இன்றைய அரசியலில் ஒரு கனவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

சமீபத்தில் இராஜீவ் மல்ஹோத்ரா அவர்களும் அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் எழுதிய Breaking India புத்தகம் வாசித்தேன். அதற்கு சற்று முன்னர் உங்கள் தளத்தில் திராவிட கிறிஸ்தவம் பற்றி வந்திருந்த சில கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த சில நாட்களாக தமிழர்களின் கருத்துலகில் பெரும் பணம் புழங்கிவருவதை பற்றியும் படித்து வருகிறேன்.

இது மிகவும் அதிபயங்கரமான, மனிதர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் விரிக்கப்பட்டுள்ள மாயவலையாக உள்ளது. இந்த வலையில் எந்த இடத்தில் என்ன முடிச்சு இருக்கும் என்று கூற இயலாது என்று புரிகிறது. ஒரு சாமானியனால் தீர்க்கவே முடியாத ஒரு பிரச்சினை. எந்தத் தரப்புக் கொள்கை பிடிப்பு கொண்டவராக இருப்பினும், சற்று ஆழமாக சிந்திப்பவராக இருந்தால் “நாம் எந்தத் தரப்பில் இருக்கிறோம், இதில் யாருக்கு எப்பொழுது ஆயுதமாகப் போகிறோம்?” என்ற கேள்வி மனதை உறுத்தும் என்பது நிச்சயம்.

இந்த நிலையில் தீர்வு என்ற அளவில் சாமானியர்கள் இந்தப் பிரச்சினையை நோக்குவது அர்த்தமற்றது என்றாகிறது. பிறகு எப்படி நோக்க வேண்டும் என்று சில முறை யோசித்திருக்கிறேன். சில சமயம், ஒரு அசட்டுத்தனமான தீவிரதேசியவாதம் இதற்குத் தீர்வாகுமா என்று தோன்றும். மறுகணமே, ஏன் அந்தத் தரப்பிலும் இவர்களால் ஊடுருவ முடியாதா என்று என் மனமே கேள்வியெழுப்பும்.

நான் கொஞ்சம் இந்துத்துவப் பற்றாளன். ஆனால் இணைய விவாதங்களில் ஹிந்துத்துவ ஆதரவாளர்களிடையே ஒரு குருட்டு முஸ்லீம் வெறுப்பு இருப்பதை கவலையுடன் பார்க்கிறேன். மனம் அதை ஏற்க மறுக்கிறது. ஆகையால் வேறு விதமாக சில சமயம் சிந்திப்பேன். யார் என்ன சிந்தனை விதையை விதைத்தால் என்ன, எல்லோருக்கும் நன்மை பயக்கும் சிந்தனையும் யாருக்கு தீங்கு நினைக்காத சிந்தனையுமாக இருந்தால் படிக்கலாம் என்று தோன்றும். ஆனால் எனக்கு நமது நாட்டில் மதச் சார்பின்மை என்பதே இது போன்றதொரு கருத்தாக்கம் என்பதும் ஆனால் அதுவும் compromise ஆகியுள்ளது என்றும் தோன்றுகிறது (இதனால் தான் நான் இந்துத்துவவாதியாக என்னை நினைக்கிறேன்).

இப்படி எல்லா தரப்பும் இல்லை என்று ஆனால் மனிதன் என்னதான் செய்வான்? ஒரு யோசனை தோன்றியது. ஒரு விதமான அடிப்படைவாதம்தான் இந்த பிரச்சனைக்குத் தீர்வோ என்று தோன்றுகிறது. அதாவது ஆங்கிலேயர் காலத்திற்குப் பிறகு இந்தியாவினுள் வந்த எந்த சிந்தனையையும் எடை போடாமல் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. நம்மால் இயன்ற வரை பழந்தமிழ், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் என்று பழைய மொழிகளைப் பயின்று நம் கலாச்சாரத்தின் ஆழத்தை நாமே மொழிபெயர்ப்பாளர்களின் உதவியின்றி அறியமுற்படுவது. அதன் பிரச்சினைகளையும் first-handஆகப் புரிந்து கொள்வது, மேக்ஸ் முல்லர் போன்றோர் உதவியில்லாமல்.

