அந்த நாடகம்

நித்ய சைதன்ய யதி

 

தொண்ணூற்றிநான்கில் நான் குரு நித்ய சைதன்ய யதியின் உரையைக்கேட்டபடி ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருந்த நாராயணகுருகுலத்திற்குள் அமர்ந்திருந்தேன். அது இலக்கிய உரை என்பதனால் அதிகம் பேர் இல்லை. நித்யா நான் கேட்ட ஒரு கேள்விக்காக டி.எஸ்.எலியட்டை நெடுநாட்களுக்குப்பின் மீண்டும் வாசிக்க ஆரம்பித்திருந்தார். கண்ணருகே நூலைக்கொண்டுவந்து ஆழமாக வாசித்தபின் என்னை நிமிர்ந்து நோக்கிப் புன்னகைசெய்தார்

‘எலியட் கலைகளின் சந்திப்புமுனை ஒன்றைப்பற்றி எழுதியதை வாசித்தது நினைவிருக்கிறது. அதைத்தான் தேடினேன். இசைக்கூடங்களைப்பற்றிய கட்டுரை’ என்றார் நித்யா. ‘மனித உணர்ச்சிகளையும் ஆன்மீக தரிசனங்களையும் சொல்வதற்கு மிக உகந்த கலைகள் மூன்று. இலக்கியம், இசை, நாடகம். நாடகத்தில் நடிப்பும் நடனமும் இருக்கிறது. ஒப்பனை, கைமுத்திரைகள் மற்றும் அரங்க அமைப்புமூலம் ஓவியமும் உள்ளே வந்துவிடுகிறது’

’மனிதனின் அடிப்படையான இந்தக் கலைகள் எல்லாம் ஒன்றாகச்சந்திக்கும் புள்ளி என்பது இசைநாடகம் என்ற வடிவம் என்கிறார் எலியட். அதுதான் மனிதன் உருவாக்கிய கலைகளிலேயே உச்சமானது என்கிறார். ஒரு நல்ல இசைநாடகத்தில் இந்த மூன்றுகலைகளும் மிகச்சரியாக ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று வளர்த்து நுட்பமாக ஆகியபடியே செல்கின்றன. அந்த உச்சத்தில் மனிதனின் பிரக்ஞையால் எட்டக்கூடிய மிகமிக உன்னதமான ஒரு அறிதலின் கணம் நிகழும். அதை எலியட் சுட்டிக்காட்டுகிறார்’ நித்யா தொடர்ந்தார்.

‘ஓப்பரா என்ற இசைநாடகவடிவத்தைத்தான் ஐரோப்பாவின் கலையுச்சம் என்று எலியட் நினைக்கிறார். ஐரோப்பிய இசையின் உச்சகட்ட சாத்தியங்கள் அதில்தான் உள்ளன. இருட்டையும் வண்ணங்களையும் குழைத்து உருவாக்கப்படும் ஐரோப்பிய செவ்வியல் ஓவியங்களின் மிக அழகிய காட்சிகளை நாம் ஓப்பராவில் காணமுடியும். ஐரோப்பிய இலக்கியத்தின் மிகச்சிறந்த உச்சங்கள் அவைதான்’ நித்யா சொன்னார்’

நான் அவரது சொற்களையே பார்த்திருந்தேன். ஆம், சொற்களைக் கேட்பதைவிடப் பார்ப்பது இன்னும் பெரிய அனுபவம். குருவின் உதடுகளில் இருந்து வரும் சொற்கள் மின்மினிபோல ஒளிரக்கூடியவை. பொன்வண்டுகள்போலப் பேரழகு கொண்டவை. பட்டாம்பூச்சிகளைப்போல சிறகுள்ளவை. நித்யாவின் வெள்ளைத்தலைமயிர் தோள்களில் விரிந்து கிடந்தது. பனிநுரைத்தாடி மார்பில் விழுந்து இளங்காற்றில் அலையடித்தது. பத்துவயதுப்பையனின் கண்கள். சிவந்த உதடுகள் குவிந்தும் விரிந்தும் நூற்றுக்கணக்கான செம்மலர்களை நிகழ்த்திக்காட்டின

குருவின் தோற்றம்போல இனிதாவது எதுவும் இல்லை. அவரது காலடிகள் நிலத்தில் நடப்பதில்லை. மெல்ல நம் நெஞ்சை,நம் சிந்தனையை, நம் ஆழத்தை மிதித்து மெத்திட்டு அழுத்தி முன்செல்கின்றன. குருவால்தான் அவரது சொற்கள் அர்த்தம் கொள்கின்றன. பின்னர் அவரது சொற்கள் அவரை நம் முன் விரித்து விரித்து பேருருவம் கொள்ளச்செய்கின்றன. அச்சொற்கள் பிறக்கும் கணங்களில் அவற்றைக் காண்பதென்பது மிகச்சிலருக்கே, மிகச்சில தருணங்களிலேயே அடையப்பெறும் ஆசி.

