தொன்மையான துறைமுகங்கள் அனேகமாக எதுவுமே இப்போது துறைமுகங்களாக இல்லை என்பதை சிலர் கவனித்திருப்பார்கள். தென்னிந்தியாவின் பெரும்புகழ்பெற்ற துறைமுகங்களில் பூம்புகார் இப்போது ஒரு சேற்றுமேடு. கொற்கை இன்றைய காயல்பட்டினம் அருகே ஒரு மணல்மேடு. கேரளத்தில் கொடுங்கல்லூர் என அழைக்கப்படும் சேரன் செங்குட்டுவனின் வஞ்சியில் இப்போது கடலே இல்லை.
பழங்காலத்துத் துறைமுகங்கள் எல்லாமே நதிகளின் அழிமுகங்களில் அமைந்தவை. பூம்புகார் காவேரி அழிமுகம். கொற்கை தாமிரவருணியின் அழிமுகம். வஞ்சி பேரியாற்றின் அழிமுகம். காரணம் அன்றைய துறைமுகங்களின் சரக்குச்சேமிப்புப் பகுதி உள்நிலத்தில் இருக்கும். கப்பல்கள் ஆழமான அழிமுகம் வழியாக ஆற்றுக்குள் நுழைந்து நிலத்தை ஒட்டி நகர்ந்துவரும். மேலும் கடல் ஓதங்களையும் கப்பல்கள் உள்ளே வர பயன்படுத்துவரகள். நீர் மேலேறும்போது தானாகவே உள்ளே வரும் கப்பல்கள் நீர் இறங்கும்போது வெளியே சென்றுவிடும். கரையில் இருந்து மரப்பாலங்கள் வழியாக யானைகளின் உதவியுடன் சரக்குகள் உள்ளே கொண்டுசெல்லப்பட்டன.
மேலும் அக்காலத்தில் கனமான பொருட்களை கொண்டுசெல்வதற்குரிய வழி என்பது நீர் வழியே. இந்நதிகள் வழியாக உள்நாட்டில் இருந்து பொருட்கள் படகுகளில் துறைமுகத்துக்குக் கொண்டு வருவது மிக எளிதாக இருந்தது. கப்பலில் வந்துசேரும் பொருட்களை படகுகள் தெப்பங்கள் வழியாக ஆறுகளினூடாக உள்நாட்டுக்குக் கொண்டுசெல்லவும் முடிந்தது.
நாம் அறியும் இந்த ஆறுகள் ஆயிரம் வருடம் முன்பு பெரும் வெள்ளப்பெருக்குள்ளவையாக இருந்திருக்கக் கூடும். காடுகள் அழிய அழிய அவற்றின் வெள்ளப்பெருக்கு நிலைத்தது. நீரோட்டம் மெதுவாக ஆனபோது அழிமுகத்தில் வண்டல் படிந்து மேடாகின. கப்பல்கள் வரமுடியாத நிலை உருவாகியது. வண்டல் மண் படிவுகள் மேலெழுந்து அணைபோல ஆகி ஆற்றுநீரை மறித்தபோது ஆறுகள் அகலம் கொண்டன. அகலம் கொண்ட ஆறுகள் பலவாக பிரிந்தன. அவற்றின் நடுவே உள்ள நிலத்தில் மேலும் வண்டல் படிந்தது. வஞ்சியில் இவ்வாறு வண்டல்படிவுகள் வளர்ந்து நிலம் உருவாகி கடல் எட்டு கிலோமீட்டர் நகர்ந்து வேறு இடம் சென்றுவிட்டது.
நவீன துறைமுகங்கள் இயற்கையாகவே கடல் ஆழமாக நிலத்துக்குள் புகுந்த வளைவுகளில் உருவாகின. தூத்துக்குடி, விசாகபட்டினம், கண்ட்லா, மும்பை போன்றவை அப்படிப்பட்டவை. இத்துறைமுகங்களை நாம் கண்டடையவில்லை என்பதும் ஒரு வேடிக்கை. அழிமுகமே துறைமுகமாக இருந்த நாட்களில் நாம் மிகச்சிறந்த கடலோடிகளாக இருந்தோம். பின்னர் நம் கடல்திறன் அழிந்தது. பல இடங்களில் துறைமுகம் மேடான போது அங்குள்ள கடலோடிகளின் சமூகம் கடல்வாழ்க்கையை இழந்தது. சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள காயல்பட்டினம். மரக்கலக்காரர்கள் ஆன மரைக்காயர்கள் இன்று கடலோடிகள் அல்ல.
