மனசாட்சிச்சந்தை

ஜெ,

இந்த கேள்வியை எனக்குச்சம்பந்தமில்லை என்று தட்டிக்கழிக்காமல் பதில் சொல்லவேண்டுமென்று கோருகிறேன். காலச்சுவடு இணையதளத்தில் லீனா மணிமேகலை பற்றி ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதற்கு வினவு இணையதளம் இரு விரிவான ஆதரவுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறது. லீனாவின் நண்பர்கள் அவர் செய்ததுசரிதான் என்றவகையில் ஆதரித்து வாதிட்டு ஃபேஸ்புக்கில் நிறைய எழுதிவருகிறார்கள். குறிப்பாக பெண்ணுரிமை பேசும் முற்போக்குமுகாமைச்சேர்ந்த பெண்களெல்லாம் லீனாவுடன் ஒரே அணியாக நின்று பேசுகிறார்கள்

எனக்கு இது பெரும் குழப்பமாகவே இருக்கிறது. ஒருபக்கம் பார்த்தால் லீனாசெய்தது ஒரு நம்பிக்கைத்துரோகம், மோசடி, பிழைப்புவாதம். ஒரு குறிப்பிட்ட அரசியல்நிலைபாடை எடுத்துவிட்டு அதனைக்கொண்டு தன்னுடைய ஆளுமையை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார். ரகசியமாக அதற்கு நேர் எதிரான விஷயங்களை பணம் வாங்கிக்கொண்டு செய்கிறார். கையும் களவுமாக பிடிபட்டதும் நான் என் வாழ்க்கைக்காக செய்தேன் என்கிறார்.

ஆனால் இன்னொரு கோணத்தில் யோசித்தால் நான் அதை குற்றம்சொல்லமுடியாது. நான் ஒரு மோசமான சர்வதேசநிறுவனத்திலே வேலை செய்கிறேன். அவர்கள் உலகம் முழுக்க பலவிதமான சுரண்டல்களைச் செய்பவர்கள். அவர்களின் கையிலுள்ள ரத்தத்தில் எனக்கும் பங்குண்டு. நான் எப்படி லீனாவை குற்றம்சாட்ட முடியும்?

நான் இந்த வம்புகளில் நீங்கள் தலையிடவேண்டும் என்று சொல்லவில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கிறேன்

பாண்டியன் எம்.கெ.

அன்புள்ள பாண்டியன்,

நீங்கள் எழுதும் முதல் கடிதம் இது என நினைக்கிறேன். ஆகவே இந்த கோரிக்கையின் உண்மையை நான் ஏற்கிறேன். மேலும் எனக்கே இந்த விஷயம் என்னை ஆழமாக நோக்கிக்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

பலதருணங்களில் இத்தகைய கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டுள்ளன. தங்களைப்பற்றி இவ்வாரு கேட்கும் ஒருவரிடம் நான் என்னைப்பற்றி மட்டுமே சொல்லமுடியும். நான் என்ன செய்தேன், என்ன செய்ய முடிந்தது என்பதைப்பற்றி மட்டும்.

கொஞ்சகாலம் முன்பு என்னைப்பற்றி வந்த இரு குற்றச்சாட்டுகளைப்பற்றிச் சொல்கிறேன். மணிரத்னம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக படம் எடுத்தவர். ரிலையன்ஸ் ஒரு சுரண்டல் கார்ப்பரேட் நிறுவனம். நான் மணிரத்னத்துக்காக படம் எழுதுகிறேன். ஆகவே நான் சுரண்டலுக்கு ‘விளக்கு’ பிடிப்பவன்.

இன்னொரு விமர்சனம், நான் சிந்துசமவெளி படத்துக்கு எழுதினேன் என்பது. அந்தப்படம் நான் எழுதியதல்ல என்பதும், அந்தப்படத்தில் பங்களிப்பாளர்களின் பெயர்களில் என்பெயர் சொல்லப்படவில்லை என்பதும், நான் அந்தப்படத்தின் முன்னர் உத்தேசிக்கப்பட்ட ஒரு வடிவையே எழுதினேன் என்பதும் அனைவருக்குமே தெரியும். [சிந்துசமவெளியின் மூலக்கதை மலையாளத்தில் வெளிவரவுள்ளது]

