திருவனந்தபுரத்தில் பத்துநாட்களாக இருக்கிறேன். என் மலையாளப்படம் ஒலிச்சேர்க்கை நடக்கிறது. நேற்று காலை நிர்மால்யா கூப்பிட்டு சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] அவர்களை யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள் என்று சொன்னார்.
குருகுலத்தில் மொத்தம் மூன்றுபேர்தான் இருந்துள்ளார்கள். வழக்கமாக இருக்கும் சுவாமி வியாசப்பிரசாத் தவிர கண்ணூரில் இருந்து வந்த லோகிதாக்ஷன் என்பவரும் இருந்துள்ளார். குருகுலம் விரிந்த பகுதி. பொதுவாக ஆள்நடமாட்டமில்லாத பகுதியும் கூட. பெரும்பாலும் எல்லா பக்கமும் எல்லா அறைகளும் திறந்துதான் கிடக்கும். சுவாமி சமையல்கட்டை பூட்டுவதற்காக வந்திருக்கிறார். இரவு எட்டரை மணி இருக்கும். மப்ளரால் முகம் சுற்றிய ஒருவன் பாய்ந்து அவரை கத்தியால் குத்தியிருக்கிறான். அவர் தடுத்து போராடியிருக்கிறார். அவனுடைய உடலிலும் சிறு காயம் ஏற்பட்டிருக்கிறது. கத்தியால் குத்திவிட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான்.
சுவாமியை வியாசப்பிரசாத் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். அபாயகட்டம் தாண்டிவிட்டது. அவருக்கு அவரை குத்தியது யார் என்றோ, அல்லது என்ன காரணம் இருக்கமுடியும் என்றோ தெரியவில்லை. பல கோணங்களில் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
பலகாலமாகவே குருகுலம் அனேகமாக செயலற்ற நிலையிலேயே இருக்கிறது. அங்கே அதிகம்பேர் வருவதில்லை. குளிர்காலத்தில் எவருமே இருப்பதில்லை. சுவாமி தன்மயா ஆயுர்வேத ஆராய்ச்சியில் தீவிரமாக இருப்பதனால் பெரும்பாலும் கருத்தரங்கங்களுக்குச் சென்றுகொண்டிருப்பார். அந்த நிலம் மீது பலருக்கும் குறி இருந்திருக்கிறது.
சுவாமி தன்மயா அப்பகுதியில் தீவிரமான போதை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துவந்தார். நேரடியாக பேசக்கூடியவர் ஆகையால் அந்த தளத்தில் எவரையாவது சீண்டியிருக்கலாமோ என்றும் போலீஸ் யோசிக்கிறார்கள்.
குருகுலத்தில் எல்லா வகையினரும் எப்போதும் வரும் நிலை இருந்துள்ளது. நித்ய சைதன்ய யதி உளவியலாளர் ஆகையால் அக்காலம் முதலே உளச்சிக்கல் கொண்டவர்கள் அங்கே அதிகமாக வருவதுண்டு. பலவகையான சிக்கல்கள் கொண்டவர்களைச் சாதாரணமாக பார்க்கலாம். எந்தக்கோணத்தில் விசாரணை செல்கிறது எனத் தெரியவில்லை.
தன்மயா சுவாமியை நான் 92 முதல் நெருக்கமாகவே அறிவேன். ஆங்கில மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தபின் அவருக்கு ஆயுர்வேதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதனூடாக நித்யாவுடன் தொடர்பு வந்தது. அன்றுமுதல் குருகுலத்திலேயே இருந்து வருகிறார். நிறைய வாசிக்கக்கூடியவர். நிறைய நூல்களை எனக்கு அவர்தான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். குறிப்பாக நரம்பியலுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையேயான உறவைப்பற்றி பல நூல்கள்.
சுவாமி தன்மயா வேடிக்கையாகவும் குழந்தைத்தனமாகவும் பேசக்கூடியவர். மிக உற்சாகமானவர். கடந்த பத்தாண்டுகளில் குருகுலத்துக்குச் சென்றுவரும் எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் பிரியமான நண்பராக ஆகிவிட்டிருந்தார். மிக எளிமையானவர். ஆகையால் அவரைப் பார்ப்பவர்கள் அவர் ஓர் அறிஞர் என்பதை உணர முடியாது. கருத்தரங்குகள் நடக்கும் காலத்தில் சமையலை கவனிப்பது, வெந்நீர் போடுவது முதல் எல்லா கழிப்பறைகளையும் சுத்தம்செய்வது வரை அவரே வேலைகள் அனைத்தையும் செய்வார். குருகுலத்தின் பரப்பு பெரிது என்பதனால் கிட்டத்தட்ட எட்டுமணி நேரம் உழைத்துத்தான் அவர் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது.
சுவாமி உடல்நிலை தேற வேண்டும். குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும்.
ஜெ