திரு. மது என்பவர் அண்மையில் உங்களுக்கு எழுதிய கடிதத்தில், கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
இது ஒரு பிழையான கருத்து. எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர்கள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து, பல ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ச்சி செய்தவர், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முனைவர். லேஹ்னர் என்பவர்.
அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டவை எகிப்திய பிரமிடுகள் என்ற எண்ணம் வெகுஜனங்களிடம் ஹாலிவுட் படங்களால் நிறுவப்பட்ட ஒன்று. எகிப்திய பிரமிடுகளைக் கட்டியர்வர்கள் வாழ்ந்த இடங்களைத் தோண்டி எடுத்த போது ஆய்வாளர் லேஹ்னர் ஆச்சர்யப்படும் பல விஷயங்களைக் கண்டார். முதலாவது, இந்த வேலையாட்கள் வசித்த வீடுகள் வசதியானவை – 15 x 45 அடி அகல, நீளம் கொண்ட வசதியான வீடுகள். தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட இன்ன பிற விவரங்கள்: இந்த நகரில் வாழ்ந்தவர்களுக்குத் தேவையான, மிகவும் வசதியானவர்கள் மட்டுமே உண்ணக் கூடிய மாமிச வகைகளை தரும் பிராணிகளை வளர்த்துத் தர தனி நகரங்கள் இருந்தன. தண்ணீர் இல்லாத இடத்தில் இவர்கள் வேலை செய்ததால், இவர்களது நகரங்களுக்குத் தொடர்ந்து கழுதை மூலம் தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களது வீடுகளில், அலங்கார ஓவியங்களும், கூடைகளும், இசைக் கருவிகளும் இருந்தன.
பிரமிடுகளைக் கட்டுவது மிகக் கடுமையான வேலையாக இருந்தாலும், நீங்கள் உங்கள் பதிலில் குறிப்பிட்டபடி, எகிப்திய சமுதாயத்தில், நிலப்பிரபுத்துவ விழுமியங்களில் ஒன்று, தன் பிரபுவுக்கு வேலை செய்வது. அது பெருமையாகக் கருதப்பட்டது. எகிப்தியர்கள் இதை, ‘பாக்’ எனக் குறிப்பிடுகிறார்கள். தனக்கு மேல் உள்ள பிரபுவுக்கு தான் செய்ய வேண்டிய கடமை. மிகப் பெரிய அதிகாரிகள் கூட, அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு, ‘பாக்’ செய்ய கடமைப்பட்டு இருந்தார்கள். அதனால், அக்கால எகிப்திய சமுதாயத்திலும், கலையை மதிக்கும் ஒரு விழுமியம் இருந்தது, என ஊகிக்கிறார் லேஹ்னர்.
மேலே உள்ள சில குறிப்புகள் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை. மேலும் விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.
அன்புடன்,
ராஜா
அன்புள்ள ராஜா,
உண்மையில் நானும் அப்படித்தான் நினைத்தேன். எகிப்தில் அடிமைமுறை இருந்திருக்கலாம். ஆனால் பிரமிடுகளின் கலைநுட்பங்களை அடிமைகள் செய்திருக்கமுடியாது என்று. அவர்கள் கலைஞர்களாக, அச்சமூகத்தால் சலுகைகள் அளிக்கப்பட்டு பேணப்பட்டவர்களாகவே இருந்திருக்கவேண்டும் என்று. அதைப்பற்றி வாசிக்கவேண்டுமென்றும் குறித்து வைத்திருந்தேன். விஷயமறிந்த எவரிடமேனும் நூல்களை பரிந்துரைக்கக் கோரவேண்டுமென நினைத்தேன்.
