காந்தி:கேள்வி- பதில்கள்

அன்புள்ள ஜெமோ, காந்தியின் மீதான குற்றச்சாட்டுக்களை படித்தேன். ஒரு இடத்தில் கூட ‘ஹரிஜன்’ கள் என அம்மக்களை நீங்களோ அந்த கேள்வியை கேட்டவரோ குறிப்பிடவில்லை என்பதை கண்டேன். இப்படித்தான் வரலாறு கொடுக்கல் வாங்கல்களைச் எந்நாளும் செய்து கொண்டேயிருக்கிறது போலும். மிகப்பெரிய காரியங்களை காலப்போக்கில் செய்து முடித்துவிடுகிறது. மற்றபடி ஆஸ்ட்ரேலிய பயணம் இனிது முடிந்தமை குறித்து மகிழ்ச்சி. அன்புடன் ஜெயராஜன் ராமானுஜம்

 

அன்புள்ள ஜெயராஜன்,

ஹரிஜன் என்ற பெயரில் எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை. அப்பெயரை ஏன் சூட்டினார் என்று காந்தியே விரிவாக எழுதியிருக்கிறார். தீண்டதகாதார் என்னும் சொல் அப்போது புழக்கத்தில் இருந்தது. அதை நீக்க வேண்டும் என காந்தி எண்ணினார். வேறுபெயர்களுக்காக தன் இதழில் கோரிக்கை விடுத்தார். வந்த பெயர்களில் இருந்து அப்பெயரை தெர்வுசெய்தார்.

அனைத்து மக்களுமே ஹரியின் புதல்வர்கள்தான் என்றாலும் இப்போது இவர்களை சிறப்பாக எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று அவர் சொன்னார். அத்துடன் நாம் ஊகிக்கக் கூடிய ஒரு விஷயம் உண்டு. பெரும்பாலும் இந்து உயர்சாதியினரால் ஆன காங்கிரஸ்பேரவைமுன் காந்தி ஹரிஜன நலத்துக்கான திட்டமொன்றை முன்வைக்கிறார். அவர்களை அதனை ஏற்றுக்கொள்ளச்செய்தாகவேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அதற்கு தன்னுடைய ஆளுமை, அசைக்க முடியாத பிடிவாதம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்.

அத்துடன் அன்றைய இந்து மனதில் தலித்துக்கள் இந்து மத அமைப்புக்கு வெளியே உள்ளவர்கள் என்னும் எண்ணம் வேரூன்றியிருந்தது. அதற்கு எதிரான தன்னுடைய கருத்துப்போரின் ஒரு பகுதியாக இப்பெயரை காந்தி முன்வைக்கிறார். ஒதுக்கபப்ட்டவர்களை மையத்தில் வைத்து அழுத்திச்சொல்லும் ஒரு குரல் அதில் இருக்கிறது. புஷ்டிமார்கக் வைணவர் என்னும் முறையில் ஹரி காந்தியின் இஷ்ட தெய்வம்.

ஆனால் பின்னர் தலித் மக்கள் பௌத்தர்களாக மாறியபோது இந்து அடையாளம் கொண்ட ஒரூ பெயரை நிராகரிக்க விரும்பினர். அது நியாயமான ஒரு கோரிக்கை என்றே எண்ணுகிறேன். மேலும் அந்தப்பெயரில் ஒரு ‘அரவணைக்கும்’ போக்கு இருப்பதாகவும் எண்ணினர். ஆகவே அப்பெயரை அவர்கள் விரும்பவில்லை. அவர்களே விரும்பிச் சூட்டிக்கொண்டபெயர் தலித்துக்கள். ஆகவே அப்பெயரைப் பயன்படுத்துவதே முறையானது.

அதேசமயம் தலித்துக்கள் என்றபெயரையும் சிலர் நிராகரிக்கிறார்கள். உதாரணமாக தேவேந்திரகுலவேளாளர் அப்பெயரை நிராகரித்து தீர்மானமே போட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களை தலித் என்று சொல்வதும் முறையானதல்ல.
ஜெ

 

 

ஜெ..

 

சாருவின் கட்டுரையை உங்கள் மூலம் படித்தேன்.

இதில் இன்னொரு கோணமும் உள்ளது.

வன்முறையை ஒழிக்க படை என்னும் கொலைக் கருவியை உபயோகிக்கும் ஒவ்வொரு நாடும் ராஜபக்ஷேவும் கருத்தில் கொள்ள வேண்டியது. மோதிகளும் இதில் அடக்கம்.

 

தம் தீவிரவாதக் கொள்கையை ஒரு மதமாகக் கொண்ட பத்தே பத்துப் பேர், அமெரிக்கா என்னும் வல்லரசின் மென்னியைத் திருகி, அவர்களை வீழ்ச்சியின் பாதையில் செலுத்த முடிந்ததும் வன்முறையின் பலமே..

 

வன்முறை என்னும் பஸ்மாசுரனின் அழிவுக்கு ஒரே வழி, அன்பென்னும் ஆன்மிகப் போர்தான்.