நம் கடல்திறன் செயலிழந்து போனது பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் என்று சொல்லல்லாம். அதன்பின் சிதைந்து பின் மீண்ட தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களுக்கு துறைமுகத்திலும் கடல்வணிகத்திலும் ஆர்வமே இருக்கவில்லை. இக்காலத்தில் நம் மண்ணுக்கு வந்த ஐரோப்பியயர்களே நம்முடைய இன்றைய முக்கியமான துறைமுகங்களைக் கண்டுபிடித்தார்கள். சென்னை, தூத்துக்குடி போன்ற தமிழகத்துறை முகங்கள் ஐரோப்பியரின் கண்டுபிடிப்புகளே.
உண்மையில் பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் நம்முடைய முக்கியமான துறைமுகங்கள் அனைத்துமே ஐரோப்பியரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இந்தியா மெல்லமெல்ல ஐரோப்பியருக்கு அடிமையானமைக்கு துறைமுகங்கள் மேல் அவர்களுக்கு இருந்த ஆதிக்கம் முக்கியமான காரணம். ஒரு நிலத்தை வெளியே இருந்து கட்டுப்படுத்துவதற்கான ‘பிடி’ துறைமுகங்கள் வழியாகக் கிடைக்கிறது.
மேலும் துறைமுகங்களை கைப்பற்றிக் கொள்வதும் எளிதல்ல. துறைமுகநிலத்தை கைப்பற்றிவைத்தால் மட்டும்போதாது அந்தக்கடல்வழியை கப்பல்கள் மூலம் கைப்பற்ற வேண்டும். நாயக்கர்கள் பலமுறை தூத்துக்குடியை தாக்கி கொள்¨ளையடித்தார்கள். ஆனால் கப்பல்களுடன் ஐரோப்பியர் கடலுக்குள்சென்றுவிடுவார்கள். நாயக்கர்களுக்கு கப்பல்கள் இல்லை. கொஞ்சநாள் கழித்து நாயக்கபடை விலகியதும் ஐரோப்பியர் மீண்டும் வந்துவிடுவார்கள். உண்மையில் தமிழக மன்னர்கள் போர்ச்சுகல்காரர்களையோ டச்சுக்காரர்களையோ பிரிட்டிஷ்காரர்களையோ ஒருமுறைகூட தோற்கடித்ததே
இல்லை. இந்தியா எங்குமே இதுதான் நிலைமை.
பொன் அநுரவுடன்
ஒரு நாடு பட்டம் என்றால் அதில் நூல் கட்டும் மூலை என்று துறைமுகத்தைச் சொல்லலாம். பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கீழை நாட்டு நிலங்களை அதன்வழியாகக் கட்டுப்படுத்தினார்கள். அவ்வாறு பிரிடன் ஆஸ்திரேலியாக் கண்டத்தை கட்டுப்படுத்தியது சில துறைமுகங்கள் வழியாகத்தான். அவற்றில் முக்கியமான துறைமுகம் சிட்னி. பிரிட்டிஷ் மாலுமிகள் முதன் முதலில் வந்திறங்கி ஆஸ்திரேலியாவைக் கண்டடைந்தது சிட்னியில்தான்.
சிட்னி பாலம் அருகே தெளிவத்தை ஜோசப் மற்றும் முருகபூபதி
பிரிட்டிஷார் உருவாக்கியெடுத்த துறைமுகங்களில் பலவற்றுக்கும் பொதுவாக உள்ள சில தனித்தன்மைகள் சிட்னிக்கு உண்டு. முக்கியமானது அது ஆழமான குடாப்பகுதியில் அமைந்திருப்பது, மும்பை போல. இரணாவதாக கடலுக்குள் பெரிய மலைநீட்சிகள் இருப்பது. ஆஸ்திரேலியாவின் ஆப்பெரிய நகரம் சிட்னிதான். பலரைப்போலவே நானும் அந்நாட்டின் தலைநகரம் சிட்னி என்றுதான் ண்ணிக்கொண்டிருந்தேன்.கிட்டத்தட்ட அரைக்கோடிபேர் வாழும் நகரம் இது. ஆஸ்திரேலியாவிலேயே சிட்னிதவிர எங்குமே மக்கள் நெரிசலைப் பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரம் இது. 1788ல் சிட்னி கோவ் என்னும் வளைகுடாப்பகுதியில் பிரிட்டிஷ் கடற்படைத்தளபதி ஆர்தர் பிலிப் முதல் குடியேற்றத்தை நிகழ்த்தினார்.
ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி இரவு சற்றே பிந்தியபின்னர்தான் நாங்கள் பேரா.ஆசி.கந்தராஜா அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். சிட்னியின் நகரநெடுஞ்சாலையில் கார்களின் விளக்கொளிகள் பெருகிச்சென்றது ரிஷிகேஸில் கங்கையில் சிறிய இலைத்தொன்னைகளில் தீபம் கொளுத்தி விடும் காட்சியைப்போல் இருந்தது.