இதில் பிரச்சினை இருக்கிறது. நவீனத்துவத்திலிருந்து விலகிவிடுவோம். உதாரணமாக நான் சமகாலப் புத்தகங்கள் வாசிப்பதையே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டேன். சமயம் கிடைத்தால் சங்க இலக்கியம் அல்லது வடமொழி இலக்கியம், இலக்கணம் என்று படிப்பது என்று ஆகிவிட்டேன். இந்த நோக்கையே நான் ஹிந்துத்துவமாகக் கொள்கிறேன், கலாச்சார அடிப்படைவாதம் என்ற வகையில். இது சரியான அணுகுமுறையா? இது ஒருவிதமான escapism தானா அல்லது இதனால் ஏதாவது நல்ல மாற்றங்கள் வரும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? சில சமயங்களில் முஸ்லீம்கள் அடிப்படைவாதத்தை நோக்கிச் செல்வதற்கும் இதுதான் காரணமோ என்றும் தோன்றும். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இப்படிக்கு,
கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

நீங்கள் உங்களை ‘இந்துத்துவர்’ என்று சொல்கிறீர்கள். அச்சொல்லை சரியான அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்களா என்று தெரியவில்லை. ‘இந்து மதத்தை ஒற்றைமையமும் ஒரேகட்டமைப்பும் கொண்ட நிறுவனமாக உருவகித்து, அதன் குறியீடுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு, இந்துக்கள் என தங்களை உணரும் மக்களை ஒரு அரசியல் தரப்பாக ஆக்கிக்கொண்டு அதன் மூலம் தேசிய அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஓர் அரசியல் தரப்பு’ தான் இந்துத்துவம். அதில் உங்களுக்கு உடன்பாடா என்ன?

எனக்கு உடன்பாடு இல்லை. அது இந்துமதத்தை இறுக்கமான அமைப்பாக்கி அதன் உள்விவாதங்களை அழிக்கும். அதன் மூலம் அடிப்படைவாதமே உருவாகும். அடிப்படைவாதம் எதிரிகளை முன்வைத்தே இயங்கும் தன்மை கொண்டது. வெறுப்பை தன் உள்ளாற்றலாக கொண்டது

பொதுவாக இன்று அரசியல் கோட்பாடுகள் ‘அன்னியரை’யும் ‘எதிரிகளை’யும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு எதிரான தீவிரமான வெறுப்பை உருவாக்குவதன் மூலமே இயங்குகின்றன. இந்து மதம் சார்ந்த அரசியல் உருவாகுமென்றால் அது இந்தியாவின் பிரிக்கமுடியாத உறுப்பான இஸ்லாம், பௌத்தம், சமணம் உட்பட உள்ள பிற மதங்களுக்கு எதிரானதாகவே ஆகும். அது நம்மை மத்தியகாலகட்ட மதப்போர்களுக்குக் கொண்டுசெல்லும்.

நான் இந்து ஞான மரபையும் இந்துப்பண்பாட்டையும் இந்துத்துவத்தில் இருந்து பிரித்தே பார்க்கிறேன். அதை மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறேன். இந்துமரபு என்பது பல்லாயிரம் வருடப் பாரம்பரியமுள்ள ஒரு மானுட ஞானத்தொகை. இந்துத்வம் என்பது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சமகால அதிகார அரசியல் போக்கு.

இந்துத்துவத்தையும் இந்துமரபையும் ஒன்று என்பவர்கள் பெரும்பாலும் இந்துமதத்தை அழிக்க நினைக்கும் மதமாற்ற சக்திகளும் அவர்களின் ஆதரவாளர்களும்தான். ஏனென்றால் மொத்த இந்து ஞானத்தையே சமகால அரசியலைக்கொண்டு அவதூறுசெய்ய அது வழிவகுக்கிறது. அவ்வரசியலின் எதிரிகளை எல்லாம் இந்துஞானமரபுக்கு எதிரிகளாக ஆக்கமுடிகிறது.

அந்தக் குறுக்கல்நோக்கை இந்துத்துவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் தங்கள் அரசியலுக்கு அது பிரம்மாண்டமான பின்னணியை உருவாக்கி அளிக்கிறது. அதாவது ‘விவேகானந்தர் ஒரு விவேக் கட்டியார்தான்’ என்பார்கள் நம்மூர் இந்து எதிர்ப்பாளர்கள். ‘ஆமாம் ஆமாம், வினய் கட்டியார் விவேகானந்தரேதான்’ என்பார்கள் இந்துத்துவர்கள்.எனக்கு இருகுரலும் எதிரானவை.