 

பகையுடைச் சிந்தை யார்க்கும் பயன்படாது. அரசர்களும் வரலாற்றில் இருந்து பாடங்கள் கற்று, வெற்றி மதப்பில் எக்காளமிடாமல் காலனின் கணக்கை எண்ணி, தம் குடிமக்கள் அனைவருக்கும் நல்லது செய்ய எண்ணினால் உலகம் மேம்படும். மக்கள் மகிழ்வர். 2009 தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் செய்தியும் இதுதான் என்று படுகிறது.

பாலா

 

அன்புள்ள சாரு மற்றும் ஜெமோ வுக்கு,
உங்கள் இருவரின் பக்கங்களையும் தவறாமல் தினமும் படிக்கும் வாசகன் நான்.

எந்த ஒரு கலையும் மக்களுக்கு உண்மையயை சொல்வதாகவும், அவரை நல்வழியில்  இட்டு செல்வதாகவும் இருக்க வேண்டுமென்பதை உங்கள் எழுத்தால் சமீபத்தில் உணர்த்தியுள்ளீர்கள்; நன்றி!.

மிக நல்ல எழுத்து என்பதை விட, மிக சரியான நேரத்தில் சொல்லப்பட்ட கருத்தாகவே உங்கள்  இருவரின் கட்டுரையையும் பார்கிறேன். நீங்கள் சொன்னதை போல், தெளிவாக வரலாற்றை அறியாத சில மேடை  பேச்சுக்களாலும், போகிற போக்கில் காந்தியை தூற்றுபவரின் எளிதான ஈர்ப்புக்களாலும், ஆயுத போராட்டத்தின்  மேல் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு சராசரி இளைஞனாக இருந்தவன் தான் நானும் (பின் என்னை மாற்றியது, அறிவார்ந்த பல வாசிப்புகளும், தியானத்தின் வழியே என்னுள்ளே நான் கொண்ட தேடுதலுமே!). என்னை போன்ற பல இளைஞர் எளிதாக ஈர்க்கப்படும் வன்முறையை நோக்கி போகாமல் இருக்க இது போன்ற கட்டுரைகளும்   , எழுத்துக்களும் உணர்ச்சிகரமான இத்தருணத்தில் மிக மிகஅவசியம்.

காந்தி எவ்வளவு வீரமுடயவர் என்பது இன்னும் நாட்டில் 90%  இளைஞருக்கு புரியாமலே இருக்கிறது. இது போன்ற தருணங்களில், பக்குவத்துடன் ஆழ்ந்து விரித்து கூறும் தன்மை கொண்ட ஒருவரும், நேர்மையுடன் நேருக்கு நேர் சட்டையை பிடித்து கூறும் தன்மையை கொண்ட ஒருவரும் (இரண்டும் எபோழுதும் எளிதில் மறக்காது :)) இது போன்ற எழுத்துக்களை தருவது என்றுமே நன்றிக்குரியது.

கடந்த 20 ஆம் தியதி எழுதிய இக்கவிதையில் வன்முறையின்  சாயல் இருக்கோமோ என்ற அச்சத்தில் எந்த பத்திரிக்கைக்கும் அனுப்பவில்லை. இருந்தும், கருணை கொண்ட கையுடனும் அந்த்த கண்ணீரை துடைக்கலாம் என்று இபொழுது உங்கள் இருவருக்கும் அனுப்புகிறேன்.


இன்று காலை எழுகையில் – என்
கண்ணாடி ஜன்னலில்
காய்ந்து இருந்தது ஒரு கண்ணீர்த்துளி!

எவனோ அழுதிருக்கிறான் என்றேன்;

நேற்றடித்த தூறலாய் இருக்குமென்றார்
வீட்டிலுள்ள பெரியவர்..

அன்னையிடம் சொன்னேன்,
“அப்படி ஒன்றும் தெரியவில்லையே” என்றார்!

துடைத்து விட்டு வேலையே பாரென்றார்
வீட்டிலுள்ள சிலர்!

அருகில் சென்று பார்த்த போது
என் கண்களில் வழிந்ததாக தெரிகிறது..

துடைத்து துடைத்து பார்க்கிறேன்,
போகவில்லை …

ஒருவேளை, அந்தப் பக்கம் சென்று
துடைத்தால் போகுமோ..?
– திரை தாண்டி…?

மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி!

