அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
மகாத்மா குறித்த எனது கருத்துக்கள் மாறியபடியே உள்ளன. இம்மாற்றங்களுக்கான காரணிகளில் உங்கள் எழுத்துக்கள் முக்கியமானவை. உங்களுடனான உரையாடல்களும். அத்துடன் சுற்றுப்புற சூழல் குறித்து இயங்கும் எவரும் இந்திய சூழலிலும் சர்வ தேச சூழலிலும் மகாத்மாவை புறக்கணிக்க முடியாது என்பதை விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து செயலாற்றுகையில் தெரிந்து கொண்டேன்.
சில rhetoric கேள்விகள் மனதில் அறிவார்ந்த வாதங்களின் உருவில் பதிந்து விடுகின்றன. “பாகிஸ்தான் முஸ்லீம் நாடுன்னு அறிவிச்சப்பவே இந்தியாவை இந்து நாடுன்னு அறிவிச்சிருக்கணும்” என்பது அதிலொன்று. இந்தியா இந்து நாடு (nation) எனவேதான் அது ஒரு இந்து ராஜ்ஜியமாக(state) முடியாது என்பது என் பார்வையாக இருக்கிறது. மகாத்மா காந்தி அந்த இந்து தேசத்தின் ஆன்மாவுடன் இணைந்து பேசினார் என்றே நான் நம்புகிறேன். மாறாக இந்து ராஜ்ஜியமான நேபாளம் மிக மோசமான தேக்க நிலையை அடைந்தது. தீண்டாமை சாதிக்கொடுமை ஆகியவற்றுடன் ஊதாரித்தனமான அரசக்குடும்பம், சடங்காச்சார இந்துமதம், ஊழல் நிறைந்த அரசாங்கம் ஆகியவை அதனை இன்று மாவோயிஸ்டுகள் கைகளில் தள்ளியிருக்கின்றன. நீங்கள் சொல்வது உண்மைதான் அத்தகைய இந்து அரசாங்கம் இங்கும் ஏற்படாமல் தடுத்ததில் மகாத்மாவின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு இந்து தேசியவாதி என்கிற முறையில் இந்து தேசியக் கோட்பாட்டை அது செழுமைப்படுத்தி ஆரோக்கியமடைய செய்திருக்கிறது. அதன் ஒரு தரப்பையாவது.
மகாத்மாவின் கொலைக்கான பழியை சுமக்கும் இயக்கத்தை சேர்ந்தவன் நான். அப்பழி பொய்யானதென நான் அறிவேன். இந்து தேசிய இயக்கத்தின் முக்கிய ஆற்றுப்படுத்தி அதனை பரந்துபடுத்தும் ஒரு சக்தியாக மகாத்மாவை அந்த இயக்கத்துக்குள் உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக குருஜி கோல்வல்கரின் சொற்களிலும் செயல்பாடுகளிலும் (உடனே அவரது “நாசி ஆதரவு” என்பதாக பொருள்படும் மேற்கோள்களை சில மேதாவிகள் அனுப்புவார்கள். அவர்கள் இதற்கான பதிலை இங்கே காணலாம்: “பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்”, http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_13.html) காந்திய சிந்தனையின் தாக்கம் அபரிமிதமாக இருந்தது. அதுவே இந்து இயக்கம் விரிவடைய வழி வகுத்தது. பாரதிய மஸ்தூர் சங்கம், சேவாபாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆகியவை காந்திய தாக்கத்தின் விளைவாக எழுந்தவையே. சாவர்க்கரியம் அப்பழுக்கற்ற தீவிர மதச்சார்பற்ற அரசு சார்ந்த தேசியத்தை முன்வைத்தது. பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவும் காந்திய தாக்கத்தை கொண்டவரே. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்படும் மகான்களின் வரிசையில் எந்த பீடாதிபதியின் பெயரும் இடம் பெறவில்லை மாறாக அம்பேத்கரின் பெயரும் காந்திஜியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்து தேசியத்தின் மீதான மறுக்கவியலாத காந்திய முத்திரைக்கான அத்தாட்சி இது.
சௌகத் அலி
நரேந்திர மோடியை பொறுத்தவரையில் உங்கள் கணிப்பு தவறு என்பதே என் எண்ணம். குஜராத் இந்து முஸ்லீம் கலவரங்களில் அவரது பங்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் வகுப்புவாத தூண்டுதல் பேச்சுக்களை மிகக்கடுமையாகத் தவிர்த்து சமூக-பொருளாதார மேம்பாட்டையே மீண்டும் மீண்டும் முன்வைப்பதாக அவரது அரசியலும் வகுப்புவாத குற்றச்சாட்டை மட்டுமே முன்வைப்பதாக அவரது எதிரிகளின் அரசியலும் அமைந்து வருவதை காணமுடிகிறது.