ஆசி.கந்தராஜாவின் வீட்டுக்கு பலமுறை வந்திருந்தும்கூட அநுர தடுமாறினார். அது புதிதாக முளைத்த குடியிருப்புப்பகுதி. அநுரவுக்கு சிட்னி அவரது சொந்த ஊர் போல.”இலங்கைய காட்டிலும் இங்கதான் நான் சுதந்திரமா இருக்கேன். இங்க நான் எந்த ஒரு இனப்பாகுபாட்டையும் பார்க்கலை” என்றார்.
பேரா.ஆசி கந்தராஜா எங்களை வரவேற்றார். அவரது வீடு மிகுந்த கலையழகுடன் இருந்தது. உலகம் சுற்றும் வழக்கம் கொண்ட கந்தராஜா கொண்டுவந்த ஆப்ரிக்க, இந்திய, தென்கிழக்காசிய கலைச்சின்னங்கள் சரியாக திட்டமிட்டு அமைக்கபப்ட்டிருந்தன. தோட்டக்கலை நிபுணர் ஆகையால் வீட்டுத்தோட்டத்தையும் மிகச் சிறப்பாக பேனியிருந்தார். ஆஸ்திலிய வீடுகளுக்கு பொதுவாக உள்ளவகையில் சமையல்பகுதியை ஒட்டியிருந்த சாப்பிடும் இடம் மனதுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது நான்கு பக்கமும் கண்ணாடிச்சுவர்கள். நடுவே பெரிய வட்டவடிவ உணவுமேஜை.
ஆசி.கந்தராஜா வீட்டு முன்
கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அநுர கிளம்பிச்சென்றார். எஸ்.பொவுக்கு மூன்று மகன்கள். அவர்களில் மூத்தவர் புலிகளில் இணைந்து போரில் உயிரிழந்தார். இன்னொருவர் மித்ர வேலைகளை கவனித்துக்கொள்கிறார். எஸ்பொவின் ஆளுமை அதிரடியானது. நேராக நம் கண்களைப்பார்த்து மறுக்க முடியாத நிதானத்துடன் பேசுபவர். எப்போதும் நடபார்ந்த நெருக்கத்ண்டந்தான் என்னிடம் நடந்துகொண்டிருக்கிறார். ஆனால் எல்லாரிடமும் அப்படி அல்ல என்கிறார்கள். சென்ற தலைமுறையின் ஆளுமை நிறைந்த ஆசிரியரைப்போன்றவர் எஸ்பொ. அநுர அவருக்கு நேர் மாறு. மென்மையான பேச்சு, தன் கருத்தை தேவையான இடங்களில் மட்டும் திடமாக முன்வைக்கும் விதம். ஒரு மருத்துவராக நாம் நம்பி நம் இதயத்தைக் கொடுக்கலாம்.
”எஸ்போவிண்ட படைப்புகள் மேல சனத்துக்கு பலவிதமான கருத்துக்கள் இருக்கு. ஆனால் எல்லாருக்குமே பிடித்தமான படைப்பு அநுரதான்…” என்று ஆசி.கந்தராஜா சொன்னார். திகசி பற்றி அப்படி ஒரு பேச்சு உண்டு, அவரது ஆகச்சிறந்த ஆக்கம் வண்ணதாசன்தான் என்று. அதற்கு சுந்தர ராமசாமியின் பதில் ”அது கூட்டுமுயற்சில்ல?”
ஆசி.கந்தராஜா
ஆசி.கந்தராஜா ஒரு நவீன யுகப்பேராசிரியருக்கான அனைத்து குணங்களும் கொண்டவர் என எனக்கு தோன்றியது. இதற்கு முன்னால் அ.முத்துலிங்கத்துடன் பேசும்போதெல்லாம் அந்த எண்ணம் வந்துகொண்டே இருந்தது. பிறவியிலேயே பேராசிரியரான மனிதர் சம்பந்தமில்லாமல் வேரு துறைகளில் போனது ஒரு பெரிய மானுட இழப்பு என்று.
