அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் அன்பர் முத்துகிருஷ்ணன் தங்களுக்கு எழுதிய கடிதத்தையும் அதற்குத் தாங்கள் எழுதிய பதிலையும் வாசித்தேன். அதில் அபாண்டமாக உண்மைகளை மறைத்தும் திரித்தும் பல விஷயங்களை நீங்கள் கூறியுள்ளீர்கள். அதுகுறித்து சில விஷயங்களை உங்களுக்கு விளக்கவும் நினைவூட்டவும் விரும்புகிறேன்.
அபாண்டம் 1: “எஸ்.வி.ராஜதுரை எனக்கு ‘பிரச்சினைகள்’ வந்திருக்கும் என ஊகிப்பதற்குக் காரணம் உண்டு.
அவர் வழிநடத்தி வெளியாகும் ‘உயிர் எழுத்து’ மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்கு பதிலாக முறிந்தபனை நூலில் இருந்து சில பகுதிகளும். அதனுடன் அவ்விதழின் ஆசிரியர் சுதீர் செந்தில் என்னை கடுமையாக வசைபாடி எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது”.
உயிர் எழுத்து என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழாகும். உயிர் எழுத்தின் பதிப்பாளரும் நானே. உயிர் எழுத்தில் வருகின்ற அனைத்தையும் தீர்மானிப்பதும் பிரசுரம் செய்வதும் நான்தான். நீங்கள் குறிப்பிட்டதுபோல் எஸ்.வி.ராஜதுரையால் வழிநடத்தப்படும் இதழல்ல உயிர் எழுத்து. அவர் தொடர்ந்து உயிர் எழுத்தில் எழுதுகிறார், அவ்வளவே. நான் உங்கள் வலைத்தளத்தில் இந்திய அமைதிப்படை தொடர்பான பதிவை படித்துவிட்டு, உங்களுடைய நிலைபாட்டிற்கு எதிராக நான் எழுதிய சிறு குறிப்போடு, ‘முறிந்தபனை’ நூலின் சில பகுதிகளையும் பானுபாரதி எழுதிய சில கவிதைகளையும் வெளியிட்டேன். இதழ் வெளியாகும் வரை யாருக்கும் தெரியாது குறிப்பாக எஸ்.வி.ராஜதுரைக்கு. ‘உயிர்மை’யில் நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் எழுதினீர்கள். அப்படியென்றால் நீங்கள் ‘உயிர்மை’யை வழிநடத்தினீர்களா?
நான் எழுதிய சிறு குறிப்பு: “ஜெயமோகனின் வலைதளத்தில்(www.jeyamohan.in) மே 16ஆம் நாள் வலையேற்றப்பட்ட இரண்டு கடிதங்ளின் ( காண்க பெட்டி செய்தி) மூலம் ஜெயமோகன் மிகப்பெரிய வரலாற்று உண்மைகளை மறைத்து தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மீது சேற்றை அள்ளி வீசுகிறார். இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் பெண்களுக்கும் இழைத்தக் கொடுமைகளை சொல்லி மாளாது. சமகாலத்தில் நம் கண்கள் முன் நடந்த கொடுமைகளுக்கு நாம் சாட்சியாக கையறு நிலையில் உள்ளோம். எழுத்துலகில் சட்டாம்பிள்ளையாக நினைத்து இயங்கி வரும் ஜெயமோகன் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்யும் இது போன்ற அவதூறுகள் கண்டனத்துக்குரியவை. இவ்வாறு சொன்னதற்காக தமிழ் மக்களிடம் அவர் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்”.
இதில் எங்கு நான் உங்களை ‘கடுமையாக’ வசைப்பாடினேன்? இதற்கு மேல் நாகரீகமாக ஒரு கண்டணத்தை பதிவுசெய்ய இயலுமா? ஒரு சிறு விமர்சனத்தைக்கூட தாங்கமுடியாத தாங்கள் தேவையில்லாமல் எஸ்.வி.ராஜதுரையை ‘உயிர் எழுத்து’ பிரசுர விசயத்தில் இழுத்து அவதூறு செய்கிறீர்கள்.
அபாண்டம் 2: “கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளுக்கும் என்னுடைய செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்கள் எஸ்.வி.ராஜதுரையும் சுதீர் செந்திலும். கண்டிக்கும்படி கோரி தொலைபேசியில் மன்றாடியிருக்கிறார்கள்”.
இது தொடர்பாக நானோ, எஸ்.வி.ராஜதுரையோ எவரையும் தொலைபேசியில் அழைத்து உங்களை கண்டிக்கச்சொல்லி ‘மன்றாடவில்லை’. இது உங்கள் கற்பனை வளத்திற்கு சான்றேயன்றி வேறில்லை. உங்கள் தொலைபேசி எண்ணை எவருக்கும் கொடுக்கவும் இல்லை. நீங்களாக கற்பனை செய்துகொண்டு உங்கள் ‘உள் ஒளி’ உந்துததால் இந்த அவதூறை செய்கிறீர்கள். உங்கள் பதிவை படித்தவுடன் நாஞ்சில் நாடனிடம் மட்டும் பேசினேன். அதுவும் நட்பாக, “உங்கள் நெருங்கிய நண்பர்தானே, சொல்லமாட்டீங்களா” என்ற ரீதியில்.
