நாஞ்சில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு (பாஸ்டன், நியூ யார்க், நியூ ஜெர்ஸி) போன வாரம் வந்திருந்தார். அச்சமயத்தில் நான் வேலை நிமித்தம் பயணத்தில் இருந்ததால் இரு நாட்களே நாஞ்சிலை நேரடியாக பார்த்து பேச முடிந்தது.
முதல் நாள் (வியாழன் மாலை) கேம்ப்ரிட்ஜில் மீட்ஹால் (MeadHall) என்ற பார்/ரெஸ்டாரண்டில் வாசகர் சந்திப்பு ஒன்றை பாஸ்டன் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். மீட்ஹால் எம்.ஐ.டி வளாகத்திற்கு எதிரே இருக்கிறது. மாணவர்களிடையே பிரபலமான இடம். பாஸ்டன் பாலா என்னை மதியம் இரண்டு மணி வாக்கில் கூப்பிட்டு எட்டு பேர் அமரும் வகையிலான ஒரு மேஜையை மீட்ஹாலில் பதிவு செய்யச் சொன்னார். “எத்தன மணிக்கு ரிசர்வ் பண்ணட்டும் பாலா?” என்றேன். “ஒரு ஐஞ்சு ஐஞ்சரை மணிக்கு பண்ணிடு” என்றார். “ஐஞ்சரைக்கா..? கொஞ்சம் சீக்கிரம் இல்லையா? மக்கள் எல்லாம் அதுக்குள்ள வந்திருவாங்களா..?” “அதெல்லாம் வந்திருவாங்க..… நானும் ஆபிஸ்ல இருந்து சீக்கிரமே கிளம்பி பைவ் தர்ட்டிக்குள்ள அங்க இருப்பேன்.” ஏன்றார்.
நானும் எட்டு பேருக்கான மேஜையை உடனடியாக பதிவு செய்து விட்டு ஐந்தரை மணிக்கு மீட்ஹால் சென்றேன். பரிசாரக பெண்மணி சிரித்தபடி வரவேற்றார். ”ஹாய், மை நேம் இஸ் அரவிந்த். ஐ ஹாவ் ரிசர்வட் எ டேபிள் ஃபார் எய்ட்” என்றேன். “ஷூயுர் சார். யுவர் டேபிள் இஸ் ரெடி” என்றார். பின்னர் திடுக்கிட்டு என் தோளுக்கு பின் ஓரிருமுறை நோட்டமிட்டபடி புருவத்தை உயர்த்தினார். ”இல்ல.. பிரண்டஸ் எல்லாம் இப்ப வந்துருவாங்க… டிராபிக்ல மாட்டிக்கிட்டாங்க” என்று மன்றாடினேன். ”ஒகே சார். நோ இஸ்யூஸ்… வீ வில் கீப் த டேபிள் ஃபார் யூ சார்” என்றார். மிக்க நன்றி என்று கூறிவிட்டு வாசலுக்கு சென்று பாஸ்டன் பாலாவை போனில் அழைத்தேன். முப்பது முப்பந்தைந்து நிமிடங்களுக்குள் வருவதாக சொன்னார். சுத்தம். வாசலில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு (அல்லது நாஞ்சில் பாஷையில் ”வாய்பார்த்துக் கொண்டு”) நின்றிருந்தேன்.
போன் வந்தது. கேட்ட குரல். “சார், யூ ஷுட் கம் இன் நவ். அதர்வைஸ் வீ நீட் டு கிவ் தி டேபிள் அவே”. உள்ளே போய் உட்கார்ந்தேன். மீட் ஹாலில் நல்ல கூட்டம். அடுத்த நாள் எம்.ஐ.டியின் பட்டமளிப்பு விழா என்பதால் மாணவர்கள், அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் உற்சாகமாக மதுவருந்திக் கொண்டு இருந்தார்கள். கண்ணாடி ஜன்னல்களை திறந்து வைத்திருந்த்தால் நல்ல காத்தோட்டமாக இருந்தது. இரைச்சலும் குறைவு. ”வுட் யூ லைக் டு ஆர்டர் எனி டிரிங்க்ஸ் சார்?” என்றாள். நண்பர்கள் வரட்டும் என்று கூறி மையமாக சிரித்தேன். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் ”வுட் யூ லைக் டு ஆர்டர் எனி டிரிங்க்ஸ் சார்?”. இம்முறை ஆர்டர் செய்யவில்லை என்றால் வெளியே துரத்தி விடுவார்கள் என்பது தெளிவு.
