ராஜமார்த்தாண்டன்

ஜூன் ஏழாம்தேதி காலை ஆறுமணிக்கு வசந்தகுமார் சென்னையில் இருந்து கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்துசேர்ந்தார். இரவெல்லாம் நல்ல மழை கொட்டிக்கொண்டிருந்தது. காலையிலும் மழை. நான் கார் வரச்சொல்லியிருந்தேன். வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு கிளம்பினோம். கிளம்பும்போதும் மழை. போகும்வழியிலேயே  அ.கா.பெருமாளை அவர் வீட்டில் இருந்து கூப்பிட்டுக்கொண்டோம்.

மழையிலேயே கன்யாகுமரி சாலையில்சென்றோம். சுசீந்திரத்தில் இருந்து மலர்மாலை வாங்கிக்கொணோம். சுசீந்திரம் கன்யாகுமரி சாலை மிக அழகானது. குளங்கள். நீர் நிறைந்து வழியும் ஓடைகள். மழைத்திரைக்கு அப்பால் ஓங்கிய மருத்துவாழ் மலை. ராஜமார்த்தாண்டன் அந்தமலைமீது சிறுவயதில் உச்சிவரை ஏறியதைப்பற்றி பலமுறை சொல்லியிருந்தார். மருத்துவாழ்மலையின் சிகரம் மிகச்செங்குத்தானது. சாகசக்காரர்கள் மட்டுமே ஏறமுடியும். சிறுவயதில் அண்ணாச்சி திடகாத்திரமானவர்.

கொட்டாரம் சந்திப்பில் திரும்பி சந்தையடி சாலையில் சென்று இடையன்விளை கிராமத்தை அடைந்தோம். ஏராளமான கார்கள். ஒருவேளை  அந்தக் கிராமத்தில் அப்படியொரு பெரும் மரியாதை எவருக்குமே கிடைத்திருக்காது. ராஜமார்த்தாண்டனை அவரது ஊரிலும் சரி குடும்பத்திலும் சரி சற்றே குறைத்துதான் மதிப்பிட்டிருந்தார்கள். அவரது பழக்கவழக்கங்கள்தான் காரணம். இலக்கியம் பற்றி அவர்களுக்கு தெரியாதே. அவர் புகழ்பெற்றவரும் அல்ல.  ஆனால் அவரது இரு பிள்ளைகளுக்கும் ஒரு தம்பிக்கும் அவரது இலக்கியம் பற்றி மதிப்பு இருந்தது

ராஜமார்த்தாண்டனின் மகள் திருமணத்துக்கு நாகர்கோயில் விஐபிகள் திரண்டுவந்ததும் அதன்பின் அவருக்கு நடந்த அறுபதாம் ஆண்டு நிறைவுவிழாவும் அவரைப்பற்றி உயிரெழுத்து வெளியிட்ட மலரும் எல்லாம் அவரை அவர்கள் கண்ணில் சட்டென்று வேறு ஒருவராகக் காட்டின என்று சொல்லலாம்.

சென்ற மார்ச் மாதம் இறுதியில் ராஜமார்த்தாண்டனின் மகன் திருமணம். அவர் நாமக்கல்லில் ஒரு கல்லூரியில் ஆசிரியர். அவர் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்ற வருத்தம் அண்ணாச்சிக்கு இருந்தது. ஆனால் அவர் கல்லூரியில் நன்றாகப் படித்துவேலைக்குப்போனதில் மனநிறைவு. கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு நானும் வேதசகாய குமாரும் நாஞ்சில்நாடனும் வந்திருந்தோம். அப்போதுதான் கடைசியாக இடையன் விளைக்கு வந்தேன்

அதன்முன்னர் பலமுறை நான் இடையன்விளைக்கு வந்திருக்கிறேன். முதல்முறையாக வந்தது அவரது தம்பி திருமணத்துக்கு. பதினைந்துவருடம் முன்பு. அண்ணாச்சி உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் இருந்து திரும்பிவந்து ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சற்றே குணமடைந்து ஊருக்குத் திரும்பியபோது வேதசகாயகுமாருடன் வந்தேன். தன் பிள்ளைகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை, செத்தால் மனசு ஆறாது என கண்ணீர் விட்டார்.

