ஜெயமோகன்,
உங்கள் வலைத்தளத்தில் இன்று நீங்கள் என்னைப் பற்றி எழுதியுள்ள அவதூறுகளுக்கான எதிர்வினையை இத்துடன் அனுப்புகிறேன் . இன்று மாலைக்குள் உங்கள் வலைத் தளத்தில் இதைப் பிரசுரிக்க வேன்டும்..
எஸ்.வி.ராஜதுரை
ஜெயமோகனின் இன்னொரு அவதூறு
எஸ்.வி. ராஜதுரை
20-06-2012
காந்தியவாதி என்னும் வேடத்தை அவ்வப்போது அணிந்து கொள்கிற, ஆனால் கோயபல்ஸியப் புளுகுகளை அவிழ்த்துவிடுவதில் சிறிதும் வெட்க உணர்வோ, தயக்கமோ கொள்ளாத ஜெயமோகனின் அவதூறு எழுத்துகளுக்கு ஒரே ஒரு முறை மட்டும் (அதுவும் காரல் மார்க்ஸ்,அம்பேத்கர், பெரியார் ஆகியோர் மீது அவர் தொடுத்திருந்த அவதூறுகளுக்குப் பதில் சொல்வதற்காக மட்டுமே) பல ஆண்டுகளுக்கு முன் ‘தினமணி’யில் எதிர்வினையாற்றியுள்ளேன். அவர் எனது எழுத்துகள் மீதும் என் மீதும் அவ்வப்போது தனது வலைத்தளத்திலும் அச்சு ஊடகங்களிலும் முன் வைத்து வரும் கடுமையான விமர்சனங்களை நான் பொருட்படுத்தியதில்லை. அதற்குக் காரணம்,எனக்கு நானே பெரும் முக்கியத்துவம் கொடுத்துக் கொள்வதையோ,நேர்மையீனமான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதில் நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதிலோ ஒருபோதும் விரும்பியதில்லை. எனினும் ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து’ என்பது போல, டாட்டா ·பவுண்டேஷன் நிதியைப் பெற்று லீனா மணிமேகலை தயாரித்துள்ளதாகச் சொல்லப்படும் ஓர் விவரணப் படம் குறித்து காலச்சுவடு கண்ணன் எழுதியுள்ள கட்டுரைக்குப் பதில் சொல்லும் போக்கில் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் கீழ்க்காணும் வரிகளை எழுதியுள்ளார்:
“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”.
கஞ்சித் தொட்டி வைத்து அமைதி வழிப் போராட்டம் நடத்தும் கூடங்குளம் போராளிகளையே கொச்சைப்படுத்திய ஜெயமோகன், என்னைப் போன்ற சாமானியர்களை அவதூறு செய்யத் துணிந்தததில் வியப்பில்லை.
இலங்கையில் இந்திய அமைதிப்படை நடத்திய அக்கிரமங்கள் எனச் சொல்லப்படுபவை, ‘தமிழ் தேசிய பாசிஸ்டு’களின் பொய்ப் பிரச்சாரம் என்று கூசாது பொய் சொல்லி, தக்க பதிலடி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள ஜெயமோகன், அந்தப் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் கவனத்தைத் திருப்புவதற்காகவும் ‘பரபரப்பாக’பேசப்படக்கூடிய இன்னொரு புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
வலைத்தளங்கள் வைத்திருப்பவர்கள், தாங்கள் சொல்லும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கு அஞ்சாதவர்களாக இருந்தால், தனிநபர் தாக்குதல்களற்ற பதில்களை வெளியிடத் தயங்கக்கூடாது.ஆனால், ஜெயமோகனின் வலைத்தளம் ஒரு வழிப்பாதை. அவரது ‘உபாசகர்க’ளுக்கு மட்டும் அந்தப் பாதையின் ‘செக் போஸ்ட்’ அவ்வப்போது திறக்கப்படும். அதனால்தான் 20.6.2012 அன்று அவர் எழுதியுள்ள மேற்சொன்ன வரிகள் அடங்கிய ‘மனசாட்சி சந்தை’( மன்சாட்சி என்பது ஒரு சந்தைப் பொருள்தான் என்பது அவரது கருத்துப் போலும்!) கருதுகிறார்) என்னும் பகுதிக்குக் கீழே
“தொடர்புடைய பதிவுகள் இல்லை.Sorry, the comment form is closed at this time” என்று அறிவித்து விட்டு, என் மீது அவர் வைத்த அவதூறுகளுக்கான எதிர்வினை ஏதும் வராதபடி ‘ காபந்து’செய்து கொண்டுள்ளார்.
