அன்புள்ள திரு ஜெ,
பலவிதமாக, மனதுக்குள் எண்ணங்கள் ஓடினாலும், அவற்றின் வேகத்தை, பயிற்சியின்மை காரணமாக எழுத்தில் கொண்டு வரும்போது எழுதிய எனக்கே மிகுந்த அதிருப்தியாகத் தான் எப்பொழுதும் இருக்கும். மேலும் என்ன சிக்கல் என்றால், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்காமல், மனம் முந்திக் கொள்வதால் ‘வசை’ என்று எளிதில் வகைப் படுத்தி விடப்படக் கூடிய அபாயமும் இதில் உண்டு. எனவேதான் பல கடிதங்கள்(உங்களுக்கு மட்டுமல்லாமல்) சில கட்டுரைகள் முடிக்கப்படாமல் இன்னும் எனது கணினியிலேயே தங்கி விட்டிருக்கின்றன. ஆனாலும் ஞாநி பற்றி சமீபத்தில் உங்களது கட்டுரையில் கண்டவுடன் எழுதித்தான் பார்த்து விடுவோமே என்று உட்கார்ந்து விட்டேன்.
ஞாநியை எனது மிகச்சிறு வயதில், சென்னைத் தொலைக்காட்சி எங்கள் பகுதிகளில் (மதுரை) தெரிய ஆரம்பித்த புதிதில், ஏதோ ஒரு நிகழ்ச்சியில் யாரையோ பேட்டி கண்ட நினைவு; பல அரசாங்க ஒளி/ஒலிபரப்பு நிறுவனங்களிலும் கடனே என்று வேலை செய்யும்(மன்னிக்க வேண்டும்; 80களின் ஆரம்பத்தில் திருச்சி வானொலி அறிவிப்பாளர்களைக் கேட்டிருந்தால், நீங்களும் இந்த கருத்தை ஒப்புக் கொள்வீர்கள்) ஒருவராகத் தான் எனது நினைவுகளில் நீடித்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் ஞாநி அவர்களின் கட்டுரைகள் (ஓ பக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெளி வந்தது) அடங்கிய ஒரு புத்தகத்தை (தலைப்பு நினைவில்லை) எனக்குக் கொடுத்து நான் படித்தபோது என்னை மிகவும் கவர்ந்து விட்டார். “ஒரே படத்தின் மூலம் இருவரை எப்படிக் கேவலப்படுத்துவது?” என்று சோனியா காந்தியின் தமிழ்நாடு வருகையை ஒட்டிக் கட்சிக்காரர்கள் அவருக்கு முண்டாசு கட்டி பாரதியாய் ஆக்கி சுவரொட்டியிருந்ததைக் கண்டு கொதித்து ஆரம்பித்திருந்த முதல் கட்டுரை, புத்தகம் முழுவதையும் ஒரே மூச்சில் படிக்க வைத்தது. அதன் பின் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஓ பக்கங்களை நான் தவறாமல் படித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் வலைமனையில் அறிமுகப்படுத்தித்தான் அவருடைய வலையையும் பின்பற்ற ஆரம்பித்தேன். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஞாநியின் வலைத் தளத்தை அறிமுகப்படுத்திய அந்தக் கட்டுரையில் நீங்கள், “ஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான்.” என்றும் “ஆனால் தன்னளவில் நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கிட்டத்தட்ட எனக்கும் அவரைப்பற்றி அந்த நேரத்தில் அதே கருத்துத் தான் இருந்தது.
ஆனால் சமீபத்தில், ஞாநி உட்பட்ட, பல இடது சாரி எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு அவர்களின் நேர்மையை நீங்கள் மதிப்பதாக எழுதியிருந்தீர்கள். ஞாநி தவிர்த்துப் பிறரில் பலரை நான் அந்தக் கட்டுரையில்தான் படித்திருக்கிறேன் (நானெல்லாம் அன்மையில்தான் பாலகுமாரன் pass ஆனவன்; மேற்படிப்பு மேற்கொள்ளாதவன்). வெகு சிலரை வெறுமே கேள்விதான் பட்டிருக்கிறேன்.
ஆனால் ஞாநியின் நேர்மை பற்றி எனது கருத்து இந்த நான்கைந்து ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. ஒருவேளை நான்தான் தவறாகக் கருத்துக் கொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை.