எட்டு பேர் அமரக்கூடிய அந்த மேஜையில் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு, நாஞ்சிலிடம் என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்டு அவரை இம்சை படுத்தலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தேன். அச்சமயம் பார்த்து கூடப் படிக்கும் தோழர்-தோழிகள் சிலர் மீட்ஹாலுக்குள் நுழைந்தார்கள். “என்னாச்சு? இப்டி தனியா?” என்றார்கள். “லவ் ஃபெய்லியர்” என்றேன். கெக்க புக்க என்று சிரித்து “ஆல் தி பெஸ்ட்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” கூறி (யாருக்கு?!) விடைபெற்றார்கள். வாழ்க.
ஒருவழியாக ஆறு மணி வாக்கில் பாஸ்டன் பாலா வந்து சேர்ந்தார். இனி தனியாக அமர்ந்து கொண்டிருக்க தேவையில்லை. ஸ்சப்பாடா என்று இருந்தது. அந்த மீட்ஹால் பெண்மணி “வேர் ஆர் யுவர் அதர் பிரண்டஸ்? வி நீட் டு டேக் தி எக்ஸ்ட்ரா சேர்ஸ் அவே!” என்று எங்களை விடாமல் மிரட்டினாள். “சரிசரி கோவிச்சுகாதேள் அம்மணி. பிரண்ட்ஸெல்லாம் இதோ வந்துருவா..” என்று பாலா அவளை சமாதானப் படுத்த முயன்றும் நாற்காலிகள் பறிபோயின. ”ஆச்சுவலி சிக்ஸ் தேர்ட்டிக்கு தான் மீட்டிங்ன்னு அவங்க கிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்” என்றார் பாலா என்னிடம். நான் அவரை முறைத்தேன்.
இளமுருகன், விக்ரம் மற்றும் கோவர்தன் (இவர் க.மோகனரங்கனின் நண்பர். கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்) அகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். சொல்வனம் ரவிசங்கருடன் நாஞ்சிலும் வந்து சேர்ந்தார். இருவரும் காலையில் இருந்து பாஸ்டன் நகரமைய பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு நேராக இங்கு வந்திருக்கிறார்கள். புத்தம் புதிய ரீபாக் ஷூ, மற்றும் கச்சிதமாக இன் செய்யப்பட்ட நீல முழுக்கை சட்டையுடன் நாஞ்சில் சின்னப் பையன் போல இருந்தார். எனக்கெல்லாம் அரை மணி நேரம் ஊர் சுற்றினாலே சட்டை உள்ளுக்குள் தங்காது.
பரிசாரக பெண்மணியிடம் மன்றாடி பறிபோன நாற்காலிகளை மீட்டுக் கொண்டு வந்தேன். அனைவரும் நாஞ்சிலிடம் அறிமுகப் படுத்திக் கொண்டோம். நாஞ்சிலை நான் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கிறேன். சந்தோஷமாக இருந்தது.
