எஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்

ஜெயமோகன்,

தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை’ நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வளைத் தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்’ பற்றிய அந்தக் கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது’ பிழையான நினவு’ க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒரு வார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும் நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1996இல் வெளிவந்தபோதே, இந்தக் கருத்தை நீங்கள் சொல்லிவந்ததாக நீங்களே கூறியுள்ளீர்கள்.

அதாவது உங்கள் ‘ நினைவுப் பிழை’, ஏறத்தாழ பதினாறு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்பதுதானே இதற்கு அர்த்தம்?

மேலும், அன்னிய நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதுவர்கள் என்று 1996இலேயே உங்களுக்குத் தெரிந்திருக்குமானால், அப்படிப்பட்டவர்களின் நூலை வெளியிடக்கூடாது என்று என் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் நீங்கள் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?

உங்களது அப்பட்டமான,அபாண்டமான பொய் அம்பலப்பட்ட பிறகே, என்னிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

தோழர்கள் எஸ்விஆரும் வ.கீதாவும் எழுதிய ‘Towards a Non-Brahmin Movement:From Periyar to Iyoothee Thass’ என்னும் நூல், அவர்கள் இருவரும் தமிழில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமே தவிர வேறு அல்ல என்று கூறியுள்ளதன் மூலம், அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைக்கூட நீங்கள் படித்ததில்லை என்பதை அம்பலப்படுத்திக் கொண்டீrர்கள்.

தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர் பற்றிய எனது மதிப்பீடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த விஷயம்.

ஆனால், விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளிலிருந்தும் அதன் நோக்கங்களிலிருந்தும் இந்த இருவரையும் பிரித்துப் பார்க்க நான் மறுக்கிறேன். இது என் உரிமை; கடமை.

பெரியாரியம்,அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும், எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம்,அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்எஸ்எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் பரிவாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் எத்தனை அன்னிய நிதியில் திளைக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் ஏதேனும் ‘ஆராய்ச்சி’ செய்ததுண்டா?

உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

பெ.சிவஞானம் (விடியல் சிவா)

கோவை,24.06.2012

பெருமதிப்புக்குரிய விடியல் சிவா,

எஸ்.வி.ராஜதுரையின் நூல்களால் அல்ல விடியல் நினைக்கப்படப்போவது. அவை உள்நோக்கம் கொண்ட, திரிபுகள் கொண்ட நூல்கள். இந்தியவரலாற்றின்மீதும் இந்தியவரலாற்றுநாயகர்கள் மீதும் ஏகாதிபத்திய வரலாற்றுத்திரிப்பாளர்களின் அரசியல் நோக்கத்துக்கேற்ப பொய்களைச் சுமத்தக்கூடியவை

விடியலின் வலிமை அது வெளியிட்ட முக்கியமான மொழியாக்கங்கள்தான் . தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் ‘இந்திய தத்துவமரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ முதல் சமீபத்தில் வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு வரையிலான ஆக்கங்களால் விடியல் தமிழ்ச்சிந்தனை மரபில் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.அதற்காகவே நீங்கள் பெருமைகொள்ளவேண்டும். இதை விடியலின் நூல்களை எல்லாம் வாங்கிய வாசகனாக நான் சொல்லலாமில்லையா?

எஸ்.வி.ராஜதுரையின் நூல் வெளிவந்தபோது நான் எழுதிய குறிப்புக்குப் பின்னர் கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் ஓடிவிட்டன. ஆகவே நூலை நினைவுகூர்வதில் பிழை ஏற்பட்டுவிட்டது. அதற்கான காரணத்தையும் சொல்லிவிட்டேன். ஆகவே தான் உங்களை வருத்தம்கொள்ளவைக்க நேர்ந்தது. உடனடியாக நான் பதிவை திருத்தியும் விட்டேன். இதை தெளிவாகவே விளக்கியிருக்கிறேன்.

பெரியார் ’பெரியார்;சுயமரியாதை சமதர்மம்’ நூலின் மொழியாக்கம்தான் ஆங்கில நூல் என்று சொன்னதாக புரிந்துகொண்டுவிட்டிருக்கிறீர்கள். அந்த நூலுக்குச் செய்த அதே ஆய்வுத்தரவுகளைக் கொண்டு எழுதிய நூல் Towards a Non-Brahmin Movement:From Periyar to Iyoothee Thass. ஆனால் ஆங்கிலநூலுக்கு WACC ஆய்வுக்கு உதவியதாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதே நான் சொன்னது.

