மனமெனும் நோய்..

ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்! என் பள்ளிக்காலங்களில் நான் தமிழில் சிறந்து விளங்கியிருந்தபோதும், பணத்தைத் தேடி அலைந்த இந்த இடைப்பட்டக் காலங்களில் தமிழில் எழுதுவது மிகவும் குறைந்து விட்டது. எனவே இந்த கடிதத்தில் இருக்கும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் கடந்த இரண்டு வருடங்களாகவே உங்கள் எழுத்துக்களை இந்த வலைமனை மூலம் வாசித்து வந்திருக்கிறேன். முதலில் சற்று சிரமமாக இருந்த போதும், தொடர்ந்து வாசித்ததில் உங்கள் எழுத்தின் பொருளும், நடையும் பிடித்து விட்டது.

நீங்கள் அவ்வபோது எழுதி வரும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் மிகவும் பயனளிப்பவையாக உள்ளன. இம்மாதிரியான மாற்று மருத்துவத்தில் எனக்குள்ள அனுபவத்தை சொல்கிறேன்.

எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு உடல் சம்பந்தமான பிரச்சனை வர ஆரம்பித்தது. எனது முதுகுத்தண்டின் கீழ் முனையில், ஆசன வாயிலுக்கு அருகில் சிறு நெருடலை உணர ஆரம்பித்தேன். உட்காரும் போதும், தூக்கத்தில் புரண்டு படுக்கும் போதும் அந்த நெருடலை என்னால் உணர முடிந்தது. வலியில்லை. ஒரு சில வாரங்களுக்கு பின்னர் அந்த நெருடல் அதிகரித்த மாதிரியும் ஒரு சிறு வலி உணர்ந்த மாதிரியும் இருந்தது. ஒருவேளை நான் தொடர்ந்து அதை பற்றியே யோசித்து கொண்டிருப்பதால் தான் அவ்வாறு தோன்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் சில நாட்களில் அந்த நெருடலுடன் கொஞ்சம் வலியும் சேர்ந்து கொண்டு என்னை பீதியடைய வைத்தன. வலி சிறிய அளவில் தான் இருந்த போதும், அது தோன்றும் இடம் மிக முக்கியமானது அல்லவா? இருக்கவே இருக்கிறது சர்வரோக நிவாரணி – இணையம்! கூகுளில் தேட ஆரம்பித்தேன்..

அவ்வாறு செய்ததற்கு என்னை நானே நொந்தும் கொண்டேன். அப்பப்பா எத்தனை விதமான வியாதிகள், பிரச்சனைகள்.. எல்லாமே எனக்கு இருக்கின்ற மாதிரி ஒரு கலக்கம். இந்த வலி பெரிதாக்கி என்னை செயலிழக்கச் செய்ய போகிறது என்று உறுதியாக நம்பினேன். மேலும் கலக்கம், குழப்பம். ஒரு வழியாக முடிவெடுத்து அலோபதி டாக்டரிடம் சென்றேன்..

அவர் என்னை பரிசோதித்தார், x-ray எடுத்துப் பார்த்தார். x-ray யில் எதுவும் வித்தியாசமாக இல்லை என்றும், நான் தொடர்ந்து உட்கார்ந்தே வேலை பார்க்கும் பணியில் இருப்பதால் வரும் பிரச்சனையை தான் என்றும் சொன்னார். மருந்து எழுதிக் குடுத்தார். ஒன்று வலியைக் குறைப்பதற்கு, மற்றொன்று எலும்பை உறுதியாக்குவதற்கு. சில நாட்களில் உறுத்தலும் வலியும் குறைந்தது. ஆனால் வலி மாத்திரையை நிறுத்தியவுடன் திரும்ப வந்தது. இது நிரந்தர தீர்வு அல்ல என்று உணர்ந்தேன். வேறு மருத்துவரிடம் சென்றேன். அவர் மிகப் பரிவுடன் விசாரித்தார். இதற்கு மருந்து அவசியம் இல்லை என்றும், ஆனால் 6 மாதங்களுக்கு நான் உறுதியான தரையில் உட்காரக் கூடாது என்றும், அலுவலகத்திலும், காரிலும் doughnut போன்ற நடுவில் ஓட்டை உள்ள தலையணை மீதே அமர வேண்டும் என்றும் கூறினார். எனக்கு சிறிது நம்பிக்கை வந்தது, இருந்தாலும் என் மனமென்னும் குரங்கு இதற்கு விரைவான தீர்வு இல்லையா என்று தேட ஆரம்பித்தது. அதுவும் இல்லாமல், அந்த doughnut மெத்தை பிறர் முன்னிலையில் உபயோகிக்கவும் கூச்சமாக இருந்தது. எனவே அதை வாங்கவே இல்லை. மீண்டும் கூகுளில் தேடல்…