இதுவரையிலான அமெரிக்க பயணம் எப்படி இருக்கிறது? பொதுவான உங்கள் மனப்பதிவு என்ன? என்று கேட்டேன். அவர் சொன்னார், “அமெரிக்க ஏகாதிபத்தியம், ஃபிராடுத்தனம், முதலாளித்துவ அடக்குமுறைன்னு எல்லாம் சொல்றோம் நாம… இதுக்கு அடியில் இருக்கிற அரசியல் பொருளாதார சுரண்டல்களை பத்தி முடிவா கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு பின்புலம் இல்லை. ஆனா அமெரிக்கா வேற, அமெரிக்கர்கள் வேறெங்கிறது மட்டும் தெளிவா தெரியுது. இதுவரையில நான் பார்த்து பேசின அமெரிக்கர்கள் எல்லாருமே மிகமிக பண்பானவங்ளா தான் இருக்காங்க.. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேனே. பாஸ்டன்ல இருந்து நியூயார்க்குக்கு டிரெயின்ல போனேன். டிரெயின் கிளம்ப இன்னும் ஐஞ்சு பத்து நிமிஷம் தான் இருந்தது. திடீர்னு எனக்கு யூரின் போணும்னு தோணுது. டாய்லட் எங்கேன்னு தெரியில. டிரெயின்லயும் அத்தன ஆளுங்க இல்லை. இருந்த ஒரு பொண்ணு கிட்ட கூச்சபட்டுகிட்டே வழி கேட்டேன்.. அவங்க வழி சொன்னதோட மட்டும் இல்லாம டிரெயின்ல இருந்து என் கூடவே வெளியில வந்து ரெஸ்ட் ரூம் Sign board தெரிற இடத்தையும் காட்டுனாங்க. இதுபோல எங்க எந்தெடத்துல தொலைஞ்சு போய் வழி கேட்டாலும் எல்லாரும் விலாவரியா தான் பதில் சொல்றாங்க. முகம் கொடுக்காம பேசினவங்களையோ, அல்லது சட்டு புட்டுன்னு ஏதோ ஒரு பதிலை போற போக்குல சொல்லிட்டு போனவங்களையோ இதுவரைக்கும் நான் பாக்கலை” என்றார்.
நாஞ்சிலை கவர்ந்த இன்னொரு விஷயம் அமெரிக்க குழந்தைகள். “நேத்து மெய்யப்பன் என்னை ஸ்ட்ராபெர்ரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனாரு. அங்க அத்தன குழந்தைங்க விளையாடிட்டு இருந்துக. பாக்கறத்துக்கே சந்தோசமா இருந்திச்சு. அதுல ஒரு குழந்தை. அதோட அம்மா அப்பா அவகளுக்குள்ள ஏதோ பேசிட்டு இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பூந்து செடியில இருக்குற ஒரு ஸ்ட்ராபெர்ரிய பறிச்சு “இட்ஸ் ஸோ நைஸ்.. இட்ஸ் ஸோ நைஸ்னு” தனக்குள்ள சொல்லீட்டு மெதுவா சாப்பிடுது. நான் பாக்றது தெரிஞ்சதும் வெக்கப்பட்டுட்டு ஓடிடுச்சு.. அப்புறம் திரும்ப என்ன பாத்து “ஹாய்” அப்டீன்னு கையாட்டி சிரிக்குது. ரொம்ப மகிழ்ச்சியா இருந்திச்சி” என்றார். “அப்புறம் சாயங்காலமா மெய்யப்பன் பையன கராத்தே கிளாஸ்ல இருந்து கூட்டிட்டு வரபோயிருந்தோம். அங்கயும் எத்தன குழந்தைங்க… கொரியன், சைனீஸ், இண்டியன், ஹிஸ்பானிக் அமெரிக்கன், ஆப்ரிக்கன் அமெரிக்கன்னு அத்தனை இனத்துல இருந்தும் குழந்தைக.. அதுக சாதாரணமா சிரிச்சு பேசி கிண்டல் பண்ணி அதுகளுக்குள்ள விளையாடிட்டு இருக்கறத பாக்கறப்போ மனசு ஒரு மாதிரி கலங்கிடிச்சு… அது ஒரு பெரிய விஷயமா பெரிய எக்ஸ்பீரியன்ஸா தான் எனக்கு பட்டது” என்றார்.
பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். நாஞ்சில் ரெட் ஏல் பியர் ஒன்று ஆர்டர் செய்தார். பின்னர் ஒரு காக்டெயில். ”நடுவில கொஞ்ச நாள் குடிக்கிறத நிறுத்தியிருந்தீங்க இல்ல” என்று கேட்டேன். “ஆமாம்… ஆனா இப்ப இந்த மலேஷியா போயிட்டு வந்தோம்ல… அப்ப திரும்ப ஆரம்பிச்சது. அதுவும் ஃபிளைட்டுலயே. ட்ரே டேபிள தள்ளிகிட்டு அந்த பையன் தூரத்துல வரான். நமக்கா அப்பவே திக்குதிக்குன்னு ஆரம்பிச்சிடுச்சி. ஆமாம், டு பி ஆர் நாட் டு பி தான். நான் அந்த ட்ரே டேபிளையே பாத்துக்கிட்டு இருகேன். பக்கத்துல வேற இந்த ஜெயமோகன். நான் என்ன பண்ணப் போறேங்கிறத “ஆ…ன்னு” பாத்துட்டுக்கான். ட்ரே டேபிள் வந்து நம்ம முன்னால நிக்குது. எளவு, சீக்கிரம் நம்ம தாண்டி தள்ளிட்டு போகவும் மாட்டீங்கிறான். நல்ல சிக்னேச்சர் விஸ்கியாக்கும். பாத்தேன். இப்டி பயந்துட்டு ஒக்காந்திருந்தா வேலைக்கு ஆகாது தெரிஞ்சிடுச்சி.. சரிதான், போடு ஓண்ணு. “ஒன் லார்ஜ்….ஆன் த ராக்ஸ்ன்னுட்டேன்”. ஆன் த ராக்ஸ்ன்னா ஜெயமோகனக்கு என்ன தெரியப்போகுது… அப்ப ஆரம்பிச்சது” என்றார்.
மீட்ஹாலில் சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள விக்ரமின் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றோம். அங்குள்ள ஒரு கான்ஃபரன்ஸ் ரூமில் உட்கார்ந்து பத்து பத்தரை மணி வரை நாஞ்சிலிடம் பேசிக் கொண்டிருந்தோம்.
தமிழ் நவீனக் கவிதைகள் அதன் ஒலி அழகை இழந்து வருவது பற்றி நாஞ்சில் ஆதங்கப்பட்டார். அபி, தர்மு சிவராம் போன்ற ஒரு சிலரை தவிர ஒலி அழகு என்பது பலருக்கு அவர்களது கவிதைகளில் கூடவே இல்லை என்றார். “நவீன கவிதைகள் சங்க இலக்கிய அழகியலை நோக்கி போயிருக்கணும். சங்க கவிதைகள்ல பெருசா ரூல்ஸ்ஸோ எதுகை மோனையோ எதுவும் கெடையாது. நவீன கவிதைகளுக்கு ஒரு சரியான முன்மாதிரியா, ஒரு நல்ல டார்கெட்டா, அது இருந்திருக்கும். ஆனா அந்த திசையில நவீன கவிதைகள் போகாதது துரதிஷ்டவசமானது தான்” என்றார்.
சைவ இலக்கியத்தில் சேக்கிழாரும், பெரிய புராணமும் தன்னை பெரிதாக கவரவில்லை என்று கூறினார். “சைவர்கள் பெரியபுராணத்தை ஏதோ ஒரு காரணத்துக்காக முன்னிலைபடுத்தினாங்க. பெரியபுராணத்துல வர பாடல்கள் எல்லாம் ஒரு லாஜிக்கே இல்லாம அப்ஸர்ட்டா இருக்கும். லாஜிக் இல்லாட்டயும் பரவால்ல பொயட்ரீயாட்டும் இருக்கணும். அதுவும் அங்க இல்லை. பொயட்ரிங்கறதே பெரியபுராணத்துல ரொம்ப ரொம்ப குறைச்சல் தான்” என்றார். சைவ சித்தாந்தத்திலும் ஆர்வம் இல்லை என்றார்.