நான் வசனம் எழுதி வந்துள்ள படங்கள் இரண்டுமே [நான் கடவுள், அங்காடித்தெரு ] வழக்கமான தமிழ் வணிகப்படங்கள் அல்ல. அவை திரையில் அதுவரை பேசப்படாத ஒடுக்கப்பட்ட மக்களையும் விளிம்புநிலை மக்களையும் பற்றி தீவிரமாகவும் பரிவுடனும் பேசுபவை. அப்படங்கள் என்னுடைய உருவாக்கங்கள் அல்ல, அவற்றில் என் பங்கு மிக எல்லைக்குட்பட்டது என்றாலும் அவற்றில் முடிந்தவரை என் செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறேன். தமிழ் திரைச்சூழலில் எந்த ஒரு படைப்பாளியும் தன் பங்களிப்பைப்பற்றி பெருமிதம் கொள்ளத்தக்கவை அப்படங்கள். அதுவும் அனைவருக்கும் தெரியும்

ஆனால் ஒவ்வொரு முறையும் என் திரைப்பங்களிப்பைப்பற்றி பேசும்போதும் ஒரு பெரும் கூட்டம் சிந்துசமவெளியின் வசனகர்த்தா என்று மட்டுமே என்னை அடையாளப்படுத்துவார்கள். அந்த அவதூறு வழியாக என்னை பிழைப்புவாதி என முத்திரையடித்தபின்னரே விஷ்ணுபுரத்தைப்பற்றிக்கூட பேசுவார்கள்.

நான் திரை எழுத்தை எனக்கான தொழிலாகவே கொண்டிருக்கிறேன். அதை ஒரு புரட்சிநடவடிக்கை என்றோ கலைச்சேவை என்றோ சொல்லிக்கொள்ள மாட்டேன். திரைப்படத்தை ஒரு மதிப்பான கேளிக்கைவடிவமாகவும் அந்த எல்லைக்குள் முடிந்தவரை சமூகசித்திரத்தை அளிக்க முடியக்கூடியதாகவுமே அணுகுகிறேன். ஒரு தொழிலில் நான் கடைப்பிடிக்க நினைக்கும் அறத்தையும் கௌரவத்தையும் உறுதியாகவே கடைப்பிடிக்கிறேன்.

அதை திட்டவட்டமாக , எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் சொன்னபின்னரே அதில் ஈடுபடுகிறேன். அதை என்னுடைய திரைப்படங்களை வைத்து எவரும் மதிப்பிடலாமென சொல்கிறேன். ஆனால் என்னை ஒரு கீழ்த்தர கலைவியாபாரி என முத்திரைகுத்த பொய்களை துணைகொள்கிறார்கள்.

அதைவிட அற்புதமான ஒரு குற்றச்சாட்டு 2ஜி ஊழல் வெடித்தபோது அந்த ஊழல் நிகழ்ந்த துறையில் நான் அடிப்படை ஊழியனாக பணியாற்றியதால் அதற்கு நானும் பொறுப்பு என்றும் நான் பிழைப்புக்காக அங்கே ஒட்டியிருக்கிறேன் என்றும் சொல்லப்பட்டதுதான். என்ன சொல்ல!

ஆச்சரியமென்ன என்றால் கிட்டத்தட்ட அந்த கூட்டம்தான் இன்று லீனா செய்ததில் என்ன தப்பு என் வாதாடிக்கொண்டிருக்கிறது. டாட்டா செய்த நேரடிக்கொடுமைகளை பொய்கள்மூலம் நியாயப்படுத்தியது தவறு என்றால் டாட்டாசுமோ வண்டியிலே பயணம்செய்வதும் தவறுதானே என்கிறார்கள். டாட்டாவின் பணத்தை நேரடியாக வாங்கவில்லையே, இன்னொருவர் கொடுத்து அந்தப்பணம்தானே கையில் வாங்கப்பட்டது என்கிறார்கள். என்னென்ன தர்க்கங்கள், அந்தர்பல்டிகள்! தமிழில் படைப்பூக்கமும் கற்பனையும் இல்லை என எவர் சொன்னது?

இந்த ஒட்டுமொத்தக்கூட்டமே வெறும் அற்ப பிழைப்புவாதிகள், தங்கள் சில்லறை உலகில் சில்லறை நோக்கங்களுக்காக மட்டுமே வாழ்பவர்கள் என்பதே என்னுடைய புரிதல். தங்கள் சிறுமைகளை தங்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் மறைத்துக்கொள்ளவே பிறர் மீது குற்றம்சாட்டுகிறார்கள் என்பதே. இவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவே பொதுவெளியில் வந்து எதையாவது பேசுகிறார்கள். ஆகவே பிறரும் அப்படித்தான் செய்கிறார்கள் என மனதார நம்புகிறார்கள். அவர்கள் முயல்வதெல்லாம் அவர்களைப்போலத்தான் நாமும் என்று நிரூபிக்கத்தான்.