இந்த யுகப்பேராசிரியர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத்தகுதிகள் மூன்று. 1. தோற்றம். கவனத்தை ஈர்க்கும் திடமான உற்சாகமான தோற்றம் இளவயதில் நம்மை ஈர்க்கிறது என்பது ஓர் உண்மை. 2. எல்லாவற்றையுமே சுவாரசியமாகச் சொல்லும் தன்மை. கச்சிதமாகவும் புரியும்படியும் சொல்வது மட்டுமல்ல, அவற்றை நகைச்சுவையுணர்வுடனும், ஆர்வமூட்டும் விளக்கங்களுடனும், நினைவில் நிற்கும் மாறுபட்ட கோணங்களுடனும் முன் வைப்பது. 3. தளராத ஊக்கத்தின் ஊற்றாக அந்த ஆளுமை இருக்க வேண்டும். சலிப்பு சோர்வு அவநம்பிக்கை தயக்கம் போன்ற எதிர்மறைக்குணங்கள் இளம் வயதினரைக் கவர்வதே இல்லை.
அ.முத்துலிங்கம் போலவே ஆசி.கந்தராஜாவும் இந்த இயல்புகள் கொண்டவராக இருந்தார். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு கவன ஈர்ப்புச்சொற்றொடருடன் சிறந்த சிறுகதைக்குரிய திறப்புடன்தான் ஆரம்பிப்பார். சிறுகதையின் உச்சம்போலவே சொல்லவேண்டிய மையக்கருத்தை சட்டென்று முடிவில் வெடிக்க விடுவார். இன்றைய நவீனயுகக் கல்லூரிகள் இவ்வியல்புகளைக் கட்டாயமாக்குகின்றன போலும். ஆர்வமூட்டும்படி கற்பிக்காவிட்டால் மாணவர்கள் வேறு வேலை பார்க்க போய்விடுவார்கள்.
நல்லவேளையாக கந்தராஜாபேராசிரியராகவே இருக்கிறார். இளமையிலேயே அதி தீவிரமான படிப்பார்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். இலங்கையில் உயிரியலில் பட்டப்படிப்பு முடித்த கந்தராஜா ஜெர்மனியில் நுண் உயிரியலில் மேற்படிப்பு படிப்பதற்கான உதவித்தொகை பெற்று அங்கே சென்று படிப்பை முடித்தார். இப்போது ஆஸ்திரேலியாவில் A.S. Kantharajah …… பேராசிரியராக இருக்கிறார்
ஆசி.கந்தராஜா சிறுகதைகள் எழுதியிருக்கிறார். மித்ர வெளியீடாக இவரது பாவனை பேசலின்றி… வெள்ளிக்கிழமை விரதம் போன்ற சிறுகதை தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அவரை யாரென்றே தெரியாமல் கதைகளைப்படித்து பிடித்திருந்தமையால் நான் சொல்புதிது இதழில் அவரது நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறேன். அதன்பின்னும் தொடர்பு ஏதும் ஏற்படவில்லை. மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில்தான் நேரில் சந்தித்தேன். அவரது நூலுக்கு நான் மதிப்புரை எழுதியிருந்ததைச் சொன்னேன். அவருக்கு நினைவிருந்தது.
கந்தராஜாவின் கதைகள் தமிழ் மனம் பல்வேறு மாறுபட்ட பண்பாடுகளை எதிர்கொள்ளும்போது உருவாகும் கலாச்சார மறுபரிசீலனைகளை வேடிக்கை கலந்து சொல்பவை. இந்த நூற்றாண்டில் பெரிய புபம்பெயர்தல் நிகழ்ந்த பிறகு சாத்தியமாகக்கூடிய கதைகள். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி போன்றவர்களின் கதைகளுக்கும் இவற்றுக்கும் உள்ள பொது அம்சம் இந்த கலாச்சாரச் சந்திப்பு என்ற அம்சம்தான்.
தன் காதலன் தன்னை மணக்கவேண்டுமானால் தன் தந்தைக்கு அவன் அளிக்க வேண்டிய மகர் பணத்தை தான் விபச்சாரம் செய்து சம்பாதிக்கிறாள் எதியோப்பியப்பெண். அந்தக் கதைக்கு கணவனுக்காக பெண்கள் எடுக்கும் வெள்ளிக்கிழமை விரதம் என்னும் பெயரை சூட்டியிருக்கிறார் *. அதுவும் ஒரு நோன்புதானே என்ற சகஜமான தொனியே அவரது மனநிலையைக் காட்டுகிறது. இந்த மெல்லிய புன்னகை அவரது எல்லா கதைகளிலும் உள்ளது.
இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு படுப்பதற்குச் சென்றோம். களைப்பினால் நான் உடனடியாக தூங்கிவிடேன்.அ ருண்மொழி உடலெங்கும் கிரீம் அப்பிவிட்டு வந்து படுத்துக்கொள்ளும் வாசனை கனவுக்குள் வந்தது. ஆஸ்திரேலியாவின் குளிருக்காக உடம்பெங்கும் கிரீம்பூசி எண்ணைப்பசை சேர்க்க வேண்டும். இல்லையேல் எதற்கெடுத்தாலும் புல்லரிப்பு. டெல்லியில் குளிர்காலத்தில் இந்தப்பிரச்சினை உண்டு. வட இந்தியாவில் கடுகெண்ணையை கொஞ்சம் சூடுபண்ணி தேய்த்துக்கொள்வார்கள். ஒருவகையில் ஒன்றுமே செய்யத்தேவையில்லாமல் காலநிலையைப்பற்றிய கவனமே இல்லாமல் வாழ உகந்த கேரள- குமரிமாவட்ட தட்பவெப்பநிலையே உகந்தது என்று பட்டது
ஏப்ரல் இருபதாம் தேதி காலையில் ஆசி.கந்தராஜா எங்களை சிவசக்தி பத்மநாதன் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டார். அங்கே தெளிவத்தை ஜோசப்பும், முருகபூபதியும், முருகபூபதியின் மனைவி மாலதியும் வந்திருந்தார்கள். நாங்கள் செல்லும்போது புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். & எங்களை அங்கே விட்டுவிட்டுச் சென்றார். நாங்கள் அங்கிருந்து ரயிலில் மீண்டும் சிட்னி சென்றோம்.
ரயிலில் சிட்னியைப்பார்த்துக்கொண்டே சென்றோம். சிட்னிக்கும் பிற ஆஸ்திரேலிய நகரங்களுக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை என் கண்ணில் பட்டது அங்கே ஒரு கண்ணுக்குப்புலனாகாத வாழ்க்கை இருக்கிறது என்பதே. பெரிய நகரங்களில் இதை நாம் பார்க்கலாம். பிச்சைக்காரர்கள் குற்றவாளிகள் நாடோடிகள் போதையடிமைகள் ஆகியோர் அடங்கிய ஒரு ‘நிலத்தடி’ உலகம் அதற்கு மேலே உள்ளவர்களின் கண்ணில் படாமலேயே இயங்கிக்கொண்டிருக்கும். பகலில் அதன் சில சிறு தடையங்களை மட்டுமே எங்காவது பார்க்க முடியும். மூத்திரச்சந்தில் இருக்கும் ஒரு பெட்டி, ரயில்பாலத்துக்கு அடியில் இருக்கும் மனிதர்கள்…இவ்வாறு. மும்பையின் கண்ணுக்குத்தெரியாத உலகம் மிகமிகப்பெரியது
சிட்னி ரயில்நிலையத்தை ஒட்டிய சந்துகளில் அப்படி பல தடையங்களைக் கண்டேன். முக்கியமான வெளிப்படையான அடையாளம் சுவர் எழுத்துக்கள். எல்லா இடங்களிலும் ‘சுவரெழுத்து தடைசெய்யப்பட்டிருக்கிறது’ ‘ரகசியக் காமிரா உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது’ என்ற விளம்பரங்கள். ஆனால் முக்கியமான சுவர்களில் கூட சுவரெழுத்துக்களும் படங்களும் கிறுக்கப்பட்டிருக்கின்றன. சில கிறுக்கல்கள் முழு ஓவியத்துக்குரிய நிறப்பின்னல்களுடன் இருந்தன.
சந்துக்குள் நான்குபேர் கிழிசல் உடையுடன் ஒரு மரப்பெட்டி மீது அமர்ந்த் புகைத்தபடி பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் ஏழாம் உலகத்து மனிதர்கள் என்பதி எந்த ஐயமும் இல்லை. சிட்னி ரயில் நிலையத்துக்குள் இருந்து வெளிவரும்போது கிழிசல் ஜீன்ஸ் அணிந்த ஒரு ஆசாமி உள்ளே போக நீலச்சீருடையணிந்த காவலர் கோபமாக ஏதோ சொன்னபடி அருகே வந்தார். ஆசாமி நடுவிரலை தூக்கி காட்டி மெல்லிதாக துப்பியபடி திமிரான தோள்ச்சரிவுடன் நடந்து சென்றார்.
சிட்னியில் இடுங்கலான பழைய தெருக்களும் பழைய கட்டிடங்களும் இருக்கின்றன. பல கட்டிடங்கள் பழைய மும்பையின் சில பகுதிகளை நினைவூட்டின. சில தெருக்கள் கோவா போல் பிரமையளித்தன.சிட்னியில் ஒரு வலுவான குற்ற உலகம் இருப்பதாக முருகபூபதி சொன்னார். துறைமுகத்தை ஒட்டி குற்றவுலகம் இல்லாமலிருக்க வாய்ப்பே இல்லை என்று நான் சொன்னேன். துறைமுகம் எப்படியோ போதைப்பொருட்களின் இடமாக ஆகிறது/ போதைப்பொருள் என்பது நிழல் உலகின் நாணயம்.
