வாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்

கிராமங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு குளத்துக்கரை மரம் நினைவுக்கு வரும். கிராம வாழ்க்கை எப்போதுமே நிஜமும் நிழலுமானது. வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க கூடவே வாழ்க்கையைப்பற்றிய கதைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் நிஜம் விரைவிலேயே மறைந்துபோகிறது. கதைகள் மட்டும் அழியாமல் எஞ்சுகின்றன. சொல்லப்போனால் கிராமம் என நாம் சொல்வது அந்த கிராமத்தின் நில அளவை விட, மக்கள் எண்ணிக்கையை விட பிரம்மாண்டமான கதைகளின் குவியலைத்தான். கிராமம் முடிவிலாது பொருட்களை அளிக்கும் மந்திரவாதியின் தொப்பி.

லட்சுமணப்பெருமாள்

கிராமியக்கதைத் தொகுதியின் சிறியபகுதியே தமிழில் நவீன இலக்கியமாக ஆகியிருக்கிறது. வழக்கம்போல அதற்குத் தமிழில் முன்னோடி என்றால் புதுமைப்பித்தன்தான். கிராமியக்கதைகளின் எல்லா வகைமாதிரிகளுக்கும் ஒரு முன்னோடிக்கதையை புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். சமூகவிமர்சனக்கதைகளான துன்பக்கேணிநாசகார கும்பல் போன்றவை ஒருவகை. செவ்வாய் தோஷம் போன்ற அமானுஷ்ய கதைகள். சங்குத்தேவன் தர்மம் போன்ற செவிவழிக்கதைகள். காலனும் கிழவியும் போன்ற பகடிகள்.

புதுமைப்பித்தனுக்குப்பின் வலுவாக எழுந்த நம் கிராமியக்கதைமரபின் இரு பெரும்போக்குகளை தொடங்கிவைத்த முன்னோடிகள் என கி.ராஜநாராயணனையும் கு.அழகிரிசாமியையும் சொல்லலாம். கிராமத்துப்பெரிசு ஒன்றின் சாதாரணமான பேச்சு போல அமைந்த நேரடியான எளிய கதைகள் அழகிரிசாமியால் எழுதப்பட்டவை. பல கதைகளை எங்கோ கேள்விப்பட்டதுபோல உணர்வோம். அழகிரிசாமி கிராமத்துக்கதைகளை கிராமத்துக்குள் இருந்துகொண்டு சொல்கிறார். ஆகவே கிராமத்தை வேடிக்கையாகப் பார்க்கும் கண் அவரிடமில்லை. கிராமம் இயல்பான ஒரு பின்னணியாக உள்ளது, அவ்வளவுதான்.

அழகிரிசாமிக்கு மிக முக்கியமான வாரிசுகள் தமிழில் உண்டு. ராஜேந்திர சோழன் அவர்களில் முக்கியமானவர். அவரது கதைகளை பலர் கிராமியக்கதைகள் என்றுகூட உணர்வதில்லை. அவை வாழ்க்கையின் நேர்பதிவுகள் என்ற பிரமை எழுகின்றது. அப்பட்டத்தன்மையே அவற்றின் அழகியல் தனித்தன்மை. ச.தமிழ்ச்செல்வனையும் அழகிரிசாமியின் தொடர்ச்சி என்று அழகியல்ரீதியாக வகுத்துரைக்கமுடியும்.

கி.ராஜநாராயணன் கிராமத்தை வேடிக்கைபார்க்கும் அன்னியனின் சிரிப்புடன் எழுதியவர் என்றால் வியப்பாக இருக்கும். கிராமத்திலேயே ஊறி அங்கேயே வாழும் கதைசொல்லி அவர் என்ற பிம்பம் நம்மிடம் இருக்கும். ஆனால் கி.ராஜநாராயணனின் எல்லா கதைகளும் கிராமத்தை வேடிக்கை பார்ப்பவர்களுக்கான எல்லா தகவல்களையும் அளித்தபடி வெளிப்படுகின்றன. நாம் கிராமத்திற்குச் சென்றிறங்கியதும் நம்மை வந்து அடையும் ஒரு வக்கணையான வாயாடியால் சொல்லப்பட்டவை போலிருக்கின்றன அவை. கி.ராஜநாராயணனின் ஒவ்வொரு கதைமாந்தரும் அவர்களுடைய விசித்திரங்களால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