ஆகவே இந்த குற்றம்சாட்டும் கூட்டத்தை கருத்தில்கொண்டு நாம் நம் முடிவுகளை எடுப்பதைப்போல அபத்தம் ஒன்றும் இல்லை. நாம் என்னதான் செய்தாலும் அவர்கள் நம்மை அவதூறு செய்வதை நிறுத்தப்போவதில்லை. அவர்களில் ஒருவர் எத்தனை கீழ்த்தரமாக மாட்டிக்கொண்டாலும் அதை நியாயப்படுத்த கூசப்போவதுமில்லை. இவர்களின் முற்போக்கு என்பது முகத்திரை மட்டுமே.

நீங்கள் யார், உங்கள் எல்லைகள் என்ன கட்டாயங்கள் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு செயல்படும்போது எந்தப்பிரச்சினையும் இல்லை. நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று வைப்ப்போம், ‘நான் இந்த நிறுவனத்திலே என் பிழைப்புக்காக வேலைசெய்கிறேன். இன்னின்ன சமரசங்களை நான் செய்யவேண்டியிருக்கிறது. ஆனால் என் கருத்து இது. இதில் நான் உண்மையுடன் இருக்கிறேன். இதில் நான் சமரசங்கள் செய்வேனென்றால் அதை நான் மறைக்கப்போவதில்லை. என் பலங்களும் பலவீனங்களும் வெளிப்படையானவை’ அதில் என்ன பிழை? அதுதான் உங்களுக்குச் சாத்தியம்.

அப்போது நீங்கள் எவரையும் ஏமாற்றவில்லை. பொதுமேடையில் பொய் சொல்லவில்லை. எந்த ஒரு மனிதனும் இருத்தலுக்கான சமரசங்கள் இன்றி வாழமுடியாது. முழுப்புரட்சியாளர்களாக வாழ்ந்த மாமனிதர்களின் வாழ்க்கைகளில் கூட அவர்கள் பிரியத்துக்காக, காதலுக்காகச் செய்துகொண்ட சமரசங்களின் உட்கதைகள் உள்ளன. எளியமனிதர்களின் சமரசங்கள் அவர்களுக்கானவை மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களுக்குமானவையும்கூட.

லீனாவின் பிரச்சினை சமரசமல்ல, போலிவேடம்தான். இரண்டும் முற்றிலும் வேறானவை. ஒருவர் தன்னை ஒரு குறிப்பிட்ட வகையில் காட்டிக்கொள்கிறார். ஆனால் அந்தரங்கத்தில் அதற்கு நேர் எதிரானவகையில் செயல்பட்டு பணமீட்டுகிறார். இது ‘இன்றியமையாத சமரசம்’ என்றால் கொள்கை என்றால் என்னதான் அர்த்தம்? இவர் சொன்ன கொள்கையை இவர் நம்புகிறார் என்று எண்ணி அதனுடன் விவாதித்தவர்களுக்கெல்லாம் என்ன பதில்? இப்படிச் செய்யலாம், இப்படித்தான் செய்வேன் என்று இவர் வாதிடுகிறார் என்றால் நாளை இவர் சொல்லப்போகும் கொள்கைகளை எப்படி எடுத்துக்கொள்வது?

ஒரு மாவோயிஸ்ட் சிந்தனையாளர் சல்வா ஜூடும்மிடம் இருந்து அரிசிபருப்பு பெற்றுக்கொண்டார் என்றால் அவரை கொள்கையில் பத்துசதவீதம் சமரசம் செய்துகொண்டவர் என்றா சொல்வோம்? லீனா இன்னும் அற்புதமான விளக்கத்தை அளிக்கிறார். சல்வா ஜூடுமின் பணத்தின் ஒரு பகுதியை அவர் மாவோயிஸ தரப்புக்கு- அதாவது தன் சட்டைப்பைக்கு- கொண்டு வருகிறாராம்!

சந்தர்ப்பங்களை தவற விடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். அரசுத்துறையில் வேலைபார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ‘சந்தர்ப்பங்கள்’ வந்து காத்து நிற்கின்றன. இருந்தும் இன்றும் அரசூழியர்களில் கால்வாசிப்பேராவது அந்த சந்தர்ப்பங்களை தவறவிடக்கூடிய ‘ பிடிவாதமான முட்டாள்களாக’ இருப்பதனால்தான் இந்த நாடு இன்னுமிருக்கிறது. அவர்களை நம்பித்தான் நீங்களும் நானும் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறோம்.