நானே உங்களை தொலைபேசியில் அழைத்து பேசியிருப்பேன். நீங்கள் பிரபஞ்சனைப் பற்றி ஒரு கட்டுரை கேட்டபோது எழுதித் தருவதாக ஒத்துக்கொண்டீர்கள் வட இந்தியப் பயணத்தை முடித்துவிட்டு வந்து அனுப்புகிறேன் என்று சொன்னீர்கள். இறுதிவரை கட்டுரையை அனுப்பவில்லை. பலமுறை தொடர்புகொண்டும் என் அழைப்பைத் தவிர்த்தீர்கள். எழுதுவதும் எழுதாமல் தவிர்ப்பதும் உங்கள் விருப்பம். அதிலிருந்து நான் உங்களை தொலைபேசியில் அழைப்பதை விட்டுவிட்டேன்.
‘உயிர் எழுத்து’ இதழைப் படித்துவிட்டு வேதசகாயகுமார் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது இது குறித்துப் பேசிக்கொண்டோம். மற்றபடி உங்களைப் பற்றி பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் ஏதும் இல்லை. இன்று இருக்கும் நவீன உலகில் உங்கள் தொலைபேசி எண்ணை கண்டுபிடிப்பது என்பது அத்தனை கடினமா என்ன!
இதில் நான் எங்கு என் கீழ்மை உணர்வை வெளிப்படுத்தினேன். எந்த அறத்தை விட்டு விலகி இருக்கிறேன். என்னுடைய தொலைபேசி எண் மறைவான ஒன்றல்ல. உயிர் எழுத்தில் அது இருக்கிறது. நீங்கள் சிரமப்படவேண்டியதில்லை. ஓர் எழுத்தாளனாக உங்கள் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். நீங்கள் பல முரண்பாடுகளைகொண்டவர் என்றாலும்கூட, நீங்கள் நம்பும் ஒரு விஷயத்திற்காக வாதிடுகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதிய இந்தப் பதிவில் எனக்கு உவப்பான செய்திகள் இல்லை. நான் நம்பிக்கொண்டிருந்த ஒரு முகம் சிதைந்து போவதை வருத்தத்தோடு உணர்கிறேன். உங்களுக்கு இப்படியெல்லாம் பொய்சொல்ல வேண்டிய தேவை என்ன ஜெய்?
அபாண்டம் 3: “பலவருடங்களுக்கு முன்னர் அவரே முன்வந்து சொல்புதிதுக்கு உதவுவதாகச் சொன்னார். ’மனுஷ்யபுத்திரனை நான் உருவாக்கினேன். அவன் இப்ப காலச்சுவடோட சேந்துட்டான். காலச்சுவடுக்கு போட்டியா நாம சொல்புதிதை கொண்டு வரணும்’ என்றார்.
மேற்கண்ட வரிகள்தான் உங்களை எனக்கு முழுமையாக புரிய வைத்தது. இன்னும் எத்தனைதான் புளுகுவீர்களோ!
2002இல் என் முதல் கவிதைத் தொகுப்பு ‘ஒன்றுமற்ற ஒன்று’க்கு அணிந்துரை கேட்டு கவிஞர் கீதாஞ்சலி ப்ரியதர்ஷ்ணி மூலம் உங்களை முதன் முதலாக தொடர்புகொண்டேன். அவரிடம் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து நான் உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். எனக்காக தொகுப்பிற்கு அணிந்துரை எழுதித் தந்தீர்கள். அச்சமயம் நீங்கள் உங்கள் வேறு ஏதோ ஒரு நண்பரோடு நட்பை முறித்திருந்தீர்கள்; புதிய நண்பர்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்றீர்கள். அனைத்தையும் மீறி நான் உங்கள் நட்புப் பரப்பில் தீவிரமான நண்பனாக மாறினேன்.
‘சொல் புதி’திற்கு நான் எந்த உதவியும் செய்ததில்லை; நானாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. ‘சொல் புதி’திற்கு உதவி செய்யும்படி கேட்டு நீங்கள் ஒரு கடிதம் எனக்கு எழுதினீர்கள். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.5000க்கு விளம்பரம் தரவியலுமா எனக் கேட்டிருந்தீர்கள் (நீங்கள் எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன). ஆனால் நான் உதவி ஏதும் செய்யவில்லை. அத்தருணம் ஓர் இணைய இதழை நடத்தவேண்டும் என்ற தீராத தாகம் கொண்டவராக மட்டுமல்ல ஒரு நல்ல பதிப்பகம் துவக்கவேண்டும் என்றும் ஆர்வமாக இருந்தீர்கள்.
