கலாகி விட்டேன். இத்தனைக்கும் நான் பணி செய்த இடங்களில் மிகத் திறமை கொண்டவனாக அறியப்படுவேன் . இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட நான் தொழில் வேலை சார்ந்து செல்ல முடியும் என்று கூட முடிவெடுக்க முடியவில்லை .என்னை கவனித்தவர் நீங்கள், நான் என்னை எப்படி வடிவமைத்துக் கொள்வது என்று நீங்கள் ஏதேனும் அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.
அன்புள்ள ஜெ ,
நிலையற்ற மனம் எனது ,எப்போது எப்படி இருப்பேன் என்பது என் கட்டுப்பாட்டில் இல்லை . நேற்றிரவு இணையத்தில் வந்து உங்கள் பதில் வந்ததா என்று பார்த்தேன் . பிறகு என் எல்லா மெயில்களையும் அழித்தேன், நான் எழுதிய கடிதங்கள் உட்பட. இன்று எதையும் யோசிக்காமல் என் வேலைகளில் கவனம் செலுத்த முயன்றேன். சில காலம் இலக்கியம் எதுவும் வேண்டாம் என நினைத்துள்ளேன் . திரும்ப வரும்போது பொருளாதார சுதந்திரம் பெற்றவனாக(உண்மையில் இது என்னால் இயலும் காரியம்தான் அதைப்பொருட் படுத்தாமல் இது வரை விட்டு விட்டேன் அவ்வளவுதான்) உலக இலக்கியங்கள் வாசித்த வாசகனாக இருப்பேன் .
நன்றி.
உங்கள் மாணவன்
ஆர்
அன்புள்ள ஆர்,
உங்களிடம் இதைப்பற்றி விரிவாகவே பேசவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பேசுவதை விட எழுதலாமென்று இப்போது தோன்றுகிறது.
எந்த மனிதனும் வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களில் செயல்படவேண்டியிருக்கிறது. ஒற்றைத்தளத்தில் மட்டும் இருந்துகொண்டிருக்க பெரிய யோகிகளால் மட்டுமே முடியும். பிற அனைவருக்குமே வாழ்க்கை பல சரடுகளாக பிரிந்து பின்னிமுயங்கித்தான் முன்னகர்கிறது. துறவிகளுக்கும்கூட!
எவர் இந்த எல்லா சரடுகளுக்கும் நியாயம் செய்கிறாரோ, எவர் எல்லாவற்றையும் முழுமையான நிலையில் கொண்டு செல்கிறாரோ அவர் மட்டுமே வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும். அதற்குத்தேவை சமநிலை.
உங்களுடைய பிரச்சினை சமநிலையின்மைதான் . அதற்கு நீங்கள் இலக்கியத்தைக் குற்றம்சாட்டவேண்டியதில்லை. இலக்கிய வாசகனாக ஆவதற்கு முன் இதுவரையிலான உங்கள் வேலைகளை நீங்கள் எப்படியெல்லாம் மாற்றிக்கொண்டிருந்தீர்கள் , உங்கள் முதலாளிகளுடனான உங்கள் உறவு எவ்வளவு நிலையற்றதாக இருந்தது என்பதை நீங்கள் கறாராக ஆராய்ந்து பார்த்தாலே போதும்.
அந்தக் கொந்தளிப்பும் தத்தளிப்பும் உங்கள் இளமையின் ஆதார இயல்புகள். இப்போது இலக்கியம் ஒரு திட்டவட்டமான காரணமாகக் கிடைக்கிறது. அவ்வளவுதான். இலக்கியத்தை விட்டாலும் இந்த இயல்பை நீங்கள் மாற்றிக்கொள்ளாதவரை எந்தப்பயனும் இல்லை.
ஒருமனிதனின் வாழ்க்கை முகங்கள் என்ன? நெடுங்காலமாக அதை தர்மம் ,காமம், அர்த்தம், மோட்சம் என்று தெளிவாக நான்காகப் பிரித்து வகுத்து வைத்திருக்கிறார்கள். நாம் அதைப்பற்றி தெளிவாக யோசித்தாலே போதும். நான் சொல்பவை புதியவிஷயங்கள் அல்ல என்பதற்காக இச்சொற்களைச் சொல்கிறேன்.
அறம், பொருள், இன்பம், வீடு என இவை நான்குமே முக்கியமானவை. எவையுமே தவிர்க்கக்கூடியவை அல்ல. ஏனென்றால் இவை ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றில்லாமல் பிறிதொன்று நிறைவடையமுடியாதென்பதே வாழ்க்கையின் விதிகளில் முக்கியமானது.