முதலில் இந்தப் பகுதியில் கார்த்திகேசன் என்பவருக்கு அவர் அளித்த பதிலின் ஒரு பகுதியில் குறிப்பிடுகிறார் “தவிர இந்த ஆத்திகர்கள் தங்கள் மனம் புண்படுகிறது என்று சொல்லும் வாதங்கள் எனக்குப் புரிவதில்லை. அவர்கள் மனம் புண்படும்படி நானும் இதர நாத்திகர்களும் நடக்கக்கூடாது என்றால், என் மனம் எங்கள் மனம் புண்படும்படி அவர்கள் நடக்கலாமா ? என் முன்னால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டு சடங்கும் என் மனதைப் புண்படுத்துகிறதே. அலுவலகம் பொது இடம் எங்கு பார்த்தாலும் அவர்கள் பக்திச் சடங்குகளை செய்வதை எந்த உறுத்தலும் இல்லாமல் செய்கிறார்கள். இதில் நம்பிக்கை இல்லாத என் மனம் புண்படுவதை மதிக்கிறார்களா? இதையெல்லாம் அவர்கள் வீட்டுக்குள் மட்டும் அவர்கள் வைத்துக் கொள்ளாதபோது, .நான் மட்டும் பொது இடங்களில் இது பற்றிக் கருத்து சொன்னால் புண்படுவார்களா? என்ன நியாயம் இது ?”.
இதனைமட்டும் படித்திருந்தால் எப்போதும் போன்ற ஞாநியின் ‘அறச் சீற்றமாகவே’ எடுத்துக் கொண்டு நகர்ந்திருப்பேன். ஆனால் அதற்கு வெகு அன்மையில்தான் ஆனந்த விகடனில் ‘ஓ’ பக்கங்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆஸ்திரேலிய இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவருக்குத் தெரிவித்திருந்த கண்டனத்தைக் கண்டித்து எழுதியிருந்தார். விஷயம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் குடியேறியிருந்த (அகதியாக என்று நினைக்கிறேன்) ஒரு இஸ்லாமிய இளைஞர், ஆஸ்திரேலியப் பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதற்கு அந்த இஸ்லாமியத் தலைவர் “இறைச்சிப் பாத்திரம் திறந்திருந்தால் பூனை வந்து வாயைத்தான் வைக்கும்” என்று சொல்லி விட்டிருக்கிறார். அதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆஸ்திரேலியர்களின் கலாச்சாரதை (அல்லது பழக்கவழக்கத்தை) மதித்து அந்த மண்ணில் இருக்க நினைப்பவர்கள் இருக்கலாம் அல்லது அவர்கள் அவர்கள் நாட்டுக்கே திரும்பப் போகலாம் என்பதாகக்(எனது நினைவுப் பிழைகள் உங்களளவுக்கு என்னை பாதிக்காது)) கருத்துத் தெரிவித்திருந்தார். எந்த நாட்டினராயின் என்ன, இஸ்லாமியரென்றால் அவர் பாதிப்புக்குள்ளாவது இந்தியாவில் முற்போக்காளராக அறியப்பட்டிருக்கும் ஒருவரால் தாங்கிக் கொள்ளக்கூடியதா என்ன? ஒரு வீட்டில் ஒருவர் அங்கு தங்கியிருக்கும் பிறருக்காக எவ்வாறெல்லாம் தங்களை அனுசரித்துக் கொள்ள வேண்டும் என்று ஓ பக்கம் முழுவதும் விளக்கி விட்டு, கடைசி ஓரிரு வரிகளில் மட்டும், (நடுநிலையாளரும் அல்லவா?) என்னதான் இருந்தாலும் அந்த இளைஞர் செய்ததும் தவறுதான் என்று கருத்துத் தெரிவித்து முடித்திருந்தார். ஆனந்த விகடனில் இப்போது அந்த ஓ பக்கத்தைத் தேட எனக்கு பொறுமையில்லை.
அடுத்தது மெரினாவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட கருணாநிதி அரசு தடையுத்தரவு பிறப்பித்த போது அதற்கு ஆதரவாக, தினமணியின் தலையங்கத்துக்கு எதிராக, நீங்கள் மிகவும் விரும்பிய :) (குரோதம் என்றெல்லாம் யாராவது சொல்லும்போது நான் என் உள்ளங்கையை முஷ்டியால் குத்திக்கொண்டு ‘ஜ்ஜ்ஜ்ஜக்கூஊ’ என்று கத்துவது மாதிரி இருக்கிறது :)) மறைந்த சின்னக் குத்தூசி அவர்கள் முரசொலியில் எழுதிய கட்டுரையில், பார்ப்பனர்களின் பூப்போன்ற உடலுக்கு ஒத்துவரும் ஒரே விளையாட்டான கிரிக்கெட்டை ‘அவர்கள்’ அங்கு விளையாடத் தடை விதித்திருப்பது சரிதான் என்று எழுதியிருந்தார். அதைச் சாடிய ஞாநி தனது ஓ பக்கத்தில் “அங்கு பார்ப்பனர்கள் மட்டும் கிரிக்கெட் ஆடவில்லை, மீனவச் சிறுவர்கள் ஆடுகிறார்கள், இஸ்லாமிய சிறுவர்கள் ஆடுகிறார்கள்; கருணாநிதிக்குக் கூட கிரிகெட் பிடிக்கும்” என்றெல்லாம் சொல்லி, எங்கே சொல்லி விடுவாரோ என்று நான் பயந்து கொண்டே கட்டுரையைப் படித்து, நல்லவேளை சொல்லாத ஒரு விஷயம் – “ஏன் பார்ப்பனச் சிறுவர்கள் மட்டும் தான் விளையாடினால் தான் என்ன? அவர்களும் சிறுவர்கள் தானே?” முற்போக்குக்காக எவ்வளவு சிரமப் பட வேண்டியிருக்கிறது?
