மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் – நாஞ்சில் நாடனின் கலை

நாஞ்சில்நாடனின் படைப்புகள் குறித்த இக்கருத்தரங்கத்தில் பங்கெடுக்க நேர்ந்தமை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அவரது சொந்த மண்ணில் தாமதமாகவேனும் அவரை நாம் கௌரவித்திருக்கிறோம். இதற்கு ஒழுங்குசெய்த அனைவருக்கும்நென் மனமார்ந்த நன்றி.

நாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பொதுவாக இலக்கிய ஆக்கங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துப்பார்க்கலாம் என்று. இது ஒரு உருவகம் மட்டுமே. புரிந்துகொள்ளும் முயற்சிக்காக நாம் செய்யும் எண்ணற்ற பகுப்புகளில் ஒன்று. இலக்கிய ஆக்கங்கள் இருவகை. மண்ணில் நின்று பேசுபவை. விண்ணில் நின்று பேசுபவை.

இலக்கியம் மாபெரும் இலட்சியங்கள் மகத்தான கனவுகள் சார்ந்து உருவாகின்றது என்று நம்பக்கூடியவர்களை நாம் என்று அடையாளம் காட்டலாம் என்று எண்ணுகிறேன். மனிதன் தன் வாழ்வை எப்போது ஒட்டுமொத்தமாக காண ஆரம்பித்தான்? முதுகுவளைத்து மண்ணை நோக்கி அலைந்து மண்ணில் பொறுக்கி உண்டு மண்ணில் மடிந்து உப்பாகும் இவ்வெளிய உயிருக்கு அந்த தேவை என்ன வந்தது?

இப்படி கற்பனைசெய்ய விழைகிறேன். தன்னை மட்டுமே கருதி தன் தேவைகளையும் அச்சங்களையும் சார்ந்தே சிந்தித்த ஆதிமனிதர்களில் ஒருவன் ஒருநாள் ஒரு உயர்ந்த மரம் மீது ஏறிக்கொண்டான். அங்கே நின்றபடி அவன் தன்னைச் சூழந்திருந்த வெளியைக் கண்டான். தன்னைப்போன்ற பலர். பலவகை மிருகங்கள். பூச்சிகள், பறவைகள், மரங்கள், குன்றுகள்….அனைத்தும் சேர்ந்ததே அவன் என்ற ஒரு மனவிரிவுக்கு அவன் ஆளாகியிருக்க வேண்டும். அந்த கணத்தில் அவன் ஒரு உடலோ தனிமனமோ அல்லாமலானான். அவன் விரிந்து பரவினான். மார்பில் கைவைத்து கண்ணீர் மல்க அவன் ‘நான் ! நான் ! நான் !’என்று சொல்லியிருப்பான் போலும்!

பின்னர் அவன் குன்றுமீது ஏறிச்சென்றான். வியர்வை வழிய கால்கள் கடுக்க மூச்சுவாங்கி ஏறிஏறிச் சென்றான். முகடுகளை கடந்து மேலும் மேலும் முகடுகள் நோக்கிச்சென்றான். அங்கே உச்சிநுனியில் நின்றபடி அவன் தன்னை கண்ணெட்டா விரிவுவரை பரந்தகன்ற பெருவெளியாக உணர்ந்தான். அங்கிருந்து நோக்கும்போது குன்றுகள் சிறுத்துக் கிடந்தன. மரங்கள் பச்சைப்படலங்களாக கிடந்தன. மிருகங்களும் மனிதர்களும் பூச்சிகளாகத் தெரிந்தனர். அவர்களின் ஆசைகளும் அச்சங்களும் குரோதங்களும் போர்களும் அற்பநகர்வுகளாக பொருளிழந்தன. அவன் அறிந்ததே மானுட தரிசனம்!