1788க்கு முன் சிட்னி பகுதியில் கிட்டத்தட்ட 8000 பழங்குடிகள் வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டிஷற்ற் அம்மகக்ளை இயோரா என்று சொன்னர்கள். அவர்களிடம் பிரிட்டிஷற்ற் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டபோது ‘இங்கிருந்து’ என்னும் பொருளில் அவர்கள் இயோரா என்று சொன்னார்களாம். சிட்னி பகுதியில் மட்டும் மூன்று மொழிக்குலங்கள் இருந்தன. அவர்களுக்குள் உள்ள இனக்குழுக்கள் சிறுவேறுபாடுகள் கொண்ட மொழிவடிவங்களைப்பேசினார்கள். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் அவர்களுக்குரிய நிலப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
ஓப்ரா hall முன் தெளிவத்தை ஜோசப்
1770ல் பிரிட்டிஷ் கடல்தளபதி ஜேம்ஸ் கூக் என்பவர் கர்னெல் விரிகுடாவில் பாட்டனி குடா என்னும் இடத்தில் வந்திறங்கினார். வேகல் [Gweagal] என்ற பழங்குடியினரை அவர் அங்கே கண்டார். அதைத்தொடர்ந்து குற்றவாளிகளைக் கொண்டுவந்து தங்க வைப்பதற்கான ஓரு குடியிருப்பை ஆர்தர் பிலிப் அங்கே உருவாக்கினார். அந்த இடத்தில் தண்ணீர் வசதி குறைவாக இருந்தமையால் போர்ட் ஜாக்ஸன் பகுதிக்கு அவ்வருடமே அது மாற்றப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் உள்துறைசெயலர் தாமஸ் டவுன்ஷெண்ட் சிட்னி பிரபுவின் நினைவாக சிட்னி என்று பெயரிட்டார்.
மறுவருடம் குற்றவாளிகளுடன் வந்த சின்னம்மை நோய் பழங்குடிகளை தாக்கி ஆயிரம்பேரைக் கொன்றது. ஆகவே பழங்குடிகள் குடியேற்றத்தை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் நவீன ஆயுதங்கள் கொண்டிருந்த பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்கள் அவர்களைக் கொன்றே ஒழித்தார்கள். 1820ல் கவர்னர் மக்வாரி [ Macquarie ] அவரது பழங்குடி மேம்பாடு திட்டத்தை முன்வைத்து பழங்குடிக்குழந்தைகளை வலுக்கட்டாயமாக ‘சீர்திருத்த’ முயன்றபோது மிகச்சில பழங்குடிகளே எஞ்சியிருந்தார்கள்.
கவர்னர் மக்வாரியின் காலத்தில்தான் சிட்னி இன்றைய அமைப்பை அடைந்தது என்கிறார்கள். அயர்லாந்து விடுதலைக்கான கிளர்ச்சி நடந்தமையால் ஏராளமான குற்றவாளிகள் ஆஸ்திரேலொயாவுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களைப் பயன்படுத்தி சாலைகளும் பாலங்களும் கட்டிடங்களும் உருவாக்கி எழுப்பப்பட்டன. உலகப்போருக்குப் பிந்தைய நிதி நெருக்கடி ஆஸ்திரேலியாவை கடுமையாக பாதித்தது. அந்த நெருக்கடியால்தான் அங்கே சிட்னி பாலம் போன்ற பெரும் கட்டுமானங்கள் எழுந்தன.
மீண்டும் சிட்னி பாலத்தின் அடியில் வந்து சேர்ந்தோம். நல்ல வெயில். ஆனால் இதமான குளிர் இருந்தது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து அப்பகுதியெங்கும் நிறைந்திருந்தார்கள். அதிகமும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பெரும்பாலான நாடுகள் மஞ்சளினத்தவரால் நிறைந்தவை. அவர்கள் அடிக்கும் நிறத்திலேயே பொதுவாக உடையணிகிறார்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் மஞ்சள். நீல நிற உடையணிந்த மஞ்சளினத்தவரைப் பார்ப்பதே அபூர்வம் என்று தோன்றியது.
மீண்டும் மீண்டும் ஓபரா ஹால் புகைப்படமாகிக்கொண்டே இருந்தது. இந்தப்புகைப்படங்களின் விந்தைகளை எண்ணித்தீராது. இவற்றை எடுப்பவர்களுக்கு அவை வாழ்க்கையின் மறக்கமுடியாத கணங்கள். அவர்கள் அதை எப்படியும் மனதில் நிறுத்திவைத்திருப்பார்கள், ஆகவே அவர்களுக்கு புகைபப்டம் தேவையே இல்லை. அவர்கள் அவற்றை பிறருக்குக் காட்டவே எடுக்கிறார்கள். ஆனால் காலம்செல்லச்செல்ல அவர்கள் முதிர்ந்து சுருங்கும்போது நினைவுகளை மலரச்செய்வனவாக அதே புகைப்படங்கள் மாறக்கூடும்.
