வணக்கத்திற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு..
முகமறியாத உங்களின் பல வாசகர்களில் நானும் ஒருவன்.. பல ஆண்டுகளாக பல விசயங்கள் குறித்து உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.. இன்று எஸ்.வி.ராஜதுரை எழுப்பி இருக்கும் சர்ச்சை மூலமாக இக்கடிதம் சாத்தியப்பட்டு இருக்கிறது. நீண்டகாலமாக உயர்கல்வித்துறையோடு இணைந்திருப்பவன் என்ற முறையில் பல விசயங்களை என்னால் திட்டவட்டமாகச் சொல்லமுடியும்..
புதுதில்லியில் எனது உயர்கல்வி ஆய்வுப்படிப்பை நான் மேற்கொண்டு இருந்த நேரத்தில், (அதாவது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்) அங்கு உள்ள தேசத்தின் ஒரு முதன்மையான ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியராக இருந்த, இன்றும் இருக்கின்ற அரசியல் ஆய்வாளரோடு ஏற்பட்ட நட்பினால், அமெரிக்காவின் முதன்மையான பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஓர் அமெரிக்கர் கள ஆய்வுக்காக வந்தபோது அவரது அறிமுகம் ஏற்பட்டது.. தனது ஆய்வுக்காக உதவிடும்படி கேட்டுக்கொண்டார். எனது நண்பர் செய்த ஏற்பாடு..!
அமெரிக்கரின் ஆய்வு இந்தியாவில் பிரிவினைவாத இயக்கங்கள் எப்படி கால ஓட்டத்தில் கரைந்தன..இந்தியா எப்படி பிரிவினைவாத சக்திகளை எவ்வாறு நீர்த்துப் போகச் செய்தது.. அதில் தமிழ்ப் பிரிவினைவாதமும் அடக்கம்..அதனால் என் நண்பர் என்னை அவரோடு கோர்த்துவிட்டார்..அது பற்றி எனது Ph.D. மேற்பார்வையாளராக இருந்த பேராசிரியரிடம் சொன்னேன்.. அவரும் தென் இந்தியர்தான்.. மாநில சுயாட்சி என்பது பற்றி அவருக்கு மித மிஞ்சிய கனவு இருந்தது.. அவரே சற்று அதிர்ந்து விட்டார்.. ஏன் சார் என்று கேட்டேன்.. அப்போது அவர் சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சி தருவதாக இருந்தது..
1970 கள் வரை, மேலை நாட்டு அறிவுஜீவிகளுக்கு இந்தியா எப்படியும் சிதறிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் இந்தியா எப்போது உடையும் எப்படி உடையும் என்பது போன்ற ஆய்வுகளுக்குப் பணம் தந்து வந்தனர்.. அதற்குப் பிறகு, பிரிவினை சக்திகள் எப்படி காணாமல் போயின.. அதற்கு இந்தியா செய்த காரியங்கள் என்ன என்பது பற்றி ஆய்வு நடத்த பணம் தர ஆரம்பித்துவிட்டனர்.. என்று நக்கலாகவே சொன்னார்.. பெரும் அதிர்ச்சிக்கு ஆளானேன்.. அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகம் மட்டும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் எந்தமாதிரியான சமூக, அரசியல் ஆய்வுகளுக்கு பண உதவி செய்திருக்கிறது என்று பார்த்தாலே போதும். தலித் விடுதலை என்னும் போர்வையில், இந்த நாட்டின் மீது தலித் மக்களுக்கு வெறுப்பு வரவேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்கு ஒரே இலக்கு.
போர்டு பவுண்டேஷன் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடி மற்றும் முஸ்லிம் மைனாரிட்டி வகுப்பினருக்கு என்றே வரலாறு, சமூகவியல், அரசியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில் Ph.D. ஆய்வை மேற்கொள்ள ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக் கழகங்களில் இடமும் வாங்கித்தந்து பெரும் ஆய்வு நல்கைகளும் தருகின்றனர்.. என்ன நோக்கம்..!? இது போன்ற கேள்வியை எழுப்புவது ஒன்றும் தவறல்ல.. இந்தியாவின் ஏற்றத்தாழ்வு நிறைந்த பொருளாதார நிலை பற்றி, அரசியல் பற்றி ஆய்வு செய்யும் போது, ஒரு நாட்டின் மீதும் அதன் நெடிய வரலாறு மீதும் வன்மமும் வெறுப்பும் வரவேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்.. பிரச்சினைக்கு சரியான தீர்வுக்கு நமது ஆய்வுகள் உதவிட வேண்டும்.. இவர்கள் நோக்கமே பிரச்சினையை ஊதி பெரிதாக்கி, அதில் குளிர் காய நினைக்கிறார்கள்.. இதுதான் உண்மை..
