அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் அ.கி. பரந்தாமனாரின் இலக்கண நூலையும், மற்றொருவர் “தமிழ் நடைக் கையேடு” பற்றியும் குறித்துள்ளீர்கள்.
அ.கி. பரந்தாமனாரின் நூல் பல இலக்கண நூல்களின் மற்றொரு தகாத குணத்தை காண்பிக்கிறது. அது தூயதமிழ் சாய்பு கொண்டது. அதைப்பற்றிய விமரிசனங்கள்
1. தமிழ் எப்படி சமஸ்கிருதத்திலிருந்து தனி என வாதிடுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், இது பேச்சு அல்லது உரைநடை இலக்கண விவகாரம் அல்ல.
2. ஒரு பக்கம் தமிழில் இருக்கும் சமஸ்கிருதம் அல்லது மற்ற மொழிகள் மூல வார்த்தைகளைத் தவிர்த்து, அதற்கு நிகரான “தூயதமிழ்”ச் சொற்களைப்பயன்படுத்தச் சொல்கிறது. இதுவும் இலக்கணத்தின் வேலை அல்ல. இது ஒரு தூயமொழி வெறி அல்லது Linguistic ideology யே தவிர மொழி இலக்கணத்தை விளக்குவது அல்ல. உதாரணமாக “பஸ் பிடிக்கும் அவசரத்தில் பர்ஸை மறந்து விட்டேன்” அல்லது “போலீஸ் பந்தோபஸ்தை மீறி ஓடினவர்கள் பிஸ்டல்களால் சுட்டப்பட்டார்கள்” என்பவை இலக்கணமான வாக்கியங்கள்தான், ஆனால் இந்நூல் படி அல்ல. பரந்தாமன் தன் விருப்பு வெறுப்புகளையே இலக்கணம் எனப் புகுத்துகிறார்.
3. அப்படி சொல்லி விட்டு சமஸ்கிருத மூல வார்த்தைகளான வாக்கியம், சந்தி, போன்றவை பயன்படுத்துகிறார். அது தவறு என நான் சொல்லவில்லை; ஆனால் அவரே செய்யாதது, செய்யமுடியாதது மற்றவர்களுக்கு இலக்கணம் என உபதேசிக்கப்படுகிரது.
4. பெயர்ச் சொற்களுக்கு எட்டு வேற்றுமைகள் என்கிறார். தொல்காப்பியர் பாணினியைக் காப்பி அடித்து தமிழிலும் 8 வேற்றுமைகள் என்றார். அது தமிழுக்கு செல்லாது. ஆனால் மொழி பற்றிய புறவய சிந்தனை வளர்ச்சியடையவில்லாததால், இன்னும் பழைய இலக்கணங்களையும், அதன் பிழைகளையும் சுமக்கிறோம்.
5. பரந்தாமரின் நூல் ஐடியலாஜி நோக்கில் எழுதப்பட்டது, அது நல்ல இலக்கணப் புத்தகம் அல்ல.
“தமிழ் நடைக் கையேடு” இதைப்போல் ஐடியலாஜிகல் வலையில் இல்லை ; ஆனால் அதன் குறி இலக்கணம் இல்லை ; அது உரையின் நடை, பாணி, ஸ்டைல் பற்றியது
ஒரு மாணவனுக்கு இலக்கணம் வேண்டும் என்றால் தமிழ் இலக்கிய கர்த்தாக்களைப் படிக்கலாம்.
வன்பாக்கம் விஜயராகவன்
பிராங்க்பர்ட், ஜெர்மனி
பிகு: பரந்தாமரில் அர் என்பது அதி மரியாதை விகுதி; அதை மற்றவர்கள் ஒரு நபரைப்பற்றி குறிக்கும்போது பயன்படுத்தலாமே தவிரே, ஒருவர் தன் பெயரிலேயே அப்படிப் போடுவது சரியாக இல்லை. இலக்கண ஆசிரியரே இப்படி செய்வது வேடிக்கையாக உள்ளது
அன்புள்ள ஜெயமோகன்
அ.ராமசாமி நீங்கள் எழுதிய “”தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது.” என்பதைக் குறிப்பிட்டு
இந்தக் கூற்றுகள் சரியானவை அல்ல என்பது எனது கருத்து என சொல்கிறார்.
தமிழ் இலக்கண மரபை ஆய்வுசெய்யும் எவருக்கும் இது உடனே தோன்றும். உதாரணமாக , ஜான் லக் செவியா (Jean-Luc Chevillard) என்ற பிரெஞ்ச் தமிழ் ஆய்வாளர் – பாண்டிச்சேரியிலும் பாரிசிலும் 35 வருடங்களாக தமிழ் பற்றி ஆய்வு செய்கிறார். என் நன்பரும் கூட , போன மாதம் ஈவா வைல்டன் (Eva Wilden) என்ற ஜெர்மானிய தமிழ் ஆய்வாளரை கல்யாணம் செய்து கொண்டார். அவருடைய சமீபத்திய கையேடு “ On Tamil poetical compositions and their ‘limbs’ as described by Tamil grammarians” படி
The main purpose of that collective endeavour (i.e. Tamil Grammatical tradition) seems to have been the detailed characterization of a refined language……used for metrical composition (yappu) by poets of a variety of poetical texts (ceyyul) falling under different genres, the dominant one being pattu (song/verse). As a consequence, we observe the simultaneous transmission of a poetical corpus, progressively enriched and a series of grammatical treatises. The oldest available is the Tolkappiyam, which gives in it’s penultimate chapter , the Ceyyuliyal, a characterization of 34 limbs (uruppu) of poetical compositions
செய்யுள் மரபு இலக்கண நூல்களின் குறி என்பதை நாம் மறக்கலாகாது. அது தற்காலப் பேச்சு மொழிக்கோ, உரை நடைக்கோ அல்ல.
வழக்கு , அதாவது செயலில் பயனாகும் மொழி பற்றிய குறிப்பு இருந்தாலும், அது மரபு இலக்கணத்தின் நோக்கம் அல்ல, அதைப் பற்றிய விவரணைகள் அல்ல.
அன்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்
அன்புள்ள ஜெ,
நலமா? ஏன் தமிழ் இலக்கணம் பெரும்பாலானோர்க்குப் புளிக்கிறது? சரியாகக்
கற்றுத் தர தேர்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பதுதானே? அல்லவென்றால்
மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை என்பதுதானே? போதிய மரபு இலக்கணப் பயிற்சியும்
எப்போதும் தரப்பட வேண்டிய தேவை உள்ளது என்றே நினைக்கிறேன். இல்லை என்றால்
அற்புதமான தமிழ் மரபு இலக்கியங்களை வருங்காலத் தலைமுறை எப்படி உணர்ந்து
கொள்ள முடியும்? கற்கும்போது கரடுமுரடாக இருந்தாலும் மரபு இலக்கியங்களைப்
பயிலும்போது இனிக்குமல்லவா? சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களால்
எழுதப்பட்ட இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் என்ற புத்தகம் ஓரளவு
சமகால இலக்கியத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட புத்தகம். அளவில்
பெரியது. பொறுமையாகக் கற்கக் கற்க இனிக்கும். விஷ்ணுபுரம் போல. தேவை ஆர்வமும்
பொறுமையுமே! மரபு இலக்கணப் பயிற்சியே தேவையில்லை என்ற எண்ணம் மிகவும்
ஆபத்தானது!
http://www.udumalai.com/?prd=Ilaku%20Tamili%20Inikkum%20Tamil%20Ilakkanam&page=products&id=10425
இப்படிக்கு
பா.மாரியப்பன்