இந்தக் குறுக்கல்வாதத்தை, அவதூறை, திரிபை எதிர்க்காமல் எதையுமே பேசமுடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நம் மதத்தை, நம் பண்பாட்டை, நம் பாரம்பரியத்தைப்பற்றிப் பேசுவதே ஃபாசிசம் என்ற கெடுபிடிநிலையை நம் மீது சுமத்திவிட்டார்கள். என்னுடைய தந்தையின் வழிபாட்டை நான் தொடர்ந்தால் என் குரு சொன்ன ஞானத்தைப்பற்றி நான் பேசினால், நான் மதிக்கும் ஒரு ஞானநூலில் இருந்து முற்றிலும் அன்பை போதிக்கும் ஒரு வரியை நான் மேற்கோள் காட்டினால் நான் மானுடவிரோதி, அறிவுக்கு எதிரானவன். எப்படி இந்தக் கெடுபிடி நம் சூழலில் உருவாகியது! உலகில் வேறெந்த நாட்டிலாவது இப்படி ஒரு நிலைமை உண்டா?

ஒரு தேசியக் கட்டமைப்புக்குள் வாழும் மக்களிடையே உருவாகும் அவநம்பிக்கைகள் மிக மிக அபாயகரமானவை . அவை மிக எளிதாக அந்நாட்டை சுரண்ட நினைக்கும் எதிரிகளால் பயன்படுத்தப்படும். ஒரு சிறு அதிருப்தியைக்கூட பெருநெருப்பாக ஆக்கி கோடானுகோடி மக்களை அழிக்கமுடியும். அதை ஆப்ரிக்கா நமக்குக் கண்கூடாக காட்டிக்கொண்டிருக்கிறது. ஆப்ரிக்காவிடமிருந்தும் நம் சென்ற காலத்தில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் நாம் பேரழிவுகளையே சந்திக்கவேண்டியிருக்கும்.

பிரம்மாண்டமான மக்கள்தொகை கொண்ட தேசம் இந்தியா. பல்வேறு பண்பாடுகளின் பெருந்தொகை இது. வரலாற்றின் போக்கில் இங்கே எல்லா பண்பாட்டினரும் எல்லா மதத்தினரும் எல்லா மொழியினரும் ஒன்றாகக் கலந்து எல்லா இடத்திலும் வாழ்கிறார்கள். ஒரு தனித்த பண்பாடுள்ள மொழியுள்ள மக்கள் மட்டுமே வாழும் நிலப்பிராந்தியங்களென அனேகமாக ஏதுமில்லை. ஆகவே பிளவுநோக்கும் வெறுப்பும் எங்கு மேலோங்கினாலும் அங்குள்ள சிறுபான்மையினரை அழிக்கும், அகதிகளாக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் உருவாகும் அழிவுகள் உலகம் இதுவரை காணாதவையாக இருக்கும்.

என்னுடைய அரசியல் என்பது அந்த அச்சத்தைச் சார்ந்ததே. இந்தியாவை நேரடியாகச் சுற்றிப்பார்த்து அறிந்த அச்சம் இது. தங்கள் பிளவுநோக்குகளை தீர்த்துக்கொண்ட ஐரோப்பாவா அல்லது அவற்றைப் பெருக்கி போரிட்டு அழியும் ஆப்ரிக்காவா எது நமக்கு முன்னுதாரணம் என்பதே என் கேள்வி. ஐரோப்பிய நாடுகள் நம்மை ஆப்ரிக்காவாக ஆக்க முயல்கின்றன. நாம் செய்ய வேண்டிய கருத்தியல்போர் அந்த முயற்சிக்கு எதிராகவே.

நான் நம்பும் அரசியல் ஒரு தனிமனிதனைக்கூட இந்த தேசத்தில் எந்த நிலப்பகுதியிலும் அன்னியனாக உணரச்செய்யாதது. ஒரு மனிதனைக்கூட அகதியாக ஆக்கமுனையாதது. ஒருங்கிணைவை மேலும் மேலும் வலியுறுத்தும் ஜனநாயகத்தை நம்புவது.

இங்கே பொதுவாக இடதுசாரித்தரப்பில் இருந்தும் வலதுசாரித்தரப்பில் இருந்தும் பிளவுப்போக்கே முன்வைக்கப்படுகிறது. இடதுசாரிகள் தங்கள் அரசியல் லாபநோக்குக்காக சிறுபான்மையினரின் வாக்குவங்கியை கைப்பற்ற அவர்களின் மத அடிப்படைவாத நோக்குகளை ஆதரிக்கிறார்கள். பெரும்பான்மையின்மீது வெறுப்புகளை சிறுபான்மையினர் மனத்தில் அவர்களே கட்டமைத்து வளர்க்கிறார்கள். இந்தியாவின் மைய ஓட்டம் இந்துமதவெறி என அவர்கள் வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். அதன்மூலம் அன்னியமாகும் சிறுபான்மையினர் தங்கள் குடைக்கீழ் நிற்கும் வாக்குவங்கியாவார்கள் என நம்புகிறார்கள்.