ஹரிஜன்-தலித் என்பது குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். இந்து தேசியவாதத்தின் மூலவேர்களில் ஒன்றான ஆரிய சமாஜமே முதன் முதலாக தலித் எனும் பெயரை குறிப்பிட்டது. ஆனால் ஹரிஜன் எனும் பெயரை ஏற்கமறுப்பதில் ஒரு சில அணியினருக்கு ஒரு தகாத ஆர்வம் இருக்கிறது. ஆங்கில-ஊடக மேல்தட்டு சமூக-ஆராய்ச்சியாளர் அத்துடன் மேற்கத்திய சக்திகளுக்கு ஹரிஜன் எனும் பெயரை மாற்றி தலித் எனும் பெயரை அங்கே கொண்டு வருவதில் ஒரு அற்ப சந்தோஷமே இருக்கிறது. தலித் எனும் பெயரோ ஹரிஜன் எனும் பெயரோ இந்து தேசியவாதிகளுக்கு ஏற்புடையதாகவே உள்ளது. ஆனால் 2003 இல் Economic and Political Weekly இல் வெளிவந்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தலித் – ஹரிஜன் எனும் பெயர்களின் சமுதாய ஏற்பு அந்த பெயர்களால் அழைக்கப்படும் சமுதாயங்களில் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தது. அது சொல்லும் தகவல் சுவாரசியமானது: “The pattern in academic journal papers in general is similar. Dalit outnumbers harijan by only 21 to 12 in the 1980s; by 110 to 3 in the 1990s; and by 24 to 0 so far since 2001….But how do the SC people name themselves? The data from the National Family Health Survey of 1998-99 suggests they strongly prefer harijan to dalit….Whatever the reservations about the data the scale of the difference in the use of dalit and harijan suggests that there is a real contrast in the preferred name chosen by external commentators and SC people themselves. Ambedkar may be winning the posthumous rivalry among the scribbling classes but Gandhi remains the dominant opinion-former among the SCs themsleves.” (Alan Marriott, “Dalit or Harijan? Self-Naming by Scheduled Caste Interviewees”, September 6, 2003) இந்தக் கட்டுரை காந்தியை புகழ எழுதப்பட்டதல்ல. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் மகாத்மாவின் பெயரையே சொல்லி தம்மை அழைக்கிறார்கள். இதனை மாற்ற இதுவரை செய்யப்பட்ட முயற்சிகள் ஏசி செய்யப்பட்ட செமினார் ஹால்களுக்கு அப்பால் செல்லவில்லை என்பதை சொல்லி “ஹரிஜன்” என்பதற்கு பதிலாக தலித் என்ற சொல்லை கொண்டு செல்ல நீண்ட களப்பணி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இக்கட்டுரை வெளியிடப்பட்டதாக நான் நினைக்கிறேன். ஆக, “அவர்களே விரும்பிச் சூட்டிக்கொண்டபெயர் தலித்துக்கள்.” எனும் தங்கள் கருத்து முழுமையாக சரியல்ல என கருதுகிறேன்.
“நலிந்தவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சலுகைகள் வழங்கப்படுவது” – என நீங்கள் சொல்வதில் நலிந்தவர்களுக்கு என்பது சரி. ஆனல் சிறுபான்மையினர் என சொல்லும் போது அது பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. யார் சிறுபான்மையினர்? வழிபாட்டு அடிப்படையிலா? ஒருவரது மதநம்பிக்கைகளின் அடிப்படையில் என பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் சிறுபான்மையினர் இல்லையா? நாளை உங்கள் சான்றிதழில் உங்கள் வழிபாட்டு முறையை கிறிஸ்தவர் என மாற்றினால் நீங்கள் சலுகைகளுக்கு பாத்திரர் ஆகிவிடுவீர்களா? கோலிகுண்டு சோடாக்கள் நிரம்பிய கிராமப்பகுதி கடைகளின் நடுவே கோக் விற்பனை மையம் சிறுபான்மை ஸ்தாபனமா? பன்னாட்டு ஸ்தாபனத்தின் ஒரு கண்ணி என்கிற முறையில் உள்நாட்டு பெருபான்மை அமைப்புகளை காட்டிலும் பலம் பொருந்தியதல்லவா அது? இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் இந்து ஆன்மிக மரபுகளே பெரும் வன்முறை தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள சமய மரபுகளாக இருக்கின்றன. இதன் விளைவாக ஏற்படும் வன்முறைகளில் முதலில் கொடூரமாக பாதிக்கப்படுவது சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் அதன் பின்விளைவுகளில் அழித்தொழிக்கப்படுவது இந்து எனும் பெரும் அணைப்புக்குள் இருக்கும் பிராந்திய ஆன்மிக மரபுகள். இச்சூழலில் மத ரீதியிலான சிறுபான்மை சலுகைகள் மிக மோசமான தீய விளைவுகளை ஏற்படுத்தும். இன்று நடத்தப்படும் இந்த அசிங்க ஓட்டுவங்கி விளையாடல்களுக்கும் உண்மையான சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும் பெரும் இடைவெளி உள்ளது. ஒரு சிறுபான்மை சமுதாய வழிபாட்டுத்தலம் இடிக்கப்படுவதை தாக்கப்படுவதை ஒரு மனிதனாகவும் இந்தியனாகவும் இந்துவாகவும் கண்டிக்கிறேன் அதே நேரத்தில் பெரும் வெளிநாட்டு பண உதவியுடன் சிறுபான்மை போர்வையில் என் மீது என் மக்கள் மீதாக செலுத்தப்படும் ஆதிக்க வன்முறையை எதிர்க்கிறேன். மகாத்மா காந்தியும் இதை உணர்ந்திருந்தார். எனவேதான் “எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் அனைத்து மதமாற்றங்களையும் தடை செய்வேன்” என கூறினார். இந்த தடை அவசியம் என்றே நினைக்கிறேன். ஆனால் அது சட்டத்தின் மூலம் முடியாது. இந்து சமுதாயம் சமுதாய நீதி எனும் அடிப்படையில் ஆரோக்கியமடைதலும் வெளிநாட்டிலிருந்து வரும் பணங்களை கண்காணிப்பதும், பொதுப்புலத்தில் நடைபெறும் மதப்பிரச்சாரங்களின் தன்மையை ஒரு பன்மை சமுதாய வகுப்பு ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காத விதத்தில் மாற்றுவதன் மூலமாகவும் அது நடை பெறவேண்டுமென நினைக்கிறேன்.
இறுதியாக கிலாபத்.