இந்தவகை குறுக்குக்கேள்வி விவாதங்களால் எந்த பயனும் இல்லை. நான் என் தரப்பை தெளிவுபடுத்திவிட்டேன்.

நிற்க, எஸ்.வி.ராஜதுரை அவர்களின் தன்னார்வக்குழு தொடர்புகளைப்பற்றியும் அவர் அங்கே நிதிபெற்று எழுதுகிறார் என்றும் நான் சொல்ல ஆரம்பிக்கவில்லை. நீங்கள் காட்டவிரும்புவதுபோல இந்துத்துவ அமைப்புகளும் சொல்லவில்லை. அந்தக்குற்றச்சாட்டை மிக வலுவாக முன்வைத்தவர்கள் நீங்கள் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த இடதுசாரிக்குழுக்கள்தான்.

குறிப்பாக புதியஜனநாயகம் குழு. புதியஜனநாயகம் மிகத்திட்டவட்டமாக, தெளிவான வார்த்தைகளில், எஸ்.வி.ராஜதுரையின் படத்துடன், அவர் தன்னார்வக்குழுக்களின் நிதியுதவியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டி குறைந்தபட்சம் இரு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. நான் வாசித்திருக்கிறேன்.புதியஜனநாயகம் அக்கட்டுரையை நான் எழுதவந்த அக்காலகட்டத்திலேயே வெளியிட்டுவிட்டது. எஸ்.வி.ராஜதுரையைப்பற்றி இன்று மார்க்ஸியனல்லாத நான் பெருமதிப்பு கொண்டிருந்த அக்காலகட்டத்தில் எனக்கு மிகுந்த சங்கடத்தை அளித்தது அச்செய்தி

நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் கேட்டுத்தெளிவுபடுத்தினேன். புதியஜனநாயகம் 1988 ஜூலை 16-31 இதழில் ஆர்.கெ என்பவர் எழுதிய கட்டுரை அது. அதில் எஸ்.வி.ராஜதுரையின் .சிந்தனைகளை அவருக்கு நிதியளிக்கும் தன்னார்வக்குழுக்கள் எப்படி வடிவமைக்கின்றன என்று எழுதியிருந்தார். எஸ்.வி.ராஜதுரையின் புகைப்படமும் இருந்தது. இதழை அனுப்பும்படி கோரியிருக்கிறேன். எஸ்.வி.ராஜதுரை, இங்குலாப் ஆகிய இருவரைப்பற்றியும் இக்குற்றச்சாட்டு அக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

அந்தக்கட்டுரைக்கு எஸ்.வி.ராஜதுரை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மானநஷ்டவழக்கு ஏதும் போடவுமில்லை. ஆனால் இன்னொரு நூலில் தான் தன்னார்வக்குழுக்களுக்காக வேலைசெய்ததை ஒப்புக்கொண்டு தன்னார்வக்குழுவின் பெயரையும் சொல்கிறார். மீண்டும் நினைவுப்பிழையாகச் சொல்லி மாட்டிக்கொள்ளவிரும்பவில்லை. புலவர் கலியபெருமாள் அவர்களைப்பற்றிய ஒரு நூலின் முன்னுரையில் என நினைக்கிறேன். கோவை ஈஸ்வரனின் முன்னுரையும் அந்நூலில் உண்டு.

அந்நூலையும் தேடி எடுக்கச் சொல்லியிருக்கிறேன். அந்த கட்டுரையை தேடி எடுத்து அந்த அமைப்பின் பின்னணியை முடிந்தவரை விசாரித்து எழுதுகிறேன்.இதையெல்லாம் வைத்திருந்து தேவைப்பட்டபோது சட்டென்று எடுத்துப்போடுவதெல்லாம் ஆய்வாளர்களால்தான் முடியும். என்னைப்போன்றவர்கள் இதைச்செய்ய ஆரம்பித்தால் புனைகதை எழுதமுடியாது. நான் என் சொந்தச்சிறுகதைகளையே ஊர் ஊராக கடிதமெழுதி அனுப்பி சேர்த்து தொகுப்பாக்குபவன். ஆகவே மன்னிக்கவும்.