அண்ணாச்சி பிழைத்துக்கொண்டது அவரது சொந்த ஊரினாலும் மீனினாலும்தான். சென்னைதான் அவரைச் சீரழித்தது. மேன்ஷன் வாசம். தேடிவந்துகொண்டே இருக்கும் குடிகாரர்கள். சாப்பாடு இல்லாமை. ஊரில் மீனும் சோறும் அவரை தேற்றின.மேலும் அவர் காலச்சுவடில்செய்த வேலை அவரை மிக உற்சாகமாக வைத்திருந்தது. அவருக்கு கடைசி காலம் மிக மனநிறைவுடன் இருந்தது.

வேதசகாயகுமாரின் மகள் திருமணத்துக்கு மே 27 அன்று வசந்தகுமார் வந்திருந்தார். கல்யாணத்தன்று அண்ணாச்சியைப் பார்த்தேன். சென்ற ஐந்துவருடங்களில் அண்ணாச்சி உடல்நலம் தேறி பொலிவுடன் இருந்தார். முகத்தில் சிரிப்பு. புலித்தலைவர் பிரபாகரனின் மரணத்தில் கொஞ்சம் கலங்கினார் என்றார்.மற்றபடி எல்லாமே நிறைவாக முடிந்தது என்றார். பகல்முழுக்க விடுதி அறையில் நாஞ்சில்நாடன், குமரிமைந்தன், எட்வின்பிரகாஷ்,தேவதேவன், வசந்தகுமார் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கடைசியாக அப்போது பார்த்ததுதான் அண்ணாச்சியை.

உள்ளே சென்றோம். தமிழினி சார்பில் அ.கா.பெருமாள் அண்ணாச்சிக்கு மலர்மாலை வைத்தார். கூட்டத்தில் நாகர்கோயிலின் ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் இருந்தார்கள். அண்ணாச்சிக்கு முதலில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தியவரான  கொடிக்கால் சேக் அப்துல்லா,பொன்னீலன். கலையிலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோழர்கள். பேராசிரியர்கள்.

திருச்சியில் இருந்து கவிஞரும் காவலதிகாரியுமான சின்னச்சாமி உயிரெழுத்து ஆசிரியர் சுதீர்செந்தில், விமரிசகர் முருகேசபாண்டியன் ஆகி§யோர் வந்திருந்தார்கள். மதுரையில் இருந்து  தேவேந்திரபூபதியும் திரைநடிகரும் நாடக ஆர்வலருமான சண்முகராஜாவும் வந்திருந்தார்கள். கலாப்ரியா தென்காசியில் இருந்து வந்திருந்தார். சென்னையில் இருந்து தேவிபாரதி வந்திருந்தார். நாஞ்சில்நாடன் அவரது  இன்னொரு நண்பருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரவில்லை. சென்னையிலிருந்தமையால்  வேதசகாயகுமார் வரவில்லை.

அண்ணாச்சி 6 ஆம்தேதி காலை 11 மணிக்கு வழக்கம்போல காலச்சுவடு அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். சாலையைக் கடக்கும்போது ஏதோ கனத்த வாகனம் மெல்ல தட்டியிருக்கிறது. அந்த வண்டிக்கே அது தெரிந்திருக்குமோ தெரியவில்லை. சென்றுவிட்டது. அண்ணாச்சிக்கு சற்று காது மந்தம். உள்ளூர அடி. அங்கேயே விழுந்து இறந்திருக்கிறார். ஏராளமான குருதி வெளியேறியிருக்கிறது. அவர் கிடப்பதை அரைமணிநேரம் கழித்துதான்  அருகே ஜூஸ் விற்பவர்கள் கண்டிருக்கிறார்கள். உடனே காலச்சுவடுக்கு தகவல்சொல்லியிருக்கிறார்கள். கண்ணன் ஓடிவந்து பார்க்கும்போது ஏற்கனவே மரணம் நடந்துவிட்டது

உடனே அ.கா.பெருமாளுக்கு தகவல் சொன்னார் கண்ணன். பெருமாள் எனக்குச் சொன்னார். நான் அப்போது கணிப்பொறியில் இருந்தேன். செய்தியை போட்டுவிட்டு உடனே கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றேன். செல்லும்வழியிலேயே வசந்தகுமார் நாஞ்சில்நாடன் வேதசகாயகுமார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டே சென்றேன்.