“மனுஷ்யபுத்திரனை நான்தான் உருவாக்கினேன்” என்று நான் சொன்னதாக ஒரு பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறீர்கள். நான் அப்படி ஒரு போதும் உங்களிடம் மட்டுமல்ல, வேறு எவரிடமும் சொல்லியதில்லை. 1984இல் நான் துவரங்குறிச்சி சென்று மனுஷ்யபுத்திரனை அவர் இல்லத்தில் சந்தித்தபோது அவர் ஏற்கனவே மனுஷ்யபுத்திரனாகத்தான் இருந்தார். அப்பொழுதே அவருடைய ‘மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்’ வெளிவந்துவிட்டது. அதன்பிறகு எங்கள் நட்பில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள். என்றபோதும் எங்கள் நட்பு தொடர்ந்தே வருகிறது.
அபாண்டம் 4:”அவரது முதிரா உணர்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அப்போதும் நான் மனுஷ்யபுத்திரனுக்கு நண்பனாகவே இருந்தேன். ஆனால் எனக்கு உதவிகள் தேவைப்பட்டன”.
இதுவும் அப்பட்டமான பொய்யில்லையா ஜெய்? அந்தக் காலகட்டத்தில் நீங்களும் மனுஷ்யபுத்திரனும் ‘நட்பாகவா’ இருந்தீர்கள்? ‘காலச்சுவடு’க்கும் உங்களுக்கும் பெரும் யுத்தமே நடந்ததை மறந்துவிட்டீகளா? உங்களுக்கு எதிராக ஒரு கடிதம் ‘காலச்சுவடி’ல் பிரசுரமாகப் போகிறதென்ற உங்களின் தகவலின் அடிப்படையில் அப்பொழுது ‘காலச்சுவடு’ ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்யபுத்திரனை தொடர்புகொண்டு அக்கடிதத்தை பிரசுரிக்கவேண்டாம் என்று கேட்டேன். என்றாலும் அக்கடிதம் பிரசுரமானது. இவையெல்லாம் உங்களுக்கு மறந்தா போகும்; இருக்கும், நினைவில் இருக்கும். இதன் தொடர்ச்சியாகத்தானே ‘சொல் புதிதி’ல் வேதசகாயகுமார் பெயரில் ‘நாச்சார் மட விவகாரங்கள்’ கதை மனுஷ்யபுத்திரனைத் தாக்கி பிரசுரிக்கப்பட்டது. இதில் ‘இலக்கியப் பரிச்சியம் குறைந்த’ என் பெயர் வேறு அந்த இதழ் ஆசிரியர் குழுவில்! என்னைக் கேட்காமலேயே என் பெயர் ‘சொல் புதிது’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றது; நான் கேட்டுக்கொண்ட பிறகு அது நீக்கப்பட்டது. இல்லையா ஜெய், இதையும் நீங்கள் இல்லை என்றுதானே சொல்வீர்கள். அதுதானே உங்கள் அறம்!
மனுஷ்யபுத்திரன் மீது பேரன்பு கொண்டவன் நான் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்களும் நான் மிக நேசிக்கும் நண்பர். எனவே, நான் உங்களிடம் இது குறித்து கேட்டேன். என் வருத்தத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். தங்களுக்குத் தெரியாமலேயே வேதசகாயகுமார் அக்கதையை பிரசுரம் செய்துவிட்டார் என்று சொன்னீர்கள். அப்போது நீங்கள் வட இந்திய பயணம் சென்று திரும்பியிருந்தீர்கள். ஆனால் மனுஷ்ய புத்திரன் அந்தக் கதையை சட்டை செய்யவே இல்லை. அவப்பெயர் உங்களுக்குத்தான் வந்து சேர்ந்தது. இதில் எங்கே மனுஷ்யபுத்திரனிடம் நட்பாக இருந்தீர்கள்?
அபாண்டம் 5: “மருதம் என்ற இணைய இதழை ஆரம்பிப்பதாகவும் அதற்கான எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார். மருதத்தின் செலவில் சொல்புதிதையும் நடத்துவதாக திட்டம். மருதத்துக்கு அவர் ஒரு டொமெய்ன் பதிவுசெய்து கொடுத்தார். உண்மையில் அவர் தன் கட்டுமானத் தொழிலுக்காக உருவாக்கியிருந்த டொமெய்னில் ஒரு சிறுபகுதியையே மருதத்துக்காக ஒதுக்கினார். அது எனக்கு அன்று தெரியாது”
உங்கள் பொய்களுக்கு எல்லையே இல்லையா? ஆம் மருதம்.காம் என் செலவில் நடத்துகிறேன் என்று சொன்னேன். அதை நடத்தியும் காட்டினேன். ஆனால் அதை ஏன் தொடர்ந்து நடத்தவியலாமல் போயிற்று? அதற்குக் காரணம் நீங்கள்தான்.