அதை நான் பிரேமை என்றே சொல்வேன். காதலித்தவர்கள் அக்காதலின் உச்சநாட்களில் அதை உணர்ந்திருப்பார்கள். அன்று அவள் சொல்லும் அத்தனை சொற்களிலும் ஒளியும் சிறகும் முளைக்கின்றன. அவற்றை நாம் கேட்பதில்லை புரிந்துகொள்வதில்லை. பார்க்கிறோம், உணர்ந்துகொள்கிறோம். ஆனால் நாம் காதலியைக் காதல்மூலம் நெருங்கிச்செல்கிறோம். நெருங்கிச்செல்லும்தோறும் அறிகிறோம். அறியும்தோறும் அவள் பெண்ணாகிறாள். வெறும் பெண்ணாக.

மாறாக குருவின் மீதான பிரேமையால் நாம் அவரை நெருங்குகிறோம். உடைகளைக் கழற்றுவதுபோல நம்மை மெல்ல மெல்லக் கழற்றிவிட்டு அவரை அறிகிறோம். அறிய அறிய அவர் பேருருவம் கொள்கிறார். அந்தப் பேருருவம் நம்மை இன்னும் பித்தாக்குகிறது. ஒருபோதும் நாம் அதிலிருந்து வெளிவருவதில்லை. தீராக்காதல் போல பெரும்பேறு ஏதுமில்லை. அது மானுடரில் குருவிடமன்றி சாத்தியமும் அல்ல.

காலையொளிபெற்ற பனிமலைச்சிகரம் போல நித்யா தெரிந்தார். ’ஒவ்வொரு கலைக்கும் உச்சத்தை அடைவதற்கு அதற்கான வழி உள்ளது. அந்த வழியில் அதுசெல்வதனாலேயே பிறவழிகளை அது தவிர்க்கிறது. அது அந்தக்கலையின் தவிர்க்கமுடியாத குறைபாடு. உதாரணமாக இசையில் சிந்தனைக்கு இடமில்லை. இலக்கியம் அதில் இணையும்போது அந்தக்குறை தவிர்க்கப்படுகிறது. இசைநாடகம் மானுடக்கலைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டுகிறது. ஒன்றின் குறையை இன்னொன்றால் ஈடுகட்டுகிறது. மானுடனுக்கு சாத்தியமான கலையுச்சம் ஒன்றை நிகழ்த்துகிறது. நான் எலியட் சொன்னதை ஆதரிக்கிறேன்’ என்றார் நித்யா

‘எனக்கும் அந்த எண்ணம் உண்டு குரு. கேரளத்தில் கதகளி என்பது ஓப்பராவுக்கு நிகரான கலை. அதை ஒரு இந்திய ஓப்பரா என்றே சொல்லமுடியும். அதன் சில தருணங்களில் வரும் உன்னதமான நிலையை இலக்கியமோ இசையோ தனித்தனியாக தரமுடியாது. மனிதனாக நாம் உணர்வதிலேயே உச்சிச்சிகரத்தில் நிற்பதுபோல தோன்றும். ஒட்டுமொத்த மனிதவரலாற்றையே ஒரே பார்வையால் பார்த்துவிடலாம் என்று தோன்றும். புல் புழு செடிமரங்களுடன் இந்த பூமியே நம் முன் திறந்து விரிந்து கிடப்பதுபோலத் தோன்றும்’ என்றேன்

’ஆமாம். கதகளியில் பல தருணங்களில் அந்த நிலை கைகூடுகிறது. உலகமெங்கும் கதகளிக்கு நிகரான ஓப்பரா போன்ற கலைவடிவங்கள் உள்ளன. ஒரு பண்பாடு ஏதோ ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் திடீரென்று மலர ஆரம்பிக்கிறது. அதற்கு நிறைய வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. இசையும் இலக்கியமும் நாடகமும் நடனமும் தத்துவமும் எல்லாம் ஒன்றாக வளர்கின்றன. அப்போது பெருங்காவியங்கள் உருவாகும். ஒரு கட்டத்தில் அவை எல்லாமே ஒன்றாகச்சேர்ந்து ஓப்பரா போன்ற ஒரு கலைவடிவை உருவாக்கிவிடுகின்றன’ நித்யா சொன்னார். ‘சீனாவின் பின்-யின் ஓப்பரா ஐரோப்பிய ஓப்பராவை விட மகத்தானது. ஜப்பானிய நோ நாடகம் இன்னொருவகையான அற்புதமான ஓப்பரா…’