ஒரு மனிதனாக நீங்கள் இந்தச் சமூகத்தின் ஒரு சரியான பகுதியாக இருந்தாகவேண்டியிருக்கிறது. சமூகத்தின் நியதிகளுக்கு உட்பட்டு, சமூகத்திற்கான கடமைகளை ஆற்றி, நீங்கள் வாழவேண்டும். அதுவே தர்மம் அல்லது அறம் என்ற சொல்லால் சுட்டப்படுகிறது
இங்கே ஒரு தாயின் வயிற்றில் பிறந்து குடும்பம் அளித்த நலன்களை அடைந்து வளர்ந்து சமூகம் அளித்த பாதுகாப்பையும் வசதிகளையும் பெற்று வாழ்வதனாலேயே நீங்கள் இச்சூழலுக்குக் கடமைப்பட்டுள்ளீர்கள். இந்தகாலகட்டத்தின், இந்த பண்பாட்டின், இந்தச் சமூகத்தின் சில ஆணைகளை நீங்கள் நிறைவேற்றியாகவேண்டும்.
பொதுவாக ஒருமனிதனுக்குச் சொல்லப்படும் எல்லா சமூகக் கடமைகளும் இதன் பகுதிகளே. உங்கள் தாய்தந்தையரைப் பேணுவதில் தொடங்கி உங்கள் குழந்தைகளுக்குரிய வாழ்க்கையை உருவாக்கியளிப்பது வரை அது முழுவாழ்நாளும் நீண்டு கூடவே வருகிறது. அதுவே அறம்.
அறத்தை நிறைவேற்றத் தேவையானது பொருள். ஆகவே அதை ஈட்டியே ஆகவேண்டும். பொருளீட்டுவது உங்களுடைய சொந்த வாழ்க்கைக்காக அல்ல என்பதை உணருங்கள். அது உங்கள் அறங்களை நிறைவாக ஆற்றுவதற்காகத்தான்.
சமூகம் புறவயமாகப்பார்த்தால் முற்றிலும் பொருள்சார்ந்த செயல்பாடுகளால்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பொருள்சார்ந்த இயக்கத்தில் நீங்கள் ஆற்றும் பங்களிப்பினால்தான் உங்களுக்கான இடம் உருவாகிறது. நீங்கள் யார் என்று கேட்டால் நாம் சொல்லும் பொதுவான பதிலே சமூகத்தின் பொருளியல் இயக்கத்தில் நாம் ஆற்றும் பணியைத்தான் குறிப்பிடுகிறது. நான் ஒரு ஓட்டுநர், நான் ஒரு தச்சன், நான் ஒரு ஆசிரியன் என்று.
அந்த இடத்தை நிறைவூட்டும்படி ஆற்றாமல் இச்சமூகத்தில் ஒருவன் முழுமையான வாழ்க்கை வாழமுடியாது. அதாவது ஒருவனின் தொழில் என்பது அவனுக்கு ஊதியமளிப்பது மட்டும் அல்ல. அவனுக்கான சமூக இடத்தை உருவாக்கிக் கொடுப்பது. அதன் மூலம் அவனுக்கு அடையாளத்தை அளிப்பது. அவனுடைய படைப்பூக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக அமைந்து நிறைவை அளிப்பது அது.
இந்த இரு தளங்களுக்குப்பின்னரே காமம் [இன்பம்] சுட்டப்படுகிறது. அது அந்தரங்கமானது. மானுட உறவுகளைச் செம்மையாக அமைப்பதன் மூலம் அடையப்படுவது. அதன் கீழ் காதல், குடும்ப வாழ்க்கை மட்டும் அல்ல பெற்றோர், குழந்தைகளுடனான உறவு போன்றவையும் அடங்கும்
ஒருவன் அறம், பொருள் இரண்டையும் செம்மையாக நிகழ்த்தினால் மட்டுமே அவனால் இன்பத்தை உண்மையில் அடைய முடியும். ஒவ்வொன்றுக்கும் பிறிதொன்று நிபந்தனையாகும். இதில் எதில் ஒருவன் பிழை நிகழ்த்தினாலும் இன்னொன்றையும் இழப்பான் எனபதே கண்கூடான விதி.