அப்போழுது என் கட்டுமான நிறுவனத்திற்காக குடில்.காம் என்ற இணையதளம் நடத்தப்பட்டது. அதற்கான தொழிலாளர்கள், கணினி வசதிகள் என் அலுவலகத்திலேயே இருந்தன. அதிக செலவில்லாமலேயே நடத்தியிருக்கலாம். ஆனால், இந்த ஏற்பாட்டை மறுத்துவிட்டீர்கள். எனவே 2ஜிபி பெறுமானமுள்ள இடம் மருதம்.காம்க்காக வாங்கப்பட்டது எனவே புதிதாக ஒரு டொமெயின் மருதம்.காமிற்காக பதிவுசெய்து, ஆறுமாதத்திற்கு ஐம்பது ஆயிரம் என்ற வகையில் முதல் முறையும் இரண்டாவது முறையாக புதுப்பிக்கவும் செய்தோம். அதற்கான ரசீதுகளையும் உங்களிடம் தந்தேன். என்னுடைய அலுவலகத்திலேயே மருதம்.காம் நடத்தியிருந்தால் இவ்வளவு பொருட்செலவு ஏற்பட்டிருக்காது.
மருதம்.காமிற்கு மதுரையைச் சேர்ந்த, சரவணன்1978 என்பவரை ஆசிரியராக நியமித்தீர்கள் அவருக்கு கம்ப்யூட்டரும் ஸ்கேனரும் வாங்கிக் கொடுத்தேன். மாதச் சம்பளமும் கொடுத்தேன்.
இதையெல்லாம் இப்பொழுது மறைக்கிறீர்கள். இரண்டாவது முறை மருதம்.காம் புதுப்பிக்கப்பட்டபோது என் கட்டுமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்குள்ளானது. அதை நானே உங்களிடம் தெரிவித்தேன். “இன்னும் ஆறு மாத காலத்திற்கு ஸ்பேஸ் இருக்கிறது, நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்” என்று உங்களிடம் சொன்னேன். அதற்கு “சைதன்யா வளர்ந்து கொண்டு இருக்கிறாள். என்னால் எந்த செலவும் செய்யமுடியாது” என்று மறுத்துவிட்டீர்கள் இதுதான் நடந்தது.
ஆனால், “அவர் தன் கட்டுமானத் தொழிலுக்காக உருவாக்கியிருந்த டொமெய்னில் ஒரு சிறுபகுதியையே மருதத்துக்காக ஒதுக்கினார். அது எனக்கு அன்று தெரியாது” என்று பொய்சொல்கிறீர்கள். இன்று நம்மிடையே எந்தத் தொடர்பும் இல்லை. அன்று தெரியாத ஒரு செய்தி இன்று உங்களுக்குத் துப்பறிந்து சொன்னவர் யார்! நல்லா இருக்கு உங்க அறம்.
அபாண்டம் 6: “அவர் கொடுத்த வாக்குறுதியை நம்பி மருதத்தை பெரிய அளவில் ஆரம்பித்தோம். அன்றைய காலகட்டத்தில் மருதம் அளவுக்கு பெரிய இணைய இதழ் ஏதும் இருக்கவில்லை. அன்று எனக்கு கணிப்பொறி இல்லை என்பதனால் அதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் நாகர்கோயில் சரோஜினி கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் பக்கம் ஒன்றுக்கு இருபதுரூபாய் செலவில் தட்டச்சு செய்யப்பட்டன. ஒரு முழுநேர ஊழியரும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பின் சுதீர் செந்தில் வாக்களித்தபடி ஒரு பைசாகூட தரவில்லை. நான் அவர் தருவார் என நம்பி என் செலவில் மருதத்தை ஒருசில இதழ்கள் நடத்தியபடி சென்றேன்”.
அடேங்கப்பா… கண்ணக் கட்டுது. அப்படியென்றால் மதுரையில் உங்களால் நியமிக்கப்பட்ட சரவணன் 1978 என்னதான் செய்தார்? நீங்கள் உண்மையில் நாகர்கோவிலில் தட்டச்சு செய்திருந்தால், உங்களிடம் ‘பேக்கப்’ இருந்திருக்க வேண்டுமே? உண்மை என்னவென்றால் மருதம்.காமிற்காக நாகர்கோவிலில் எதுவும் தட்டச்சு செய்யப்படவில்லை. மதுரையில்தான் தட்டச்சு மற்றும் வலையேற்றம் செய்யப்பட்டது அத்தனையும் செய்தது சரவணன்.1978தான் அவர் ‘பேக்கப்’ செய்யத் தவறியதால்தான் மருதம்.காமில் பிரசுரமான அனைத்திற்கும் காப்பி இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை சரவணன்1978 இடம் இருக்கவும் செய்யலாம். அது உங்களுக்கும் அவருக்கும் இருக்கும் உறவைப்பொறுத்து கிடைக்கவும் செய்யலாம்.
