அன்புள்ள ஜெ.மோ,
நான் சு.ரா. வின் தீவிர ரசிகன். ஏறக்குறைய அவரது சிறுகதைகள், கட்டுரைகள் அனைத்தும் படித்து விட்டேன். ஆறு மாதத்திற்கு முன்பு ஜே.ஜே. சிலகுறிப்புகள் படித்தேன். கடினமான நடை என்றாலும், அவர் கூறியிருந்தது போல் என் சிந்தனையை பன் மடங்காகத் தூண்டிய நாவல் அது.. ஒரு புளியமரத்தின் கதையை ஒரு மாதத்திற்கு முன்பு வாசித்தேன்.. ஆனால் அவருடைய முதல் நாவலான இந்த புளியமரத்தின் கதை ஒரு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது என்று சொல்ல முடியாது… ஆசான் என்ற கதாபாத்திரம், தோப்பைப் பற்றிய வரலாறு, அதை அழித்து பூங்கா கட்டுவது, பூங்காவில் இடம்பெறும் நிகழ்வுகள் என நாவலின் பாதி வரையில் ஒரு தத்துவார்த்த மேற்கோளுடன் கூறிச்செல்லும் நாவல் அரசியல் பின்னணி, கடைக்காரர்களின் சண்டை என சற்று அதன் தரத்தில் பின் தங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது… ஒரு சில இடங்களில் ஏற்பட்ட ஒரு சில அறிவார்த்தமான முடிச்சுகள் அருமையாக இருந்தது.. ஆனால் ஜே.ஜே. சிலகுறிப்புகள் கொடுத்த வாசிப்பனுபவம், ஒரு புளியமரத்தின் கதை கொடுக்கவில்லை.. எனக்கு சு.ரா. வின் எழுத்து நடை மிகவும் பிடிக்கும் (ஆரம்ப கால சுலபமான நடையும் பிடிக்கும், கடினமான நடையும் பிடிக்கும்)… ஆதலால் எந்தத் தொந்தரவும் இன்றி வாசித்து விட்டேன்..
நீங்கள் வல்லினம் விழாவில் உரையாற்றிய போது, ஒரு புளியமரத்தின் கதை தமிழ் இலக்கியத்தின் ஒரு தலை சிறந்த நாவல் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்… அந்த அளவுக்கு அதனுள் சரக்கு இல்லை என்பது என் கணிப்பு.. அதை விட தலை சிறந்த நாவல்கள் நிறைய இருக்கின்றன என்று நினைக்கிறேன்.. அந்த நாவலை தாங்கள் தலை சிறந்தது என்று சொன்னதற்கு விளக்கம் அளிக்க இயலுமா?
எஸ். பிரசன்னா
அன்புள்ள பிரசன்னா,
என்னுடைய கருத்துக்களை ஏற்கனவே பல தளங்களில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். ஆயினும் மீண்டும். ஏனென்றால் ஒரு இலக்கியச்சூழலில் இலக்கிய ஆக்கங்களைப்பற்றிய பேச்சு எப்போதும் இருந்துகொண்டே இருப்பதென்பது மிக அவசியமானது. அது இலக்கியம் மீதான ஆர்வத்தை தக்கவைக்கும் அடிப்படைத்தேவைகளில் ஒன்று.
‘ஒருபுளியமரத்தின் கதையை’ தமிழின் ஆகச்சிறந்த நாவல் என்று நான் சொல்லவில்லை. இலக்கியக் கருத்துக்களை செவிவழிச்செய்தியாக, வதந்திகளாகத் தெரிந்துகொள்வதும் அதனடிப்படையில் சிந்திப்பதும் பெரும் நேரவிரயம். பெரும்பாலான கருத்துக்கள் கொஞ்சம் குறைபடுத்தப்பட்டும் திரிக்கப்பட்டுமே புரிந்துகொள்ளப்படுகின்றன. அவை நாலைந்து வாயும் செவியும் தாண்டி நம்மை வந்தடையும்போது நேர் தலைகீழான பொருளை அளிக்கும்.