கிலாபத் இயக்கம் குறித்து நீங்கள் சொல்வது தவறென்றே நினைக்கிறேன். மகாத்மா காந்தியே கிலாபத் இயக்கம் இந்துக்களுக்கு எதிராக ஒரு வலிமையான அணியாக முஸ்லீம்களை திரட்டி இந்துக்களை திக்கற்றகதியில் விட வழிவகுத்துவிட்டதாகக் கருதினார். இந்திய வரலாற்றில் வெடித்த கலவரங்களில் பெரும் முன்னேற்பாடுடனும் இனசுத்திகரிப்பு தன்மை கொண்டதாகவும் அமைந்த முதல் கலவரங்கள் இந்தியாவில் நடக்க கிலாபத் இயக்கமே வழிவகுத்தது. இதில் மிகவும் அதிர்ந்து போனவர் மகாத்மா காந்திதான். இது குறித்து சிறிது ஆழமாக சிந்தித்தால், மகாத்மா காந்தி இந்த இயக்கத்தின் போது தமது மிக முக்கியமான அகிம்சை விஷயத்தில் தம்மை அறியாமலே சில சமரசங்களை செய்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். காந்திஜியின் செயல்பாடுகளை நாம் காந்திய உரைகல்லில் பார்த்தே இதில் மகாத்மா செய்த பிழைகளை கண்டுணர வேண்டியவர்களாக இருக்கிறோம்.
கான் அப்துல் காபார் கானுடன்
இந்த இயக்கத்தின் முழு பரிமாணங்களையும் சிறிது ஆழமாக அலசுவது அவசியம். பலசமயங்களில் இந்த கிலாபத் இயக்கத்தின் பிதாமகர்களான அலி சகோதரர்கள் “விபச்சாரம் செய்யும் முஸ்லீமை விட காந்தி எங்களுக்கு உயர்ந்தவரல்ல” என்று சொன்னதாக பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அலி சகோதரர்கள் உண்மையிலேயே மகாத்மா காந்தி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்கள் சொன்னதாக சொல்லப்படும் வரிகள் எப்படி எத்தகைய நிர்ப்பந்தத்தால் சொல்லப்பட்டன என்பதையும் அதை மகாத்மா காந்தி தமக்கே உரிய விதத்தில் எதிர்கொண்டதையும் நாம் தெரிந்துகொள்வது இன்றைக்கு relevant ஆன விஷயமாகும்.
கிலாபத் இயக்க பிதாமகரான முகமது அலி முஸ்லீம்-லீக்கை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர். பிரிட்டிஷ் அரசிடம் முஸ்லீம்களுக்கு விசுவாசத்தை வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூளையாக செயல்பட்ட அலி தாம் நடத்திய “¸”காம்ரேட்” இதழில் 1911 இல் “இந்தியா ஒரு தேசம் என்கிற கோஷத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.” என்றும் அப்படி ஒரு தேசத்தை உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் அந்த தேசம் எனும் கருத்தாக்கத்தின் “கல்லறையில் மணமற்ற பூக்களை கூட தாம் வீணாக்க விரும்பவில்லை’ என்றும் எழுதினார். இதே காலகட்டத்தில் வங்காளத்தின் முற்போக்கு இஸ்லாமியர்கள் வங்கப்பிரிவினைக்கு எதிராகவும் சுதேசி இயக்கத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதுடன் முஸ்லீம்-லீக் ஒரு பணக்கார கட்சியாகவே கருதப்பட்டதே ஒழிய இஸ்லாமிய மக்களின் கட்சியாக கருதப்படவில்லை. சுதேசி இயக்கங்களில் இந்து மதச்சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதும் கூட முஸ்லீம்களுக்கு எவ்வித தனிமையுணர்வையும் அப்போது ஏற்படுத்தவில்லை. ஏனெனில் பல இடங்களில் அன்று தூய இஸ்லாமிய வாதம் பரவவிடவில்லை. உதாரணமாக வங்காளத்தில் குழந்தைகளுக்கு கங்கை அன்னையை புகழ்ந்து பாட கற்பிக்கப்படும் மிகச்சிறந்த பாடல் இஸ்லாமிய கவிஞரால் இயற்றப்பட்டது. தூத்துக்குடியிலும் கூட இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சிதம்பரத்தின் கம்பெனியின் முக்கிய பங்குதாரர்களாக திகழ்ந்தார்கள். முஸ்லீம் லீக்கின் முக்கிய எதிர்ப்பாளரான முகமதலி ஜின்னா பாலகங்காதர திலகருக்காக பிரிட்டிஷ் கோர்ட்டில் வாதாடியவர்.
இந்நிலையில் கிலாபத் இயக்கம் எதற்காக ஏற்பட்டது? கிலாபத் இயக்கத்தினர் இந்திய விடுதலைக்கான நிலைப்பாட்டில் எந்த பார்வை கொண்டிருந்தனர் என்பதை அறிய கிலாபத் இயக்க தலைவரான முகமது அலி அன்றைய பிரிட்டிஷ் பிரதமமந்திரியுடன் 1920 இல் இலண்டனில் நிகழ்த்திய உரையாடலை கவனிக்கலாம்:
முகமது அலி: நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islam’s whole outlook on life is supranational rather than national.)…எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.
நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islam’s whole outlook on life is supranational rather than national.)…எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.
…
லயாட் ஜார்ஜ்: அப்படியானால் அரேபிய பிரதேசங்களுக்கு விடுதலை அளிக்கப்படக்கூடாது எனக் கூறுகிறீர்களா?