அவருக்கு நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும். அவருக்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் தர விரும்புகிறேன். அவ்வாறு மெய்ப்பிப்பாரேயானால், மருத்துவ மனைக்கும் சென்றாலும், இழவு வீட்டுக்குச் சென்றாலும் ‘மாவோயிஸ்ட்’ ஆதரவாளன் என்று என்னைக் கருதி என்னை நிழல் போலத் தொடர்ந்து வரும் ‘கியூ’ பிரிவு போலீசாரின் கண்காணிப்பிலிருந்தும் விசாரணைகளிலிருந்தும் விடுபட எனக்கு உதவுபவராவார்.எனினும்,‘மாவோயிஸ்டுகளும் ’·போர்ட் ·பவுண்டேஷனிடமிருந்து நிதி உதவி பெறுபவர்கள்தான்’ என்னும் இன்னொரு புளுகையும் அவிழ்த்துவிட்டு ஜெயமோகன் நழுவிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் நான் அவருக்குத் தரும் ஒரு வார கால அவகாசத்திற்குப் பிறகு என்னைப் பற்றித் தான் கூறியுள்ளவை அவதூறுகள் அல்ல, உண்மையான குற்றச்சாட்டுகள்தான் என்று தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்கத் தவறுவாரேயானால், சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவேன்.
[email protected]
எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு,
தங்கள் கடிதம்.
என்னுடைய இணையதளத்துக்கு வரும் எதிர்கருத்துக்கள் தர்க்கபூர்வமாக எழுதப்பட்டிருந்தால் எப்போதும் அவை பிரசுரமாகின்றன. என் தரப்பு விளக்கத்துடனோ அல்லாமலோ. அவ்வாறு இங்கே வெளியிடப்படாமல் எந்த ஒரு குறிப்பிடத்தக்க கடிதமும் வெளியே வெளிவந்ததில்லை. நானறிந்த ஜனநாயகம் என்பது இதுவே. எனக்கு எதிரான அவதூறுகளுக்கு நானே களம் அமைத்துக்கொடுப்பதை நான் ஜனநாயகமென நினைக்கவில்லை. ஆனால் இதோ அதற்கும் உங்கள் வழியாக ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
தொண்ணூறுகளின் இறுதியில் திடீரென்று ஒருநாள் ‘கருத்தியல் மறுபிறப்பு’ எடுத்த எஸ்.வி.ராஜதுரையை உங்கள் இக்கடிதத்திலும் கண்டேன். அவதூறுகள், தகவல்திரிப்புகள், வசைகள் வழியாகச் செயல்படும் ஒரு மனம். உங்கள் கடிதம் அவ்வகையில் எனக்கு ஓர் ஆவணம். ஆனால் இதைக்கண்டு முந்தைய எஸ்.வி.ராஜதுரை மீது இன்றும் பெருமதிப்பு கொண்டிருக்கும் என்னால் வருத்தப்படவே முடிகிறது.
உங்களுக்கே உரிய முறையில் என்னுடைய வரிகளில் இருந்து உங்களுக்கு வசதியான அர்த்தத்தைப் பெறுகிறீர்கள். அந்த அர்த்தத்தை நான் நிரூபிக்கவேண்டுமென அறைகூவுவது வழியாக மொத்தப்பிரச்சினையையும் உங்களுக்கு சௌகரியமான இடத்துக்குக் கொண்டு செல்கிறீர்கள். உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு கைவந்த உத்தி அது.
நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?
நீங்கள் மேற்கோளாகச் சுட்டிய வரிகளில் உள்ளது என்ன? காலச்சுவடு பெற்ற ஒரு நிதியுதவி உண்மையில் ஃபோர்டு ஃபவுண்டேஷனால் அளிக்கப்பட்டது என எம்.டி.முத்துக்குமாரசாமி வெளிப்படுத்தியிருக்கிறார். அதைப்போல பிற நிதியுதவிகளைப்பற்றியும் அவர் வெளிப்படுத்துவாரென்றால் வாசகர்களுக்கு உண்மைகளை உணர வாய்ப்பு என்று சொல்கிறேன்.