ஆகவே எந்த ஒரு இலக்கிய விவாதத்திலும் ‘எங்கியோ சொல்லியிருக்கீங்க’, ‘நீங்க சொல்லியிருக்கிறதா சொன்னாங்க’ போன்ற வரிகளுக்கு இடமில்லை. ஒரு கருத்தை அதன் மூலச்சொற்களிலேயே வாசித்தறியவேண்டும். அதை மேற்கோள் காட்டும்போது மூலவடிவிலேயே காட்டவும் முயலவேண்டும். இம்மாதிரியான வினாக்களுக்கு நான் ‘அப்படி நான் சொல்லவில்லை’ என்று மட்டுமே பதில் சொல்வது வழக்கம்.
பலசமயம் நாமே வாசித்ததாக இருந்தால்கூட நாம் அவற்றை முழுமையாக, அந்த ஒட்டுமொத்த விவாதக்களத்தில் பொருத்தி, புரிந்துகொண்டிருப்போமா என்பது சந்தேகமே. ஆகவே அவற்றை ஒட்டி மேலே சிந்திப்பதாக இருந்தால்கூட அந்த மூலக்கருத்தை இன்னொரு முறை வாசிப்பதே உகந்தது. அதாவது நான் ‘நாவல்’ ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை- நவீனத்துவத்தின் முகங்கள்’ ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ போன்ற நூல்களில் சுந்தர ராமசாமியின் இந்நாவலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறேன் எனப் பார்ப்பதையே நீங்கள் முதலில் செய்திருக்கவேண்டும். அதுவே இலக்கிய விமர்சனத்தின் ஒழுங்குமுறையாகும்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் தமிழில் உள்ள நாவல் என்ற வடிவத்தைப்பற்றிய ஒரு பொது விவாதத்தை ஆரம்பித்துவைத்தேன். தமிழில் உள்ள நாவல்கள் என்பவை உலகமெங்கும் நாவல்கள் என எவை பொதுவாகக் கருதப்படுகின்றனவோ அந்த உருவகங்களின்படி நாவல்கள்தானா என்பதே என் வினாவாக இருந்தது. அதை ஒட்டி பல கோணங்களில் விவாதங்கள் எழுந்தன. விளைவாக நான் நாவல் என்று ஒரு சிறு நூலை 1992-இல் எழுதினேன். அதில் என் தரப்பை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துச் சொல்லியிருந்தேன்.
மிகச்சுருக்கமாக என் வாதம் இதுதான். எந்த ஒரு கலைவடிவுக்கும் அதற்கான செவ்வியல் வடிவம் ஒன்று காலப்போக்கில் உருவாகி வந்திருக்கும். அந்தச்செவ்வியல் வடிவத்தை அடைவதற்காக ஒவ்வொரு பண்பாடும் ஒவ்வொரு கலைஞனும் முயல்வதன் விளைவாகவே தனித்தன்மைகள் கொண்ட வடிவங்கள் உருவாகின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து உருவாகி வந்த ஐரோப்பியநாவல் என்னும் வடிவம் அதற்கான ஒரு செவ்வியல் இலக்கணத்தை அடைந்தது. அந்த வடிவத்தை அடைய நாம் முயன்றிருந்தால் நாமும் நமக்கான நாவல் வடிவை அடைந்திருப்போம்.
அந்த முயற்சி தமிழில் நிகழவில்லை. நாவல் என்ற விரிவான கட்டமைப்பு கொண்ட கலைவடிவத்தின் சாத்தியங்களை இங்கே எவரும் சோதித்துப்பார்க்கவில்லை. ஒன்று, தொடர்கதை என்ற நீளமான கதையை நாவல் என்றார்கள். அல்லது சிறுகதையை கொஞ்சம் நீட்டி நாவல் என்றார்கள். செவ்வியல் நாவல் என்பது ஒரு தரிசனத்தை அல்லது எதிர்தரிசனத்தை விரிந்த காலவெளியில் வைத்து எல்லா கோணங்களிலும் அணுகுவதாகும். ஆகவேதான் நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் அந்தச் செவ்வியல்நாவலை இலக்காக்கியிருந்தால் நமக்கான நவீன நாவலை கண்டுகொண்டிருக்கமுடியும்.