ஆனால் மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருவெம்பாவையும் தம்மை மிகவும் கவர்ந்தவை என்று சொன்னார். “ஏன்னா அதுல ஒரு பொயட்ரீ இருக்கு. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவேங்கிறான். எப்பிடி. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர். அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம்னு ஏழு உலகங்க. அதுக்கு கீழ இருக்குற அவனோட பாதத்தை அடையும் போது “சொல்” அழியும்ங்குறான். சொல்லுங்கறது சாதாரண விஷயம் இல்லை. சொல்லுன்னா சும்மா சொல் மட்டும் இல்லை. ‘ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ? வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ? தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோன்னு’ தான் குகன் சொல்றான். தோழமை என்று அவர் சொல்லிய சொல். அப்பேற்பட்ட சொல். அது அழியும்ங்கிறான். அதே போல உன் மலர் அணிந்த திருமுடியை அடையும் போது பொருள் அழியும்ங்கிறான். ஆமாம். அங்க கீழ சொல். இங்க மேல பொருள். படிக்கும் போது இது எனக்கு பெரிய பொயட்ரீயா இருந்திச்சு” என்றார்.
காவல்கோட்டம் நாவல் குறித்து கோவர்தன் ஒரு கேள்வி கேட்டார். இதுவரை இருநூறு பக்கங்கள் படித்திருக்கிறேன். அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது நாவல் என்று எடுத்துக் கொள்வதா என்று புரியவில்லை. நாவல் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் வரலாற்று தகவல்களை எல்லாம் எத்தனை தூரம் நம்பகமான ஒன்றாக எடுத்துக் கொள்வது என்பது தனக்கு குழப்பமாக இருப்பதாகவும், அது குறித்து நாஞ்சிலின் கருத்துக்கள் என்ன என்றும் கேட்டார். அதற்கு நாஞ்சில் காவல்கோட்டம் தனக்கு பிடித்திருப்பதாக கூறினார். முக்கியமான நாவல் அது என்று கண்டிப்பாக சொல்லலாம், ஆனால் தலைசிறந்த நாவலா என்பது தனக்கு தெரியவில்லை என்றார். அதில் உள்ள வரலாற்று தகவல்கள் எல்லாம் கறாரானவை தான். தவறான தகவல்களை வெங்கடேசன் கொடுத்திருப்பதாக தான் நினைக்கவில்லை என்றார். இருந்தும் நாவலில் தனக்கு ஒரு சிறு பிரச்சனை உண்டு. காவல்கோட்டம் களவை தூக்கிக் பிடிக்கவில்லை என்றாலும், களவை ஏதோ ஒரு வகையில் உள்ளூர நியாயப்படுத்திகிறது. ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு இதில் ஒருவித ஒவ்வாமை உண்டு. வாழைக் கன்றை நட்டு, நீர் ஊற்றி வளர்பவனுக்கு தான் அது களவு போவதில் உள்ள பெருவலி புரியும் என்றார்.
சமீபத்தில் வந்த படைப்புகளில் கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை, எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை, கீரனூர் ஜாகிர்ராஜாவின் பல நாவல்கள் ஆகியவை தம்மை கவர்ந்த்தாக கூறினார்.
பின்னர் பேச்சு பல திசைகளில் சென்றது. பாம்பேயில் நாஞ்சில் இருந்த பதினேழு சொச்ச வருடங்கள், அங்கு இருந்த தமிழ்ச் சங்க நூலகம், அதன் மூலம் ஏற்பட்ட நவீன தமிழ் இலக்கிய அறிமுகம், முறைப்படி கம்பராமாயணம் கற்றது, தமிழில் எழுத ஆரம்பித்தது, சுந்தர ராமசாமியின் அறிமுகம் என்று. காகங்கள் கூட்டத்தில் “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை” குறித்த ஒரு சிறு கட்டுரை ஒன்றை படித்ததையும், அது சுந்தர ராமசாமிக்கு மிகவும் பிடித்து போக, அவரது ஊக்கத்தில் அக்கட்டுரையை ஒரு நூல் ஆக்கியதை பற்றியும், அதற்கு வந்த வரவேற்பு குறித்தும் பேசினார்.