இரண்டாவதாக நான் பார்த்த டாக்டர் எனக்கு வந்திருப்பது coccyxdinia என்ற உபாதையின் தொடக்கம் என்று சொல்லியிருந்தார். அதை பற்றி கூகுளில் தேடினேன்.. மீண்டும் பயமுறுத்தும் தகவல்கள். இந்த நோயை பற்றி மட்டுமே விவாதிக்கும் forums வாசிக்க ஆரம்பித்தேன். அலோபதி மருத்துவத்தில் யாருமே நிரந்தர தீர்வு அடைந்த மாதிரி தெரியவில்லை. இந்த வலியை சமாளித்து வாழவே பழகிக் கொண்டிருந்தனர். பல முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தவர்கள் உட்பட அனைவருக்கும் இதே நிலை..

எல்லார் மனதிலும் இனம் புரியாத கோபம். ஏன் எனக்கு? ஏன் அந்த இடத்தில்? இது ஒரு மிக தர்மசங்கடமான வலி, உபாதை.. மனிதனை விரைவில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும் என்பது நான் அனுபவித்து அறிந்த உண்மை.. இந்தனைக்கும் எனக்கு இருந்தது ஒன்றும் பொறுக்க முடியாத வலி ஒன்றும் இல்லை.

ஒரு நாள் இந்த வலியில் இருந்து விடுதலை பெற்ற இணைய நண்பர் ஒருவர் மூலம் Dr. Sarno அறிமுகம் ஆனார். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மருத்துவர். தன்னிடம் வரும் நோயாளிகள் அலோபதி மருதவத்தின் மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் முற்றிலும் குணம் அடைபவர்கள் மிக சிலரே என்று உணர்ந்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு முக்கியமான விடை கண்டறிந்தவர். அதன் மூலம் அநேகரை குணப்படுத்தியும் வருகிறார்.

இவருடைய சிகிச்சை முறையில் மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை எதற்கும் இடம் இல்லை. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் பற்றிய அவரின் புத்தகங்களை படித்தாலே குணம் அடைந்து விடுகின்றனர் பலர். இதில் அநேகர் படுத்த படுக்கையாக இருந்தவர்கள், ஒரே வாரத்தில் ஓடி விளையாடும் அளவிற்கு என்பது தான் ஆச்சர்யம்! இந்த சிகிச்சை முறைக்கு Mindbody Medicine என்று பெயர்.

எனக்கு நம்பிக்கை இல்லை. Amazon.com சென்று இவரின் நூல்களுக்கு வாசகர்கள் எழுதி இருக்கும் testimonials படித்து பார்த்தேன். நூற்றுகணக்கில்! அனைத்தும் இவரின் சிகிச்சையினால் முழு குணம் அடைந்தவர்கள்! ஒரு வேலை இவரின் ஆட்களே இப்படி எழுதி இருப்பார்களோ? ஏதோ மோசடி வேலையோ என்று எண்ணத் தோன்றியது.. ஒருவர் எழுதி இருந்தார், “இதில் யாருக்கும் ஒரு நம்பிக்கை இன்மை தோன்றுவது இயல்புதான். ஆனால் இப்படி யோசித்து பாருங்கள்.. மருந்து இல்லை, மாத்திரை இல்லை, அறுவை சிகிச்சை இல்லை, $10 புத்தகம்.. படித்துதான் பாருங்களேன், இதில் நீங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லையே.. ” என்று.