ஆனால் அழகிரிசாமியைவிட கி.ராஜநாராயணன் ஒரு படி மேல் என்பதே என் எண்ணமாக இருக்கிறது. கு.அழகிரிசாமி அவரது கதைகளில் உச்சகட்ட அறவெளிப்பாட்டின் தருணங்களை உருவாக்கியிருக்கிறார். ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, காலகண்டி போன்ற கதைகள் அவரது சாதனைகள். அழகம்மாள், இருவர் கண்ட ஒரே கனவு போன்ற கதைகள் நுண்ணிய குணசித்திர விவரிப்பின் மூலம் மானுட வாழ்க்கையின் விந்தையையும் துயரத்தையும் சுட்டிக்காட்டக்கூடியவை. ஆனால் கி.ராஜநாராயணன் அவரது மகத்தான கதைகளில் அந்த எல்லையையும் தாண்டி மொத்த மானுடவாழ்க்கையையே ஒரு கணத்தில் பார்த்துவிடும் தரிசனங்களை அளிக்கிறார். பேதை உதாரணமாக சொல்லப்படவேண்டிய கதை.

கி.ராஜநாராயணன் தமிழில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிய படைப்பாளி. அவரது கதைகளின் மேலோட்டமான அம்சமான வேடிக்கை தன்மைக்கு ஒரு வெகுஜன மதிப்பு உருவானது. ஆகவே அவரைப்போல எழுத பலர் முற்பட்டார்கள். தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, சூரங்குடி முத்தானந்தம் போன்ற பலரை கி.ராஜநாராயணனின் பாதிப்பை நேரடியாகக் கொண்டு எழுத முற்பட்டவர்கள் எனலாம். அவர்கள் எல்லாரும் யானைசென்றவழியில் சென்றவர்கள். யானைநடையை நகல் செய்தவர்கள். யானைப்பாதத் தடத்தை குளமாக நினைக்குமளவுக்கு சிறியவர்கள்.

கி.ராஜநாராயணனின் பாதையில் சென்ற கலைஞர்களில் இலக்கியவகையில் பொருட்படுத்தத் தக்கவர் லட்சுமணப்பெருமாள் . கி.ராஜநாராயணன் கதைகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்பது அது எந்நிலையிலும் சலிக்காது என்பதுதான். எல்லா விவரணைகளிலும் கூர்மையும் புத்திசாலித்தனமும் இருக்கும். தட்டையான வர்ணனையோ விவரிப்போ இருக்காது. தன்னிச்சையான ஒரு நகைச்சுவை, அதன் முழு வக்கணையுடன் வெளிப்பட்டபடியே இருக்கும் கதை சொல்லல் அது. ஆனால் சட்டென்று நம் பார்வையை ஏமாற்றி அந்தக் கதைசொல்லல் மானுட துக்கத்தையும் ஏக்கத்தையும் கனவுகளையும் பேச ஆரம்பித்துவிடும். அபூர்வமாக மாபெரும் மானுட இலட்சியங்களை ஆன்மீகநிலைகளை உணர்த்தியும் நிற்கும். கி.ராஜநாராயணன் பாதையில் ஒருவரை பொருட்படுத்தவேண்டுமென்றால் முதல் தகுதியாக இருப்பது அந்த சுவாரசியம்தான். அந்த அம்சத்தில் முழுக்கமுழுக்க கி.ராஜநாராயணன் அளவுக்கே சொல்லத்தக்கவர் லட்சுமணப்பெருமாள்.

கி.ராஜநாராயணனிடமிருந்தும் தன்னுடைய கிராமத்திலிருந்தும் கற்றுக்கொண்ட கதைசொல்லல் திறனை முழுக்க லட்சுமணப்பெருமாள் தன் கதைகளில் பயன்படுத்துகிறார். கி.ராஜநாராயணனின் தனித்திறனே அவரது அபூர்வமான கதாபாத்திரங்கள்தான். பெரும்பாலான கதாபாத்திரங்களை வாசகர்கள் தனிப்பட தெரிந்த மனிதர்களைப்போல ஞாபகம் வைத்திருப்பார்கள். லட்சுமணப்பெருமாள் அதே நிலப்பகுதியைச் சேர்ந்த அதே மனிதர்களைத்தான் எழுதிக்காட்டுகிறார். அதேபோல சுவாரசியமாக.