முகமது அலி: ஆமாம். முஸ்லீம்கள் என்கிற முறையில் ‘ஜஸிர்த் உல் அரப்’ (அராபிய தீவு -அதாவது அரேபியா முழுவதும்) மற்றவர்களால் நுழையப்படாமல் முழுக்க முழுக்க துருக்கி மூலமாக இஸ்லாமிய அதிகாரத்தில் இருக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீன் மெசபடோமியா ஆகிய பிரதேசங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய அதிகாரத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும். மெக்கா மெதினா ஜெருசலேம் ஆகியவற்றின் பாதுகாவலராக கலீபா நியமிக்கப் பட வேண்டும்…..(மௌலானா பாலஸ்தீனத்தில் எக்காலத்திலும் யூதர்கள் அதிக அளவில் குடியேற முடியாது என நம்பிக்கை தெரிவிக்கிறார். இடையில் குறுக்கிட்டு மௌலானாவுடன் வந்த சையது ஹ¤சைன் கூறுகிறார்) கிலாபத் இயக்கம் முழுக்க முழுக்க முஸ்லீம்களை மட்டுமே கொண்ட இயக்கமில்லை. அதில் ஹிந்துக்களும் இருக்கிறார்கள். கடந்த பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் பொதுவாக ஹிந்துக்களும் முஸ்லீம்களும் பிரிந்திருப்பதே வழக்கமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியிருந்த போது முஸ்லீம்கள் வெளிப்படையாக அந்த முழு இயக்கத்தையும் எதிர்த்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் அதற்கு வர ஆரம்பித்துள்ளனர். இன்று இந்த தேசிய இயக்கம் இந்த அளவு ஒரு அசாதாரணமான இயக்கமாகியுள்ளது. இப்போது நாம் இந்தியாவில் புதிய சகாப்தம் ஒன்றின் தொடக்கத்தில் உள்ளோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய சக்தியாகும் (The British Empire is the greatest Muslim Power in the world) உலகம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இந்தோ-இஸ்லாமிய-பிரிட்டிஷ் ஒற்றுமை யதார்த்தத்தின் அடிப்படையில் அனைவருக்கும் திருப்தி அளிக்குமாறு ஏற்படுமானால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஜீவித இலட்சியத்தை பூர்த்தி செய்திட உதவும். (it would certainly be a very splendid fulfilment of the destiny of the British Empire. That is all I have to say.)
ஜின்னாவுடன்
இந்த உரையாடலின் முக்கிய அம்சம் மௌலானா எந்த இடத்திலும் மறந்தும் கூட இந்திய தேச விடுதலை குறித்தோ அல்லது சுவராஜ்ஜியம் குறித்தோ வாயைத் திறக்கவில்லை என்பதுதான். மட்டுமல்ல அவரைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது கிலாஷபத் மற்றும் அராபிய பிரதேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம். பின்னர் மசூதியில் பேசிய மௌலானா மேன்மை தங்கிய அரசரின் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இஸ்லாமிய குடிமக்கள் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் அதிகம் என கூறினார். (பிரிட்டிஷ் பிரதமருடனான உரையாடல் குறித்து வெளியான செய்தி மற்றும் மசூதி பேச்சு: The Islamic Review, ஏப்ரல் 1920 இணைய தளத்தில்: http://www.chapatimystery.com/archives/homistan/imagining_pakistan_ii_jauhar.html )
முகமது அலி பிரிட்டிஷ் பிரதம மந்திரியை சென்று சந்தித்து உரையாடியது 1920 மார்ச் மாதத்தில். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மகாத்மா காந்தியும் அலி சகோதரர்களும் பாரதம் முழுவதுமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டாலும் கூட கருத்தியலில் அது ஒரு ஒவ்வாதக் கூட்டணியாக விளங்குவது ஒரு சிலருக்காவது உறுத்தத்தான் செய்தது. மாடர்ன் ரிவ்யூ பத்திரிகை எழுதியது: “இவர்களது பேச்சுக்களை கவனித்துப்பார்த்தால் இவர்களில் ஒரு சாராருக்கு எங்கோ இருக்கும் துருக்கி கிலாபத் கிளர்ச்சியின் மையமான விஷயமாக இருக்கிறது. இன்னொரு சாராருக்கு இங்கு சுவராஜ்ஜியம் அடைவது முக்கியமாக இருக்கிறது.” (அம்பேத்கர் மாடர்ன் ரிவ்யூவை தமது Thoughts on Pakistan இல் மேற்கோள் காட்டுகிறார்: அத்தியாயம்: 7) இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1920 இல் கிலாபத் இயக்கம் காங்கிரஸ் தலைவர்களின் பேராதரவுடனும் பங்களிப்புடனும் உருவாகியது. இந்தியா முழுவதும் பெரும் உற்சாக அலை பரவியது. ஆனால் உள்ளுக்குள் ஒரு மாற்றம் நடைபெற்றது. இந்த இயக்கம் சாதாரண இஸ்லாமியனை பிற்போக்குத்தனம் கொண்ட ஒரு தலைமையிடம் கையளித்ததுடன், முற்போக்குத்தன்மை கொண்ட தலைமையை புறந்தள்ளியது. அல்லது அத்தகையவர்கள் பிற்காலத்தில் தாங்களும் அதி தீவிர மதப்பிடிப்புள்ள இஸ்லாமியர்களாக காட்டினால் மட்டுமே இஸ்லாமிய அரசியலில் ஒரு பொருட்டாக மதிக்கப்பட முடியும் எனும் நிலையை ஏற்படுத்தியது.