ஆஸ்பத்திரியில் அண்ணாச்சி ஏற்கனவே பிணமாக அறிவிக்கப்பட்டு கிடந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு பிரேதபரிசோதனைக்குக் கொண்டு சென்றார்கள். அண்ணாச்சியின் மருமகன் வந்துசேர்ந்தார். போலீஸ் வந்து வழக்கு பதிவுசெய்தார்கள். அண்ணாச்சியின் நண்பர்கள் மாறிமாறி ·போனில் அழைத்துக்கொண்டே இருந்தார்கள்.

மழைகொட்டிக்கொண்டெ இருந்தது. குடை இருந்தாலும் பாதி உடைகள் நனைந்துவிடன. எங்களூரில் சாவுக்கு மழைபெய்வது ஒரு நிறைவான விஷயம் என்ற நம்பிக்கை உண்டு. அண்ணாச்சியின் இந்துநாடார் குலவழக்கப்படி சொந்த நிலத்திலேயே புதைப்பது வழக்கம். ரயில்பாதை தாண்டி அவரது அப்பா அம்மா சமாதிகள் இருந்த தென்னந்தோப்புக்குள் அவர்களுக்கு அருகே அண்ணாச்சிக்கு குழி வெட்டப்பட்டிருந்தது. அங்கே அவரை அடக்கம்செய்தார்கள்.

நான் அண்னாச்சியை பார்க்கவேயில்லை. பொதுவாக நான் சடலங்களைப் பார்ப்பதில்லை. அவரது இனிய சிரிக்கும் முகம் என் மனதில் நிறைந்திருந்தால் போதும் என்று விட்டுவிட்டேன். அடக்கம் நடந்து முடிந்தபோது ஒவ்விருவராக கிளம்பினார்கள். நாங்கள் கிளம்பும்போது கொஞ்சநேரம் எங்காவது திறந்த வெளிக்குப் போகவேண்டும் போலிருந்தது. கன்யாகுமரிக்குச் சென்றோம்.

அலைகளே இல்லாத கடல். மழைக்காலத்துக்குரிய வெளிறிய நிறம். வசந்தகுமார் ”அவ்ளவுதான் ஜெயன்..ஒண்ணும் பெரிய விசயம் கெடையாது. மறந்துட்டு வாழ்க்கை போய்ட்டே இருக்கும்…”என்றார். நான் ஆம் என்றேன்.

மாலை வசந்தகுமார் ஏற்கனவே பதிவுசெய்திருந்த 5 மணிக்கு ரயிலில் கிளம்பினார். நெய்தல் கிருஷ்ணனும் காலச்சுவடும் இணைந்து அண்ணாச்சிக்கு ஒரு அஞ்சலிக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அதற்குச் சென்றபோது பாதியாகிவிட்டிருந்தது. அ.கா.பெருமாள் பேசிக்கொண்டிருந்தார். அண்னாச்சியைப் பற்றிசில சொற்கள் சொன்னேன். நானே நினைத்துக்கொள்ளக்கூடிய சில சொற்கள். இன்னும் பலவருடங்களுக்கு.

 

அஞ்சலி: ராஜமார்த்தாண்டன்

உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

ராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்

ராஜமார்த்தாண்டன் 60- விழா

ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது

முந்தைய கட்டுரைஜெயமோகனின் 10 நூல்கள்
அடுத்த கட்டுரைபுண்ணியபூமி,மறுகடிதங்கள்