இடதுசாரிகள் மதவாத எதிர்ப்பு என்ற பேரில் இந்தியப்பண்பாட்டையும் இந்துமரபையும் ஒட்டுமொத்தமாக அவதூறு செய்தும் திரித்தும் அழிக்க முனைகிறார்கள். இந்து மரபுக்குள் உள்ள ஒத்திசைவுப்போக்கை, சமரச நோக்கை வேண்டுமென்றே மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். அதன் விளைவாக இந்தியாவை கட்டியெழுப்பியிருக்கும் அடிப்படையான தேசிய உணர்ச்சிகளை சிதைக்கிறார்கள். அவை நம்மை மேலும் அவநம்பிக்கைகளுக்குக் கொண்டுசெல்கின்றன.

இதற்கு எதிராக இந்துமரபின் ஒத்திசைவு நோக்கையும் சமரச நோக்கையும் முன்வைப்பதே காந்தியப் பார்வை. இந்தப்பண்பாட்டின் பரந்துபட்ட தன்மையை, முரண்பாடுகளை அங்கீகரிக்கும் தன்மையை விளக்கி இதுவே இந்நாட்டை உணமையில் நிலைநிறுத்தும் மையச்சரடு என்று காட்டுவதே காந்தியவாதிகளின் பணியாகும். அனைவருக்கும் அந்நம்பிக்கை உருவாகும்போதே இந்த நாடு நீடிக்கமுடியும். அதற்கு எதிரான சக்தியாக இடதுசாரிகளின் வாக்குவங்கி அரசியல் இன்றுள்ளது.

இந்து மதத்தை எதிர்மறையாகக் காட்டுவது இங்குள்ள மதமாற்ற அமைப்புகளின் தேவை. அதன் மூலம் உருவாகும் தேசிய அழிவில் லாபம்பெறத் துடிக்கும் ஏகாதிபத்தியங்கள் இந்த மதமாற்ற அமைப்புகளுக்குப் பெரும் நிதியைக் கொட்டிக்கொடுக்கின்றன. ஆகவே அவர்கள் இடதுசாரிகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இடதுசாரிகளின் இந்துமத எதிர்ப்பு நடைமுறையில் மதமாற்ற சக்திகளுக்குச் சாதகமாகவே செல்கிறது. அதை உண்மையான இடதுசாரிகள் உணர்ந்திருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமலிருக்கிறார்கள். இடதுசாரிகள் பலரின் நிதிப்பின்புலமாகவே இந்த மதமாற்ற சக்திகள் ஆகியிருக்கின்றன.

மறுபக்கம் இருவகையான வலதுசாரிப்பிரிவினை நோக்குகள். முக்கியமாகச் சொல்லப்படவேண்டியது இந்துத்துவமே. அது இந்துமதத்தின் இயல்பான சகிப்புத்தன்மையை அழிப்பதையே தன் அரசியலாகக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தியான கோல்வால்கர் ‘துடிப்பான தேசியம்’ என இதையே சொல்கிறார். இந்துமதத்தின் சமரசக்குரலை, ஒருங்கிணைவு நோக்கை அதன் பலவீனம் என இவர்கள் விளக்குகிறார்கள்.

இந்துஞானமரபின் மீது இடதுசாரிகள் தொடுக்கும் முற்றிலும் நியாயமற்ற தாக்குதல்கள் இந்துத்துவர்களின் மிகப்பெரிய சாதக அம்சம். ஒவ்வொரு சாதாரண இந்துவுக்கும் தன் மரபை இடதுசாரிகள் திரிக்கிறார்கள் அவதூறுசெய்கிறார்கள் என்று தெரியும். ஒருபோதும் அவன் தன் மதத்தை விட்டுவிடப்போவதுமில்லை. அத்துடன் இடதுசாரிகள் கிறித்தவ இஸ்லாமிய வாக்குவங்கி அரசியலுக்காக செய்யும் சமரசங்களும், அவர்களின் அடிப்படைவாதத்தை நியாயப்படுத்துவதும், அவர்களில் பலருக்குப்பின்னால் உள்ள மதமாற்ற அமைப்புகளின் நிதியும் சராசரி இந்துவுக்குள் கசப்பை உருவாக்குகின்றன.