அங்கு நின்றபடி அவன் வானை நோக்கியிருப்பான். இந்த உச்சிமுகடு அவ்வனத்துமேகங்களில் நிற்கும் ஒருவனுக்கு வெறுமொரு கூழாங்கல் போலும் என எண்ணினான். அவ்வான்வெளியில் நின்று பார்க்கும் ஒருவனுக்கு இப்பூமியே ஒரு சிறு பொம்மை. அவன் கண்ணில் மானுட வாழ்க்கையும் மானுடனை கூத்தாட்டும் பேரியற்கையுமெல்லாம் என்னவென பொருள்கொள்ளும் என அவன் வியந்தான். அப்போது பிறந்தவனே கடவுள். விண்ணுலகில் நின்று மண்ணுலகைப் பார்க்கும் முழுமுதல்வன் ! அனைத்தையும் ஒரே பார்வையில் நோக்கமுடிகிற ஒருவன்!.

நூற்றாண்டுகளாக விண்ணகம் இலக்கியத்தை கொந்தளிக்கவைத்துள்ளது. நிலவின் ஒளிபட்டு பொங்கும் கடல்போல! எத்தனை ஆன்மீக இலக்கியங்கள். எத்தனை பக்தி பாடல்கள். எத்தனை காப்பியங்கள்!

”பொன்னுலகாளீரோ புவனமுழுதாலீஇரோ நன்னயப் புள்ளினங்காள்!” என ஏங்கி அழைத்தார் நம்மாழ்வார். விண்ணகங்களை ஆளும் புட்கள் மண்ணின் முழுமையை அறிந்தவை என்ற எண்ணம். அவற்றை அழைத்து விண்ணளந்த பெருமாளுக்கு தூதனுப்புகிறார் அவர்.

தல்ஸ்தோயின் போரும் அமைதியும் என்ற பெரும் நாவலில் ஓர் இடம். மாபெரும் வீரனாக வரலார்றில் இடம்பெற வேண்டுமென்ற கனவுள்ளவன் இளவரசன் ஆன்ட்ரூ. நெப்போலியன் அவன் ஆதர்ச பிம்பம். நெஞ்சு நிறைய போர்த்திட்டங்களுடன் களம் புகுகிறான். கையில் கொடியுடன் களத்தில் போரிடுகையில் காயமடைந்து மண்ணில் கிடக்கிறான். அவன் உடலில் இருந்து உதிரம் ஓடி மறைகிறது. உதிரம் இழக்க இழக்க நெஞ்சு அமைதி கொள்கிறது. தர்க்கமனம் அழிந்து தூய கனவுநிலை கைகூடுகிறது.

அவன் மல்லாந்து மேலே விரிந்த வான் வெளியை நோக்குகிறான். மெல்ல மிகமெல்ல மேகங்கள் இணைந்தும் பிரிந்தும் செல்கின்றன. மென்மையான ஒளி பரவிய மேகங்கள். ஏதோ அமர ரகசியத்தை தன்னுள்கொண்டவை என புன்னகைசெய்யும் மேகங்கள்.”அங்கே என்ன அமைதி ! அங்கே போர் இல்லை. பூசல்கள் இல்லை. சிறுமையும் அழுக்கும் இருளும் இல்லை. அங்கே மரணமே இல்லை! அங்கே அமைதி மட்டுமே” அவன் அதைப் பார்த்தபடியே கிடக்கிறான்.

அப்போது குதிரையில் ஏரி படோடோபமாக களம்காணவரும் நெப்போலியன் அவனுக்கு சிறுத்து கூசி நிற்கும் அற்ப உயிராகவே தென்படுகிறான். போரின் சாரமின்மையை, மனிதர்கள் கொள்ளும் பேராசையின் அபத்தத்தை அக்கணம் அவன் உணர்கிறான்.

