ஞாநி பற்றி…

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் ஞாநியின் ‘நேர்மை’ பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். அவர் சமீபத்தில் இளையராஜா பற்றி அவதூறாக எழுதியிருந்தது தெரியுமா? அதற்குப் பலர் ஆதாரபூர்வமாக பதிலளித்தும் அதன்பின்னரும் கூட அவர் தன்னுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இதுதானா நேர்மை? இளையராஜா பற்றி உயர்வாக எழுதிவரும் நீங்கள் இந்த விஷயத்தில் பதில் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போது உங்கள் நேர்மையும் தெரிகிறது.

சரவணன் மெய்யப்பன்

ஞாநி

அன்புள்ள சரவணன்,

உங்கள் கடிதத்தில் சொல்லும் விஷயங்களை நான் முன்னரே கவனித்திருக்கிறேன். நான் இளையராஜாவை ஒரு மேதையாக, மாமனிதராக நினைப்பவன். அவருடன் செலவழித்த நேரங்கள் ஆசியளிக்கப்பட்டவை என்று நினைவில் கொண்டவன். தனிப்பட்ட அனுபவத்தில் ஞாநி இளையராஜா பற்றிச் சொல்லும் விஷயங்கள் எல்லாமே பிழையானவை என நான் அறிவேன்.

ஆனால் ஞாநி அப்படி நினைக்கிறார். ஆதாரங்கள் சொல்லப்பட்டாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அது பிழையானதே. பெரும்பாலான சிந்தனையாளர்களுக்கு, இதழாளர்களுக்கு இத்தகைய முன்முடிவுகள் பல காரணங்களால் உருவாகி நீடிக்கின்றன. சிலவற்றுக்கு அவர்கள் காரணம் சொல்லமுடியும். சிலவற்றை அவர்களுடைய ஆழ்மனமே தீர்மானிக்கிறது. ஞாநி அண்ணா ஹசாரே பற்றி சொன்னதும் இத்தகைய முன்முடிவுதான் என நான் நினைக்கிறேன்.

ஆனால் இந்தப் பிரச்சினைக்காக ஞாநியை பொய்யன் அயோக்கியன் என்ற வகையில் எல்லாம் எழுதப்பட்டதை நான் மிகத் தரம்தாழ்ந்த செயலாகவே எண்ணுவேன். அதை இளையராஜாவிடம் சொன்னாலும் அப்படித்தான் சொல்வார்.

Fallacy என்ற சொல் தத்துவத்தில் முக்கியமானது. அதை பிழைப்புரிதல் என்று தமிழாக்கம் செய்யலாம். ஒரு ஒட்டுமொத்த சிந்தனையின் ஒரு பகுதியாக இயல்பாக உருவாகிவரும் பிழை என்று அதை தத்துவம் சொல்லும். பலசமயம் அந்த பார்வைக்கோணத்தின் பிரிக்கமுடியாத பகுதியாகவே அந்தப்பிழை இருக்கும். அந்தப்பிழையைக்கொண்டு அப்பார்வையை நிராகரிக்கக் கூடாது. அது தர்க்கபூர்வமானதல்ல. தத்துவத்தின் தர்க்கம் தெரியாதவர்களே அதைச்செய்வார்கள். அந்தத் தரப்பின் ஒட்டுமொத்தத் தர்க்கத்தையே எதிர்த்தரப்பு எதிர்கொள்ளவேண்டும்.

அரசியல்செயல்பாட்டாளர்களின் fallacyஎன்பது எப்போதும் உறுதியான முன்முடிவுதான். உறுதியான நம்பிக்கைகள் இல்லாமல் அவர்களால் செயல்பட முடியாது. அந்த நம்பிக்கையும் அதன் விளைவான உணர்ச்சிவேகமுமே அவர்களின் ஆற்றலை உருவாக்குகின்றன. சமூகப்போராளிகளின் அந்த மனநிலையை வெளியே இருந்து மதிப்பிடமுடியாது.

உதாரணமாக என்னால் எந்த அமைப்பிலும் எந்தக் கொள்கையிலும் திடமாக ஊன்றி நின்று செயல்பட முடியாது. என் இயல்பு எதையும் ஐயப்படுவதும் உள்ளே சென்று பரிசீலிப்பதும்தான். ஒற்றைப்படையான உணர்ச்சிவேகம் என்பதை எப்போதுமே நான் விலக்க முயல்வேன். ஒரு நிலைப்பாடு எடுக்க நேர்ந்தால்கூட அது சரிதானா, அதற்கு ஏதேனும் மறுபக்கம் இருக்கக்கூடுமா என்று பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.

இக்காரணத்தால்தான் எழுத்தாளர்களுக்கும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும் எப்போதும் ஒரு முரண்பாடு உள்ளது. எழுத்தாளர்களைப் பெரும்பாலும் சந்தேகவாதிகள், தனிமனிதவாதிகள், கோழைகள் என்று சமூகச்செயல்பாட்டாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். எழுத்தாளர்கள் சமூகப்போராளிகளின் ஒற்றைப்படைவேகத்தைக் கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த உறுதியான கொள்கைகளின் நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக உருவாகும் fallacy தான் முன்முடிவு. அந்த முன்முடிவை எளிதில் அவர்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மாற்றிக்கொண்டால் அவர்கள் தங்கள் ஒட்டுமொத்தச் சிந்தனையையும் மாற்றிக்கொண்டாகவேண்டும். அதனடிப்படையில் செய்துவருவன அனைத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டும். சில சமயம் அதுவரையிலான தங்கள் வாழ்க்கையையே அவர்கள் வீண் என ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கும். அது தற்கொலைக்கு நிகர்.

ஒருவர் உண்மையான சமூகச்செயல்பாட்டாளர் என்றால், அது எந்தத் தரப்பாக இருந்தாலும், அவரது முன்முடிவை அவரது இயல்பின் பகுதியாகவே கொள்ளவேண்டும். அவரது நேர்மையின்மையாக அதை விளக்க முயல்வது மிகவும் தவறானது. ஞாநி பற்றி சொல்லும் இதையே அண்ணா ஹசாரேக்கும் மேதாபட்கருக்கும் உதயகுமாருக்கும் சொல்வேன்.

பெரும்பாலும் இவ்வாறு அவர்களின் fallacy யை வைத்து அவர்களை நிராகரிப்பதை செய்பவர்கள் யார்? அவர்கள் ஒன்றுமே செய்யாமல் விலகி இருந்து விமர்சிப்பவர்கள் மட்டுமே. விமர்சிக்கும் தகுதி இரண்டு அடிப்படையில் வருகிறது. அதே தளத்தில் சமூகச்செயல்பாடுகளில் இருப்பவர்கள் விமர்சிக்கலாம். அந்தத் தளத்தை விரிவான தத்துவ நோக்குடன் விவாதிப்பவர்கள் விமர்சிக்கலாம். ஆனால் இரண்டாம் தரப்பினர்கூட நேரடியான சமூகச்செயல்பாடுகளின் ‘புனிதத்தை’ ஒவ்வொருமுறையும் அங்கீகரித்தபின்னரே அவ்விமர்சனத்தை முன்வைக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்