உண்மையில் மெல்லமெல்ல இடதுசாரிகள் இந்தியாவில் தேய்ந்துகொண்டிருப்பதற்கான காரணமும் இதுவே. இந்தத் தவறான நோக்கை விட்டு இடதுசாரிகள் வெளிவருவது இன்று மிக அவசியமான ஒரு விஷயம். இடதுசாரிகளின் வலுவான தரப்பு இல்லையேல் இந்தியா போன்ற ஏழ்மை மிக்க நாடு, முக்கால்வாசித் தொழிலாளர்கள் இன்னமும் ஒருங்கிணைக்கப்படாத நாடு, பெருமுதலாளித்துவத்தின் தலைவாழை இலையில் சென்று விழும் என்பதே உண்மை. மிகப்பெரிய அபாயம் இதுவே.

சாமானியனின் அந்தக்கசப்பை வளர்த்தெடுத்து அவனை மெல்ல மெல்ல இந்து அடிப்படைவாதத்துக்குள் கொண்டு செல்கிறார்கள் இந்துத்துவர்கள். இன்றுகூட அம்முயற்சி பெருவெற்றி கிடைக்காத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் இந்து மரபின் உள்ளடக்கமாக உள்ள சமரசநோக்குதான். அந்நோக்கை விடாமல் வலியுறுத்திவரும் ஞானிகள்தான். ஆனால் இந்த இந்து மத அடிப்படைவாதம் மைய விசையாக ஆகுமென்றால் அது மிகப்பெரிய பிளவுப்போக்காக மாறும்.

இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினரில் ஒரு சிறிய தரப்பினரே உண்மையில் அடிப்படைவாத நோக்குள்ளவர்கள். மற்றவர்கள் ஒத்துவாழ, அதன்மூலம் லௌகீகமாக மேலே செல்ல மட்டுமே நினைப்பவர்கள். ஆனால் அடிப்படைவாத நோக்குக்கு நிதி வந்து குவிகிறது. மாபெரும் அமைப்புகள் உருவாகின்றன. உச்சகட்ட ஊடகப்பிரச்சாரம் நிகழ்கிறது. அறிவுஜீவிகள் கூலிப்படையாகச் சென்று வணங்கி நிற்கிறார்கள். இடது வலது அரசியல்கட்சிகளும் வாக்குவங்கிக்காகவும் பணத்துக்ககாவும் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். அதுவே அனைவர் கண்ணுக்கும் தெரிகிறது. திட்டவட்டமாக அது பிரிவினை நோக்கை நோக்கிக் கொண்டுசெல்கிறது.

இதைத்தவிர தென்னிந்தியாவில் உள்ள மொழிவெறி பிளவுச்சக்திகள், வடகிழக்கில் செயல்படும் இனவெறி பிளவுச்சக்திகள் அப்பட்டமான வெறுப்புக்குரலாகவே ஒலிக்கிறார்கள். இந்தியாவின் இயல்பான பன்மைத்தன்மைக்கு எதிரான தாக்குதல்களை நிகழ்த்துகிறார்கள். நம்பமுடியாத அளவுக்கு இவர்களுக்கு நிதிவசதி உள்ளது. அதை துப்பறிய வேண்டியதே இல்லை. இந்தப் பிளவுவாதம் பேசுபவர்களுக்கு மக்களாதரவே இருப்பதில்லை. ஒரு தொகுதியில் வைப்புத்தொகையை மீட்க இவர்களால் முடியாது. ஆனால் இவர்கள் அனைவருமே மிகவசதியான உயர்மட்ட வாழ்க்கையை வாழமுடிகிறது.

இச்சூழலில் ஒரு சமநிலைச்சிந்தனையாளன் செய்யவேண்டியதென்ன என்பது தெளிவாகவே இருக்கிறது. அது இந்துத்துவமோ இடதுசாரித்துவமோ ஃபாசிசமோ ஒன்றும் அல்ல. பிளவுநோக்குகள் அனைத்துக்கும் எதிரான சமரச நோக்குதான். எல்லா வெறுப்பியல்களுக்கும் எதிரான சமரசமில்லாத போர்தான். அதன் அடையாளம் காந்தி.