அந்த முயற்சியில் ஈடுபட்ட முதல் ஆக்கம் என்பது க.நா.சு.வின் பொய்த்தேவு. குறிப்பிடத்தக்க வெற்றிகள் நீல. பத்மநாபனின் தலைமுறைகள், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின்கதை மற்றும் ஜே.ஜே. சிலகுறிப்புகள். இவற்றில் ஒரு புளியமரத்தின் கதையை வடிவ அளவில் முதன்மையான கலைப்படைப்பு என்று சொல்வேன். இதுதான் நான் சொன்னது.
1991-இல் நான் இக்கருத்தை முன்வைத்ததை ஒட்டி ஐந்தாண்டுக்காலம் தொடர்ந்து விவாதங்கள் நிகழ்ந்தன. தமிழின் நாவல் பற்றிய பார்வை வாசகர், எழுத்தாளர் என இரு தளங்களிலும் மாறுதலடைந்தது. சொல்லப்போனால் தமிழ்நாவல் வரலாற்றையே அந்த விவாதத்துக்குமுன் விவாதத்துக்குப்பின் எனப் பிரிக்கலாம். அதன்பின் வந்த நாவல் பற்றிய திறனாய்வுகள் மதிப்புரைகளில் எல்லாம் என்னுடைய வரிகளின் வேறு வடிவங்களை காணமுடியும். தொண்ணூறுகளுக்குப்பின் தமிழில் நாவலின் வடிவத்தை அடைவதற்கான பெருமுயற்சிகள் தொடர்ந்து நிகழ்ந்தன. தமிழின் சிறந்த நாவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன.
இந்தப்பின்னணி இல்லாமல் என் கருத்தை ஒற்றைவரி அபிப்பிராயமாக உருவகித்துக்கொண்டு விவாதிப்பது பொருளற்றது.
*
இன்று தமிழில் உருவாகிவந்துள்ள புதிய நாவல்கள் அவற்றின் விரிவான கட்டமைப்பாலும், உட்சிக்கலாலும், அவை எழுப்பும் அடிப்படை வினாக்களாலும் நான் அன்று குறிப்பிட்ட நான்கு நாவல்களையும் வெகுவாகவே தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. இன்று நாம் அந்நாவல்களை வாசிக்கையில் இந்தத் தொலைவை பின்னுக்குத்தாண்டிச்சென்றே வாசிக்கிறோம். மதிப்பீடுகளில் அதை கவனத்தில் கொண்டாகவேண்டும்.
நான் என் வாசிப்பில் ஒரு புளியமரத்தின் கதை நாவலை முக்கியமான ஆக்கமாகக் காண்கிறேன். ஜே.ஜே.சில குறிப்புகளை அவ்வாறு கருதவில்லை. வெளிவந்த காலகட்டத்தில் ஜே.ஜே.சில குறிப்புகள் கிளர்ச்சியூட்டும் நாவலாக இருந்தது. இன்று அது என் மனதில் வெகுவாகப் பின்னகர்ந்து விட்டது. ஆனால் இன்றும் ஒரு புளியமரத்தின் கதை அதன் முழுவீச்சுடன் என் நினைவில் உள்ளது. எட்டாண்டுகளுக்கு முன்னர் மறுவாசிப்புக்குச் சென்றபோதும் அதே அழகு அதற்கிருந்தது. உண்மையிலேயே அது தமிழின் நவீனச்செவ்வியல் படைப்புகளில் ஒன்று என்றே மதிப்பிடுகிறேன்.
ஜே.ஜே. சில குறிப்புகள் முழுக்கமுழுக்க அறிவார்ந்த தளத்தில் நிகழ்வது. அதன் சுவையும் தனித்தன்மையும் அங்கதமே. அதன் எல்லா கதாபாத்திரங்களும் கார்ட்டூன்கள்தான். ஜே.ஜே., சம்பத், அரவிந்தாட்ச மேனன் ஆகியோரை மட்டும் அவ்வாறல்லாமல் ஆக்க சு.ரா. முயன்றிருக்கிறார். ஆனாலும் அவர்களும் கார்ட்டூன்களாகவே எஞ்சுகிறார்கள்.