நீங்கள் ஒரு நிறுவனத்துக்கு உங்கள் உழைப்பை விற்கிறீர்கள், அதன் ஊதியத்தில் வாழ்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் மொத்த தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்கவேண்டும் என எவரும் சொல்லமுடியாது. இன்றைய பொருளியல் அமைப்பில் உழைப்பை விற்றே வாழமுடியும். வாங்குபவர்களை தேர்வுசெய்யும் உரிமை நம்மிடம் இல்லை.

ஆனால் நீங்கள் அந்த நிறுவனத்தை நியாயப்படுத்தி ஒரு கட்டுரை எழுதி பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால் அது வேறு. அது உழைப்பை விற்பதல்ல, கருத்தை விற்பது. கொள்கையை , ஆளுமையை, அடையாளத்தை விற்பது. அதன்பின் நீங்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

லீனாவுக்காக குரல்கொடுக்கும் எல்லா ‘முற்போக்கு’ ‘பெண்ணிய’ ’பெரியாரிய’ ‘தமிழிய’ வாதிகளும் அவரவர் பங்குகளை பெற்றுக்கொண்டவர்கள். பெற்றுக்கொள்ள முண்டியடிப்பவர்கள். நம்மிடம் பேசப்படும் கருத்துக்களை யார்யாரோ எங்கெங்கோ இருந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இவர்களின் மூளைகள் எல்லாமே ஒரு பெரும் சந்தையில் விற்பனைக்காக பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நன்றாகவே அறிவேன். அதை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்ச்சூழலில் பேசப்படும் கருத்துக்களுக்குப் பின்னால் ஃபோர்ட் பவுண்டேஷன் போன்று திட்டவட்டமான ஏகாதிபத்தியப்பரப்பு நோக்கங்கள் கொண்ட அமைப்புகளின் நிதியுதவிகள் உண்டு என நான் அறிவேன். அந்த நிதி பற்பல மடைகளின் வழியாக உருமாறி நம் இதழ்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வந்து சேர்கிறது. நூல்களுக்கான நிதியுதவிகள், கருத்தரங்க அழைப்புகள், கருத்தரங்கக் கட்டுரைகளுக்கான ஊதியங்கள். ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவிகள், நூல்கள் சேகரிப்புக்கான ஊக்கத்தொகைகள் என பல வகைகளில் இந்த நிதி கொடுக்கப்படுகிறது.

இந்த நிதியைக் கொண்டு இவர்கள் விலைபோகிறார்கள் என எளிதில் நிரூபிக்க முடியாது. ஏனென்றால் இவை பொதுவான ’நல்ல நோக்கம் கொண்ட’ அமைப்புகளின் நிதியாக உருமாற்றப்பட்டிருக்கும். பல்கலைகழகங்களின் பேரில் கொடுக்கப்படும். யார் திரும்பத்திரும்ப இந்நிதிகளை பெறுகிறார்கள் ,எப்படி என்ற வினாவே சரியான பதிலை பெற்றுத்தரும். நிதியைப்பெற்றபின் அவர்கள் எடுக்கும் அரசியல் நிலைபாடுகள் என்ன என்பது தெளிவை அளிக்கும்.

லீனாவை குற்றம் சாட்டும் காலச்சுவடு எந்தெந்த ஊற்றுகளில் இருந்து எந்தெந்த நிதியை பெற்றது என லீனா கொஞ்சம் முயற்சித்தால் எடுத்து நம் முன் போட முடியும். [அந்த அபாயகரமான முயற்சியில் லீனா ஈடுபடமாட்டார்தான்!] சொல்லப்போனால் சென்ற இருபதாண்டுகளில் யாருக்கெல்லாம் எங்கிருந்தெல்லாம் பணம் வந்தது என்பது என்னைப்போல பலவகை நண்பர்கள் கொண்ட அனைவருக்கும் தெரிந்தேதான் இருக்கிறது. [ஏனென்றால் அவையெல்லாமே எனக்கும் ஆசைகாட்டப்பட்டிருக்கின்றன]

ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப்பார்ப்போம்))).

*

நம்முடைய சொந்த மனசாட்சிக்கு நாம் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கிறோம் என்பதே முக்கியம் என நான் நினைக்கிறேன். நான் எழுதவந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு முடிவை எடுத்தேன். ‘எழுத்தாளனின் தனிப்பட்ட அந்தரங்கத்துக்குள் செல்ல வாசகனுக்கும் விமர்சகனுக்கும் உரிமை இல்லை. ஆனால் எழுத்தாளனாகிய என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே ரகசியமல்ல. எதையும் எப்போதும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்போவதில்லை. என்னை எவரும் எப்போதும் ஆராயலாம்’ என 1992ல் எழுதினேன். அது எனக்குநானே போட்டுக்கொண்ட ஒரு விதி.