பேரிலக்கியங்கள் மண்ணில் நின்று விண்ணின் ஒளியை நோக்குபவை. விண்ணின் ஒளியை கொண்டு மண்ணை ஒட்டுமொத்தமாக அளப்பவை. ”கண்ணில்தெரிந்து வானம் அது நம் கைப்படலாகாதோ” என்றான் பாரதி. கற்பனாவாத எழுத்தின் ஒருயுகம் லட்சியவாதத்தின் ஒரு யுகம் விண்ணை நோக்கி எழுந்தது. தழல்களைப்போல. மரக்கிளைகளைப்போல!

அடுத்துப் பிறந்தது மண்ணில் வேரூன்றி மண்ணை நோக்கும் ஓர் எழுத்துமுறை. அதை நாம் யதார்த்தவாதம் என்கிறோம். யதார்த்தவாதம் மண்ணை நோக்கியது. மண்ணில் இருந்து தன் சாரத்தைக் காண முயன்றது. அது விண்தேடும் தழல் அல்ல, மண்பரந்து உயிர்புரக்கும் நீர். மரத்த்தின் கிளையும் மலரும் அல்ல, வேர்.

சிறுவயதில்படித்த ஒருகதை நினைவுக்குவருகிறது. ஏசுவைத்தேடி கீழ்த்திசையிலிருந்து நான்கு தீர்க்கதரிசிகள் கிளம்பினர். ஒருவர் வழிதவறிச்சென்றார். அவர் பலநாடுகள் தேடி பல இனங்களைக் கண்டு அலைந்து திரிந்தார். இறுதியில் களைத்து சோர்ந்து நடைபிணமாக பாலைவனத்தில் ஒர் எளிய குடிசையை தட்டினார்.

அந்தக் குடிசையில் ஒரு சிறுமியும் நோயுற்ற அவள் அன்னையும் மட்டுமே இருந்தனர். சிறுமி சாலையோரத்தில் குடிநீர் விற்று கிடைத்த காசில் சிறிது புலல்ரிசி வாங்கி கஞ்சி காய்ச்சியிருகிறாள். அவர்கள் சாப்பிட்டு சிலநாட்கள் ஆகின்றன. விருந்தாளியை வரவேற்று அமரச்செய்யும் சிறுமி ”ஐயா என்னை மன்னியுங்கள். என் அன்னை நோயுற்றவள். அவளுக்கு நான் உணவளித்தாகவேண்டும்.ஆகவே விருந்தினர் வயிறு நிறைய என்னால் உணவளிக்க இயலாது. பாதியை என் அன்னைக்கு கொடுக்கிறேன்”என்றாள்

”;நீ சாப்பிட வேண்டாமா ? ” என்றார் தீர்க்கதரிசி. ”நான் நாளை மீண்டும் தண்ணீர் விற்று பணம் தேடி சாப்பிடுவேன்”என்றபடி குழந்தை பாதி கஞ்சியுடன் தாயின் அறைக்குச் சென்றது. தீர்க்கதரிசி கஞ்சியை குடிக்க முடியாமல் எழுந்து நின்றார். அப்போது அறை திறந்து அன்னை வெளியே வந்தார். ”ஐயா என் அறியாச் சிறுமி செய்ததற்கு மன்னியுங்கள். அவளுக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை. விருந்தினர் நீங்கள் உண்டு நிறைந்த பின்னரே நாங்கள் உண்போம்”என்றார்

கண்ணீருடன் தீர்க்கதரிசி எழுந்தார்.” நான் இனி தேடவேண்டியதில்லை. எங்கோ மண்ணில் மீட்பர் பிறந்திருக்கிறார்! அறம் மேலோங்க ஆரம்பித்துவிட்டது. அவரை நான் இந்த எளிய மக்களில் காண்கிறேன்!”என்று திரும்பிச்சென்றார்.