ஜே.ஜே. சில குறிப்புகள் முன்வைத்த அறிவுத்தளம் என்பது இன்று பழையதாகிவிட்டது. அன்று சோவியத் ருஷ்யா உலகமெங்கும் செல்வாக்கு செலுத்தும் ஒரு கருத்தியலதிகார மையமாக இருந்தது. சோவியத் ருஷ்யாவினால் ஊக்கம்பெற்ற இடதுசாரி அரசியல் கருத்துலகில் வலுவான கெடுபிடிப்போரை செய்துகொண்டிருந்தது. சிந்தனைசார்ந்த அமைப்புகளுக்கும் தனிமனித சிந்தனைச் சுதந்திரத்துக்குமான முரண்பாடு ஒரு முக்கியமான பேசுபொருளாக அன்றிருந்தது. அதையே ஜே.ஜே.சில குறிப்புகள் எடுத்துப்பேசுகிறது.
அத்துடன் ஒருவன் தனிமனிதனாக நின்றுகொண்டு சமகால அரசியலையும் பண்பாட்டையும் அன்னியத்தன்மையுடன் ஆராயும் நோக்கு அன்று பிரபலமானதாக இருந்தது. அந்த அன்னியன் கொள்ளும் இன்றியமையாத வீழ்ச்சி அன்று அதிகமாகப் பேசப்பட்டது. ஜே.ஜே.அப்படிப்பட்ட அன்னியன். காம்யூவுடன் அடையாளப்படுத்தப்பட்டே அவனைப்பற்றி ஆசிரியர் பேச ஆரம்பிக்கிறார். இன்று காம்யூவே பின்னுக்கு நகர்ந்துவிட்டார்.
இப்படி ஒரு சமகாலச்சூழலில் இருந்து எழும் இலக்கிய ஆக்கம் அதன் கலைத்தன்மையால் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து என்றுமுள்ள மானுடச்சிக்கல்களைப் பேசுவதாக உருமாறவேண்டும். அழியாத மானுட உணர்ச்சிகளை நிலையான மானுடதரிசனங்களை நோக்கி எழவேண்டும். அப்போதுதான் அது கலைப்படைப்பு. சோவியத் ஆட்சி கனவாய் பழங்கதையாய் போனாலும் போரீஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ புதுமையை இழக்காமலிருக்கிறது.
ஆனால் ஜே.ஜே. சில குறிப்புகள் அந்தத் தளம் நோக்கி எழவில்லை. அதன் கிண்டல்கள் விமர்சனங்கள் எல்லாமே அது நின்று பேசிய காலத்தைத் தாண்டி வரவே இல்லை. இன்று அக்காலகட்டத்தின் ஆவணம் மட்டுமாகவே அந்நாவல் நின்றுகொண்டிருக்கிறது. இதுவே அந்நாவலை என் பார்வையில் முக்கியத்துவமிழக்கச்செய்கிறது.
இப்படி அந்நாவல் தன் காலகட்டத்தை தாண்டிவராமைக்கு முதன்மையான காரணமாக எனக்குப்படுவது அது அந்தக்காலத்தை வெறுமே கருத்துநிலைப்பாடு சார்ந்து மட்டுமே அணுகியது, எளிய விமர்சனங்களை மட்டுமே அளித்தது என்பதே. உணர்ச்சிகரமான ஈடுபாடோ, கவித்துவமான மன எழுச்சியோ, தத்துவார்த்தமான ஒட்டுமொத்தப்பார்வையோ அதில் நிகழவில்லை. முற்றிலும் நடைமுறைத்தளம் சார்ந்த அங்கதம் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
ஜே.ஜே.சில குறிப்புகளில் ஓரளவு கவித்துவமானவையாக அன்று தோன்றிய பகுதிகள் கூட இன்று செயற்கையாக கட்டமைக்கப்பட்டவையாகவே தெரிகின்றன. மிகச்சிறந்த உதாரணம் சம்பத் காணும் கனவு. கனவுகளுக்கே உரிய கட்டற்ற படிமத்தன்மை, அர்த்தமும் அர்த்தமின்மையும் மயங்கும் நிலை அதில் இல்லை. தெளிவாக ஜோடனை செய்யப்பட்டது அது என்பதை எந்த வாசகனும் உணரமுடியும். பல இயற்கை வருணனைகள் உள்ளன. அவையெல்லாமே பரவசத்தின் விளைவுகளாக அல்லாமல் கவனமாக செதுக்கப்பட்டவையாகவே தெரிகின்றன.