வாங்கினேன், படித்தேன், குணம் பெற்றேன்! இரண்டே நாட்களில்! என்ன நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.. இந்த புத்தகத்தின் எளிமைப்படுத்தப்பட்ட சாராம்சம் இங்கே தருகிறேன்..

மனிதன் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் பொழுது, அவனது மூளை அவனை திசை திரும்பப் செய்யும் சித்து வேலைதான் இந்த இனம் புரியாத வலி. மூளை இந்த நாடகத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறது? எலும்பு மூட்டுகளின் அருகில் இருக்கும் தசைகளுக்கு செல்லும் பிராணவாயு (oxygen) -வின் அளவைக் குறைப்பதன் மூலம்! இவ்வாறு குறைவதனால் அந்த தசைகள் வலுவிழந்து வலியைத் தோற்றுவிக்கின்றன. நான் உட்பட பலர் இது எலும்பில் உள்ள வலி என்று ஏமாந்து விடுகிறோம். பயந்தும் போகிறோம். ஆனால் இது சாதரணமாக தோன்றும் தசை பிடிப்பு.. டாக்டர்கள் பரிசோதிக்கும் போது எலும்போடு இந்த தசைகள் அழுத்தப்படும் போது, சிலருக்கு உயிரே போகும் வலி ஏற்படுகிறது.. டாக்டரும் இது எலும்பில் உள்ள குறைபாடு என்று அதற்கான அறுவை சிகிச்சை வரை போய்விடுவதால் தான் இந்த நிறை வேறாத பிரச்சனை.

சரி, இதற்க்கு என்ன தீர்வு! மிக சுலபம்… ‘knowledge therapy’ – புரிதல் வைத்தியம் என்று சொல்லலாமா? அதாவது, இந்த வலி நம் மன உளைச்சலளால் தான் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தாலே அது போய் விடுகிறது.. இது நான் அனுபவித்து அறிந்த உண்மை… இந்த புரிதல் இருந்தாலே மூளையின் இந்த சித்து வேலை எடுபடாது. இன்னும் ஒன்றை நாம் உணர வேண்டும்.. இந்த வலி தீர்வதற்கு, நம் மன உளைச்சல் தீர வேண்டும் என்பது இல்லை! காரணம் அதுவே என்று உணர்ந்தாலே போதும்!

இந்த வலி உடம்பின் எந்த பாகத்திலும் வரலாம்.. எனக்கு வந்தது ஆசன வாயில் அருகில். இப்பொழுது முற்றிலுமாக இல்லை! நான் இந்த வலி ஏற்பட்ட சமயத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தது உண்மை. அதுவே எனக்கு ஏற்பட்ட வலிக்குக் காரணம் என்பதை என்னுடைய மனம் முதலில் நம்பவில்லை. ஆனால் Dr. Sarno -வின் நூல்களில் அவரிடம் குணமான பலரின் கதை என் அனுபவத்தை ஒட்டி இருந்தது என் மனதை மாற்றியது. இந்த சிகிச்சை முறையில் முக்கியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று, புரிதல். இரண்டு, நம்பிக்கை. இந்த சிகிச்சை முறையின் மீதான நம்பிக்கை. இது மிகவும் அவசியம். இந்த நம்பிக்கை இல்லை என்றால் நம் மூளை நம்மை கவிழ்த்தி விடும். இந்த புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பலனளிக்கவில்லை. வேடிக்கையான விந்தைதான். என் அனுபவம் என்னை நம்ப வைத்திருக்கிறது!

பல வருடங்களாக முதுகு வலியினால் படுத்த படுக்கையாக இருந்த பலர் ஒரே வாரத்தில் எழுந்து நடமாடிய அதிசயமும் உண்மை! இதில் சிலருக்கு x-ray களில் எதோ குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதன் பின்னரும் வலியில் அவதிப்பட்டவர்கள்!

நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. அந்த இணைய நண்பர் கூறியது போல, முதுகு வலி, மூட்டு வலி, இன்ன பிற இனம் புரியாத வலிகள் உள்ளவர்கள் இவரின் நூல்களை வாசித்து பார்க்கலாம்.. இழப்பதற்கு என்ன இருக்கிறது? அவரின் நூல்கள் கூகிளில் தேடி, அமேசான் மூலமாகவோ அல்லது ebook வடிவத்திலோ படித்து பார்க்கலாம். இந்த கடிதத்தை உங்கள் வலைமனையில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஒருவரேனும் தங்கள் வலியில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றால் எனக்கு அதுவே மகிழ்ச்சி!