ஒரு பக்கம் தட்டச்சு செய்வதற்கு இன்று 10லிருந்து 15 ரூபாய்களே கொடுக்கப்படுகிறது. 2002இல் வெறும் ஐந்திலிருந்து ஏழு ரூபாய்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அது சரி, ‘செத்தால்’தானே சுடுகாடு தெரியும்!
“அவர் கொடுத்த வாக்குறுதியை நம்பி மருதத்தை பெரிய அளவில் ஆரம்பித்தோம்”- இதில் ‘ஆரம்பித்தோம்’ என்பதில் இருக்கும் ‘தோம்’ என்பது யாரெல்லாம்?. சொல்லமுடியுமா ஜெய்?
அபாண்டம் 7: “சுதீர் செந்தில் மருதம் அடங்கிய தன் டொமெய்னுக்கு ஆறுமாதம் மட்டுமே பணம் கட்டியிருந்தார். மேற்கொண்டு பணம் கட்டவில்லை. ஆகவே ஒருநாள் காலையில் திடீரென்று மருதம் நின்றுவிட்டது. எனக்கோ அந்த ஊழியருக்கோ இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே எந்த உள்ளடக்கத்துக்கும் ஃபீட்பேக் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை.
அவ்விதழில் மிகமுக்கியமான பல கட்டுரைகள் இருந்தன. என் நண்பர் சோதிப்பிரகாசம் இந்திய அரசியல் சட்டம் பற்றி, ஓநிக்ஸ் துப்புரவு இயக்கம் பற்றி, ஹெகல்-குரோச்சே பற்றி, மார்க்ஸிய மெய்யியல் பற்றி நிறைய எழுதியிருந்தார்.
அதேபோல குமரிமைந்தன் தமிழ்த்தேசியம் பற்றி மிகவிரிவான கட்டுரைகள் எழுதியிருந்தார். எல்லா கட்டுரைகளும் அழிந்தன. அவர்கள் பிரதி வைத்துக்கொள்பவர்கள் அல்ல. நான் எனக்களிப்பக்கப்பட்ட கைப்பிரதிகளை பாதுகாக்கவுமில்லை. ‘சரிதான் போகட்டும் தோழர்’ என்று அவர்கள் சொன்னாலும் இழப்பு என்னை இன்றும் உறுத்திக்கொண்டே இருக்கிறது”.
மருதம்.காம் மொத்தம் எட்டு மாதங்கள் நடத்தப்பட்டது. 16 இதழ்கள் வெளியாகின. 16 இதழ்களும் சரவணன்1978ஐ ஆசிரியராகக்கொண்டு அவராலேயே அப்லோட் செய்யப்பட்டன. கடைசியாக அவருக்குக் கொடுக்கவேண்டிய ஊதியத்திற்கு ஈடாக மருதம்.காமிற்காக வாங்கப்பட்ட சுமார் 60,000ரூபாய் பெறுமானமுள்ள கம்ப்யூட்டர்களை தந்து கணக்கு நேர் செய்யப்பட்டது. நிலைமை இப்படி இருக்க நீங்கள் யாருக்கு ஊழியம் கொடுத்தீர்கள்? ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்கள்தான் சொல்வீர்கள்.
ஒருவருக்கு செய்த உதவியை சொல்லிக்காட்டுவது என்பது கீழ்தரமான செயல் என்று நம்புபவன் நான். இதுவரை நண்பர்களுக்கு செய்த உதவியை ஒருபோதும் நான் பதிவு செய்ததில்லை. மருதம்.காமை நான்தான் நடத்தினேன் என்பதை நிரூபித்ததுக்கொள்வதன் மூலமாக எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.
‘சொல் புதிது’ தொடர்ந்து நடத்தமுடியாத நிலை, மருதம் இணையதளம் நின்றுவிட்ட சூழ்நிலையில் உங்களுக்கு ஒரு பத்திரிகை தேவைப்பட்டது. நானும் மனுஷ்யபுத்திரனும் உயிர்மையை தொடங்கினோம். என் பொருட்டு நீங்கள் உயிர்மையில் எழுத ஆரம்பித்தீர்கள். இன்று நீங்கள் அடைந்திருக்கும் பிரபல்யத்திற்கு ‘உயிர்மை’தான் காரணம் என்பதையாவது ஒத்துக்கொள்வீர்களா? அதற்கு என் நட்பு உங்களுக்கு உதவவில்லையா?
இந்தக் கடிதம் எழுத நேர்ந்ததே துரதிர்ஷ்டவசமானது. எனக்குள் எழும் கேள்விகள் எல்லாம், எந்த அறமும் இல்லாத ஒருவர் எப்படி இத்தனை பெரிய எழுத்தாளராக இருக்க முடியும் என்பதுதான்.