அதேபோல அதன் சிந்தனைத்தளம். அந்நாவலில் அமைப்புமனிதர்கள் கிண்டல் செய்யப்படுகிறார்கள். அமைப்புக்கு அப்பால் நிற்கும் சிலரைப்பற்றிய விருப்பச்சித்திரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. சிந்தனைகள் ஏன் கருத்தியல்களாகவும் அமைப்புகளாகவும் ஆகின்றன, எவ்வாறு காலம் முழுக்க அவை தனிமனித சிந்தனைக்கு எதிர்ச்சக்தியாக விளங்குகின்றன என்பதைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையோ விவாதமோ அதன் பக்கங்களில் நிகழவில்லை.
ஏனென்றால், சுந்தர ராமசாமிக்கு மரபிலோ வரலாற்றிலோ தத்துவத்திலோ ஈடுபாடில்லை என்பதுதான். அவரது எந்த எழுத்திலும் அந்த ஆர்வத்துக்கான தடயங்கள் இல்லை. தனக்கு சமகாலத்தில் மட்டுமே ஈடுபாடு என்றும், தான் ‘அறிந்த’ எல்லைக்கு அப்பால் செல்ல விருப்பம் இல்லை என்றும் அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். அதை ஓர் இலக்கியக்கொள்கையாக பிற ஆக்கங்கள்மேல் போடவும் செய்வார். அந்தக் குறுகல் அவரது சிந்தனைகளை எளிய அபிப்பிராயங்கள் என்ற தளத்திலேயே நிறுத்திவிட்டது.
அன்று அதன் பக்கங்களில் இருந்த சுந்தர ராமசாமியின் சுதந்திரவாதச் சிந்தனைகள், அவற்றை அவர் வெளிப்படுத்தியிருந்த நக்கல்நிறைந்த மொழி புதுமையும் பரபரப்பும் கொண்டதாக இருந்தது. அந்தச் சிந்தனைகள் ஓரளவு தத்துவ வாசிப்பு கொண்டவர்களுக்கு இன்று மிக மிக சல்லிசானவை என்றே தோன்றும். அன்றைய இலக்கியவாசகர்களுக்கு அந்த மொழி மீது மயக்கமே இருந்தது. இன்று அது இல்லை. மொழி என்பது நிகழ்வதே ஒழிய கட்டமைக்கப்படுவதல்ல என்பதை இன்றைய வாசகன் உணர்ந்திருப்பான்.
ஆனாலும் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு காலகட்டத்தில் தமிழில் நாவல் என்ற வடிவத்தை நிறுவிய ஆக்கங்களில் ஒன்று. நாவல் என்பது ஒரு கதை என்ற புரிதலை அது தகர்த்தது. நாவலை ஒன்றோடொன்று பின்னியும் பிரிந்தும் செல்லக்கூடிய பலவகை கூற்றுமுறைகளின் பின்னலாக நிகழ்த்திக்காட்டியது. அது ஒரு சாதனையே.
ஒரு புளியமரத்தின் கதையையும் இதே அளவுகோல்களின்படி பார்க்கலாம். அது ஐம்பதுகளின் மனநிலைகளில் இருந்து உருவானது. நேருயுகத்தின் முடிவில் சென்றகால இலட்சியவாதங்கள் வெளிறி நிறமிழக்க யதார்த்தபோதம் உருவாவதன் சித்திரத்தை அது காட்டுகிறது. அப்பட்டமான அதிகாரப்போட்டியாலானதே யதார்த்தம் என்ற புரிதலை நோக்கிச் செல்கிறது அது. ஆனால் அந்தப் புனைவு உருவான காலகட்டத்தின் மனநிலைகள் இன்று வரலாறாக பின்னால் சென்றுவிட்ட பின்னரும்கூட ஒரு கலைப்படைப்பாக அது தன் தனித்துவத்துடன் நின்றுகொண்டிருக்கிறது.