தெளிவத்தைக்கு எழுபது வயது. முருகபூபதி ஐம்த்துகளில். நான் நாற்பதுகளில். ஆனால் அந்த இடத்தில் சுற்றுலாப்பயணி என்ற அடையாளம் அளிக்கும் உற்சாகத்துடன் சிரித்துக்கோண்டும் விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டும் கண்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டும் சுற்றிவந்தோம். அந்தப் பொது இடத்தில்தான் எத்தனை எத்தனை மனிதர்கள். கட்டிப்பிடித்துக் கொண்டே நடமாடும் காதலர்கள். குழந்தைகளுடன் செல்லும் குடும்பங்கள். சிறிய குழுக்களாக சீனமுதியவர்கள் கசங்கிய பாலிதீன் தாள் போல சுருக்கங்கள் அடர்ந்த முகத்துடன் சென்றார்கள்.
சிட்னி குடா முழுக்க வேடிக்கைக்காரர்கள்தான். சிறிய பாட்டரி மைக்குடன் கித்தார் வாசித்து பாடும் இளைஞர்கள். அவர்களில் ஒரு வெள்ளையர் பாப் மார்லி போல சடைகள் கொண்ட சிகையலங்காரம் செய்திருந்தார். கைகளில் விதவிதமான குச்சிகளை வைத்துக்கொண்டு டிரம் வாசிக்கும் ஒரு கறுப்பர் முகத்தில் சூட்டுத்தழும்புகளுடன் இருந்தார். வென்ரிகிலேரிசம் செய்யும் ஒருவர் ‘புரபசர் மேக்’ என்று கையால் எழுதிய அட்டையை தன் சூட்கேஸின் சாய்த்து வைத்திருந்தார். அவரைச்சுற்றி சில குழந்தைகள் சிரித்துக்கொண்டு நின்றன.
சிவசக்தி அருண்மொழியை புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். அருண்மொழி பூமியிலேயே இல்லை. பொதுவாக அவளுக்கு அவள் வயதுக்குரிய நிதானமேதும் கிடையாது. சின்னப்பெண் போல கிரீச்சிடுவதும் சிரிப்பதும் ஓடுவதுமெல்லாம் உண்டு. இப்போது எல்கேஜி குழந்தையாக ஆகிவிட்டது போலிருந்தது.
அங்கேதான் முதன்முறையாக ஆஸ்திரேலிய பழங்குடி ஒருவரை முதன்முதலாகப் பார்த்தேன். மிகப்பெரிய மூங்கில்வாத்தியம் ஒன்றை வாயில்வைத்து பூம்பா பும்பா என்று ஆழ்மான அதிர்வொலியை எழுப்பிக்கொண்டிருதார். அந்த ஒலியுடன் அவரை முதன்முதலாகப் பார்த்தபோது என் மனம் அதிர்ந்தது– எனென்றால் எனக்கு மிக நன்றாகபப்ழக்கமான முகமாக அது இருந்தது. எங்கே எங்கே என்று மூளையைக் குடைந்தபடியே இருந்தேன்.
அவர் இடுப்பில் ஒரு சிறிய துணியை நம்மூர் கச்சம்போல் அணிந்திருந்தார். மற்றபடி வெற்றுடம்பு. கரிய நிறம். சுருட்டை முடி. நல்ல வயதிருக்கும். எழுபதோ அதற்கும் மேலோ. போதைப்பழக்கம் கொண்ட கண்கள். உடம்பெங்கும் வைணவர்களின் நாமத்தை விபூதிப்பட்டையாகப் பூசிக்கொண்டது போல வெண்ணிறமான அடையாளங்கள். வித்தை காட்டி பிச்சைதான் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு குழந்தையை அருகே அழைத்தபோது எனக்கு மூளை மின்னியது– அவர் அச்சு அசல் அப்படியே மறைந்த மலையாள எழுத்தாளர் பொன்குன்னம் வர்க்கி போல் இருந்தார்!