இறைவனை விண்ணில் தேடாமல் எளிய மக்கள் நடுவே மண்ணில் காணும் நோக்கு இது. இதுவே யதார்த்தவாதத்தின் தொடக்கம். உலகமெங்கும் எளிய மக்களின் கன்ணீரையும் கனவையும் சொல்ல வந்தது யதார்த்தவாதம். விண்ணை துதிப்பதற்குப் பதில் மண்ணை கொண்டாடவந்தது அது

தமிழில் யதார்த்தவாதம் புதுமைப்பித்தனில் தீவிரமாக பிறவி கொண்டது. கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆ.மாதவன், நீலபத்மநாபன் என நீளும் அவ்வரிசையில் இணைபவர் நாஞ்சில்நாடன். இவ்வரிசையில் நால்வர் நம் மண்ணைச்சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டும்.

நாஞ்சில்நாடன் அவரது பெயர் சுட்டுவதுபோல நாஞ்சில் மண்ணின் படைபபளி. கலப்பையை பின் தொடரும் ஆசிரியன். மீண்டும் மீண்டும வர் நம் மண்ணைப்பற்றி நம் மக்கலைப்பற்றி எழுதுகிறார்.

அவரது ஒரு கதை. அது மகாராஷ்டிர மாநிலத்தில் ஏதோ ஒரு வரண்ட கிராமத்தைக் காட்டுகிறது. அங்கே மண்ணில் உழுது உண்டு வாழும் விவசாயி ஒருவர். பிள்ளைகள் மூத்து பேரப்பிள்ளைகள் வளரும்பருவத்தில் முதுமை ஏறி அவர் திண்ணையில் அமர்ந்து ஹ¥க்கா பிடித்து ஓய்வெடுக்கவேண்டிய வயதில் பெரும் பஞ்சம் எழுகிறது. வயல்கள் காய்கின்றன. வயிறுகள் காய்கின்றன

சிலநாட்கள் சேமிப்பை உண்கிறார்கள். பின்னர் விதைத்தானியத்தை உண்கிறார்கள். பின்னர் செடிகொடிகளை கிழங்குகளை தேடிப்பறித்து உண்கிறார்கள். கடைசியாக கால்நடைகளை. ஒருபச்சைகூட எஞ்சாமலானபோது அவரவர் பாட்டுக்கு ஊரை விட்டே கிளம்புகிறார்கள். கிழவர் தனியாகிறார். அவரும் கிளம்புகிறார். ஒருவாய்சுணவு தேடி

கதையின் இப்பக்கத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதி பகலெங்கும் மகாராஷ்டிரச் சிறுநகரில் அலைகிறான். வேலைமுடிந்து ஒருபொட்டலம் சப்பாத்தியுடன் பாஸஞ்சர் ரயிலில் ஏறி அமர்கிறான். பசி குடலைப் பிய்க்கிறது. பெட்டியில் யாருமே இல்லை. அள்ளி அள்ளி தின்கிறான். கடைசிப்பாதியை பிய்க்கும்போது ஒருகை தடுக்கிறது. அந்த மகாராஷ்டிரக் கிழவர். அவன் அச்சப்பாத்தியை அளிக்கிறான்.

பலநாள் பசி. கிழவர் ஆவேசமாக தின்கிறார். பசி எரியும் வயிறும் உலர்ந்து சுருங்கிய கழுத்து சதையும் நெளிகின்றன. கண்கள் கலங்கி பிதுங்கி இருக்கின்றன. அடப்பாவி அரை நிமிடத்திற்கு முன்னால் வந்திருந்தாரென்றால்கூட ஒரு முழுச்சப்பாத்தியாவது கொடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறான் இவன்

சட்டென்று கிழவர் மராத்திய மொழியில் சொன்ன சொற்கள் அவன் சிந்தயை அறைகின்றன. எனக்குக் கொடு என்று அவர் கேட்கவில்லை. நான் சாப்பிடுகிறேனே என்றும் சொல்லவில்லை. ”நாம் சாப்பிடுவோம்” என்றார். அவனுக்கு உடம்பு அதிர்ந்தது. ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் சங்கக்கவிதை ஒன்றின் வரியை அவன் கேட்டான் ”யாம் உண்பேம்!” என.