ஆனால் நீங்கள் சொல்வது போல இதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்று ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டிவிட முடியாது. லாலா லஜ்பத்திராய், திலகர், பாரதியார், வஉசி என அனைத்து தலைவர்களுமே கிலாபத் இயக்கத்தை ஆதரித்தனர். இந்த இயக்கத்தை சந்தேகித்த சித்திரஞ்சன் தாஸ் போன்றவர்களும் பின்னர் மாறிவிட்டனர். 1920 இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 1886 வாக்குகள் ஆதரவாகவும் 884 வாக்குகள் எதிராகவும் கிலாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் இது மோசடியாக ரிக்ஷாகாரர்களை உள்ளே இழுத்து வாக்களிக்கவைத்து வெற்றி பெறப்பட்டதாக ஐயம் எழுந்ததை பதிவு செய்கிறார்,(பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 7). மகாத்மா காந்தி மூத்த தலைவர்களை புறக்கணித்து தமது இஷ்டப்படி காங்கிரஸை நடத்தி செல்வதாகவும், அவர் “ஊழல் செய்து விட்டதாகவும்” கூட கடுமையாக இந்த மாநாடு குறித்து அப்போது சிறையிலிருந்து மீண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுப்பிரமணிய சிவா சென்னை தோழர்களுக்க்கு தம் கைப்பட ஒரு கடிதம் எழுதுகிறார்.. ஒரு வேளை அவர் ஊழல் என்று கூறியது இந்த ரிக்ஷா ஓட்டிகள் விவகாரமாக இருக்கலாம். ஆனால் மகாத்மா காந்திக்கு இந்த விவகாரம் தெரிந்திருக்குமா என்பது ஐயமே..
எதுவானாலும் கிலாபத் கூட்டங்களில் இஸ்லாமிய பேச்சுக்கள் மிகுந்த மதவெறியுடனும் அகிம்சை குறித்து கிஞ்சித்தும் கவலை தெரிவிக்காததாகவும் அமைகின்றன. இது குறித்து காந்திஜியிடம் கவலையும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மிக முக்கியமான பதிவை செய்கிறார் கிலாபத் இயக்கத்தில் கலந்துகொண்ட சுவாமி சிரத்தானந்தர்: ” மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறித்தும் நான் மகாத்மாவின் கவனத்தை ஈர்த்தேன். நாங்கள் இருவருமாக (மகாத்மாவும் சுவாமி சிரத்தானந்தரும்) நாக்பூர் கிலாஷபத் இயக்க மேடைக்கு இரவு சென்றோம். அங்கு மௌலானாக்களால் பேசப்பட்ட ஆயத்துக்களில் ஜிகாத்து மற்றும் நம்பிக்கையவற்றவர்களை கொல்வது குறித்தும் அடிக்கடி கூறப்படுவதை மகாத்மாவுக்கு நான் சுட்டிக்காட்டினேன். மகாத்மா புன்னகை புரிந்தவாறே அவர்கள் அதனை பிரிட்டிஷ் அரசதிகாரிகளைக் குறிப்பிடுகின்றனர் என கூறினார். என்றால் கூட அதுவும் மகாத்மாவின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானதாக அமைவதை நான் கூறி சொன்னேன் ‘உணர்ச்சி மேலிடும் போது இவை மௌலானாக்களால் ஹிந்துக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.” (Liberator ஜுலை 1926)
இதில் மகாத்மாவின் அகிம்சை குறித்த ஆதாரமான சில கேள்விகள் எழும்புவது தவிர்க்க இயலாதது. 1921 இல் மாப்ளா படுகொலைகள் நடந்தேறின. 1922 இல் சித்தரஞ்சன் தாஸதக்கு எழுதிய கடிதத்தில் லாலா லஜ்பத்ராய் சில அடிப்படையான அச்சங்களைத் தெரிவித்தார். “நான் ஹிந்துஸ்தானத்தில் உள்ள 7 கோடி இஸ்லாமியர்களைக் குறித்து அஞ்சவில்லை. ஆனால் இவர்களையும் ஆப்கானிஸ்தானிலும் அரேபியாவிலும் உள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகளையும் குறித்து சிந்திக்கிறேன். நான் நிச்சயமாகவும் நாணயத்துடனும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஆதரிக்கிறேன். இஸ்லாமிய தலைவர்களை முழுமையாக நம்ப தயாராக இருக்கிறேன். ஆனால் குரானையும் ஹதீஸையும் மீறி இவர்களால் செயல்பட முடியுமா?” (பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’, அத்தியாயம் 12)
இந்நிலையில் நாம் அலி சகோதரர்களின் அரசியல்-ஆன்மிக நிலைப்பாட்டு பரிணாமத்தையும் கவனிக்க வேண்டும். மகாத்மாவின் ஆளுமையின் தாக்கமும் மற்றொரு பக்கத்தில் வளர்ந்து வரும் தூய இஸ்லாமியவாதமும் அவர்களை இருபுறமாக இழுத்தன. இறுதியில் தூய இஸ்லாமிய அடிப்படைவாதமே வென்றது என்பது வருந்தத்தக்க உண்மை.