நான் எண்பதுகளில் ஒருமுறை பொன்குன்னம் வர்க்கியைப் பார்த்திருக்கிறேன். சட்டைபோடாமல் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தார். கேரளத்தின் புதுயுக எழுத்தாளர்களில் ஒருவர். உழவர்களின் துயரை எழுதிய இடதுசாரிப் புரட்சியாளர். மத ஆதிக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பகுத்தறிவுவாதி. ஒரு நண்பருடன் அவரை பார்க்கச்சென்றிருந்தேன். முழங்கையை காட்டி ‘பாட்டில் இருக்கா?’ என்று கேட்டார். இருந்தது. உற்சாகமாக அவரது இளமை நாட்களைப்பற்றி பேசினார். பஷீர், தகழி ,தேவ் ஆகியோருடன் அவருக்கு இருந்த நெருக்கமான நட்பைப்பற்றி பேசினார். கொஞ்சநேரத்தில் சாமி மலையேறிவிட்டது.
ஆஸ்திரேலிய பழங்குடியினர் வேறு சிலரையும் பார்த்தேன். இளைஞர்கள். மூங்கில் தடிகளில் குச்சியால்தட்டி தாளமிட்டபடி அந்த வாத்தியத்தை வாசித்தார்கள். அவர்களிடம் இரு விஷயங்கள் நம்மை அதிர்ச்சியுறச்செய்யும். ஒன்று அவர்களின் தோற்றம் சுத்தமான தமிழகத்தோற்றம். ஒரு ஆஸ்திரேலியப் பழங்குடியினரை மதுரை, விருதுநகர் அல்லது கொல்லம் கோட்டயம் பக்கம் உள்ளவர் என்று சொன்னால் எவரும் நம்பிவிடுவார்கள். நிறம் முடி முகம் மட்டுமல்ல அசைவுகள்கூட. இன்னொண்ரு அவர்கள் பேசிக்கொள்வதை குறிப்பிட்ட தூரத்தில் நின்று அசப்பில் கேட்டால் யாரோ வேகமாகக் கன்னடம் பேசுவது போன்ற பிரமை நமக்கு ஏற்படும்.
அந்த பெருநகரின் ஆடம்பரத்தோற்றத்தின் முன்னால் அந்தபப்ழங்குடிகள் அப்படி வந்து அமர்ந்திருப்பது எனக்கு கலவையான உணர்வுகளை உருவாக்கியது. என் அப்பாவோ தாத்தாவோ அங்கே வந்து அமர்ந்திருப்பது போன்ற உணர்வு அது. என் குலமூத்தார் ஒருவர் அங்கே விபூதி அணிந்து அமர்ந்து சங்கும் மணியும் முழக்கி பிச்சை எடுத்துக்கொண்டிருப்பது போல. அவர் குடிக்காகவும் உணவுக்காகவும் தானறிந்த தன் குலத்து பண்பாட்டுச்சின்னங்களை அங்கே விற்றுக்கொண்டிருந்தார். சுற்றுலாப்பயணிகளுக்காக மிக மலிவாக்கபப்ட்ட பழங்குடிப் பண்பாடு. பூமராங் வளைதடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இன்னொருபக்கம் அந்த ஒட்டுமொத்த பண்பாட்டையும் அப்பழங்குடியினர் சவாலுக்கு அழைப்பது போல் இருந்தது. ஆலமரத்துக்கு கீழே அருகு நிற்பது போல. ஆலமரத்துக்கு கிளை அதிகம். அருகுக்கு வேர் அதிகம். அந்த முதியவர் அங்கே நிற்பது அந்த தொழில்மயப்பண்பாடின் உள்ளே எத்தனை பெரிய பண்பாட்டு வெற்றிடம் இருக்கிறதென சுட்டிக்காட்டுவதுபோல் இருந்தது.
”நல்லவேளை இலங்கையிலயும் இந்தியாவிலயும் வெள்ளைக்காரங்க வர்ரப்ப நாம எண்ணிக்கையிலே ஜாஸ்தியா இருந்தோம். இல்லாட்டி சென்னையிலயும் கொழும்பிலயும் நாம இப்டி உக்காந்து பிச்சை எடுத்திட்டிருப்போம். வெள்ளைக்காரங்க வந்து வேடிக்கைபாத்து •போட்டோ எடுத்துப்பாங்க” என்றேன். முருகபூபதி சிரித்தார்.
உடலில் வாய் போன்றது துறைமுகம். அதனூடாகவே ஒரு நாடு பேசுகிறது. அல்லது காது போன்றது, அதனூடாகவே ஒரு நாடு கேட்கிறது. ஆனால் அவை நோயைக் கொண்டுவரும் புண்களும் ஆகலாம். அதற்கு சிட்னி ஓர் உதாரணம்.
ஆசி.கந்தராஜா படைப்புகளைப்பற்றி
http://thamilbooks.blogspot.com/2006/09/blog-post_10.html
http://archives.aaraamthinai.com/nigazhvukal/dec2000/dec09b.asp