அப்போது வெளியே ஒரு அம்பாசிடர் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மூன்றுபேர் இறங்கி வந்தார்கள். ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி தளர்ந்து தொய்ந்து இறங்கி காரின் முகப்பில் கைவைத்து நின்றாள். கடுமையாக நோயுற்றவளாகத் தோன்றினாள். நித்யா கண்ணாடியை தூக்கிவிட்டு அவளைப்பார்த்தாள். ‘தம்பானே’ என்றார். தம்பான் சுவாமி வந்ததும் ‘…அந்த டீச்சரை உள்ளே வரச்சொல்’ என்று சொல்லிவிட்டு என்னை நோக்கிக் கைநீட்டினார். நான் அவரைப் பற்றி எழுப்பினேன்.

மெல்லநடந்து அவர் தன்னுடைய அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டார். எட்டடிக்கு எட்டடி கொண்ட மிகச்சிறிய அறை. மூன்று சுவர்களிலும் புத்தக அடுக்குகள். அவரது அகம் அந்த அறைபோல என நினைப்பேன். நாற்காலிக்கு நேர்எதிரில் தத்துவநூல்கள். வலக்கைப்பக்கம் அகராதிகள் கலைக்களஞ்சியங்கள். இடதுபக்கம் புனைவிலக்கியங்கள். நேர்பின்னால் கவிதைகள். சலீம் அலியின் பறவைகள் பற்றிய நூலை அவர் கவிதைகள் நடுவேதான் வைத்திருந்தார். கார்ல்மார்க்ஸின் மூலதனத்தைப் புனைவிலக்கியவரிசையில்.

நித்யாவின் மேஜை அவரது விளையாட்டுமனமேதான். விதவிதமான சிறிய பீங்கான் கிண்ணங்கள். அவற்றில் ஒன்றில் வண்ணப்பென்சில்கள். இன்னொன்றில் மெழுகுவண்ணக் குச்சிகள். இன்னொன்றில் வரைவதற்காக கிராஃபைட் குச்சிகள். சில கிண்ணங்களில் அவர் நடைசெல்லும்போது பொறுக்கிக் கொண்டுவந்த வண்ணவண்ண விதைமுத்துக்கள். சில கிண்ணங்களில் பொறுக்கித் தரம்பிரித்த அழகிய கூழாங்கற்கள். வண்ணப்பீங்கான் குடுவைகளில் விதவிதமான இறகுகள். நித்யா பூக்களைப் பறிப்பதில்லை. பூச்சாடிகளில் எல்லாம் உதிர்ந்து பொறுக்கப்பட்ட பெரிய இறகுகளையும் காய்ந்த புல்லின் மலர்க்கொத்துகளையும் வைத்திருப்பார்

அந்த டீச்சரம்மா இன்னொருவர் தாங்கிக்கொள்ள மெல்ல உள்ளே வந்தாள். கடும் உடல்வதையில் முனகுவது போல ஒலியெழுப்பினாள். நிற்கமுடியவில்லை. உடம்பு உயர்வேகத்தில் நீர் ஓடும் ரப்பர் குழாய் போல துடித்து நடுங்கியது. ஹக் ஹக் என்று ஒரு ஒலி. சட்டென்று மூங்கிலைப்பிளப்பதுபோல ஒலியெழுப்பி அழுதபடி வெட்டுப்பட்டு விழுபவள் போல அப்படியே முன்னால் சரிந்து நித்யாவின் காலடியில் விழுந்தாள்.

நித்யா அவள் தலையில் கைவைத்துத் தலைமுடியை நீவினார். அவளுடன் வந்தவர் அவளைப் பிடித்து எழுப்ப முயல அவள் நித்யாவின் கால்களைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள். நித்யா அவரைக் கைகாட்டி விலக்கினார். அவள் கதறி அழ ஆரம்பித்தாள்

அப்படி ஒரு அழுகையை நான் கண்டதில்லை. ஒரு மனித ஜீவனின் மொத்த உடலும் கதறி அழமுடியுமென அப்போது கண்டேன். ஒருவர் அழுகை மட்டுமாகவே மாறிவிட முடியும் என்று உணர்ந்தேன். வாய் அழுவதை உள்ளம் அழுவதைக் கண்டிருக்கிறேன், ஆன்மா கதறியழுவதை அன்று கண்முன் கண்டேன். ஏன் என்றறியாமலேயே நானும் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்.