எனென்றால், ஒரு புளியமரத்தின் கதை அந்த சமகாலப்பிரச்சினைகளை கதையாக, உருவகங்களாக, படிமங்களாக உருமாற்றுகிறது.அவை காலத்தைத்தாண்டி தங்களுக்கான அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன.
இன்று புளியமரத்தின் கதையை எவ்வளவோ கோணங்களில் வாசிக்கமுடியும். ஒரு மரபு எப்படி நவீன யுகத்தில் ‘பயன்பாட்டுக்கு’ வருகிறது என்ற அளவிலேயே அது முக்கியமானதாக இருக்கும். தமிழிலக்கியம் உள்ளவரை ஒரு படிமமமாக புளியமரம் நின்றுகொண்டிருக்கும். அடுத்த தலைமுறையில் எத்தனைபேர் ஜே.ஜே.சில குறிப்புகளை படிப்பார்கள் என்பது ஐயத்துக்குரியது.
ஒரு புளியமரத்தின் கதை அந்த எல்லைக்குள் வரலாற்றையும் தத்துவத்தையும் தொட்டு விரிகிறது என்பதனால் அதனால் எடுத்துக்கொண்ட களத்தை மீறி வளர முடிகிறது. புளியமரத்தின் வரலாறு மன்னராட்சிக்கும் நாட்டார் மரபுக்கும் தெய்வங்களுக்குமெல்லாம் இறங்கிச்செல்கிறது. புளியமரத்தின் அழிவு உருவாக்கும் தார்மீகப்பிரச்சினைகளின் எல்லா தளங்களும் ஏதோ ஒருவகையில் அந்நாவலின் பக்கங்களுக்குள் பேசப்பட்டுள்ளன.
புளியமரத்தைச் சுற்றி நிகழும் சித்தரிப்புகளை சுந்தர ராமசாமி பிற்காலத்தில் அவர் இழந்த குழந்தைத்தனத்துடன் சித்தரித்திருக்கிறார். ஆகவே அதன் பல பகுதிகளில் எளிமையான அழகிய கவித்துவம் நிகழ்ந்திருக்கிறது. [மேற்றிராணியார் தோட்டத்துக்கு பால் பவுடர் வாங்கச்செல்லும் பிள்ளைகளின் சித்திரம் உதாரணம்]. இன்று நான் யோசிக்கும்போதும் மனதை மலரச்செய்யும் பல தருணங்கள் அந்நாவலில் உள்ளன.
ஒரு புளியமரத்தின் கதை நாவலை சாதரணமாக, அதாவது கதையாக, வாசிப்பவர்களுக்கு அந்த தொன்மச்சித்தரிப்புகள் முடிந்ததும் கதை சுவாரசியம் குறையும் அனுபவம் உருவாகும். அந்நாவல் வெளிவந்த காலம் முதலே இந்த விமர்சனம் உள்ளது. அதன் ஆரம்பகாலப் பதிப்புகளில் ஒன்றில் பின்னால் ஒரு சாதாரண வாசகரின் கருத்து அச்சிடப்பட்டிருந்தது. அதிலேயே இது சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அந்நாவலை ஒரு வாழ்க்கையின், வரலாற்றின் இலக்கியவடிவமாக அணுகும் வாசகர்களுக்கு அந்த எண்ணம் எழாது. இலக்கியவாசகன் வாசிப்பு சுவாரசியத்தைவிட அணுகுமுறையின் முழுமையையே முக்கியமாகக் கருதுவான்.
புளியமரத்தையும் அதையொட்டி நிகழும் அனைத்தையும் நூறாண்டுக்கால இந்தியவரலாற்றின் கவித்துவமான மறு ஆக்கங்கள் என்று வாசிக்கும் ஒருவருக்கு அந்நாவல் புதுப்புது வாசல்களுடன் திறந்துகொண்டே செல்லும். ஒருபோதும் அவ்வாசகர் அதை ஒரு சாதாரணமான கதை என்று எடுத்துக்கொண்டு சுவாரசியத்தின் அளவுகோலால் அளக்க மாட்டார். ‘இந்தப்புளியமரம் எதைச் சுட்டுகிறது?’ என்ற கேள்வியை மட்டும் அவர் எழுப்பிக்கொண்டால் போதும், மொத்த நாவலுமே கவித்துவமான உருவகப்பரப்பாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.