அன்புடன்,
ஆனந்த்

அன்புள்ள ஜெயமோகன்,

 

 

 

அப்பொழுது வன்முறையுடன் கூடிய அணுகுமு்றைக்கு எந்த பயனுமே இல்லையா?  சு்தந்திரம் கிடைத்த பின்னர் இந்தியாவுடன் இணையாத மாநிலங்களை படிய வைக்க ராணுவம் பயன்படுத்த பட்டதே. பாகிஸ்தான் உடனான போர், பங்களாதேஷ் விடுதலை இப்படி பல இடங்களில் இராணுவம் வெற்றியை அடைந்தது அல்லவா? அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோமே. அந்த இடங்களி்லும் சத்தியாகரக வழியை கடைபிடித்திருந்தால் இவை ஏதேனும் கிட்டியிருக்குமா? இவ்வளவு ஏன், நம் நாட்டின் சட்ட ஒழுஙகே வன்மு்றையின் அச்சுறுத்தலில்(போலீ்சு மூலமாக) தானே பராமரிக்க படுகி்றது. காந்தியின் அத்தனை முயற்சிகளும், த்னி நாடு கேட்ட இசுலாமியர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையே.
ஆக வ்ன்மு்றை ஜெயிக்கும் இடங்கள் சில, தோற்கும் இடங்கள் சில என்று இருக்கிறதோ? ஆயுத்ததால் வெல்லவே முடியாத, நியாயம் நீதி போன்றவற்றில் நம்பிக்கை வைத்திருந்த ஆங்கிலேய்ரிடம் செல்லுபடியான சத்தியாகிர்கம் வேறொரு இடத்தில் காதை சுற்றி மூக்கை தொடுகின்ற தேவையற்ற வேலையாக இருந்திருக்கு்மோ? இல்லை ஒடுக்கப்ட்டவர்கள் போராட்ட ஆயுதமாக சத்தியாகிரகமும், மற்றபடி ஒரு தேசத்தின் அன்றாட ஒழுங்கை பேணுவதற்கு, வன்மு்றையை பயன்ப்டுத்தி கொள்ளலாம் என்று நி்னைக்கி்்றீர்களா? இல்்லை நான் தான் சம்பந்தமில்லாத இரு விஷயங்க்ளை போட்டு குழப்பி கொள்கிறேனா?

 

அன்புடன்,
பிரபு
அன்புள்ள பிரபு,
எளிமையான வேறுபாடுதான். என் கட்டுரையில் நான் பேசியிருப்பதெல்லாம் ஒருசமூகத்தின் வளர்ச்சிக்கான, விடுதலைக்கான போராட்டத்தைப்பற்றி மட்டுமே . அரசு என்பதைப்பற்றிய காந்தியின் சிந்தனைகள் மிக விரிவாக வேறுதளத்தில் உள்ளன. ஒரு கட்டத்தில் எல்லைகளை அழிந்த ஒரு சர்வ தேசியத்தை கனவுகண்டவர் என்றாலும் ராணுவப்பாதுகாப்பு இல்லாமல் தேசங்கள் சத்யாக்ரகத்தை நம்பி இயங்கவேண்டும் என எண்ணிய அசடு அல்ல காந்தி.
ஒரு தேசம் மிகக்குறைவாகவே மக்களை ஆளவேண்டும் என்னும் தரிசனத்தில் இருந்து உருவானது காந்தியின் அரசாங்கம் பற்றிய  கருத்துக்கள். ஆகவே மையமில்லாத ஓர் அரசை அவர் உருவகித்தார். கிராமங்கள் சிறு சிறு அடிப்படை அலகுகளாக பிரிக்கப்பட்டு  அந்த அடிபப்டை அலகுகள் தன்னிறைவான பொருளியல்கட்டுமானங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். அந்தச் சிந்தனைகளை முற்றிலும் வேறு ஒருதளத்தில் வைத்தே பேசமுடியும்
ஜெ
அன்புள்ள ஜெ
காந்தி குறித்த உங்கள் கட்டுரைகள் என் மனதில் இருந்த நீண்டகால ஐயங்களை தெளியவைத்தன. பல கோணங்களில் காந்திய வழிகளின் முக்கியத்துவத்தைப்பற்றியும் அவரது வழிமுறைகளின் நியாயத்தைப்பற்றியும் எழுதியிருக்கிறீகள். சத்யாக்ரகப் போராட்டம் என்பது உண்மையில் எதிரியின் கருத்தியல் பலத்தை தகர்ப்பதே என்ற கோணம் முக்கியமானது. அப்படிச்செய்வதற்கு நம்முடைய தரப்பில் உண்மையான தர்மமும் நியாயமும் இருக்க வேண்டும் இல்லையா? அப்படி நம்மை உண்மையான தர்மநியாயத்துடன் வைத்துக்கொள்வதையே காந்தி சொல்கிறார் என்று நினைக்கிறேன். அப்போதுதான் நம்முடைய சிந்தனைகள் பிறரை பாதிக்கின்றன. பிறர் மீது அழுத்தமான பாதிப்பைச் செலுத்துவனவாக அவை அமைகின்றன. அதுதான் சத்தியாக்ரகம் என்று தோன்றியது. உண்மைக்கான ஆசை என்று காந்தி அந்தப்போராடத்துக்கு பெயர் போட்டதே அதனால்தான் இல்லையா?
சிவசண்முகம்
ஸ்ரீவில்லிபுத்தூர்

 

முந்தைய கட்டுரைஎழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் ஆங்கிலநாவல்
அடுத்த கட்டுரைகாந்தியின் பிழைகள்