அழுது அழுது மெல்ல ஓய்ந்தாள். எரிந்து அடங்குவதுபோல்.எரியாமல் எஞ்சியது தன்னுணர்வு மட்டும்தான் போல. அப்படியே நித்யாவின் காலடியில் சுருண்டு படுத்துக்கொண்டாள். அவ்வப்போது வரும் விசும்பல் அன்றி ஒன்றுமில்லை.

நித்யா ஏறிட்டுப்பார்த்தார். கூடவந்தவர் அவள் அண்ணன். அந்தப் பெண்மணி பாலக்காடுபக்கத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை. இருபது வயதில் கல்யாணமாகியது. ஒரு மகன் பிறந்த மறுவருடம் கணவர் காய்ச்சலில் இறந்தார். அதன்பின் அந்தப்பையனுக்காகவே அவள் வாழ்ந்தாள். நாற்பது நாட்களுக்கு முன் அந்தப்பையன் ஒரு பைக் விபத்தில் இறந்துவிட்டான்.

நான் கொதிக்கும் நெஞ்சுடன் அந்த மெல்லிய உடலையே பார்த்திருந்தேன். கடவுளின் வதைக்கூடத்தில் கிடக்கும் நிராதரவான எளிய உயிர். அக்கணம் எங்கோ எவர் மீதெல்லாமோ கொலைவெறியுடன் முட்டி முட்டி மீண்டது என் பிரக்ஞை. ’அடப்பாவி ! மானுடப்பிறவியை நீ என்னவென்று நினைத்தாய்?’ என்று கண்ணுக்குத்தெரியாத அதன் கழுத்தைப்பிடித்து உலுக்கினேன்.

அவள் மெல்ல அசைந்தபோது நித்யா அவள் தலையை வருடினாள் . ‘என் மகளே’ என மென்மையாக அழைத்தார். ‘எல்லாம் கடவுளின் திட்டம். நாம் எதுவும் செய்ய முடியாது. நம்மால் கடவுளைப்புரிந்துகொள்ளவும் முடியாது. அவர்முன் நாம் நம்மை சமர்ப்பணம்செய்ய வேண்டும் அவ்வளவுதான். இது நம்முடைய கடன்களை நாம் கழிப்பதாக இருக்கலாம். உன்னுடைய கடன் கழிந்தது. இனி உனக்கு அடுத்த பிறவி இல்லை. யோகிகள் புலன்களை அடக்கித் தவம்செய்து அடையும் மீட்பை நீ உன் துக்கம் வழியாகவே அடைந்துவிட்டாய். இந்த துக்கம் ஒரு பெரிய விரதம். ஒரு பெரிய யோகம். இது உனக்கு சத்கதி அளிக்கும். இந்தப் பிறவியில் உனக்கு வாய்த்தது. அதுவும் இறைவனின் இச்சை என்று கொள்’

அவர் மேஜையில் இருந்த ஒரு சின்ன சம்புடத்தில் இருந்து விபூதி எடுத்து அவளுக்குப் போட்டுவிட்டார். இன்னொரு சம்புடத்தில் இருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்துக் கொடுத்தார் .’இதைப் பூஜை அறையில் வைத்துக்கொள். இது சிவரூபம். உனக்கு எல்லா ஆறுதலையும் இது அளிக்கும்’ அந்த பெண்மணி கண்ணீர் வழிய நடுங்கும் கரங்களால் அதைப்பெற்றுக்கொண்டாள்.

மேலும் சற்றுநேரம் கழித்து அவர்கள் கிளம்பினார்கள். நான் கண்ணீர் உலர்ந்து சொற்கள் அழிந்து அமர்ந்திருந்தேன். அவள் கும்பிட்டுப் படிகளைத் தாண்டியதும் நாற்காலி கிரீச்சிட நித்யா என்னை நோக்கித் திரும்பினார். ’நான் உன்னிடம் கேட்க விரும்பியது ஒருவிஷயம்தான். சோழர்காலம்தான் தமிழ்ப்பண்பாட்டின் பொற்காலம்.இசையும் நடனமும் இலக்கியமும் சிற்பக்கலையும் தத்துவமும் எல்லாம் செழித்த காலம். கம்பராமாயணம் போன்ற மாகாவியமும் உருவாகியிருக்கிறது. ஏன் ஓப்பரா மட்டும் உருவாகவில்லை?’