நீங்கள் எஸ்.வி.ராஜதுரையின் நூல்களை வெளியிட ஆரம்பித்தபோதே இக்குற்றச்சாட்டு மிக வலுவாக நீங்கள் நன்கறிந்த இதழ்களில் எழுதப்பட்டிருந்தது. அதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. ஆகவே தயவுசெய்து நான் ஏதோ புதியதாக அவதூறுசெய்ய ஆரம்பித்திருப்பதாகச் சொல்லாதீர்கள். அது எப்போதுமுள்ள ஆதாரபூர்வக் குற்றச்சாட்டு மட்டுமே.

தன்னார்வக்குழுக்களின் நிதி பெற்று எழுதியவர் எஸ்.வி.ராஜதுரை என முதலில் குற்றம்சாட்டியவர்கள் இடதுசாரிக்குழுக்களே. ஆனால்கூட அதை நான் பொருட்படுத்தவில்லை. அவரது சொந்த நூலிலேயே அக்குறிப்பை அவர் கொடுத்தபோது கூட பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் WACC யின் உள்ளே உள்ள ஒருவர் சொன்னபின்னர்தான் அதை கணக்கில் கொள்ள ஆரம்பித்தேன்.

ஆனால் தொண்ணூற்றிஏழில் அந்த அமைப்பின் பெயரைக்கூட நினைவில் வைக்கத் தோன்றவில்லை. ஏனென்றால் அன்று உலகமயமாக்கல் ஆரம்பித்திருந்தது. அதைப்பற்றிய புளகாங்கிதங்கள் மட்டுமே எனக்கிருந்தன. கீழைநாடுகளின் பண்பாட்டாய்வில், வரலாற்றாய்வில், ஊடகங்களில் ஊடுருவும் பிரம்மாண்டமான ஏகாதிபத்திய – மதப்பரப்பு நிறுவனங்களைப்பற்றி எந்த பிரக்ஞையும் என்னிடமில்லை. அதைப்பற்றி எவரேனும் சொல்லியிருந்தால்கூட வெறும் சதிக்கதை என்றே சொல்லியிருப்பேன்

இந்த விழிப்புணர்வு வந்ததே இணையம் வந்தபின்னர்தான். இணையம் எங்கோ எவரோ சொல்லும் உதிரித்தகவல்களை கூட நமக்கு அளிக்கிறது. சம்பந்தமில்லாத செய்திகளை நாம் இணைத்துக்கொள்ள வழிவகைசெய்கிறது. தொண்ணூறுகளில் ஒருவர் இந்த அமைப்புகளுக்குள் உளவாளியாக நுழைந்தாலன்றி ஒரு துளி தகவலைக்கூட அறியமுடியாது. இன்று உதிரியாகவேனும் தகவல்கள் கிடைக்கின்றன

மிகச்சில மேலோட்டமான தகவல்கள்தான். ஆனால் இவை பனிமலையின் நுனியை நமக்குக் காட்டித்தருகின்றன. ஆகவேதான் போகிறபோக்கில் அன்று எஸ்.வி.ராஜதுரையின் பெரியாரிய ஆய்வுகள் கிறித்தவத் தன்னார்வக்குழுக்களின் திட்டங்களை ஒட்டியவை என்று எழுதிச்சென்றவன் இப்போது இத்தனை தீவிரமாக எழுதுகிறேன்.

நான் சொல்வது அப்பட்டமான சில தகவல்கள். உண்மையில் எதுவுமே புதியவை அல்ல. நான் அவற்றை இணைத்துக்காட்டுகிறேன், அவ்வளவுதான். இந்தியப் பண்பாட்டையும் அரசியலையும் மார்க்ஸிய நோக்கில் விளக்க எதற்காக ஏகாதிபத்திய கிறித்தவ அமைப்புகளின் ‘உதவி’? என்பதே கேள்வி. என் கேள்வி அல்ல, இடதுசாரிக்குழுக்களால் எழுப்பப்பட்ட கேள்வி. நான் அதை வழிமொழிகிறேன்

அதை மழுப்பிக்கொள்ள இந்துத்துவ குற்றச்சாட்டை மட்டுமே உங்களால் முன்வைக்கமுடியும் என்று நானும் அறிவேன். எஸ்.வி.ராஜதுரையும் அதைத்தான் சொல்வார். அப்படிச் சொல்வதே பதிலேதும் இல்லை என்ற வாக்குமூலம்தான்

ஜெ


ஊடகங்கள் அரசியல்

முந்தைய கட்டுரைஞாநி பற்றி…
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை கடிதம்