எனக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் பிணக்கு ஏற்பட்டு ‘உயிர் எழுத்’தை ஆரம்பித்தபோது உங்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘உயிர் எழுத்’தில் எழுதும்படி கேட்டேன். ஆனால் நீங்கள் மறத்துவிட்டீர்கள். என் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு அடுத்தக்கணமே மனுஷ்யபுத்திரனை அழைத்து இதைச் சொன்னீர்கள். அப்பொழுது மனுஷ்யபுத்திரனுக்கும் உங்களுக்கும் தேனிலவு காலம். ஆனால் இப்பொழுது உங்கள் வசதிக்காக “மனுஷ்யபுத்திரனிடம் சண்டை போட்டு அவர் விலகி உயிரெழுத்து ஆரம்பித்தபோது அதில் தொடர்ந்து எழுதும்படி என்னைக் கோரினார். நான் அச்சு இதழ்களில் எழுதும் மனநிலையிலேயே இருக்கவில்லை”.என்று சொல்கிறீர்கள்.. அதன்பின்பும் உயிர்மையில் 2 வருடத்திற்குமேலாக எழுதினீர்கள்.
நான் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு மறப்பவன் அல்ல. என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் படியே அனைத்தையும் செய்தேன். முடியாதபோது அதையும் சொன்னேன். நீங்கள் அனைத்தையும் திரித்தும் மாற்றியும் சொல்வது சமகாலத்திலேயே வரலாற்றை இருட்டடிப்புச்செய்வதாகும்.
அபாண்டம் 8″ எஸ்.வி.ஆர். தன் கடிதத்தில் எனக்கு அவர் ‘சிக்கல்களை’ உருவாக்கியதாக கொக்கரிப்பது சுதீர் செந்தில் வழியாக அவர் செய்த இந்த சில்மிஷங்களை மட்டுமே. இதைச்செய்வதன் வழியாக எனக்கு என்னதான் ஆகப்போகிறது? வசை விழலாம். சரி, நாலைந்து அடிகூட விழலாம். அதனால் என்ன?
இது என்னை மட்டுமல்ல; எஸ்.வி.ஆரையும் இழிவுபடுத்தும் வசைகள் ஆகும். ‘உயிர் எழுத்’தின் உருவாக்கத்தில் எஸ்.வி.ஆர் எந்தத் தலையீடும் செய்ததில்லை. அது அவர் வேலையும் இல்லை. நான் எடுப்பார் கைப்பிள்ளையும் இல்லை. எனக்கு எதைச் செய்யவேண்டுமோ அதை தெளிவாக, தெரிந்தே செய்கிறேன். எளிய உண்மைகளால் நிறைந்தது என் உலகம். உங்களுடைய சிந்தனை, மயிலின் கண்களைப்போல அத்தனை கொடுரமாக ஒளிர்கிறது. என்றாலும் அதற்கு உண்மைகளை மறைக்கும் ஆற்றல் இல்லை.
இந்தப் பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்பா என்று தோன்றுகிறது. நல்லா இருங்க ஜெயமோகன்.
சுதீர் செந்தில்
திருச்சி
25.06.12
அன்புள்ள சுதீர் செந்தில்,
உங்கள் கடிதத்தை பிரசுரிக்கிறேன். ஜனநாயகம் என்று ஒன்று உள்ளது அல்லவா?
பொதுவாக தனிப்பட்ட நட்புகளின் அடுத்தகட்ட கசப்புகளை விவாதிக்கும்போது ஒவ்வொருவருக்கும் அவரவர் சரிகள் இருக்கும். உங்கள் தரப்பை, நியாயப்படுத்தலைச் சொல்கிறீர்கள். நான் சொல்வது நான் அறிந்ததும் உணர்ந்ததுமான உண்மைகளை மட்டுமே.
எஸ்.வி.ராஜதுரைக்கும் உயிரெழுத்துக்குமான கருத்தியல் தொடர்பை அவ்விதழின் தலையங்கத்தையும் அவர் எழுதும் கட்டுரைகளையும் ஒப்பிட்டுவாசிப்பவர் புரிந்துகொள்ளமுடியும். அதை மறுப்பது உங்கள் நிலைபாடு என்றால் அதை புரிந்துகொள்கிறேன். நான் அதை ஒரு கூட்டுச்செயல்பாடாகவே பார்ப்பேன். சிற்றிதழ்ச்சூழலில் இவ்வகை விஷயங்கள் எப்படி நடக்குமென எளிதில் ஊகிக்கமுடியும்
உயிர் எழுத்தில் என் கட்டுரையுடன் நீங்கள் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை மட்டும்தானா? உங்களுக்கு மாற்றான ஒரு தரப்பு என்ற பொருளில் அல்ல ‘ஜெயமோகன் எத்தனை இழிவானவர் என்பதை இந்தக்கட்டுரையிலேயே காணலாம் ’ போனற சொற்களுடன் அல்லவா அது உங்கள் எழுத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது?
குறைந்தது இருபதுபேராவது உங்களிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது என்று சொன்னார்கள். அனுப்பவில்லை என்பதே உங்கள் நிலைபாடு என்றால் அதுவும் சரிதான்.