நான் அக்கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியபடி நிதியுதவிகள் பெரும்பாலும் பலவகையான அறிவார்ந்த நோக்கங்கள் சொல்லப்பட்டு விதவிதமான பண்பாட்டுஅமைப்புகள் மற்றும் கல்விநிறுவனங்கள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி போல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதே நமக்கு உண்மை தெரிகிறது. இல்லையேல் வாய்ப்பே இல்லை.
அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.
ஆக, நான் எந்தப் பொய்யான தகவலையும் சுட்டவில்லை. உங்களையோ பிறரையோ அவதூறும் செய்யவில்லை. வெளிப்படையாக நீங்களே முன்வைத்த ஒன்றையே என் கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறேன். காலச்சுவடு முன்வைத்த தகவலை எம்.டி.முத்துக்குமாரசாமி அதன் உள்ளடுக்குகளைச் சொல்லி விளக்கியதுபோல பிறர் பெற்ற நிதியாதாரங்களின் உள்ளடுக்குகளையும் எவராவது விளக்கினால் நன்று என்று மட்டுமே சொன்னேன். நீங்களே கூட விளக்கலாம்.
ஒரு நூல் அதற்குப்பின்னாலுள்ள நேர்மையாலும் தியாகத்தாலும் கூடத்தான் மகத்துவம் கொள்கிறது. பெரியவர் ஆனைமுத்துவின் நூல் அப்படிப்பட்டது. அது இருக்கும் நூலகம் பெருமைகொள்கிறது. உங்களுடைய நூலை நான் அப்படி எண்ணவில்லை.
நீங்களே உங்கள் நூலில் வெளியிட்ட ஒரு தகவலை நான் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதை அவதூறு என்கிறீர்கள். அவதூறு என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றே புரியவில்லை. நான் அவதூறு என்று எதை நினைக்கிறேன் என்று சொல்கிறேனே.
கூடங்குளம் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் அதற்காக தீவிரமாக ஆதரவு தெரிவித்து எழுதி வந்தவன் நான். உங்களைப்போல வாய்ச்சொல்லுடன் நிற்காமல் நேரில் சென்று அந்தப்போராட்டத்தில் பங்கு கொண்டவன். அந்த மேடையில் பேசியவன். தொலைக்காட்சிகளில் வாதிட்டவன். தமிழிலும் மலையாளத்திலும் பல கட்டுரைகளை அப்போராட்டத்தை ஆதரித்து எழுதியவன். அதிக காலம் முன்பொன்றும் அல்ல. சில மாதங்கள்கூட ஆகவில்லை. அந்தக்கட்டுரைகள் என் இணையதளத்தில் உள்ளன.
ஆனால் அந்தப்போராட்டத்தை நான் எதிர்த்து, இழிவுபடுத்தியதாக நீங்கள் எழுதுகிறீர்கள். கூச்சமே படாமல் இதை இன்னும் பலகாலம் பலமேடைகளில் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். அதற்கான எந்த மறுப்பையும் பொருட்படுத்தமாட்டீர்கள். உங்களுடைய தொண்டர்படை உங்களை மேற்கோள்காட்டி அதையே சொல்லும். கொஞ்சகாலத்தில் அதை வரலாறாக ஆக்கிவிடுவீர்கள்.
ஒரு சின்ன கடிதத்திலேயே ஓர் அவதூறு இல்லாமல் எழுதமுடியவில்லை என்ற நிலைக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் என்று மட்டும் கொஞ்சம் அந்தரங்கமாக யோசியுங்கள். பழைய எஸ்.வி.ராஜதுரையை நினைத்துக்கொண்டு ஆழ்ந்த வருத்தத்துடன் இதை கோருகிறேன்.
ஜெ
[ விடியல் சிவா அவர்களின் மறுப்ப்பு ஏற்ப பிழையான புரிதலுடன் எழுதப்பட்ட வரிகள் நீக்கப்பட்டுள்ளன]