நவீன மருத்துவத்தின் எல்லைகளை எனக்கு உணர்த்திய அனுபவம் இது.. இன்னும் எழுத நினைக்கிறேன்.. உங்கள் கருத்தை அறிந்த பின்பு எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் ஒன்று உண்மை, நம் உடல் உபாதைகளுக்கான விடைகள் நமக்குள்ளும் நம் செயல்களுக்குள்ளும் இருக்கின்றன என எண்ணத் தோன்றுகிறது.. நீங்கள் கூறியது போல நம் மனத்தை ஆழ்ந்து கவனித்தாலே பல வியாதிகள் குணமடையும் போல!

நன்றி!
சதீஷ்

அன்புள்ள சதீஷ்,

நெருக்கடிகளில் மனம் என்ன செய்யும் என்பதைப்பற்றி நித்ய சைதன்ய யதியின் மாணவரும் ஆயுர்வேத மருத்துவருமான ஒருவர் ஒருமுறை குருகுலத்தில் உரையாற்றினார். பல உதாரனங்கள் அளித்தார். முதல் உதாரணம், நீர். தடைசெய்யப்படும் நீர் அந்த தடையை அழுத்தும். பக்கவாட்டில் இடம் தேடும். கிடைத்த சந்து வழியாக பாய்ந்தோடும். ஓர் உதாரணம் சொன்னார். வணிக நெருக்கடிகளில் சிக்கியவர்கள் பாலியல் மீறல்களை நோக்கிச் செல்கிரார்கள். அந்த திசைமாற்றம் அவர்கலை ஒருவகையில் காக்கிரது

ஒரு நெருக்கடியில் சிக்கியவர்கள் அதர்கினையான இன்னொரு நெருகக்டியை உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்டச்சிக்கல் ஒன்றில் மாட்டிய ஒருவர் சில குற்ரச்செயல்களில் ஈடுபட்டதை அவர் சொன்னார். இஅந்த பதற்றம் அந்தப்பதற்றத்தை சமன்செய்தது. இந்தப்பதற்றம் இவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகையால் முதல் பதற்றத்தைவிட வசதியானது என்று உணர்ந்தார். இதை அவர் வெப்பநோயுடன் ஒப்பிட்டார். உஷ்ணம் உஷ்ணேன சாந்தி என ஒரு சொல்லாட்சி உன்டு

ஒரு இக்கட்டில் இருந்து தப்பிப்பதற்காக மனம் தன்னை பலவாக பிரித்துக்கொள்கிறது. தன்னைத்தானே திசை திருப்பிக் கொள்கிறது. பெரும்பாலான மனச்சோர்வுகள் ஆழமான குற்றவுணர்ச்சியில் இருந்து பிறப்பவை என்ற் சொன்னார். தன்னுடைய பாவ உனர்வு மனச்சோர்வாக மாறி அந்த மனிதரை வதைக்கிறது. மனச்சோர்வுக்கு அவர் பல காரணங்கள் சொல்வார், உண்மையான காரணத்தை வரது மனமே ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும்.

பெரும்பாலான தலைவலிகள் மனச்சோர்வின் விளைவுகளாக இருக்கும். மனம் எதையோ தன்னிடம் இருந்தே மறைக்க விரும்புகிறது என்று அதற்குப்பொருல். கணிசமான வயிறு உபாதைகள் -பசியின்மை அமிலத்தன்மை- மனம் சார்ந்தவையே. உடல்பயிற்சி இடமாற்றம் பயணம் போன்ரவை பல நோய்களை எலிதாகக் குணப்படுத்திவிடுவதைக் காணலாம்.

உங்கள் கடிதம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஆனால் நிறைய சிந்திக்க வைத்தது

ஜெ

முந்தைய கட்டுரைசேது சொக்கலிங்கம்
அடுத்த கட்டுரைவிளம்பரங்கள்