அது பெரும் பொறுப்பு, ஆனால் அபாரமானதோர் தன்னம்பிக்கையை அளிக்கிறது. நான் என்ன சொல்கிறேனோ அதுவே நான். என்ன முத்திரை குத்தப்பட்டாலும் சரி, எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும் சரி ,நான் என்ன நினைக்கிறேனோ அதை துணிந்து சொல்வதென்பது நான் கொண்டிருக்கும் சுயவிதிகளில் ஒன்று. பலசமயம் அவசரப்பட்டு சொல்லிவிடுவேன் என நான் அறிவேன். ஆனால் தோன்றியதுமே சொல்லாவிட்டால் விளைவுகளை எண்ணி சமரசம்செய்துகொள்ள நேருமோ என்ற அச்சம் என்னை எப்போதுமே ஆட்டுவிக்கும். ’என்ன, பயப்படுகிறேனா’ என நானே கேட்டுக்கொள்வேன், உடனே சொல்லிவிடுவேன். தப்பாகப்போனால் சரிதான் தப்பாகப்போய்விட்டது என்று சொல்லவேண்டியதுதானே. இத்தனை முத்திரைகளுக்குப்பின் இனி எதை அஞ்சவேண்டும்?

என் குழப்பங்களை, தயக்கங்களை, சமரசங்களை, கொந்தளிப்புகளை அப்பட்டமாக முன்வைப்பதில் ஒரு மகத்தான விடுதலையுணர்வு இருப்பதை கண்டுகொண்டேன். அது மலையேறுகிறவன் ஒவ்வொரு அடியிலும் தேவையற்றவற்றை உதறிவிட்டுச்செல்வதைப்போன்றது. நான் நம்புகிறவற்றை ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயன்றிருக்கிறேன் என எந்த இடத்திலும் நான் தலை தூக்கி நின்று சொல்லியிருக்கிறேன்.

என் வாழ்க்கையில் சமரசம் என நான் முக்கியமாக கருதும் இரு விஷயங்கள் உண்டு. ஒருவேளை நான் எதிர்கொண்டிருந்தால் என் கொள்கைப்படி மோதி எதிர்த்தாகவேண்டிய கட்டாயம் ஏற்படும் தருணங்களை எல்லாம் முற்றாகத் தவிர்த்து தாண்டி வந்திருக்கிறேன். நான் பணியாற்றிய அலுவலகத்தில் நான் துளியிலும் துளியான எளிய குமாஸ்தா மட்டுமே. அதன் நிர்வாகத்தின் எந்த பகுதியிலும் எனக்கு பங்கிருக்கவில்லை. ஆகவே ஊழலையோ முறைகேடுகளையோ நான் காணவே நேரவில்லை. அப்படி காணநேருமென்ற அச்சம் காரணமாகவே அடுத்தகட்ட பதவிக்கு நான் முயல்வேயில்லை, அது மிகமிக எளிதாக இருந்தும்கூட. அந்த ஒதுங்கிப்போதல் ஒரு சமரசமாகவே எனக்குப்படுகிறது.

இன்னொரு சமரசம் என்பது, நான் லஞ்சம் அல்லது ஊழல் போன்றவற்றை தனிவாழ்க்கையில் சந்திக்காமல் தவிர்த்து வருவது. கூடுமானவரை அந்த வகையான அன்றாடச்செயல்கள் எதையுமே செய்வதில்லை. அந்த தருணங்கள் அமையும் என்றால் அதை தவிர்க்க எழுத்தாளன் என்ற அடையாளத்தை பயன்படுத்திக்கொள்வேன். அது உருவாக்கிய தொடர்புகளையும் பயன்படுத்திக்கொள்வேன்.

எந்த ஒரு நேர்மையான காந்தியவாதியும் மார்க்ஸியரும் இவற்றைச் செய்திருக்க மாட்டார்தான். ஆனால் நான் என்னை எழுத்தாளனாகவே எப்போதும் கண்டேன், போராளியாக அல்ல. போராடுவது என் இயல்புக்கு முடியாத காரியம். நான்கோழை அல்ல, ஆனால் தனிமைவிரும்பி. உண்மையில் நடைமுறைவிஷயங்களை விட கற்பனை உலகமே எனக்கு பிடித்திருக்கிறது. கனவுகளில் வாழவும் , கலைகளில் தோயவும், பொறுப்புகளற்று அலைந்து திரியவும் விரும்புபவன். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ முடிந்தவரை முயல்பவன். அதற்காக உலகம் சார்ந்த பொறுப்புகளை கூடுமானவரை தவிர்த்துவருபவன்.