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான், மார்க்சிய லெனினிய கொள்கைகளில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்..அதற்காக இதுமாதிரியான கேவலத்தை ஏற்க முடியவில்லை.. இந்த நாட்டின் கலாசாரம், வரலாறு பற்றி எந்த ஒரு புரிதலுமே இல்லாத இந்தக் கும்பலை தோலுரித்துக் காட்டவேண்டும்..
அன்புடன்
மு.விடுதலை.
மும்பை
அன்புள்ள விடுதலை,
இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு ஆய்வேடுகளை மட்டும் சீராக வரிசைப்படுத்தி அவற்றின் ஆய்வுத்தலைப்புகளை நோக்கினால் இந்த ஆய்வுகளின் நோக்கம், அவற்றுக்கு இங்கே உதவிசெய்பவர்களின் இலக்கு எல்லாமே தெளிவாகிவிடும்.
அந்த ஆய்வாளர்கள்தான் இங்கே இந்திய அரசியல் பற்றியும் பொருளியல் பற்றியும் நம் நாளிதழ்களில் நிறைய எழுதுகிறார்கள். அந்த ஆய்வுகள் உருவாக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவைப்பற்றி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கோட்பாடுகள்தான் இங்கே கட்டுரைகளில் அதிகம் மேற்கோள் காட்டப்படுகின்றன.
ராமச்சந்திர குகா அவர்களின் நூலில் [காந்திக்குப்பின் இந்தியா] தொடர்ச்சியாக ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியா உடைந்துவிடும் என ஆர்வமாக மேலைநாட்டு ஆய்வாளர்கள் காத்திருந்ததை விளக்குகிறார். அந்நூலே ஏன் அப்படி உடையவில்லை என்பதற்கான விளக்கம்தான்.
இந்தியாவில் வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் நாட்டாரியல், மானுடவியல், சமூக அரசியல் தளங்களில் நிகழும் ஆய்வுகளில் பெரும்பகுதி பொதுவாக மூன்று ‘அஜென்டாக்களை’ கொண்டதாகவே இருக்கும். அவற்றை மீறி, அந்த முன் சட்டகத்தை மறுத்து ஓர் ஆய்வை எவரும் செய்துவிடமுடியாது.
1. இந்தியா பண்பாட்டு ரீதியாக ஒரே நாடல்ல. இது பல தேசியங்களை ஒடுக்கி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தேசியம்.
2. இந்து மதம் என்பது அடக்குமுறையாலும் மோசடியாலும் உருவானது. அதன் மையமான பிராமணியம் பிற கூறுகளை அடக்குகிறது, அழிக்கிறது.
3. இந்தியாவிலுள்ள சாதியவேறுபாடு என்பது இன [Race] வேறுபாடு. ஆகவே தலித்துக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது சமூகப்பிரச்சினை அல்ல இனப்பிரச்சினை.
இவற்றை நிரூபிக்கவே மீண்டும் மீண்டும் இந்த ஆய்வுகள் எழுதப்படுகின்றன. இங்குள்ள அறிஞர்கள் அந்த ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு நூல்களை உருவாக்குகிறார்கள். அந்நூல்கள் மூலநூல்களாக மேலைநாடுகளில் அங்கீகரிக்கப்படுகின்றன. அவை அவர்களால் மேற்கோள் காட்டப்படுகின்றன.
எஸ்.வி.ராஜதுரையின் ‘இந்து இந்தி இந்தியா’ என்ற நூலை மட்டும் வாசித்தாலே போதும். இந்திய தேசியம் ஒரு மோசடி, அது உடைந்து இந்தியா துண்டாகவேண்டும் என ஆவேசத்துடன் வாதிடுகிறது இந்நூல்.
மறைமுகமாக தமிழின் சிற்றிதழ் இயக்கமே இந்தக் கருத்துக்கள், கருத்துக்களை உருவாக்கும் அமைப்புகள், அவற்றின் நிதிப்பின்னணியின் பிடியில்தான் உள்ளது. இந்தியதேசிய எதிர்ப்பு , இந்தியப் பண்பாட்டு நிராகரிப்பு என்பது நம்முடைய சிற்றிதழ்கள், சிற்றிதழ் எழுத்தாளர்களின் பொதுவான குரல்.
அவற்றை மீறி இந்தியா முன்னகர்கிறது.
ஜெ