ஈஸாநபியும் மகாத்மாவும்:
1923 இல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா முகமது அலி தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய மௌலானா கூறினார்: “பலர் மகாத்மாவின் போதனைகளையும் அண்மைக்காலத்தின் அவர் மேற்கொண்டுள்ள வேதனை தரும் நோன்புகளையும் ஈஸா நபியுடன் (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒப்பிட்டு பேசுகின்றனர். ஈஸா நபி (அவர் மீது அமைதி நிலவுவதாக) அவரது காலத்தில் தேர்ந்தெடுத்த சமுதாய சீர்திருத்தத்திற்கான ஆயுதம் துன்பத்தின் மூலம் ஆற்றல் பெறுவதாகும், அதிகாரத்தை இதய சுத்தியால் எதிர்கொள்வதாகும்…அது மகாத்மா காந்திக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். ஆனால் நமது காலத்தில் வாழும் ஈஸா நபியினை (அவர் மீது அமைதி நிலவுவதாக)ஒத்த மனிதரை சிறை செய்வதென்பதோ ஒரு கிறிஸ்தவ அரசுக்கு விதிக்கப்பட்டிருந்தது (வெட்கம் வெட்கம் -கூட்டம்) …யூதேய தேசத்தில் ஈஸா நபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக)கால கட்டத்தை போன்றே இன்றைய இந்துஸ்தானமும் விளங்குகிறது. ஈஸாநபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) செயல்முறைகளைப் போன்றே மகாத்மா காந்தியின் முறைகளும் அமைந்துள்ளன.” “மகாத்மா காந்திக்கு ஜே” எனும் கோஷத்துடன் அந்த அழகிய உரை முடிந்தது. (காகிநாடா காங்கிரஸ் மாநாட்டு தலைமை உரை, 1923)
அலி சகோதரரர்கள் சிறையில்
27 ஜனவரி 1924 இல் உடல் நிலை மிக மோசமாக இருந்த மகாத்மா காந்தியை காண வந்தார் ஷௌகத் அலி. அப்போது அவர் குனிந்து மகாத்மா காந்தியின் கால்களை மறைத்திருந்த துணியை நீக்கி அவரது பாதங்களை முத்தமிட்டார். காணும் யாவரையும் நெகிழ வைக்கும் காட்சியாக அமைந்திருந்தது அது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஷௌகத் அலியும் முகமது அலியும். உடன் ஹக்கீம் அஜ்மல் கானும் வந்திருந்தார். துணியால் மூடியிருந்த மகாத்மாவின் பாதத்தை துணியை விலக்காமலே முகமது அலி முத்தமிட்டார். அமைதியாக அமர்ந்திருந்த அவரது முகத்தில் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. (மகாதேவ் தேசாய் ‘Day to day with Gandhi’ பாகம்-3 பக். 315-16, பாகம்-4 பக்.21)
ஜூன் 1924 இல் அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா உரையாற்றினார். தான் நடந்து வந்த பாதையின் கடுமையை அவர் விவரித்த போது அதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நெகிழ்ந்து விட்டனர். இறுதியில் இந்தக் கடுமையான காலகட்டத்தில் தம்மோடு தம் துணையாக நடந்து வந்தவர் ஷௌகத் அலி எனக் குறிப்பிட்டார். இந்த உரையில் ஒரு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரின் உரை தம் இதயத்தை தாக்கியதாக மகாத்மா குறிப்பிட்டார். இதற்காக மகாத்மாவின் உரை முடிந்த உடனே காங்கிரஸ் மேடையில் அமர்ந்திருந்த தலைவர் மௌலானா முகமது அலி முழு கமிட்டியின் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி கண்ணீர் வழிந்தோட காந்திஜியின் கால்களில் விழுந்து வணங்கினார். (மகாதேவ் தேசாய், பாகம்-4 பக்.96)
விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத…
கிலாபத் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான ‘இன்ஸாப்’ மௌலானா முகமது அலி மகாத்மா காந்தியை ‘மகாத்மா’ எனக் குறிப்பிடுவது குறித்தும் அவரை ஈசா நபி என முஸ்லீம்கள் நம்புகிற ஏசுவுடன் ஒப்பிடுவது குறித்தும் கடுமையாக தாக்கி எழுதியது. “சுவாமி, மகாத்மா என்றெல்லாம் கூறுவதற்கு பொருள் என்ன? சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” 1924 இல் ஹக்கீம் அஜ்மல் கான் நடத்திய யுனானி கல்லூரியில் காந்திஜி விடுதலை பெற்றதை கொண்டாட நடந்த நிகழ்ச்சி யில் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்தது. அந்த விழாவில் ஒரு ஹிந்து மாணவன் மகாத்மாவை ஏசுவுடன் ஒப்பிடவே இஸாமிய மாணவர்கள் அதனை தம் மதத்திற்கு செய்யப்பட்ட இழிவாகவே எடுத்துக்கொண்டு அவனை உதைக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ‘இன்ஸாப்’ மற்றும் கிலாபத் இயக்கவாதிகளாலேயே தமது சமய நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் மௌலானா முகமது அலி 1924 இல் மூன்று கிலாபத் பொதுக்கூட்டங்களில் (அலிகார், அஜ்மிர், லக்னோ) மகாத்மா காந்தியை விமர்சித்ததை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்கலாம்: “அந்த விமர்சனம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. திரு.காந்திக்கு பெரு மதிப்பு வைத்திருந்த திரு. முகமது அலி காந்தியைக் குறித்து அத்தனை மோசமான தயவு தாட்சண்யமற்ற வார்த்தைகளை அவ்வாறு கூறிடுவார் என்று எவருமே எதிர்பார்த்திடவில்லை.அமினாபாத் பூங்காவில் லக்னோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மௌலானா முகமது அலியிடம் அவர் காந்தி குறித்து கூறிய விஷயங்கள் உண்மைதானா என மீண்டும் கேட்கப்பட்டது. திரு.முகமது அலி எவ்வித தயக்கமும் மன உறுத்தலும் இன்றி பதிலளித்தார்: ‘ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்.’ (பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’, அத்தியாயம் 12)
இது குறித்து சுவாமி சிரத்தானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மௌலானா மூகமது அலி குறிப்பிட்டார்: “…நான் இஸ்லாமே கடவுளின் மிக உயர்ந்த கொடை எனக் கருதுவதால் மகாத்மாஜியின் மீதுள்ள அன்பினால் நான் அல்லாவிடம் அல்லா மகாத்மாவின் ஆன்மாவை இஸ்லாமினால் ஒளியுறச் செய்திட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.”
இறுதியாக மகாத்மா காந்தியே தமக்கே உரிய விதத்தில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மௌலானா கூறியதில் தாம் எந்த விதத்திலும் தவறினைக் காணவில்லை என்றும் மௌலானாவின் மதநம்பிக்கையை அவர் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறினார். (மகாத்மா காந்தி, ‘Collected Works’ 26:214) அத்துடன் அந்த சர்ச்சை முடிந்தது. ஆனால் அலி சகோதரர்கள் அடிப்படைவாதத்தை உடைத்து ஒரு முற்போக்கான ஜனநாயக சமரச தன்மையுடன் இஸ்லாமிய சமூகத்தை இணைப்பதற்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பில் தோற்றுப் போய்விட்டார்கள்.