‘வந்தேமாதரம் நல்லைய நாயக்கர்’ [கறவை] ஒரு கி.ராஜநாராயணன் கதையில் வரக்கூடியவர்தான். நல்லையா நாயக்கருக்கும் வந்தேமாதரத்துக்கும் உள்ள ஒரே தொடர்பு அந்தக்காலத்தில் வேறுகட்சிகள் இல்லாமலிருந்தபோது கூட்டங்களில் அவர்தான் வந்தேமாதரம் என்று கூப்பாடு போடுவார் என்பதுதான். வயதாகி, சமவயதுக்காரர்கள் எல்லாம் போய்ச்சேர்ந்தபின் நல்லையநாயக்கர் சுதந்திரப்போராட்ட தியாகியாக உருவமடைந்து ‘காந்தி என்ன சொல்றார்னா’ என பேச ஆரம்பிக்கிறார். நேரு காலத்திலிருந்தே இரு குடும்பங்களுக்கும் காகிதத்தொடர்பு உண்டு என்று ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு’ என்கிறார் லட்சுமணப்பெருமாள் .

இன்னொரு உதாரணம் என்றால் சாவண்ணா என்ற அரைச்சண்டியர் [அரைச்சண்டியர்]. காலை எழுந்ததுமே என்ன இங்கே படுத்திருக்கிறோம், யார் அடித்து தூக்கிப் போட்டிருப்பார்கள் என்று சிந்தனைசெய்யும் சாவண்ணா. ‘அப்பாவுக்கு ஒரு குட்டுமாணிக்கம் போடு ராசா’ என்று பையனை கொஞ்சும் சாவண்ணா. யாரோ மிரட்டியதுமே ‘டேய்..இன்னைக்கு அழிஞ்சதுடா மதுர ரோடு..டேய்’ என்று சலம்பி தன் ‘ஆட்களை’ கூட்ட முயன்று அடிவாங்கி ’முதலாளி ஒரு இருவது ரூவா குடுத்துட்டுப்போங்க முதலாளி’ என்று அடித்தவன் பின்னாலேயே ஓடும் சாவண்ணா.

கி.ராஜநாராயணன் எழுதியிருக்கக்கூடிய கதாபாத்திரங்களாக வந்துகொண்டே இருக்கின்றன. லட்சுமணப்பெருமாளின் முதல் தொகுதிக்கு கி.ராஜநாராயணனே முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் பாராயணம் கெங்கவ்வ நாயக்கர் என்ற பாட்டாவைப் பற்றிச் சொல்லும்போது ‘அடாடா எப்படி இந்த கதாபாத்திரத்தை நான் தவறவிட்டேன்!’ என்று நொந்துகொள்கிறார்.

அனேகமாக எல்லா லட்சுமணப்பெருமாள் கதாபாத்திரங்களும் கி.ராஜநாராயணன் தவறவிட்டவைதான். ஏனென்றால் லட்சுமணப்பெருமாள் கி.ராஜநாராயணன் செல்லாத பல இடங்களுக்கும் செல்கிறார். பாலத்தடியில் காத்திருக்கும் பெண்களை, அவர்கள் முலைகளை கத்தரிக்காயை சோதிப்பதுபோல பிடித்துப்பார்த்து தரம்பிரித்து பேரம்பேசும் லாரிக்காரர்களை கி.ராஜநாராயணன் அறிந்திருக்கமாட்டார். மாதவிலக்கு நாட்களில் உள்ளே கட்டிக்கொள்ள பழைய துணிக்காக படாதபாடு படும் தீப்பெட்டிக்கம்பெனி பெண்களைப்பற்றி [கனவிதுதான் நிஜமிதுதான்] எழுத கி.ராஜநாராயணன் கொஞ்சம் கூசியிருப்பார். இந்த அம்சம்தான் லட்சுமணப்பெருமாளை தமிழின் முக்கியமான கதைசொல்லியாக்குகிறது. அவர் கி.ராஜநாராயணனின் இன்றியமையாத நீட்சி.

கி.ராஜநாராயணனின் மொழிநடையும் தனித்தன்மை கொண்டது. பேச்சுமொழி விரவி வரும் சலிக்காத கிராமியநடை அவருடையது. பேச்சுநடை என்ற பேரில் எழுதப்படும் பெரும்பாலான நடைகள் மிகமிகச் சலிப்பூட்டுபவை. ஏனென்றால் பேச்சுமொழி எப்போதுமே செறிவற்றது, சாதாரணமானது. அப்பட்டமான பேச்சுமொழிக்கு இலக்கியத்தில் இடமில்லை. அதிலுள்ள சுவாரசியங்களை மட்டும் தொகுத்து அவற்றைக்கொண்டு மட்டுமே உருவாக்கப்படும் நடைக்கே இலக்கியத்தில் இடமுண்டு. சுவாரசியமில்லாமல் பேசும் ஒரு கதாபாத்திரம்கூட கி.ராஜநாராயணன் கதைகளில் இல்லை. லட்சுமணப்பெருமாள் அதை தானும் சாதித்திருக்கிறார்.

