அன்புள்ள ஜெயமோகன்,
இதில் உரைநடை இலக்கணத்தின் முக்கியத்தைப் பற்றி பேசியுள்ளீர்கள். அது முக்கியம் தான்.
தொல்காப்பியம், நன்னூல் போன்ற மரபு இலக்கண நூல்கள் நல்ல மரபுச் செய்யுள் செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளன. அதனால் பள்ளி மாணவர்களுக்கு மரபு இலக்கண நூல்கள் படிப்பூட்டுவது நிறுத்தப்பட்டால், அல்லது வெகுவாக குறைக்கப்பட்டால், ஒரு நஷ்டமும் இல்லை.
மொழி பேசுவதிலிருந்து வருவதால், இலக்கணம் என்பது எப்படி ஒரு மொழி பேசும் குழு, சில விதிகளை (அறிந்தோ, அறியாலமோ) பின்பற்றி பேசுவதை புரிந்து கொள்கின்றனர் என்பது ஆகும். தமிழ் என்றவுடன், நாம் எழுத்துத்தமிழை மட்டும் நினைத்து, பேச்சுத்தமிழை கண்டு கொள்ளாமல் இருப்பதால், பேச்சுத்தமிழ் இலக்கணம் வரவில்லை, ஓரளவு தற்கால உரைநடை இலக்கணம் இருக்கின்றது.
பேச்சு, எழுதும் தமிழ்களுக்கு இடையில் பெரும் தூரம் இருப்பதால் , பேச்சிலக்கணம் பக்கத்தில் யாரும் போகவில்லை.
வன்பாக்கம் விஜயராகவன்
பிராங்க்பர்ட், ஜெர்மனி
அன்புள்ள விஜயராகவன்
உண்மைதான். தமிழில் ஒரு ‘தற்கால உரைநடை இலக்கணம்’ உருவாக்கப்படவேண்டிய அவசியம் உள்ளது. இலக்கியம், இதழியல் நடை, வணிகப்புழக்கத்தில் உள்ள தமிழ்நடை, சட்டம் போன்ற தனித்த துறைகளில் உள்ள தமிழ்நடை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக அந்த உரைநடை இலக்கணம் அமையவேண்டும்.
அதை நம்மூர் தமிழாசிரியர்கள் அளிக்கமுடியாது. அவர்களுக்கு அவர்கள் கல்லூரியில் படித்த பாடப்புத்தகத் தமிழுக்கு மேலதிகமாக ஒன்றுமே தெரியாது. ஏனென்றால் அவர்களில் நாளிதழ்களை தினம்தோறும் படிப்பவர்களே மிகமிகக் குறைவு.
இதழாளர்கள் இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஒரு தன்னார்வக்குழு அதைச்செய்யுமென்றால் நல்லது. ஒரு நூல் வெளிவருமென்றால் அதை செம்மைப்படுத்தியபடியே செல்லமுடியும்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
அ.கி. பரந்தாமனாரின் இலக்கண நூல் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கிறது.
http://218.248.16.19/library/lA434/html/lA434inx.htm
நான் பரிந்துரைக்கும் ஒரு சுவையான நூல் உள்ளது ; நல்ல புதுமையான முயற்சி.
உரைநடைக்கென்றே எழுதப் பட்ட நூல். எழுத்தாளர்கள் படிக்கவேண்டிய நூல்!
“தமிழ் நடைக் கையேடு”
(உருவாக்கம்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்;
மொழி அறக்கட்டளை, சென்னை; தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் )
மொழி , 10 24th East Street, Thiruvanmiyuur, Chennai 600 041.
பசுபதி
அன்புக்கும் மதிப்புக்குமுரிய பசுபதி அவர்களுக்கு,
நான் அந்நூலைக் கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.
ஜெ