ஒவ்வொரு பிளவுநோக்கும் யாரோ ஒரு கும்பலை அதிகாரத்தை நோக்கி தள்ளும் நோக்கம் கொண்டதாக உள்ளது. ‘அவர்கள் நம்மை அழிக்கிறார்கள் ஆகவே இவர்களை அதிகாரமேற்றுவோம்’ என்பதே பிளவுநோக்குக் கொண்டவர்களின் கூக்குரல். இவர்கள் வந்தால் மட்டும் நம்முடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?

யோசித்துப்பாருங்கள். இந்துத்துவர் மத்தியின் ஆட்சியைப் பிடித்தால் எல்லாம் சரியாகிவிடுமா? வாஜ்பாய் தன் மருமகன் மூலம் அளித்த பொற்கால ஆட்சியைப்போல? இல்லை வகாபியர் இஸ்லாமிய ஆட்சியை அமைத்தால் இங்கே சொர்க்கம் வருமா, தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் போல? இல்லை மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் விடிவு வருமா, நேபாளத்தின் பொன்னாட்சியைப்போல? தமிழ்த்தேசியம் அமைத்தால் உதயநிதி ஸ்டாலினின் மகன் குறுநில மன்னராவார். அது போதுமா?

இங்கே இன்றுள்ள மக்களனைவரும் கூடிவாழக்கூடிய, தங்களுடைய பிரச்சினைகளை சமரசம் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடிய, தங்களுக்கு எதிரான ஆக்ரமிப்புகளை சேர்ந்து எதிர்க்கக்கூடிய, தங்கள் வளங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் மட்டுமே கொஞ்சம்கொஞ்சமாக தீர்வை நோக்கிச்செல்லும். ஓர் ஆக்கபூர்வமான ஜனநாயகமே அதற்கான வழியாகவும் இருக்கும். அதற்கு முதற்பெரும் தடை இந்தப்பிரிவினை அரசியலே.

நம்முடைய எதிர்காலச் சமூகம் பற்றிய கனவு ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும். நம் இயற்கை வளங்களை அழிக்காத, நம்முடைய கிராமங்கள் தன்னிறைவுடன் வாழக்கூடிய அதிகாரப்பகிர்வு கொண்ட, நம்முடைய நசிவு மனப்போக்குகளில் இருந்து விடுபட்ட ஒரு சமூகத்துக்காக நாம் கனவு காணலாம். கார்த்திக், இன்றைவிட பலமடங்கு சோர்வளிக்கக்கூடிய சூழலில் இந்தப்பெருங்கனவை காந்தி நமக்களித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதை அறிய முயலுங்கள். கண்களை மூடிக்கொண்டு பின்பக்கமாகத் திரும்புவதில் பொருளில்லை. மரபின் நூல்களை நாம் இன்று வாழ்வதற்காகவே நாம் பயன்படுத்தவேண்டும். இன்றிலிருந்து தப்பிச்செல்வதற்காக அல்ல.

இந்த சமரசத்தின் அரசியல், பிளவுக்கு எதிரான அரசியல், கொஞ்சம் அபாயகரமானது. இங்கே பிளவும் வெறுப்பும் பேசும் எல்லா தரப்புக்கும் நீங்கள் எதிரியாக ஆகநேரும். இடதுசாரிகள் உங்களை வலதுசாரி என்பார்கள். வலதுசாரிகள் உங்களை இடதுசாரி என்பார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் எதிர்ப்பதனால் வெறுமே விளம்பரத்துக்காக எதிர்ப்பவர் என்று மிச்சபேர் சொல்வார்கள்.

அத்துடன் இளமையில் இந்த அரசியலுக்கு பெரிய ‘கிளாமர்’ இல்லை. வலதுசாரியோ இடதுசாரியோ தீவிரமானவராக காட்டிக்கொள்ளவேண்டிய அரசியலே இளைஞர்களுக்குப் பிரியமானது. ‘மச்சான் அடிச்சு நொறுக்கணும்டா’ என்று பேசினால்தான் ஒரு கெத்து. இந்த அரசியல் முதிரா இளமையில் கொஞ்சம் கிழட்டு அரசியல் என்று கூடத் தோன்றும்.

ஆனாலும் தனியாக நிற்பதில் ஒரு பெரிய சுயதிருப்தி உண்டு. முயன்றுபாருங்கள்.

ஜெ


காந்தி கிலாபத் தேசியம்


காந்தியின் தேசியம்


சுயசிந்தனை

எனது இந்தியா

முந்தைய கட்டுரைஇலக்கணம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆய்வுலகின் அன்னியக்கரங்கள்