‘அட்றா தாயோழி ஙா!’ என்று மனுஷர்கள் சூடேறிப்போவார்கள் என்று சொல்கிறார். எதற்காக? அது பரசுராமனுக்கும் ராமனுக்கும் நடக்கும் உரையாடலைப்பற்றிய கெங்கவ்வ நாயக்கரின் கதைசொல்லலுக்கான பக்திப்பெருக்கான எதிர்வினை. ‘ஏது ஏது ரொம்ப ஏகத்தாளமா பேசுறியே? தாடகைங்கிற பொம்புளையாள கொன்னுட்டோம்கிற வீறாப்ல பேசுறியா?’ என பரசுராமன் கேட்க ‘அட நீநாப்ல பெரிய இவந்தாம். பெத்த தாய கொன்னவந்தாம்லா?’ என்று ராமன் மடக்கினால் ஜனங்கள் உணர்ச்சிவசப்படாமலிருப்பார்களா? [கதை சொல்லியின் கதை]

சமூகப்பிரக்ஞை உள்ள பெரிசுகளுக்கும் கிராமத்தில் பஞ்சமில்லை. கீகாட்டுத்தாத்தா இந்த ஊருக்கு வந்து குடியேறுகிறார். ஊர் முன்னேறாமல் இருப்பதை எண்ணி கடுமையான கோபம். ‘விருதா ரெத்தம்செத்த பயக்க…ஒரு பயலுக்கும் புத்தீங்கிறதே ஆண்டவன் வள்ளிசா வைய்க்க மறந்துட்டான்…சும்மா எருமை கணக்கா திங்க…செனாரிக்காம தெருவிலே திரிய..இதுக்குத்தான் ஆவாங்க… சரியொத்த ஊர்களிலே என்னென்ன மாதிரியெல்லாம் கவர்மெண்டை மல்லுக்கட்டி மூலமூலைக்கி புதுசு புதுசா பொதுக்கட்டிடங்களா கட்டி சொரியம் பண்ணி வச்சிருக்கானுங்க’ என்று பொருமுகிறார்.

ஊரில் பெரிசுகளும் இருக்கத்தானே செய்யும்? அதுகளுக்கும் அது இது என்று ஆசை இருக்கும். அவர்கள் பாட்டுக்கு தரம்போல கிழவிகளை வளைத்து ஒதுக்கி காடு கரை என்று ஒதுங்கலாமென்றால் ஊரிலே ஒரு இடமில்லை. பருத்திக்காட்டுக்குள் போனால் பிள்ளைகள் வந்து எட்டிப்பார்க்கிறார்கள். இதற்குத்தான் பொதுக்கட்டிடங்கள் வேண்டும் என்பது. கீகாட்டு தாத்தா பொருமுகிறார். சொந்த ஊருக்கே திரும்பிச்செல்கிறார். அங்கே சுடுகாட்டுக்கொட்டய், பஞ்சாயத்து கட்டிடம் என பல சௌகரியங்கள்.

தன்னிச்சையான கிண்டல் மூலம் உயிர்நிறைந்த மொழிவெளியாக விரிந்திருக்கும் லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம் தமிழின் இலக்கியச்சாதனைகளில் ஒன்று என ஐயமில்லாமல் சொல்ல முடியும். கதைகளை வாசித்தபின் நெடுங்காலம் கழித்தும்கூட ஒரு கதாபாத்திரம் அவரது முகத்துடன் மொழியுடன் துக்கங்களுடன் சிரிப்புகளுடன் நினைவில் தோன்றும் அதிசயமே புனைவை இலக்கியத்தகுதி கொண்டதாக ஆக்குகிறது. லட்சுமணப்பெருமாளின் பல கதாபாத்திரங்கள் லட்சுமணப்பெருமாளிடமிருந்து முழுமையாகவே சுதந்திரமடைந்து வளர்ந்தவை.

ஆனால் லட்சுமணப்பெருமாளை முக்கியமான கதைசொல்லியாக ஆக்கும் அம்சம் இந்த வேடிக்கையும் விளையாட்டும் நிறைந்த கதைகளின் சாரமாக உருவாகிவரும் அழுத்தமான மானுடசோகம். தமிழில் மிகக்குறைவான புனைகதையாசிரியர்களே இந்த அளவுக்கு தீவிரமான தருணங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இரு கதைகளை இரு வகைகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். உயிர்பிழைத்துக்கிடப்பதன் தீவிரமான போராட்டத்தைச் சொல்லும் கதைகளுக்கு உதாரணம் என்று சாகசம் என்ற கதையைச் சொல்லலாம்.