உணவெல்லாம் பொதுவாக பகிர்தலே பண்பாக இருந்த ஒரு பொற்காலத்தின் நினைவை அந்தக் கணத்தில் அடைகிறான் அவன். மானுடமெங்கும் தழுவ விரிகிறது அவன் நெஞ்சம். அது & கதைகளின் சாரமாக பெரும்பாலான கதைகளில் எழுந்துவரும் அறமாக இருக்கிறது

இன்னொரு கதை. கோவையிலிருந்து அவன் கேரளா செல்ல பஸ் பிடிக்கிறான். மானந்தவாடிக்கு செல்லும் பஸ்ஸில் கூட்டம் தேனடையில் தேனீ போலலப்பியிருக்கிறது. ஆண்கள் பெண்கள் கூடைகள் சிப்பங்கள் பெட்டிகள் பைகள். எங்கும் கூச்சல் வியர்வை அழுக்கு வெப்பம். பஸ் மெல்ல நகர்கிறது. ஒரு அசையும் நரகம் போல.

கண்டக்டர் மேலுமேலும் ஆட்களை ஏற்றுகிறான். டிரைவர் வசை பாடுகிரான். எப்படி வணிய்டை ஓட்டுவது என எரிந்து விடுகிறான். வண்டியை முரட்டுத்தனமாக ஓட்டுக்கிறான். வாய் வசைதுப்பியபடியே உள்லது. அவன் தசைகள் முறுகியுள்லன. வியர்வையை துடைத்துக் கொள்கிறான்

மலையை அடையும்போது குளிர்காற்றில் மெல்ல இறுக்கம் தளர்கிறது. ஒருவரோடொருவர் சாய்ந்து பயணிகள் தூங்க ஆரம்பிக்கிறார்கள். இருபுறமும் அடர்ந்த பெருங்கானகம்.

சட்டென்று பஸ் உலுக்கி நிற்கிறது. வழியில் சாலையின் குறுக்காக ஒரு பெரிய மலைப்பாம்பு. இரையெடுத்ததா இல்லை கர்ப்பிணியா தெரியவில்லை. ஒரு அவசரமும் இல்லை. மெல்ல மெல்ல நகர்கிறது.

டிரைவர் புன்னகையுடன் ஹாரனை அடித்தான். ”போ மோளே வேகம்” [சீக்கிரம் போ மகளே] என்று சொன்னான்.

கதைகளின் சாரமாகிய மானுடம் தழுவிய அந்தக் கனிவும் அறவுணர்வும் அனைத்து உயிர்களையும் அணைப்பதாக மண்ணை மூடிவிடுவதாக விரியும் காட்சியை நாம் காண்கிறோம். அதுவே அவரது படைப்பின் உச்சமாக அமைகிறது.

மண்ணில் நின்று மண்ணை நோக்கும் கலைஞன் அவர். விண்ணின் ஜீவநீர் கிடைப்பதாக இருந்தால்கூட அது மழையாகப் பொழியவேண்டாம் மண் பிளந்து ஊற்றாக வரட்டும் என்று கோரும் தரிசனம் அவருடையது.

இங்கே அவரை என் சக எழுத்தாளர் என்றார்கள். அப்படி எப்படிச் சொல்வேன். கால் நூற்றாண்டுக்காலமாக நான் அவரது வாசகன். பதினைந்து வருடக்காலமாக என் நண்பராகவும் நல்லாசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவருகிறார். அவருக்கு என் வணக்கம். நன்றி.

[24.1.2007ல் நாகர்கோயில் புனித சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் கருத்தரங்கில் பேசியது]

முந்தைய கட்டுரைநீதியும், நாட்டார் விவேகமும் – பழமொழி நாநூறும்
அடுத்த கட்டுரைஅழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’