ஆரம்பத்தில் நான் அதைக் கேட்கவேயில்லை. கேட்டதும் என் மொத்தக்குருதியும் தலைக்குள் பீரிட்டு ஏறியது. ’என்ன கேட்கிறீர்கள் குரு? நீங்கள் மனிதர்தானா? இந்த துக்கம் உங்கள் மனதைக் கொஞ்சம்கூட பாதிக்கவில்லையா? ஒரு துளி கண்ணீர்கூட உங்கள் மனதில் ஊறவில்லையா? அப்படியென்றால் இப்போது நீங்கள் சொன்னதெல்லாம் வெறும் நடிப்பா? சன்யாசம் என்றால் மனித உணர்ச்சிகளை எல்லாம் இழந்து உலர்ந்த மட்டை மாதிரி ஆவதா? அப்படி ஆகும் மனிதனுக்கு என்ன மேன்மை இருக்கிறது?’ என்று என்னென்னவோ சொல்லிக் கொதித்தேன்.

‘நீ உணர்ச்சிவசப்படுகிறாய்’

‘ஆமாம் உணர்ச்சிதான். நீங்கள் நடித்தீர்கள். சுத்தஅத்வைதிக்கு எதற்கு திடீரென்று கடவுள்பற்றிய பேச்சு? யாரோ கொண்டு வந்த விபூதியை வேறு எடுத்துப் போட்டுவிடுகிறீர்க்ள்…நீங்கள் என்ன சைவரா?’

நித்யா தாடியைத் தடவியபடி ‘நடிப்புதான்…’ என்றார். ‘அந்தப்பெண்ணுக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் சொன்னேன். எதை எதிர்பார்த்து வந்தாளோ அதைக்கொடுத்தேன். நான் சாமியார். இதோ மடமும் கட்டி வைத்திருக்கிறேன். கடமையைச் செய்யவேண்டாமா?’ அவர் கண்கள் கண்ணாடிக்கு அப்பால் சிரித்தன.

நான் கோபத்துடன் எழுந்து வெளியே சென்று என் அறைக்குள் நுழைந்து பையைக் கட்ட ஆரம்பித்தேன். கிளம்பியிருப்பேன். ஆனால் அப்படிப் பலமுறை கிளம்பிச்சென்று அதேவேகத்தில் நான்குநாள் கழித்துத் திரும்பி வந்த நினைவு வந்தது. ஆகவே தளர்ந்தேன். அப்படியே சுருண்டுபடுத்துத் தூங்கிவிட்டேன்.

மாலையில் நித்யா நடை செல்லும்போது நானும் சென்று சேர்ந்துகொண்டேன். தியாகி சுவாமியும் ஒரு வெள்ளைக்கார இளைஞனும் கூடவே வந்தார்கள். நான் மௌனமாகக் கூடவே நடந்தேன். ‘கிளம்பிப் போகவில்லையா? நல்லது’ என்றார் நித்யா. நான் ஒன்றும் சொல்லவில்லை.

சற்று நேரம் கழித்துப் பேச்சை ஆரம்பிப்பதற்காக ‘அந்த டீச்சரை முன்னரே தெரியுமா?’ என்று கேட்டேன்.

‘இல்லை, நான் இன்றுகாலைதான் பார்த்தேன்’ நித்யா சொன்னார்

‘அப்படியென்றால் எப்படி டீச்சர் என்று தெரிந்தது?’

‘இதென்ன கேள்வி? ஒரு டீச்சரைப்பார்த்தால் டீச்சர் என்று தெரியாதா என்ன?’

எனக்கு அவர் என்னைக் கிண்டல்செய்கிறார் என்று புரிந்தது.

