‘நான்கடவுள்’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ”வாங்க, வந்து ஒரு நாலுநாள் ஜாலியா இருந்துட்டுப் போங்க” என்றார் பாலா. இரண்டு மலைகளில் கோயில் அரங்குகளை கிருஷ்ணமூர்த்தி அமைத்திருக்கிறார். எது கல்மண்டபம் எது தக்கை என்று கண்டுபிடிக்க முடியாது. கல் என நினைத்து சாய்வது தக்கையாக இருப்பதும் தக்கை என ஓங்கி குட்டி கல்லில் கை வீங்குவதும் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருந்தது.
நான் நேராக அறைக்குப் போய் குளித்துக் கொண்டிருக்கும் போது பாலா காலையிலேயே குளித்து உடைமாற்றி என் அறைக்கு வந்து என்னைப்பார்த்ததுமே சிரிக்க ஆரம்பித்தார். ”சரி குளிச்சிட்டு வாங்க… என்ன ஒரு மாதிரி முழிக்கிறிங்க? பிரச்சினையெல்லாம் சரியாயிரும், எதுவா இருந்தாலும் பாத்திருவோம். பயப்படாதீங்க…” ”அதில்ல பாலா.நீங்க காலையிலேயே எந்திருச்சிருக்கீங்க… இதில ஏதாவது புதுசா பிரச்சினை கெளம்புமோன்னு பயமா இருக்கு..” என்றேன்.
பெரியகுளம் படப்பிடிப்பு இடத்துக்குப் போனதுமே காரவானுக்குள் நுழைந்தேன். ஆரியா முகமெங்கும் தாடியுடன் நரசிம்மம் போல அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தார். ”வாங்க சார்… சீட்டுக்கு அடியிலே ஒளிஞ்சுக்கிறீங்களா?” ”இல்ல வேண்டாம் நிக்கிறேனே.” ”…இல்ல இப்பல்லாம் நீங்க அப்டித்தான் உக்காந்து பேசறதா சொன்னாங்க?” அருகே கருப்பான ஒரு பெண் உட்கார்ந்திருக்க ”இவளைப் பாத்தீங்கள்ல? இந்த உருவத்துக்குள்ள பூஜா இருக்கா” என்றார்.
உண்மையிலேயே பூஜாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இத்தனைச் சின்னப்பெண் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஓரம்போவில் புடவையெல்லாம் கட்டி உயரமாக இருந்தது போலிருந்தது. ”கொடுமை பண்ணிட்டார் பாலா” என்றேன் ”வால்க்கையிலே எதாவது ஸிரப்பா பன்னனும் இல்ல ஐயா? நெடிக்க வெந்தாச்சு…” என்றார் பூஜா. இயக்குநர் சீமானின் நட்பால் தூயதமிழுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு மூச்சுப்பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றார் ஆரியா. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ”யனது புக்கைப்படம்” என்று சொல்லப்போய் நிகழ்ச்சி தொகுப்பாளினி விழிபிதுங்கியதை ஆரியா சொன்னார். ஆரியா சென்னைத்தமிழ் உட்பட எல்லா செந்தமிழிலும் விற்பன்னர்.
பாலா தீவிரமாக சண்டைக்காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். ஸ்டண்ட் சிவாவின் உதவியாளர்கள் கோட்டியும் ராஜேந்திரனும் கட்டிப்புரண்டு கத்தி அடித்து செய்துகாட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தாலே வயிற்றைக் கலக்கியது. பொதுவாக நான் தீவிரமான சண்டைக்காட்சிகளை பயப்படுவேன். ஜாக்கிச்சான் என்றால் பிடிக்கும். பாலாவின் படங்களில் சண்டைக்காட்சிகள் கிட்டத்தட்ட உண்மையான சண்டைகள். காசியில் ஒவ்வொருநாளும் அடிபட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். மூர்க்கமான அடிகள் உதைகள்.
அதிலும் ஆரியா ஏற்கனவே ஒரு படத்தில் திரைப்படச் சண்டைக்காட்சி உதவியாளர் வேடத்தில் நடிப்பதற்கான இரண்டுவருடம் முறையாக பயிற்சி எடுத்திருந்தார்.[அப்படத்தில் வேறு யாரோ நடித்தார்களாம்] ஆகவே சண்டைக்காட்சிகள் சமரசங்களே இல்லாமல் நேரடியாகவே படமாக்கப்பட்டன.
மலைமீது ஏறுவதுதான் மொத்தத்தில் கஷ்டம். பேசியபடியே ஏறும்போது பத்தடிக்கு ஒருமுறை ஆர்தர் வில்சன் நின்று தீவிரமாக, ”சார் இப்ப இந்த சென் பௌத்தம்னா அதிலே யோகா உண்டா?” என்பது போன்ற ஆழமான ஐயங்களைக் கேட்பதற்குக் காரணம் மூச்சுவாங்குவதுதான் என்பது தெரிந்தது. எங்கெங்கும் கூட்டம். துணைநடிகர்கள், ஏராளமான விளிம்புநிலை மக்கள். சித்திரக்குள்ளர்கள், விசித்திரமான உடல் கொண்டவர்கள், சாமியார்கள்.