நான்காவதாக வருவது மோட்சம் [வீடுபேறு] . சாதாரணமாக மதம்சார்ந்த பொருளில் ‘உலகவாழ்க்கையை விட்டு இறைவனுடன் கலத்தல்’ என்று இது விளக்கப்படுகிறது. ஆனால் இதை அகவிடுதலை என்ற பொருளில்தான் நடராஜ குரு எப்போதும் விளக்குகிறார்
அகவிடுதலை என்பது மிக நுட்பமாகவும் விரிவாகவும் உணரப்படவேண்டிய ஒன்று. வாழ்க்கையின் அலைக்கழிப்புகளில் இருந்து விடுதலை பெறுவது அது. வாழ்க்கையில் இருந்து பெறும் மனவிலக்கம் மூலமே நாம் அதை அடைகிறோம். உள்ளூர மெல்ல ஒட்டாமலாகி அதை வெளியே இருந்து பார்க்க ஆரம்பிக்கிறோம். அந்தப்பார்வை நமக்கு முழுமைநோக்கைக் கொடுக்கிறது. அதையே ஞானம் என்ற சொல் குறிப்பிடுகிறது.
அறியும்தோறும் நமக்கு விடுதலை கூடுகிறது. எந்த ஒரு அறிதலும் அந்த அளவுக்கு விடுதலையைச் சாத்தியமாக்குகிறது. மின்சாரத்தைப்பற்றி அறியும்தோறும் மின்கருவி மீதான அச்சத்தில் இருந்து விடுதலை அடைகிறோம் என்பதை அழகான உவமையாக சித்பவானந்தர் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இந்த நான்காவது கட்டத்தின், அதாவது மோட்சம் [வீடுபேறு] என்ற புருஷார்த்தத்திற்கான செயல்பாடுகளில் ஒன்றே இலக்கியம். நுண்கலைகளும் தத்துவமும் ஆன்மீகமும் எல்லாம் இதன் பகுதிகள்தான். அவை அகவிடுதலையை அடைவதற்காகவே நம்மால் பயிலப்படுகின்றன.
நல்ல இலக்கியம் நாம் வாழும் சிறிய வாழ்க்கையின் எல்லைகளை நாம் கற்பனைமூலம் கடந்து விரிய வழிதிறக்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை நாம் வாழச்செய்கிறது. அதன்மூலம் நாம் வாழ்க்கையைப்பற்றிய ஒட்டுமொத்த நோக்கை அடைகிறோம். அது நம்மை மேலும் மேலும் மனவிலக்கத்துடன் வாழ்க்கையை நோக்க, மேலும் சமநிலையுடன் அறிய வைக்கிறது. அதுவே அகவிடுதலைக்கான முதல்படி. கலைகளும் தத்துவமும் ஆன்மீகமும் எல்லாம் அதன் இணைகோடுகள்.
நம் மரபில் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று புருஷார்த்தங்களின் நீட்சியாகவே வீடுபேறு சுட்டப்படுகிறது. அவற்றை உதாசீனம் செய்பவன் இதையும் அடையப்போவதில்லை. சமூகத்துக்கான கடமைகளான அறத்தைக் கைவிட்டவனுக்குப் பிற மூன்றும் இல்லை.
இன்னொரு வழியும் நம் மரபில் உள்ளது. அதை சன்யாசம் என்று ஐந்தாவது புருஷார்த்தமாகச் சுட்டுவார்கள். அவர்கள் வீடுபேற்றின்பொருட்டுப் பிறமூன்றையுமே கைவிட்டவர்கள். அது அனைவருக்குமான வழி அல்ல. மிகமிக அசாதாரணமான மனிதர்களுக்குரியது. அவர்கள் பெரும்பாலும் பிறப்பிலேயே அவ்வியல்புகள் கொண்டவர்கள். அவர்கள் மூன்று புருஷார்த்தங்களையும் கைவிடுவது தங்கள் அகப்பலவீனம் காரணமாக அல்ல, பலம் காரணமாக.
வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில், நம் வாழ்க்கையை நாமே முடிவுசெய்ய நேரும் இளமையில், நான்கு புருஷார்த்தங்களும் ஒரே சமயம் நம் கண்முன் வந்து நிற்கின்றன. நமக்கு சமூகக்கடைமைகளும் அதன் அடையாளங்களும் தேவையாகின்றன. நமக்குப் பொருளியல் இருப்பை அளிக்கும் தொழிலும் அதன் அடையாளமும் தேவையாகிறது. அத்துடன் நம் மனம் உறவுகளையும் அதன் இன்பத்தையும் நாடுகிறது
மிகச்சிலருக்கு நான்காவது புருஷார்த்தமும் அதேயளவுக்கு தீவிரமாக வந்து முன்னால் நிற்கிறது. வாழ்க்கையை அனுபவிப்பதுடன் அதை அறிவதும் தேவையாகிறது. அதில் ஈடுபட்டு வெல்வதுடன் அதிலிருந்து விலகி நிற்பதும் தேவையாகிறது.