மேலும் பல விஷயங்களை சொன்னார். “இதெல்லாம் பிளாக்ல கீக்ல எழுதீற மாட்டீங்களே?” என்றார். “சார், நீங்க வேற. நானே பெரிய சோம்பேறி. பிளாக் எழுதியே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு” என்றேன். அப்படி சொல்லப் போக, அதை பிடித்துக் கொண்டார். “இப்பல்லாம் முப்பது முப்பத்தஞ்சு வயசுக்கு உட்பட்ட யாருமே தமிழ்ல எழுதுறது கிடையாது. நல்லா எழுதிட்டு இருக்குற ஆளுகளுக்கெல்லாம் நாப்பது நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல ஆயிடுச்சு. ஒண்ணு சொல்றேனே… சுந்தர ராமசாமி அவரோட புளியமரத்தின் கதைய முப்பதாவது வயசுல எழுதீட்டாரு. நான் என்னோட மொத நாவல இருவத்தெட்டாவது வயசுல எழுதிட்டேன். ஜெயமோகன் அவனோட ரப்பர இருவத்தஞ்சி இருவத்தியாறு வயசுக்குள்ளாற எழுதீட்டான். இப்ப ரொம்ப அபூர்வமா தான் முப்பத்தஞ்ச்சு வயசுக்குள்ளார இருக்கற ஒருத்தர் எழுதுற கிரியேடிவ் ஒர்க்கை படிக்க முடியுது. கிரியேடிவான ஆளுங்க எல்லாம் சினிமாவுல உதவி இயக்குனரா போயிட்டாங்க” என்றார். அடுத்த தலைமுறை தமிழ் எழுத்தாளர்கள் யார், தமிழில் யாராவது ஏதாவது எழுத வருவார்களா என்ற ஒரு கேள்வி தனக்கு கடந்த சில வருடங்களாகவே இருந்து வருவதாக கூறினார்.
பிறகு பொதுவாக சில விஷயங்களை பற்றி பேசினோம். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒரு சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் சமூக மற்றும் பொருளியல் மாற்றங்கள் குறித்து சொல்வனம் ரவிசங்கர் சில கேள்விகளை முன்வைத்தார். நாஞ்சில் தனது குடும்பத்தையே ஒரு உதாரணமாக முன்வைத்து அதற்கு பதில் சொன்னார். நகர் சார் வாழ்கை ஏற்படுத்தும் மன அழுத்தம் குறித்து விக்ரம் மற்றும் இளமுருகன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். பாம்பேயில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நாஞ்சில் பேசினார்.
மணி பத்தரையை தொட்டது. எல்லோரும் மிக உற்சாகமாக இருந்தார்கள். இப்படியே விட்டால் இன்னும் நான்கைந்து மணிநேரம் பேசிக் கொண்டு இருந்திருப்போம். ஆனால் அடுத்த நாள் காலை எட்டு எட்டரைக்கு நாஞ்சிலை எம்.ஐ.டி. மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களை சுற்றிப் பார்க்க அழைத்துப் போவதாக திட்டம். அதனால் அத்தோடு முடித்துக் கொண்டோம். நாஞ்சில் பாஸ்டன் பாலாவின் காரில் சென்றார். அடுத்த நாள் காலை சுமார் எட்டரை மணி வாக்கில் நாஞ்சிலை என் அறையில் விட்டு விட்டு அலுவலகம் போவதாக பாலா சொன்னார். நண்பர்கள் பலரை நான் முதன்முறையாக சந்திப்பதால் அவர்களது மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டேன்.
கைக்குலுக்கி விடை பெற்றோம். இனிய, உற்சாகமான மாலை.
பாஸ்டனில் நாஞ்சில்நாடன் -பாஸ்டன் பாலா