சினிமாப்படப்பிடிப்பில் உள்ள மாயக்கவற்சி என்பது ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து ஒரு விஷயத்தில் ஈடுபடும்போது ஏற்படும் குடும்ப உணர்வும் உற்சாகமும்தான். அது ஒரு கலைச்செயல்பாடும்கூட, ஈடுபடுபவர்கள் பலவகையான கலைஞர்கள் என்னும்போது அந்தகொண்டாட்டம் பலமடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய ஒரு கலைஞர்களின்கூடல் வேறு எந்த தளத்திலும் இப்போது நிகழ்வதில்லை. சிற்பிகள் தச்சர்கள் ஓவியர்கள் புகைப்பட நிபுணர்கள்… படப்பிடிப்பு முடியும்போது இந்த கூட்டு அப்படியே மறைந்து இல்லாமலாகிறது. அத்தனைபேரும் வேறு கூட்டுகளுக்குச் சென்றுவிடுவதனால் இது மறந்தும் போகிறது. அந்த ஒரே படத்தில் வேலைசெய்தவர்களுக்கு மட்டும் அது ஓர் இனிய கனவாக வெகுகாலம் நீடிக்கும்.
இப்படத்தில் நடிக்கும் பிச்சைஎடுக்கும் மக்களுக்கும் சாமியார்களுக்கும் இது ஒரு பெரிய திருவிழாக்காலம். ஒருவேளை இதுவே அவர்கள் வாழ்வின் உச்ச தருணம். இந்தப்படம் இத்தனை நீண்டதே அவர்களின் பிரார்த்தனையின் விளைவோ என்னவோ? இந்த வசதிகள் அதைவிட மதிப்பும் முக்கியத்துவமும் வேறு எங்கே கிடைக்கும் அவர்களுக்கு? பல முகங்கள். சற்று கண்பழகிய பிறகு அவர்களில் பலரிடம் இருக்கும் குழந்தைத்தன்மை மிக அழமானதாக தோன்ற ஆரம்பித்தது. குறிப்பாக இதில் நடிக்கும் அரவானி ஒருவர். நான் ஊர்சுற்றிய நாட்களில் அரவானிகளுடன் பழக்கம் இருந்தது. ஆனால் இவரளவுக்கு அழகான எவரையும் கண்டதில்லை. பெண்மையும் ஆண்மையும் கலந்த ஒரு நளினம். அவர் சிரிப்பது நடப்பது எல்லாமே அழகாக இருந்தது. மனித அழகுகளுக்கு எல்லைகளே இல்லை.
இடைவேளையில் முத்துக்குமார் என்ற இரண்டடி உயரமான பத்துவயதுப் பையனை இடுப்பில் எடுத்துவைத்துக் கொண்டு அவன் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார் ஆர்தல் வில்சன்.மானிட்டர் பக்கத்தில் பாலாவின் இருக்கையைச் சுற்றி நாலைந்து குள்ளமான விசித்திரக் குழந்தைகள். அவர்களுக்குள் சண்டைகள். ”சார் அவன் அடிக்கிறான் சார்”. ”சார் அவன் போட்டுக்குடுகிற ஆளு சார்,நம்பாதீங்க” என்பதுபோன்ற புகார்களை பாலாவே பஞ்சாயத்து செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவண்ண மூக்குக்கண்ணாடிகளை கொடுத்து அமைதி நிலவச்செய்தார்.
இதில் இவர்களுக்கு கல்விகற்பிக்கும் பொறுப்பையும் பாலா ஏற்றெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ”வாரத்திலே மூணுநாள் ஸ்கூல்போயிடுவான். முட்டை போடுற எடம்னு சொல்றான் ஸ்கூலை…டேய் எழுதுரா…முட்டை எழுது”. தாளும் பேனாவும் கொடுக்கப்பட்டபோது பையன் மூச்சுப்பிடித்து ”கூமுட்ட” என்று எழுதிக் காட்டினான். ”ஸ்கூலிலே போய் எழுதினா இன்னும் ரெண்டு முட்ட ஜாஸ்தி கெடைக்கும்னு சொல்லியிருக்கு’என்றார் பாலா.’
பிச்சை எடுத்திருந்த மூன்றடி உயரமானமுருகேஸ்வரி ஆரியாவை நோக்கி ”ன்ன்னா சார், சோறு துண்ணியா?” என்று சகநடிகர் பாவனையில் கேட்கவைக்கும் சினிமாவைவிட சக்தியான ஒன்றையும் காண நேர்ந்தது. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆரியா சண்டைக்குப்பின் மூச்சிரைக்க வந்து அரையடி உயரம் கூட இல்லாமல் உட்கார்ந்திருக்கும் ஒருவரிடம் ”ஸ்கோர் என்ன முத்து?” என்று கேட்க அவர் சலித்தபடியே சொல்ல இருவரும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி இணைந்து கவலைகொள்வதைக் கண்டேன். கிரிக்கெட் பல்லாயிரம் சினிமாவுக்குச் சமம்போலும்.