மழைபொய்த்து நிலம் கைவிட்ட சம்சாரி குடும்பத்துடன் வித்தைக்காரனாக ஆக முயலும் அவலத்தின் காட்சி சித்தரிப்பு இக்கதை. கதைக்கரு பஞ்சம் பிழைக்கவந்த நெசவாளி குரங்காட்டியாக ஆனதைப்பற்றி தி.ஜானகிராமன் எழுதிய ஒரு கதையை நினைவுறுத்துகிறது. பள்ளிப்பிள்ளைகள் நடுவே வளையம் வழியாக நுழையும் சர்க்கஸை எங்கோ பார்த்த நினைவைக்கொண்டு செய்து காட்ட முயன்று வளையத்தில் குடும்பத்துடன் சிக்கிக்கொள்ளும் அய்யாங்கண்ணுவின் காட்சி ஏதோ ஒரு கணத்தில் பெரும் படிமமாக நம் மனதில் வளர்ந்துவிடுகிறது. அந்தமூர்க்கமான இரும்பு வளையத்தை அச்சமூட்டும் ஓரு யதார்த்தமாக காணமுடிகிறது. அந்த வளையம் இந்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளை சுற்றி வளைத்திருக்கும் மனச்சித்திரம் எழுகையில் சொல்லப்பட்டவற்றில் இருந்து வளர்ந்தெழுகிறது கதை.

மனிதனின் ஆதாரமான துயரங்கள் சிருஷ்டியுடன் தொடர்புடையவை. வாழ்க்கைக்குள் அவற்றுக்கான பதில் இல்லை. அத்தகைய கதைகளில் ஒன்று ஊமங்காடை. தான் ஓர் ஆண் அல்ல என்று கூட தெரியாத பொன்ராசுவின் கதை. கட்டிய மனைவிக்கு பணிவிடைசெய்யும் பொன்ராசுவின் வெள்ளந்தித்தனம் அவன் சொற்களினூடாகவே வெளிப்பட்டு நம்மை அவனருகே செல்லச்செய்கிறது. மனைவி அறுத்துவிட்டுச் சென்று இன்னொருவனுக்கு மனைவியாகி பிள்ளைபெற்ற பின்னரும் அவனுடைய பணிவிடை நீள்கிறது.

இருகதைகளை நினைவுறுத்துகிறது இக்கதை. கி.ராஜநாராயணனின் கோமதி. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை. அவ்விரு கதைகளும் இரு நோக்கில் அந்த மானுடப்பிரச்சினையை அணுகும்போது இன்னும் அடக்கமான கவித்துவத்துடன் முடிகிறது லட்சுமணப்பெருமாளின் கதை. குழந்தைக்கு அவள் பால்கொடுக்கும்போது தன் மார்சுரக்கப் பார்த்துநிற்கும் பொன்ராசுவின் சித்திரம் அளிக்கும் அதிர்வு அசாதாரணமானது. அவனில் ஆண்மையின்மை என்ற குறை உள்ளது என சொல்லிவரும் கதை அது தாய்மை என்னும் நிறையே என்று புரண்டு கொள்ளும் மாயத்தருணம் அது.

அந்தத்தருணத்தை வாழ்க்கையிலிருந்து எடுக்கத்தெரிந்தவனே கலைஞன். நவீன கருத்துக்களை பொறுக்கிச் சேர்த்துக்கொள்ளுதல், வடிவ சோதனைகள் செய்தல், மொழியைப் பீராய்தல் போன்றவற்றால் அல்ல, சொல்லப்படும் வாழ்க்கையால் மட்டுமே கலைஞர்கள் உருவாகிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. லட்சுமணப்பெருமாள் நம் காலகட்டத்தின் முதன்மையான புனைகதைக் கலைஞர்களில் ஒருவராக ஆவது இத்தகைய புனைவுச்சங்களால்தான்.


[லட்சுமணப்பெருமாள் கதைகள்
. வம்சி புத்தகநிலையம். திருவண்ணாமலை]


கதைகளின் வழி

புதியகுரல்கள் புதிய தடுமாற்றங்கள்

சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்

முந்தைய கட்டுரைஆயிரம் கால் மண்டபம்
அடுத்த கட்டுரைஉதயஷங்கர்