‘ஐம்பதாண்டுக்காலமாக நான் மனித வாழ்க்கையை ஒரு கண்ணாடிச்சுவருக்கு இப்பால் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் இந்த நாடகத்தில் நடிகனே அல்ல. அதனால் இதை உண்மை என்று நான் நினைப்பதில்லை. பார்த்துப்பார்த்து இந்த நாடகத்தின் கதை ஒருமாதிரி பிடிகிடைத்துவிட்டது’ என்றார் நித்யா. ‘திரும்பத்திரும்ப ஒரே சம்பவங்கள்தான். இன்று நான் சொன்ன சொற்களை இதேபோன்ற பெண்களிடம் இதற்குமுன் ஐம்பது தடவையாவது சொல்லியிருப்பேன்’

தன் ஊன்றுகோலால் மண்ணில்கிடந்த ஒரு இறகைக் கிண்டிப்பார்த்தார். பின் புன்னகையுடன் ‘எவ்வளவு ஆறுதல்கள், எவ்வளவு ஆலோசனைகள், எவ்வளவு விளக்கங்கள்…மனிதவாழ்க்கையைப் பார்ப்பவனுக்கு ஒரு கட்டத்தில் அதிலிருந்து மனவிலக்கம் வந்துவிடுகிறது. அதுதான் உண்மையான துறவு என்பது’ என்றார்

சற்று நேரம் நித்யா பேசாமல் நடந்தார். பின்பு என்னிடம் சொன்னார் ‘போரும் அமைதியும் வாசித்திருக்கிறாயா?’ என்றார்

‘ஆமாம்’ என்றேன். ’தல்ஸ்தோய் என்னுடைய பிரியநாயகன்’

‘அதை வாசித்துமுடித்ததும் என்ன தோன்றியது?’

’பெரிய சோர்வு…பெரிய சலிப்பு. நூறுவருடம் வாழ்ந்து முடித்தது போல’

‘ஆமாம். இலக்கியம் அளிப்பது அதைத்தான். இவ்வளவுதான் என்ற ஒரு புரிதல். அதிலிருந்து ஒரு மனவிலக்கம். இலக்கியம் என்பது வாழ்க்கை என்ற கடலில் இருந்து அள்ளப்பட்ட டீஸ்பூன் அளவு தண்ணீர். அதுவே அந்த விலக்கத்தை அளிக்கும் என்றால் வாழ்க்கையைப்பார்ப்பவனுக்கு வரும் விலக்கம் எப்படிப்பட்டது என்று யோசி’

நான் காலையில் சொன்னவற்றுக்குப் பதில் சொல்கிறார் என்று புரிந்தது. ஒன்றும் பேசாமல் நடந்தேன்.

‘கடவுளுக்கும் ஓப்பராதான் பிடிக்கும் என்று நினைக்கிறேன். மண்மீது ஒரு பிரம்மாண்டமான உக்கிரமான ஓப்பராவை அவர் முடிவில்லாமல் நடத்திக்கொண்டிருக்கிறார். எல்லாக் கலைகளும், எல்லா ஞானங்களும், எல்லா ரசங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து சமன்செய்து நிகழும் நாடகம் அது. அதில் சில தருணங்கள் உச்சமானவை’

நித்யா அவருடைய பிரியமான மலைவிளிம்பில் நின்றார். கீழே தேயிலைக்காடு பச்சைப்பரப்பாக வளைந்து ஆழத்தில் ஒளிவிடும் ஓடை ஒன்றில் இணைந்து மறுபக்கம் மேலேறி மலையாக மாறி நின்றது. மலைவிளிம்பில் மாலைச்சூரியன் அமர்ந்திருந்தான்.

‘நல்ல கலையை நாம் ரசிக்கும்போது அது கலை என்ற உணர்வு நமக்கிருக்கவேண்டும். அந்த மன விலக்கம் இருந்தால்தான் கலையின் எல்லா சுவைகளையும் நாம் அனுபவிக்கமுடியும். உணர்ச்சிகரமாக ஈடுபட்டோம் என்றால் ஏதாவது ஒரு சுவையில் அதீதமாக மூழ்கிப் பிறவற்றை மறந்துவிடுவோம். அந்தக் கலைஞனை நாம் முழுமையாக அறியமுடியாமல் போகும். யோசித்துப்பார், அந்தக் கலைஞனுக்கு அது எவ்வளவு ஏமாற்றத்தை அளிக்கும்!’

நான் பெருமூச்சுவிட்டேன்

‘சரி, நான் காலையில் கேட்டேனே, தமிழ்ப்பண்பாட்டின் உச்சத்தில் ஒரு மகத்தான காவியம் உருவாகியது. ஆனால் ஏன் ஒரு மாபெரும் ஓப்பரா பிறக்கவில்லை?’ என்று ஆரம்பித்தார் நித்யா.

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Aug 8, 2012

 

நித்யா புகைப்படங்கள்

முந்தைய கட்டுரைலோகேஷ் ரகுராமன்
அடுத்த கட்டுரைDoes Vendanta lead to inaction?