ஆம்,என் நீதியுணர்வை சீண்டாமல் வெளியுலகை கவனமாக விலக்கிக்கொண்டு எழுதியும் வாசித்தும் இதுவரை வந்திருக்கிறேன். நான் போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு சில நாட்களுக்குள் சலிப்பிலும் தனிமையிலும் மூழ்கிவிடுவேன். என் உணர்ச்சிகளை நிலையாக நீடித்து கொண்டுசெல்ல என்னால் முடிவதேயில்லை.

இக்காரணத்தால் நான் சேவை என எதையுமே இன்றுவரை செய்ததில்லை. பணம் கொடுத்திருக்கிறேன், அது சேவை அல்ல. சேவைக்காக என்னுடைய அந்தரங்கத்தனிமையை கலைத்துக்கொள்ள என்னால் முடிவதில்லை. மானுடசேவை செய்ய வேண்டுமென, போராளியாக ஆகவேண்டுமென கனவுகள் கொண்டவ்னாக இருந்திருக்கிறேன். ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை.என் இயல்பை நான் நியாயப்படுத்தவில்லை. என் எழுத்துக்களின் பொருட்டு இச்சமரசத்தை உலகம் மன்னிக்கவேண்டுமென்றே கோருவேன்.

நான் ஒருபோதும் என்னை ஒரு புரட்சியாளனாக, கலகக்காரனாக, மானுடநேயத்தில் தோய்ந்தவனாக முன்வைத்துக்கொண்டதில்லை. ஏன் , நாட்டில் முக்கால்வாசி அறிவுஜீவிகளைப்போல முற்போக்காளனாக சீர்திருத்தவாதியாகக்கூட காட்டிக்கொண்டதில்லை. குழப்பங்கள் நிறைந்த , எல்லா பக்கங்களிலும் பார்வையை ஓட்டிப்பார்க்கக்கூடிய, தயக்கங்கள் , கோபங்கள் , கொந்தளிப்புகள் நிறைந்த ஒருவனாகவே என்னை முன்வைக்கிறேன். ‘இதோ சரியான பார்வை’ என சொல்லமாட்டேன். ‘இதையும் பரிசீலியுங்கள்’ என்பதே என் தொனி.

ஆகவே எந்த ஒரு உண்மையான சமூகப்போராளியையும் ஒருவித பிரமிப்புடனேயே நான் பார்க்கிறேன். பெரும்பாலும் அவர்கள்மீது விமர்சனங்கள் இல்லாத வழிபாட்டுணர்வையே கொண்டிருக்கிறேன். இருபதாண்டுகள் என்னுடன் பணியாற்றிய தோழர் ஆறுமுகம் கூட அவ்வகையில் எனக்கு ஒரு மாமனிதர்தான். இன்றுவரை நான் சந்தித்த எந்த ஒரு மானுடசேவையாளரையும் எவ்வித தன்னகங்காரமும் இன்றி காலில் விழுந்து வணங்கியிருக்கிறேன். அது ஒரு மன்னிப்புகோரல். அறம் வரிசையின் பல கதைகள் அந்த ஆழ்ந்த குற்றவுணர்ச்சியையே தொடக்கப்புள்ளியாகக் கொண்டவை.

நேர்மையை வாழ்க்கையாக கொள்வதும் உலகியல் சார்ந்த வாய்ப்புகளை கொள்கையின் பொருட்டு தவிர்ப்பதும் வாயால் சொல்வதைப்போல எளிய விஷயம் அல்ல என்பதே என் சொந்த அனுபவம். சர்வசாதாரணமாக கொள்கையைப்பற்றி சொல்லி பிறரை விமர்சனம் செய்பவர்கள் இச்சிக்கல்களை எளிதில் தாண்டியவர்களா என எண்ணி ஐயம் கொள்கிறேன்

மிகச்சாதாரணமான, பணச்செலவு அனேகமாக இல்லாத வாழ்க்கையை அமைத்துக்கொண்டதன்மூலம் நான் பலவற்றை எளிதில் தாண்டிவந்தேன். இன்றும் கஞ்சனாக, தேவைகள் அற்றவனாக இருப்பதே என் பலம். ஆனால் சில தருணங்களிலேனும் மிக உச்சகட்ட அழுத்ததை நான் உணர்ந்திருக்கிறேன். தொண்ணூறுகளில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பெரும் விருது ஒன்று எனக்கு அளிக்கப்பட இருந்தது. அரசியல்பின்னணி கொண்ட விருதுகளை ஏற்கலாகாது என்பது என் கொள்கை. ஆனால் அந்த மறுப்பை தெரிவிக்க நான் ஒரு வாரம் என் ஆசையுடன் போராடினேன்.