கிலாபத் கலவரங்களும் மகாத்மா காந்தியின் எதிர்வினையும்
1924 இல் கோகட் கலவரம் வெடித்தது. கோகட் கலவரம் மிக முக்கியமான பிற்கால சம்பவங்களுக்கு முன்னோடியாக விளங்குவதை உணர்ந்த பாபாசாகேப் அம்பேத்கர் இந்தக் கொடூரமான கலவரத்தின் மூலம் கோகட் இந்துக்கள் அனைவருமே முழுமையாக துடைத்தொழிக்கப்பட்டு அகதிகளாக ராவல்பிண்டியில் வாழ்வதை ஒரு அறிக்கையாக அவர் வெளியிட்டார். கோகட், அமேதி, சம்பல், குல்பர்கா ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதிர்ந்து போன மகாத்மா காந்தி முகமது அலியின் வீட்டிலேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார். 21 நாட்கள் முகமது அலியின் கூரையின் கீழ் நடந்த இந்த உண்ணாவிரதத்தை எவரும் முகமது அலிக்கு எதிரானது என நினைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மகாத்மா. முகமது அலி வீட்டில் தான் மேற்கொண்ட 21 நாட்கள் உண்ணாநோன்பு குறித்து ‘யங் இந்தியா’வில் அவர் எழுதினார்: “ஆனால் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது சரிதானா? ஆம் சரிதான். எந்த ஒரு ஆன்மாவுக்கும் எதிராக இந்த உண்ணாவிரதத்தை நான் கை கொள்ளவில்லை.ஒரு இஸ்லாமியர் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது இத்தகைய விளக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. இன்றைய சூழலில் என் உண்ணா நோன்பு ஒரு இஸ்லாமியரின் வீட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் முகமது அலி யார்? இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் முகமது அலியிடம் ஒரு தனிப்பட்ட விஷயத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது ‘அலி சாகேப் என்னுடையதெல்லாம் உங்களுடையது. உங்களுடையதெல்லாம் என்னுடையது’ எனக் குறிப்பிட்டேன். பொதுமக்களுக்கு ஒரு விஷயத்தை நான் கூற விரும்புகிறேன், முகமது அலியின் இல்லத்தைக் காட்டிலும் வேறெங்கும் நான் அன்பும் அனுசரணையும் கொண்ட கவனிப்பையும் உபசரிப்பையும் பெற்றது கிடையாது. என்னுடைய ஒவ்வொரு தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன…”
மகாத்மா காந்தியும் பிரச்சனையின் வேதனைகளை உணர்ந்திடாமல் இல்லை. இந்த உண்ணாவிரதத்தினை ஏற்றெடுக்க தீர்மானித்த போது அவருடன் இருந்த மகாதேவ் தேசாய் மகாத்மா காந்தியிடம் அவர் எந்த தவறுக்கு பிராயசித்தமாக இந்த உண்ணாவிரத நோன்பினை மேற்கொள்கிறார் என கேட்டார். அதற்கு மகாத்மா காந்தி அளித்த பதில் அவரது உள்ள வேதனையை வெளிக்காட்டுகிறது.
“எனது தவறு! எனது தவறா? ஏன் நான் இந்துக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக கருதலாமே. நான் அவர்களிடம் முஸ்லீம்களுடன் அன்புடன் ஒற்றுமையாக நட்புறவு கொள்ளச் சொன்னேன். முஸ்லீம்களின் புனித தலங்களின் பாதுகாப்புக்காக அவர்களது வாழ்க்கைகளையும் சொத்துக்களையும் முஸ்லீம்களுக்காக விட்டுக்கொடுக்க சொன்னேன். இன்றைக்கும் நான் அவர்களிடம் அகிம்சையின் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேன். உயிரை அளிப்பதன் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேனே அன்றி கொலையின் மூலமாக அல்ல. ஆனால் இதில் கிடைத்த விளைவு என்ன? எத்தனை கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன? எத்தனை சகோதரிகள் என்னிடம் துயரத்துடன் வருகின்றனர்? இந்து பெண்கள் முஸல்மான் குண்டர்களை எண்ணி மரண அச்சத்துடன் வாழ்வதைக் குறித்து ஹக்கிம்ஜியிடம் நான் நேற்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல இடங்களில் அவர்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனக்கு திருவாளர்… அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவருடைய சிறு குழந்தைகளை வன்-புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி என்னால் சகித்துக்கொள்ளமுடியும்? நான் இந்துக்களிடம் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருங்கள் என எவ்வாறு கூற முடியும்? முஸ்லீம்களுடன் நட்பாக இருப்பதால் நன்மை விளையும் என நான் இந்துக்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் விளைவுகளைக் குறித்து எதிர்பார்க்காமல் நட்புறவு கொள்ள நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் ஆற்றல் இன்று என்னிடம் இல்லை முகமது அலியிடமோ சௌகத் அலியிடமோ இல்லை. யார் இன்று நான் கூறுவதைக் கேட்கிறார்கள்? இருந்தாலும் நான் இந்துக்களை இன்றைக்கும் வேண்டியேயாக வேண்டும். கொல்லாதீர்கள் இறந்துபடுங்கள். இதற்கு உதாரணமாக என்னுடைய உயிரையே நான் கொடுக்க வேண்டும்.” (மகாதேவ் தேசாய், பாகம்-5 பக்.111-112)
இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்த மௌலானா முகமது அலி டிசம்பர் 1924 பம்பாய் முஸ்லீம் லீக் மாநாட்டு மேடையில் மகாத்மா காந்தியுடன் பிரசன்னமானார். கோகட் கலவரங்களைக் குறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்: “கோகட் இந்துக்களின் துன்பங்கள் ஒன்றும் தூண்டுதல் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக அவர்களே மிக மோசமான முறையில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை தாக்கி கலவரத்தைத் தூண்டினார்கள் என்பதுடன் அவர்களே வன்முறையையும் தூண்டினார்கள்…” (சையது ஷரிஃபுதீன் ஃபிர்ஸாதாவால் தொகுக்கப்பட்ட ‘அகில இந்திய முஸ்லீம் லீக் ஆவணத்தொகுப்பு: 1906-1947 ‘ பாகம்-1 பக்.28-29)
முஸ்லீம் லீக் மாநாட்டில் முஸ்லீம் லீக்காரர்களே கோகட் கலவரத்தை நியாயப்படுத்தாத அளவுக்கு நியாயப்படுத்திய இந்த அறிக்கை மகாத்மா காந்தியை அதிர்ந்திட வைத்தது. என்ற போதிலும் சந்தேகத்தின் பலனை மௌலானாவுக்கே அளித்திட மகாத்மா மீண்டும் முன்வந்தார். அதேசமயம் மௌலானாவின் இந்த செயலைக் குறித்து தமது உணர்வுகளையும் நயமாக அவருக்கு தெரிவித்திருந்தார். முகமது அலிக்கு எழுதிய கடிதத்தில் மகாத்மா பின்வருமாறு கூறினார்:
“எனது அன்புள்ள சிநேகிதர் மற்றும் உயிர் நண்பருக்கு,
எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். ஸாஃபர் அலிகானின் (முஸ்லீம் லீக் தலைவர்) தீர்மானம் உங்களுடையதைக் காட்டிலும் நன்றாக உள்ளது. நீங்கள் நல்லதாகத்தான் நினைத்திருப்பீர்கள் ஆனால் அது முடிந்திருக்கிற விதம் மோசமாக இருக்கிறது. உங்கள் தீர்மானம் ஏதோ இந்துக்களுக்கு நேர்ந்தது அவர்களுக்கு சரியாக கொடுக்கப்பட வேண்டிய அடிதான் என்பது போலல்லவா இருக்கிறது…. ஓவ்வொரு முறை இந்த அறிக்கையை படிக்கும் போதும் அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்றாலும் இது சரியானது என உங்களுக்கு தோன்றினால் நீங்கள் இந்த தீர்மான நிலைப்பாட்டிலேயே இருங்கள். நான் உங்கள் இதயத்தினை மாற்றி அதன் மூலம் உங்கள் சிந்தனையை மாற்றப் போகிறேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதென்பதால் நான் உங்களை கைவிடப் போவதில்லை. இந்த அறிக்கை உங்கள் மனம் செயல்படும் விதத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கை அதன் வார்த்தைகள் எத்தனை மோசமானதென்றாலும்- உங்கள் நம்பிக்கையை காட்டுகிறது….இந்த விஷயங்களில் நீங்கள் இந்துக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் கலவரத்தை தூண்டவில்லை, முதல் வன்முறை அவர்கள் தரப்பிலிருந்து ஏற்படவில்லை என்பதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு நம்புவது தவறாகக் கூட இருக்கட்டுமே, என்ற போதிலும் அவர்கள் அவ்வாறு நம்புவதால் நீங்கள் இந்த மாதிரி கூறியிருக்கக் கூடாது. ” (மகாதேவ் தேசாய், பாகம்-6 பக்.49)
வரலாற்றில் நிகழ்ந்தவை இவைதாம். இன்றைக்கு மகாத்மா காந்தியின் கிலாபத் இயக்கத்தை நாம் குறை சொல்கிறோம். ஆனால் அது அன்றைக்கு காந்தி மட்டுமல்ல தீவிர தேசியவாதிகளாக கருதப்பட்ட திலகராலும், பாரதியாலும் லாலா லஜ்பதிராயாலும் ஆதரிக்கப்பட்டது என்பதை காந்தியை குறை சொல்பவர்கள் மறந்துவிடக் கூடாது. மிக மிக குறைவானவர்களே அதனை ஆதரிக்க தயங்கினார்கள். அதனை பாதகமானதெனக் கண்டார்கள். அவர்களில் இந்துக்களும் உண்டு இஸ்லாமியர்களும் உண்டு. ஆனால் மகத்தான உணர்ச்சி பெருக்கெடுப்பில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். எப்படி காந்தியை தாக்குபவர்கள் கிலாபத்துக்கு காந்தியை மட்டுமே காரணியாக்குகிறார்களோ அதே போல காந்தி பக்தர்கள் கிலாபத் இயக்கமே பிரிவினைக்கான இஸ்லாமிய தேசிய இயக்கத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது என்பதை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொள்கின்றனர். கிலாபத் இயக்கத்தில் நிச்சயமாக நம் அனைவருக்கும் படிப்பினை இருக்கிறது. அதனை மகாத்மா மீதான குற்றச்சாட்டாகவோ அல்லது அவரது சாதனையாகவோ மாற்ற வேண்டியதில்லை.
அலி சகோதரர்கள் காந்திஜியின் நம்பிக்கைக்கு தோற்றிருக்கலாம். ஆனால் இராமேஸ்வரத்து அப்துல் கலாமில் மகாத்மா வென்றிருக்கிறார்.
ஆனால் அது கிலாபத்தின் வெற்றி அல்ல. அதனை மகாத்மா தாண்டிச்சென்றதன் வெற்றி. மதச்சார்பின்மை என்பதும் சிறுபான்மையினருக்கு சலுகை என்பதும் கீழ்த்தரமான ஓட்டு வங்கி அரசியலாக்கப்பட்டுள்ளன. அது கிலாபத் இயக்கத்திலிருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளவில்லை என்பதன் அடையாளம்.
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்