ஞாநி அவர்களின் எரிச்சல் தரத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், முற்போக்கு பிம்பம் கிடைக்கப் பெறுமானால் ஒரு விஷயத்தை நியாயப்படுத்த அவர் அடுக்கும் காரணங்கள். உதாரணத்துக்கு சொர்ணாக்காவையே காங்கிரஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம், உடனே “ஒரு பெண் என்பதால் அவரை எல்லாக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என்று ஏதாவது ஒரு பக்கங்களின் மூலம் கட்சிகளுக்குக் கோரிக்கை விடுவார். அன்மையில் மிகப் பெரிய நகைச்சுவை, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பிரணாப் ஜனாதிபதி ஆவதற்கு அவருக்கு இருக்கும் தகுதியாக ஞாநி சொன்னது; அவர் குட்டையாமாம். அதனால் பலருக்கு அவர் தூண்டுகோலாக இருப்பாராம். என்ன கொடுமை. இதே சங்மாவும் பிரணாபும் இடம் மாறியிருந்தால், சங்மா, பழங்குடி, வடகிழக்கு போன்ற கூடுதல் தகுதிகளை ஞாநியால் அளிக்கப் பெற்றிருப்பார்.
அடுத்தது வித்தியாசமாகக் கருத்துகூறுகிறென் பேர்வழி என்று மிகவும் விசித்திரமாக ஏதாவது கூறுவது. கருணாநிதியின் “இராஜீவே உயிரோடிருந்திருந்தாலும் கொலையாளிகளை மன்னித்திருந்திருப்பார்” என்பதனைக் கடுமையாக எள்ளிய அதே ஞாநி “நம்மில் தவறு செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன ஏசு, தானும் கல்லை எறியாமலே போய்விட்டது ஏன் என்பதன் பொருளை சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். தன்னையே அவர் தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்றே அதற்குப் பொருள்” என்று ஒரு முற்போக்குக் கட்டுரைக்குக் கருத்திடுகிறார். கருணாநிதியின் கருத்துக்கும் அதனைக் கேலி செய்த ஞாநியின் கருத்துக்கும் எனக்கு வேற்றுமை தெரியவில்லை (நான் இன்னும் பாலகுமாரன்தான் போல).
இது போல இன்னும் பல பல. ஆனால் எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் நேர்மை என்றால் என்ன? ஞாநியை வைத்துப் பொருள் விளக்க முடியுமா? ஒரு மனிதன் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருக்கிறான் என்பதற்காக நாம் அவனை மதிக்க வேண்டுமா? அது என்ன கொள்கை என்று கணக்கில் கொள்ள வேண்டாமா? ஒரு கோடு கிழித்து அதன்படி தான் ஒவ்வொரு மனிதனும் வாழ முடியுமா? வேண்டுமா? வாழ்கையை அது தரும் திடீர் மாற்றங்களுடன் ஏன் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது? அதன்படி நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது? நேற்று நான் கூறிவிட்டேன் அதனை இன்று மாற்றினால் எனக்கு அவமானம் என்று கருதிக் கொண்டு கொள்கை என்ற பெயரில் அனைவரிடமும் ஏன் சண்டயிட வேண்டும்? சின்னக் குத்தூசிக்கும் ஞாநிக்கும் குணத்தில் என்ன வேறுபாடு (ஒருவர் கருணாநிதி ஜால்ரா மற்றவர் எதிரி என்பது தவிர)?
நான் நினைத்தவாறு தான் இந்தக் கடிதம் வந்திருக்கிறதாவென்று என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. அவ்வாறு ஏதாவது தவறு இருந்தால் அது எனது குறையான எழுத்துப் பயிற்சியினால் ஏற்பட்டது தான். எனவே அது எனது தான்.
நன்றி
ஸ்ரீனி