சொல்புதிதுக்கு நான் உங்களிடம் விளம்பரம் கோரினேன். அதற்குப்பதிலாக எப்படியும் இருபது முறையாவது ‘காலச்சுவடை அடிச்சு தூக்கிரலாம்…கிராண்டா பண்ணலாம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் சொன்ன வரியையே சொல்லியிருக்கிறீர்கள்.மனுஷ்யபுத்திரனை நீங்கள் உருவாக்கினீர்கள், நீங்கள் இல்லையேல் அவர் இல்லை என என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் சொல்லியிருப்பீர்கள்.அதையும் மறுக்கிறீர்கள் என்றால் அதுவும் உங்களுடைய சமகால நிலைபாடாக இருக்கலாம்.
மருதம் ஆரம்பிக்கப்பட்டதே சொல்புதிதுக்கு ஒரு ஊழியர் வைக்கமுடியும் என்பதற்காகத்தான். சொல்புதிதையும் மருதத்தையும் சேர்த்து நடத்தினால் பொருளியல்ரீதியாக நல்லது என்பதற்காக. அதற்காகவே நீங்கள் உதவினீர்கள்.
நீங்கள் செய்த உதவி டொமெய்ன் பதிவுசெய்து அளித்தது மட்டுமே. அதற்கான ரசீதுகளோ செலவுகளோ எதுவும் எனக்கு அளிக்கப்பட்டதில்லை.சரவணனுக்கு நீங்கள் ஊதியம் அளித்தீர்கள், கணிப்பொறி வாங்கிக்கொடுத்தீர்கள் என்பதெல்லாம் எனக்கு இப்போது தெரியவரும் புதியசெய்தி. வாங்கிக்கொடுப்பதாக நீங்கள் இருமுறை சொன்னீர்கள் என்பது என் நினைவு. அவர்தான் அதை உறுதிசெய்ய வேண்டும். கணிப்பொறி வாங்கிக்கொடுத்திருந்தால் ஏன் அவர் விலகும்வரை வெளியே கொடுத்து சொல்புதிதை தட்டச்சு செய்தார்?
ஆறுமாத டொமெய்னுக்கு ஐம்பதாயிரம் என்கிறீர்கள். கணிப்பொறிகள் வர ஆரம்பித்திருந்த காலகட்டத்தில் நாகர்கோயிலில் ஒரு பக்கத்துக்கு பத்துரூபாய்க்குமேல் ஆகாது என வாதிடுகிறீர்கள். சரிதான், நாகர்கோயிலில் இப்போதும்கூட இருபது ரூபாய் ஆகும் ஒரு பக்கத்துக்கு. அன்று சராசரியாக மாதமொன்றுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் தட்டச்சுக்குச் செலவிடப்பட்டது. அது எனக்கு பெரியதொகை.
நீங்கள் பேசாமலானபின் சரவணனின் நிலுவை ஊதியத்துக்கு ஈடாக மதுரை கோவை சேலம் பகுதியின் சொல்புதிதுக்கான வசூல் எடுத்துக்கொள்ளச்சொல்லி கொடுக்கப்பட்டது. மாதம் ஆயிரத்தைநூறு ரூபாய் வீதம் நான்கு மாதங்களுக்கு. அவருடனான தொடர்பும் அத்துடன் நிற்க சொல்புதிதும் நின்றுவிட்டது.
சொல்புதிதில் வெளிவந்து அதன்பின் மருதத்திலும் வெளிவந்த கட்டுரைகள், அதாவது அச்சுக்காக தட்டச்சு செய்யப்பட்டவை, மட்டுமே மதுரையில் தட்டச்சு செய்ப்ப்பட்டன. மருதத்தில் மட்டுமாக வெளிவந்த கட்டுரைகள் முழுக்க நாகர்கோயிலில் தட்டச்சுசெய்யப்பட்டவை.அவை அளவில் கிட்டத்தட்ட பாதி. அவை என் செலவில் செய்யப்பட்டன. எம்.எஸ் அவற்றை மெய்ப்பு நோக்கினார். அதே அச்சகத்தில்தான் என் செலவில் இந்துஞானமரபில் ஆறுதரிசனங்களின் முதல் பதிப்பும் அச்சு கோர்க்கப்பட்டது. அதை சொல்புதிதே வெளியிடுவதாக இருந்தது. முடியவில்லை. தமிழினி வெளியிட்டது.
ஆறுமாதத்துக்கு ஸ்பேஸ் இருக்கிறது என்று நீங்கள் சொன்னதாகச் இப்போது சொல்வதை பெரும் ஆச்சரியத்துடன் மட்டுமே பார்க்கிறேன். இதைப்போல இன்னும் பல கேட்கநேரிடலாம் போலும். ஒருநாள் காலையில் மருதம் நின்றுவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. உங்களை பலமுறை கூப்பிட்டபின் ஏதோ தொழில்நுட்பச்சிக்கல் உடனே சரியாகிவிடும் என்றீர்கள். அதன்பின்னர் டொமெய்ன் காலாவதியாகிவிட்டது உடனே பணம்கட்டுகிறேன் என்றீர்கள். அப்படி சொல்லிக்கொண்டே இருந்தீர்கள்.