அப்போது ஆழமான மனக்குழப்பம் ஏற்படுகிறது. இலக்கியம், தத்துவம், ஆன்மீகம் [ஆன்மீக அம்சமுள்ள அரசியலும், சேவையும் ] போன்றவற்றின் வசீகரம் நம்மைக் கவர்கிறது. அவற்றில் தீவிரமாக ஈடுபட்டு மற்ற மூன்றையும் உதாசீனம் செய்ய நாம் முயல்கிறோம். அதுவே நீங்கள் இருக்கும் நிலை
ஆனால் நம் மரபின் விடை, முன்னோர் வாழ்ந்து அறிந்து சொல்லும் வழி, திட்டவட்டமானது. நான்கையும் சமமாக கருதி நான்கிலும் முழுமனதுடன் ஈடுபடுபவனுக்கே முழுமை கைகூடும்.
இலக்கியத்தை அல்லது கலைகளை வெறும் கேளிக்கையாகப் பார்ப்பவர்கள் அதை லௌகீக வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதியாக நினைக்கிறார்கள். அது அவர்களை அலைக்கழிப்பதில்லை. இயல்பான ஒரு இளைப்பாறலாகவே நின்றுவிடுகிறது
ஆனால் அதை ஞானமாக, முழுமைநோக்குக்கான வழியாக அணுகுகிறவர்கள் பலத்த அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். சமநிலைக் குலைவு நிகழ்கிறது.அவர்கள் தங்கள் லௌகீகமான கடமைகளில் பிழைகள் செய்கிறார்கள். அது என்னைப்போன்ற தீவிர எழுத்தாளர்களிடம் அடிக்கடி ஒரு குற்றச்சாட்டாகவே சொல்லப்படுகிறது. இந்தப்பதில் அப்படி பலமுறை பலரிடம் சொல்லப்பட்டதுதான்.
உங்களைப்போன்றவர்கள் செய்யும் பிழை என்னவென்றால் இலக்கியம் போன்ற தீவிரமான ஒன்றில் ஈடுபடும்போது பிற அனைத்துமே முக்கியமற்றவை என்று எண்ணிக்கொள்வதுதான். அவற்றை அலட்சியம் செய்வதும், அவற்றில் முழுமனதுடன் ஈடுபடாமலிருப்பதும் உங்களைப்போன்றவர்களின் வழக்கமாக இருக்கிறது.
ஆனால் அதேசமயம் அவை அளிக்கும் எல்லா வசதிகளும் இன்பங்களும் உங்களுக்குத் தேவையாகவும் இருக்கிறது. அதாவது விதைக்காமல் ,உழைக்காமல் அறுவடை தேவையாக இருக்கிறது. சமூகஇடம் தேவை, சமூகஅடையாளம் தேவை, குடும்பமும் வசதிகளும் தேவை. ஆனால் அதற்காக கவனத்தைக் கொடுக்கமுடியாது என்கிறீர்கள்.
ஏன் என்று உங்களிடம் ஈவிரக்கமில்லாமல் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், புரியும். அது வெறும் அகங்காரம். நான் இந்த அன்றாட உலகியல் விஷயங்களுக்கெல்லாம் ஒருபடி மேலானவன் என நீங்கள் உங்களைப்பற்றி எண்ணிக்கொள்கிறீர்கள். நான் இதைப்போய் செய்வதா, என் கவனத்தை இதற்கெல்லாம் கொடுப்பதா என்று நினைக்கிறீர்கள்.
ஆகவே ஒவ்வொரு உலகியல் செயல்பாட்டைச் செய்யும்போதும் அக்கறையின்மையும் சலிப்பும் ஏற்படுகிறது. முழுத்திறமையையும் குவித்து முழுக்கவனத்துடன் செயல்படமுடிவதில்லை. இதுதான் உங்கள் பிரச்சினை.
அது உண்மையில் இலக்கியத்தின் பிரச்சினையா இல்லை உங்கள் அகங்காரத்தின் பிரச்சினையா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும். ஏனென்றால் உங்களைப்போலவே அரசியலுக்காகத் தங்களை ஒப்புக்கொடுத்துப் பிற அனைத்தையும் உதாசீனம் செய்யும் எவ்வளவோ இளைஞர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களின் மனநிலையும் உங்களுடையதும் ஒன்றே.