அந்த முடிவை அருண்மொழியிடம் சொன்னபோது ஒரே கணத்தில் ‘புடிக்கலைன்னா வேணாம்னு சொல்லிடு’ என்றாள். களங்கமற்றதன்மை அறிவார்ந்த தர்க்கத்தைவிட நேர்மைக்கு நெருக்கமானது என நான் உணர்ந்த தருணம் அது.

அதேபோல முதன்முதலாக இஸ்ரேலுக்கு ஒரு கருத்தரங்க அழைப்பு 1996ல் வந்தபோது அதை தவிர்ப்பதும் எனக்கு பெரும் மனக்கொந்தளிப்பை அளித்ததாகவே இருந்தது. எப்போதும் பயணங்களை விரும்பும் நான் என் குறைந்த வருமானத்தில் ஒருபோதும் சாத்தியமாகியிருக்காத ஒரு வெளிநாட்டுப்பயணத்தை தவிர்த்ததை எண்ணி பின்னர் அந்தரங்கமாகக் கண்ணீர்விட்டிருக்கிறேன். ஒருபோதும் இந்திய எல்லையை தாண்டப்போவதில்லை என ஏங்கியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வெறும் வேடிக்கை என இப்போது படுகிறது.

இந்த வருடம் எனக்கொரு பெரும் வாய்ப்பு வந்தது. நண்பர்கள் அறிந்ததுதான், ஒரு பிரெஞ்சு இயக்குநர் என்னை அவரது பிரெஞ்சு-இந்தியத் திரைப்படத்துக்காக அணுகினார். பொருள் அளவில் மகத்தான வாய்ப்பு அது. அதைவிட உலகசினிமாவை நோக்கித் திறக்கும் ஒரு வாசல். அந்த வாசல் வழியாக நான் செல்லக்கூடிய தூரம் சாதாரணமல்ல. ஆனால் அவரது நோக்கம் முதல்நூற்றாண்டில் இந்தியாவுக்கு தாமஸ் வந்தார், கிறித்தவம் இந்துமதத்தை கட்டமைத்தது என்ற பொய்யை வரலாறாக சமைப்பது. என் பதிலைச் சொல்ல சில கணங்கள் கூட தேவைப்படவில்லை.

அந்த கணங்களில் கொஞ்ச நேரம் நின்று யோசித்தால் நூற்றுக்கணக்கான வாதங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும். அவை எல்லாமே நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வதே. வாழ்க்கையின் சோதனை முனைகள் அவை. அங்கே ஒருவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதைக்கொண்டே அவரது தகுதி அளக்கப்படுகிறது.

பலவழிகளில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்ட எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். நான் என் சொந்தப்பணத்தையே எப்போதும் இலக்கியத்துக்காகச் செலவிட்டு வருகிறேன். என் கருத்துக்கள் எப்போதும் என்னுடையவையாகவே இருக்கவேண்டுமென நினைக்கிறேன். கருத்துக்களுக்காக எந்த தரப்பிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளலாகாது என்பது என் உறுதி.

ஒன்றைச் சொல்கிறேனே, ஓர் எழுத்தாளனாக என் முன் வைக்கப்பட்ட அளவுக்கு சர்வதேசக் கருத்தரங்க அழைப்புகள், பயணங்களுக்கும் நூலாக்கத்துக்குமான நிதியுதவிகள், அரசாங்கநிதி சார்ந்த வாய்ப்புகள் வேறெந்த தமிழ் எழுத்தாளருக்கும் அளிக்கப்பட்டதில்லை. காரணம் தமிழில் என்னளவுக்கு தீவிரமாக பாதிக்கக்கூடிய மொழி கொண்ட இன்னொரு படைப்பாளி இல்லை என்பதே

ஆனால் நான் இக்கணம் வரை எதையும் ஏற்றுக்கொண்டதில்லை. விருதுகளைக்கூட வெகுவாக ஆராய்ந்தபின்னரே ஏற்றுக்கொள்கிறேன். நான் மறுத்த விருதுகள் அதிகம். ஆம், மிகுந்த மனப்போராட்டத்துடன்தான் பலவற்றை மறுத்தேன். ஆனால் மறுத்தேன் என்பதே இன்று முக்கியமானதாகப் படுகிறது.