அப்படியே இருமாதம். அதன்பின்னர் பணம் கட்டினாலும் டொமெய்னை மீட்கமுடியாது வேறு டொமெய்ன் பார்ப்போம் என்றீர்கள். அதற்காக காத்திருந்தேன். அதன்பின் நம்மிடையே தொடர்பே விட்டுப்போயிற்று. நீங்கள் தொலைபேசியை எடுப்பதில்லை. நான் அழைக்கவுமில்லை. மனுஷ்யபுத்திரன் நீங்கள் சிக்கலில் இருப்பதாகச் சொன்னார். அதன்பின் நாம் பார்ப்பது ஒரு வருடம் கழித்து. உங்கள் நிதிச்சிக்கல்களை அப்போது சொன்னீர்கள்
திடீரென்று இணையதளம் நின்றுவிட்டமையால்தான் கட்டுரைகள் எல்லாம் அப்படியே போய்விட்டன . ஆறுமாதம் மிச்சமிருந்தால் குறைந்தது கட்டுரைகளையாவது எடுத்து வைக்க முயன்றிருப்பேன். அந்த அளவுக்கு அறிவுள்ளவன் என்றே என்னைப்பற்றி நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்கும் எப்போதும் நட்புதான் இருந்தது. சிறு சண்டைகள் இல்லாமலிருந்ததும் இல்லை.காலச்சுவடு என்னுடன் போர் புரிந்தகாலகட்டத்திலும் கூட என் மீதான நட்பின் உரிமையுடன் அவர் பத்மவியூகத்தை வெளியிடுகிறேன் என்று எழுதினார். நாச்சார் மட விவகாரத்தில் நேரடியாகவே நான் அவருக்கு நடந்ததை எழுதினேன்.
மனுஷ்யபுத்திரனுடன் கொண்ட நட்பு காரணமாகவே நான் உயிர்மையில் எழுதிக்கொண்டிருந்தேன். மற்றபடி அச்சு ஊடகங்களில் குறிப்பாகச் சிற்றிதழ்களில் எழுதவேண்டாமென்பதே என் எண்ணமாக இருந்தது. அதற்குக் காரணம் ஒரு படைப்பை கோரி பெற்றுவிட்டு அதற்கு அடுத்த இதழிலேயே எதிர்வினைகள் என்றபேரில் எல்லைமீறிய வசைகளையும் வெளியிடுவார்கள் என்பதே
அதன்பொருட்டே உயிரெழுத்தில் எழுதவில்லை. தொலைபேசியை துண்டித்ததாக எழுதுகிறீர்கள். நல்லது. சில இதழ்கள் வரட்டும், அதன்பின் எழுதுகிறேன் என்றுதான் சொன்னேன். தொலைபேசியை துண்டித்த இரவில் நீங்கள் என்ன நிலையில் பேசினீர்கள் என சொல்லவேண்டியதில்லை. இதழ்களின் எதிர்வினைகளி தரத்தைப்பார்த்த பின் எழுத மறுத்துவிட்டேன்.
நீங்கள் கோரியபோது பிரபஞ்சன் மீது என் மரியாதை காரணமாக எழுத ஒப்புக்கொண்டேன். அதன்பின் எதிர்வினைகளை எண்ணி அதை தவிர்த்துவிட்டேன்.
இவ்வளவையும் பொதுவெளியில் சொல்லவேண்டிய கட்டாயம் உங்களால் உருவானது. ஃபேஸ்புக் போன்ற சமூகதளங்களில் எனக்காக நீங்கள் ‘லட்சக்கணக்கில்’ செலவிட்டீர்கள் என்றும் அதை நான் மறைப்பதாகவும் நீங்கள் எழுதினீர்கள். அதை தெளிவுபடுத்தியாகவேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் இதெல்லாமே நான் சொல்லும் பொதுவான பிற விஷயங்களை மழுங்கடிப்பதற்கான காரணங்களாக முன்வைக்கப்படும்.
சொல்புதிதுக்கு நீங்கள் அளித்த பணம் என்பது நானறிந்தவரை மருதம் டொமெய்ன் மட்டுமே. [அதுவும் உங்கள் நிறுவனத்துக்காக வாங்கப்பட்டது. அதை பின்னர் உங்கள் நண்பர்களாலேயே அறிந்தேன்] அதை இப்போது உறுதிசெய்ய விரும்புகிறேன். மற்றபடி உங்கள் கணக்குகளும் நியாயப்படுத்தல்களும் உணர்ச்சிகளும் உங்களுக்கு சரியாகப்பட்டால் சரி. அதை யார் இப்போது நிரூபிக்கமுடியும்?
ஜெ