எனக்கும் இந்த அகங்காரமும் அதன் விளைவான சலிப்புகளும் இருந்தன. ஆனால் நான் அக்காலத்தில் ஆத்மானந்தரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். ஆத்மானந்தர் திருவிதாங்கூர் அரசில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். திருமணமாகி மனைவி,குழந்தைகளுடன் வாழ்ந்தார். ஆனால் உள்ளூர அத்வைத ஞானத்தில் கனிந்து முதிர்ந்தார்.
தினமும் தன் வீட்டுத்திண்ணையில் ஒருமணிநேரம் அத்வைத வகுப்பு எடுப்பார் ஆத்மானந்தா. அதைக்கேட்க உலகமெங்குமிருந்து அறிஞர்களும் கலைஞர்களும் வருவார்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி வந்திருக்கிறார். பால் பிரண்டன் வந்திருக்கிறார். ஏன் கார்ல் யுங்கே வந்திருக்கிறார். திருவிதாங்கூர் மகாராஜா வந்து அமர்ந்திருப்பார். அனைவரும் அவருக்கு மாணவர்களே
எட்டரை மணிக்கு அவர் சீருடை அணிந்து அதே மகாராஜாவின் பணியாளாக அலுவலகம் செல்வார். திருவிதாங்கூரின் பல முக்கியமான குற்றங்களை அவர்தான் துப்பறிந்தார். ஓய்வுபெறும் வரை அப்பணியிலேயே நீடித்தார்.
இந்தச்சமநிலை என்னை பிரமிக்கச்செய்தது. இதில் ஒரு சிறிய பகுதியையாவது நானும் கடைப்பிடிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன். ஒரு வாழ்க்கையை இயல்பாகவே நான்காகப்பிரித்துக்கொள்ளமுடியும். ஓரு ஆளுமையை அதற்கேற்ப நான்காகப் பிரித்துக்கொள்ளமுடியும்
காலையில் எழுந்து அலுவலகம் சென்று குமாஸ்தா வேலைசெய்யும் நான் அப்போது எழுத்தாளன் அல்ல. என் அலைக்கழிப்புகளுக்கும் தேடலுக்கும் அங்கே இடமே இல்லை. அந்தவேலையை எப்படி வெற்றிகரமாகச் செய்யமுடியும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.
அந்தவேலையின் ஒருபகுதியாகவே எளியமுறையில் தொழிற்சங்கப்பணிகளிலும் ஈடுபட்டேன். அங்கே எவரிடமும் இலக்கியம் பேசியதில்லை. எவரிடமும் இலக்கியவாதியாக என்னைக் காட்டிக்கொண்டதுமில்லை. அவை என்னுடைய அறமும் பொருளுமாக இருந்தன. அங்கே அவற்றை மட்டுமே செய்தேன்.
என் வீட்டில் என் பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் மனைவிக்குக் கணவனாகவும்தான் இருக்கிறேன். இங்கே என்னுடைய இலக்கியமோ தத்துவமோ ஆன்மீகமோ குறுக்கே வர விடுவதே இல்லை. வீட்டில் பாத்திரங்களத் துலக்கக்கூடிய, துணி துவைக்கக்கூடிய, கூட்டிப்பெருக்கக்கூடிய, காய்கறி வாங்கி வரக்கூடிய நான் எழுத்தாளன் அல்ல.
என்னுடைய மோட்சம், அகவிடுதலை எனக்குள் அந்தரங்கமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அதை என் வாசகர்களிடமே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இதில் நான் அடையும் வெற்றிகள் என்னை முன்னெடுத்துசெல்கின்றன
உண்மையில் இப்படிப் பகுத்துக்கொள்வதன் வழியாக ஒவ்வொன்றையும் சிறப்பாகவே செய்யமுடிந்தது. ஆகவே ஒன்று இன்னொன்றை வலுப்படுத்தியது. ஒருநாளும் நான் பொருளாதாரக் கஷ்டத்தில் இருந்ததில்லை. ஆகவே ஒரு கணம்கூட அந்தக்கவலைக்காக என் அக நேரத்தை நான் செலவிட நேர்ந்ததில்லை. என்னுடைய குடும்பத்தில் இக்கணம் வரை எந்த மனச்சிக்கல்களும் மோதல்களும் வந்ததில்லை. ஆகவே என்னுடைய கவனத்தை நான் அதற்காக வீணடிக்க நேரவில்லை.