எகிப்தைப்பற்றிய ஐரோப்பிய ஆய்வுகளின் பின்னாலுள்ள மனநிலை என்பது கசப்பு நிறைந்த முன்முடிவுதான். அதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, ஒரு கறுப்புநாகரீகம் அத்தகைய தொன்மையும் பண்பாட்டுச்சிறப்பும் கொண்டிருப்பதற்கு எதிரான காழ்ப்பு. எகிப்திய நாகரீகம் ஐரோப்பாவால் கண்டடையப்பட்ட காலகட்டத்தில் அங்கே வெள்ளைய இனமேட்டிமைவாதம் உச்சகட்டத்தில் இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஐரோப்பியர் அக்காலகட்டத்தில் கண்டுகொண்ட எல்லா தொன்மை நாகரீகங்களையும் அவர்களுக்கு வழக்கமான ஒரு சட்டகத்தைக் கொண்டே விளக்க முற்பட்டார்கள். அதாவது ஒரு கறுப்புச்சமூகம் அதைவிட மேலான வெள்ளைச் சமூகத்தால் வெற்றிகொள்ளப்பட்டு அதன் விளைவாக நாகரீக வெற்றியை அடையும். அந்தச் சட்டகத்துக்குள் கொஞ்சம்கூட அடைக்கமுடியாத ஒன்றாக இருந்தது எகிப்திய நாகரீகம்.
இன்னொரு காரணம் கிறித்தவ நூல் மரபு எகிப்திய பாரோக்களைப்பற்றி அளித்த சித்திரம். யூதர்கள் பாரோ மன்னர்களின் கீழ் அடிமைகளாக இருந்தார்கள், அங்கிருந்து கடவுளருளால் தப்பினார்கள் என்பது அவர்களின் குலக்கதை. அது பைபிளின் பகுதியாக இருப்பதனால் எல்லா கிறித்தவர்களிடமும் எகிப்து பற்றிய கொடூரமான ஒற்றைப்படைச் சித்திரம் உருவாகியிருந்தது.
இந்த முன்முடிவுகளுடன்தான் எகிப்திய நாகரீகம் அணுகப்பட்டது. எகிப்திய நாகரீகத்தின் சாதனைகளை அடிமைமுறையின் வெற்றியாக மட்டுமே சித்தரிக்கும் வழக்கம் உருவானது.
நாம் ஆப்ரிக்காவைப்பற்றி கொண்டுள்ள புரிதல்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் அவர்களின் உள்நோக்கங்களின் அடிப்படையில் நமக்களித்தவை. நம்மைப்பற்றிய புரிதல்களையும் அப்படித்தான் அவர்கள் உலகுக்கு அளிக்கிறார்கள்.
இந்தியாவைப்பற்றி ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைகள் வெளியிடும் ஆய்வுநூல்களை வாசிக்க வாசிக்க எனக்கு ஒரு பெரும் திகைப்பே எஞ்சும். இத்தனை அபத்தமான, மடத்தனமான , அரசியல் உள்நோக்கம் கொண்ட பிழைகளை எழுதிவிடக்கூடிய இவர்கள்; அவற்றை உண்மை என்றே வெட்கமில்லாமல் வாதிடக்கூடிய இவர்கள் ஆப்ரிக்காவைப்பற்றியோ அரேபியாவைப்பற்றியோ எழுதிவைத்திருப்பவற்றைத்தானே நாம் நம்புகிறோம் என்று தோன்றும்.
சமீபத்தில் நான் இந்தியாவைப்பற்றி பார்க்கநேர்ந்த தொலைக்காட்சித் தொடர்கள் அபத்தத்தின் சிகரங்கள். எந்த விதமான அடிப்படை ஞானமும் எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் இந்திய வரலாற்றைப்பற்றிய புளுகுகளை அவிழ்த்துவிடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் புனித தாமஸ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்திறங்கிய கேரளக் கடற்கரையை காட்டுகிறார்கள். அங்கே கடலோரம் இருக்கும் இருவரிடம் அவரைப்பற்றி தகவல்களை கேட்டுச் சொல்கிறார்கள். அதன்பின் காண்பதெல்லாமே தாமஸின் வருகை பற்றிய ஆதாரங்களாக மாறிவிடுகின்றன.
ஒரு மாறுதலுக்காக நாம் பிரான்ஸ் சென்று பிரெஞ்சு வரலாறைப்பற்றி நமக்குத் தோன்றுவதை ஆவணப்படமாக எடுத்து அவர்களுக்குக் காட்டி அதுதான் உண்மை என அவர்களிடமே வாதிட்டாலென்ன என்று வெறி வந்தது. ஆனால் முடியாது, அதற்கெல்லாம் மனநோயளவுக்கு செல்லும் தன்முனைப்பு தேவை. அப்படிச் சொல்வனவற்றை ஏற்று கூச்சலிடும் ஒரு கும்பலை அங்கே உருவாக்குமளவுக்கு பணபலமும் தேவை!
Who Built the Pyramids? They were not slaves.