இப்போது பாருங்கள், இந்த வினவுவும் காலச்சுவடும் என்னை சகட்டுமேனிக்கு வசைபாடியிருக்கிறார்கள்.கருத்துக்களை திரித்திருக்கிறார்கள். ஆனால் என்னைப்பற்றி எதையுமே ‘கண்டுபிடிக்க’ வேண்டிய அவசியமில்லை. நானே அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன். நான் எப்படியோ அப்படி என்னை முன்வைத்திருக்கிறேன். நான் விரும்பும் கிழவர் செய்ததும் அதைத்தானே)))

நான் இடதுசாரி அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களை நான் அழிவுசக்திகளாக எண்ணவுமில்லை. இந்தப்பொருளியல் கட்டமைப்புக்குள் செயல்படும் அமைப்புகள் இதன் பொருளியல்விதிகளின்படியே செயல்பட முடியும். ஆகவே ஒரு பொதுச்செயல்பாட்டுக்காக கார்ப்பரேட் அமைப்புகளின் உதவியைப் பெறுவது தவிர்க்கக்கூடியதும் அல்ல. ஆனால் நம் நோக்கத்துக்காக பெருவணிக நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கும், நாம் அவற்றின் கருவிகளாகச் செயல்படுவதற்கும் இடையே மிகப்பெரியவேறுபாடுள்ளது.

உதாரணமாக, காலச்சுவடு போன்ற இதழ்கள் பெறும் விளம்பரங்களைச் சொல்லலாம். அந்த விளம்பரங்களை அளிக்கும் நிறுவனங்களின் எல்லா கொள்கைகளையும் செயல்களையும் காலச்சுவடு ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் என்று சொல்வதைப்போல கேனத்தனம் எதுவும் இல்லை. எந்த இதழும் அதன் விளம்பரங்களை ஒரு இன்றியமையாத சமரசமாகவே ஏற்றுக்கொள்கிறது. அவற்றின் கருத்துக்களுக்கு அது பொறுப்பேற்றுக்கொள்வதில்லை.

ஆனால் காலச்சுவடு அந்நிறுவனத்துக்குச் சாதகமான கருத்தை உருவாக்குவதற்காக அந்நிறுவனத்தின் நிதியைப்பெற்றுக்கொண்டதென்றால், அதை மறைவாகச் செய்தது என்றால் அது கருத்தியல் மோசடியே. அப்போது அந்நிறுவனம் செய்யும் எல்லா செயல்பாடுகளுக்கும் அது பொறுப்பேற்றுக்கொண்டாக வேண்டும். நான் ஒரு சிற்றிதழுக்கு ஒரு வணிகநிறுவனத்தின் விளம்பரத்தை வாங்குவேன். ஆனால் விஷ்ணுபுரம் அமைப்புக்காக அந்நிறுவனம் நிதியளித்ததென்றால் ஏற்க மாட்டேன். அதன் பின்னால் உள்ள நிபந்தனை என் கருத்துநிலைக்கு விலை போடுகிறது என்பதனால். ரகசியமாக நிதி பெற்றுக்கொள்வதை மோசடி என்றே சொல்வேன்.

இந்த வேறுபாடு மிக அப்பட்டமானது. நம்மூர் பிழைப்புவாதிகள் இந்த வேறுபாட்டை மழுங்கடித்தபடித்தான் எப்போதும் முற்போக்குப்பேச்சை பேசுகிறார்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் ரகசியமாக கைநீட்டியிருக்கிறார்கள். அந்தப்பசப்புகளை நாம் மிக எளிதாக அடையாளம் காணலாம்.

பாண்டியன், முடிவுகளை எடுப்பதில் முதலிலும் கடைசியிலும் கருத்தில்கொள்ளவேண்டியது உங்கள் அந்தரங்கமே. நீங்கள் இடதோ வலதோ பிற்போக்கோ முற்போக்கோ எதைச் சொல்கிறீர்களோ அதுவாக இருக்க உங்கள் மனசாட்சிதான் ஆதாரம். அதற்கு ஒரு பலம் உண்டு, மெல்லமெல்ல அது தெரியவரும்.

ஜெ

முந்தைய கட்டுரைநாஞ்சில் பாஸ்டனில்…2 -அர்விந்த்
அடுத்த கட்டுரைவணக்கம் தமிழகம்