நேர்மாறாக நடந்திருந்தால் என்னுடைய அகவிடுதலைக்கான தேடலைப் பிற மூன்றும் சேர்த்து அழித்திருக்கும். இலக்கியத்துக்காக நீங்கள் தொழிலில் கவனம் செலுத்தவில்லை என்றால் காலப்போக்கில் உங்களுக்குத் தொழில்சிக்கல்கள் எழுந்து இலக்கியமும் கைவிட்டுப்போகும். இலக்கியத்துக்காகக் குடும்பத்தை உதாசீனம்செய்தால் காலப்போக்கில் குடும்பச்சிக்கல்களால் இலக்கியத்தை மறக்க வேண்டியிருக்கும்.
ஆம், அறமும் பொருளும் இன்பமும் சீராக இருப்பதே வீடுபேறுக்கான சரியான வழி. அதற்கான விதிமுறை என்பது நான்கிலும் கொள்ளும் சமநிலைதான். ஒவ்வொன்றிலும் அவற்றுக்குத்தேவையான முழுமையான கவனத்தைக் கொடுத்தல். ஒன்று இன்னொன்றை பாதிக்காமல் அமைத்துக்கொள்ளுதல்
அது எப்படிச் சாத்தியம் என்று சிலர் உடனே கேட்பார்கள். இந்தச்சமநிலையை ஓரளவேனும் செய்யாத எவரும் இல்லை. குடும்பப்பிரச்சினைகள் இருப்பவர்கள் எத்தனையோ பேர் அதைத் தொழிலுடன் கலக்காமல் விலக்கிக்கொண்டு செயல்படுகிறார்கள்தானே? அப்படிச் செய்யும்போது தொழில்ஈடுபாடே குடும்பச் சிக்கலை மறக்க உதவுகிறது. ஒன்றில் உள்ள இடைவெளியை இன்னொன்று ஈடுகட்டுகிறது.
அதேபோல நான்கையும் கச்சிதமாகப் பிரித்துக்கொள்ளலாம். நான்கிலும் முழுமையாக ஈடுபடலாம். அப்போது நான்குமே உங்களுக்குக் கைகொடுக்கும். நான்கில் எதை விட்டாலும் நான்குமே கீழிறங்கும்.
அதற்குத்தேவை சொந்த அகங்காரத்தைக் கண்காணிப்பதே.நீங்கள் உங்கள் இலக்கிய வாசிப்பு என்ற தகுதியை உங்களுக்கான அடையாளமாக ஆக்கிக்கொண்டீர்கள் என்றால் அது மிகப்பெரிய பிழை. ஏனென்றால் அது ஆன்மீக தளத்தில் மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. அதை நீங்கள் லௌகீகமாகப் பயன்படுத்திக்கொள்ளமுடியாது. இங்கே அதற்கு எந்த மதிப்பும் இல்லை.அது உங்களை ஏமாற்றத்துக்கே கொண்டுசெல்லும்
அகவே அதை முழுக்கமுழுக்க அந்தரங்கமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆன்மீகமான மலர்ச்சிக்கு மட்டும் அதைக் கையாளுங்கள். வேறு எங்கும் எதற்கும் வெளிக்காட்டாதீர்கள். அதை சம்பந்தமில்லாதவர்கள் காணவோ விமர்சிக்கவோ வாய்ய்பளிக்காதீர்கள்.
தொழில்மூலமும் சமூகஉறவுகள் மூலமும் அடையவேண்டிய அடையாளத்தைத் தொழிலிலும் சமூக உறவுகளிலும் வெற்றிகரமாக செயல்படுவதன்மூலமே அடையுங்கள். அதற்காக முழுமையாகவே உங்களை ஒப்படையுங்கள். அதற்கான உழைப்பையும் கவனத்தையும் கொடுங்கள். அதற்காக உங்கள் மனதையும் நேரத்தையும் சரியாகப் பிரித்துக்கொள்ளுங்கள்
நான்கு வேடங்களில் நடிக்கும் ஒரு நடிகன் மனித ஆன்மா. நான்கு வேடங்களிலும் ஒரே சமயம் அது தோன்றுகிறது. நான்கு வேடங்களிலும் அது முழுமையாக நடிப்பதனால் அநத நான்கு கதாபாத்திரங்களும் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதே இல்லை
ஜெ
மறுபிரசுரம் ஜூலை 2012 முதல்பிரசுரம்