புளியமரத்தின் தொடக்கத்தை அந்நாவலில் தேடும்போதே அந்த ஆழமான கவித்துவத்தன்மை ஆரம்பிக்கிறது. நாட்டார் மரபின் ஆழத்தில் எங்கோ இருக்கிறது அதன் ஆணிவேர். பின் அரசவரலாற்றில் புகுந்து தழைத்து நவீன காலகட்டத்துக்கு வந்து நிற்கிறது. நவீன காலகட்டத்தில் அந்தப்புளியமரத்துக்கு என்ன ஆகிறதென்பதே நாவல். ஜனநாயக யுகம் வருகிறது. தோட்டிகள் அந்த ‘ராஜகீய’ மான மரத்தில் கல்லெறிந்து புளியம்பழம் உலுக்கி உற்சாகமாக சாப்பிடுகிறார்கள். வணிகப்போட்டிகள் ஆரம்பிக்கின்றன. தேர்தலரசியலின் கொண்டாட்டம் ஆரம்பிக்கிறது.
நான் அந்நாவலில் வரும் ஒரு காட்சியை பல தருணங்களில் நினைவுகூர்வதுண்டு. ஒரு வியாபாரி மாட்டுவண்டியில் மல்லாந்து படுத்தபடி மரத்தைச் சுற்றிவந்து விலைமதிப்பிடும் தருணம். சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவையே அப்படி யாரோ சுற்றிவந்து மதிப்ப்பிட்டுக் கொண்டிருப்பதுபோல பிரமை எழுகிறது. அப்படிப்பட்ட வாசிப்பை அதற்கு அளிக்கும் ஒருவருக்கு பக்கம் பக்கமாக பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்தபடி விரியக்கூடிய கலைப்படைப்பு ஒரு புளியமரத்தின் கதை. உலக இலக்கியத்தின் மிகச்சிறந்த ஆக்கங்களுடன் வைக்கப்படவேண்டியது. ஐயமே இல்லை.
எந்த நல்ல ஆக்கமும் கற்பனைமிக்க கூர்ந்த வாசிப்பை கோரி நிற்கிறது. ஒரு தனிமனிதரின் வாசிப்பு போதாததாக இருக்கலாம். அதற்குத்தான் இலக்கிய விவாதங்களும் விமர்சனங்களும் உதவுகின்றன. அவை பல்வேறு வாசிப்புகளை ஒரு நூலைநோக்கித் திறந்து வைக்கின்றன. அதன்மூலம் ஒவ்வொருவரின் வாசிப்பும் பலமடங்கு விரிகிறது. பெரிய ஆக்கங்களை அப்படி பலமுனை வாசிப்பு வழியாகவே அறியமுடியும். அத்தகைய வாசிப்புகளும் விமர்சனங்களும் தமிழில் மிகமிகக் குறைவு.
அத்துடன் வாசகனுக்கு தன்னுடைய வாசிப்பின் போதாமையைப்பற்றிய ஒரு புரிதலும் இருக்கவேண்டும். தன்னுடைய மதிப்பீடு அந்நூலைப்பற்றியது மட்டுமல்ல, தன் எல்லைகள் சார்ந்ததும்கூட என்ற உள்ளுணர்வும் அவசியம். அந்தப் பிரக்ஞை இருந்தால் நாம் ஒரு படைப்பை பல்வேறு திசைகளில் இருந்து அணுகுவோம். அப்போது நாம் ஏற்கனவே வாசித்த வாசிப்பை முழுமையாகவே தாண்டிச்செல்லவும் செய்வோம்.
ஒரு புளியமரத்தின் கதை அப்படி தொடர் மீள்வாசிப்பைக் கோரும் அழகிய சிறிய நாவல்.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jun 22, 2012
ஜே ஜே சிலகுறிப்புகள் சு.யுவராஜன்
ஜே ஜே சிலகுறிப்புகள் பெருமாள்முருகன்
ஜே ஜே சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி தளம்
ஒரு புளியமரத்தின் கதை முன்னுரை
பழைய கட்டுரைகள்