ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும் விதமாக பல துறைகளிலும் எழுதினார். தரமாகவும், வேகமாகவும். அவருடைய வசனம் ஒன்றுண்டு. ‘நான் என்னுடைய தட்டச்சில் அடுத்து என்ன வசனம் தோன்றுகிறது என்பதைப் பார்ப்பதற்காகவே முக்கியமாக எழுதுகிறேன்.’ அவருக்கே அவர் என்ன எழுதப்போகிறார் என்பது தெரியாது. அவர் படைப்பதில்லை, படைப்பின் பின்னால் செல்கிறார்.

இன்று தமிழில் அவரைப் போலவே பல துறைகளில் வேகமாகவும், இலக்கியத்தரமாகவும் எழுதிவருபவர் ஜெயமோகன். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய ‘ஊமைச் செந்நாய்’ என்ற சிறுகதையை உயிர்மையில் படித்துவிட்டு சில கணங்கள் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் அசையாது உட்கார்ந்திருந்தேன். தமிழ்ச் சிறுகதையுலகில் இது ஒரு திருப்பம் என்பது என் அபிப்பிராயம். எந்த உலக நாட்டுச் சிறு கதையுடனும் ஒப்பிடக்கூடிய வகையில் மொழியழகுடன் தரமாகவும் வடிவ நேர்த்தியாகவும் சிருட்டிக்கப்பட்ட சிறுகதை அது.
ஜெயமோகனுடன் அந்தச் சிறுகதையைப் பற்றிக் கதைப்பதற்காக அவரைத் தொலை பேசியில் அழைத்தேன். அந்த உரையாடல் எதிர்பாராதவிதமாக எங்கே எங்கேயோவெல்லாம் போனது.

நான்: அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சிறுகதை எழுதுவதை நாவல் எழுதுவதிலும் பார்க்கக் கடினமான ஒன்றாகவே கருதியிருக்கிறார்கள். உதாரணமாக சிறுகதையின் பிதாமகர் என்று அறியப்படும் ரஷ்ய எழுத்தாளர் கோகொல் அவருடைய The Portrait சிறுகதையை எழுத, கிட்டத் தட்ட ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம்வரை எடுத்திருக்கிறார். சமீபத்தில் நியூ யார்க்கர் இதழில் வெளிவந்த The Head strong Historian என்ற சிறுகதையை எழுதிய நைஜீரிய எழுத்தாளர் அதை எழுதுவதற்கு தனக்கு ஏழு மாதம் பிடித்ததாகக் கூறியிருக்கிறார். ஒரு நல்ல சிறுகதையை எழுதுவதற்குப் பல மாதங்கள் ஆகும். ஊமைச் செந்நாய் சிறுகதையை எழுதுவதற்கு உங்களுக்குக் குறைந்தது இரண்டு வாரங்கள் எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். எத்தனை நாட்கள் பிடித்தன?

ஜெயமோகன்: இரண்டு நாட்கள். இரண்டு நாட்கள் என்றால் ஒருநாள் சாயங்காலம் தொடங்கி அடுத்தநாள் காலை எழுதி முடித்தேன்.

நான்: அதிசயமாயிருக்கிறதே. திருத்தங்கள்?

ஜெ: கிடையாது. ஒன்றுமே செய்யவில்லை. புரூஃப் கூட பார்க்கவில்லை.

நான்: இந்தச் சிறுகதை எழுதுவதற்கான கரு எப்படி உண்டானது? வெர்ஜினியா வூல்ஃப் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர் என்பது தெரியும். அவர் ஒருமுறை தான் முந்திய வருடம் எழுதிய டைரிக் குறிப்புகளைப் புரட்டிப் படித்துவிட்டுச் சொன்னார். ‘என்னுடைய எழுத்து பாய்ந்து பாய்ந்து போனதைப் பார்த்து நானே வியந்துபோகிறேன். அந்தக் குறிப்புகள் எண்ணப் பிரவாகம் வந்த வேகத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. நான் நிறுத்தி ஆலோசித்து எழுதியிருந்தால் இப்படியான எழுத்து பிறந்திருக்காது. இந்த எழுத்து துடைப்பத்தால் குப்பை கூட்டும் போது தூசு தும்பு எல்லாம் சேர்ந்து வருவது போல இருக்கிறது. ஆனால் அப்படி வரும் தூசு தும்புதான் வைரங்கள்.’ அதுவே சிலவேளை விதையாகி அதிலிருந்து படைப்பு பிறக்கும். உங்கள் சிறுகதைக்கும் இப்படியான ஒரு விதை விழுந்திருக்கும். அது எப்படி, எப்போது உங்கள் உள்ளத்தில் தோன்றியது என்பதைச் சொல்லமுடியுமா?

ஜெ: எனக்குப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கிறேன். அப்போது நான் ஒரு எஸ்டேட்டுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு ஆதிவாசியைக் கண்டேன். அவனுக்கு நீலமான கண்கள் இருந்ததை அதிசயமாகப் பார்த்தேன். அவனுக்குச் செந் நாய் போல கண்கள் இருந்ததால் அவனை எல்லோரும் செந்நாய் என்றே அழைத்தார்கள். அந்தப் படிமம் நீண்டகாலமாகவே என் மனதில் கிடந்தது. அதை விதை என்று வைத்துக்கொள்ளலாம். அதை வைத்துக் கதை எழுதலாம் என்ற எண்ணம் வந்தது. ‘யானைத்துப்பாக்கியைத் தூக்கி’ என்று கதையை ஆரம்பிக்கும் போது கதை எங்கே போகும் என்பது எனக்கே தெரியாது. ஆனால் வில்சன் துரையின் உருவம் மனதில் இருந்தது. கதையில் யானை வந்ததுகூட தற்செயலானதுதான். கதையை முக்கால்வாசி எழுதி முடித்தபிறகுதான் முடிவு எனக்குத் துலங்க ஆரம்பித்தது.

நான்: சிறுகதை, நாவல் ஆசிரியர்கள் ஒரு நல்ல ஆரம்ப வசனத்துக்காக நிறைய நேரம் செலவழிப்பார்கள். முழுக்கதையும் மனதில் கவனமான பிறகுகூட சிறுகதையை நல்ல தொடக்க வசனம் கிடைக்கவில்லையென்பதால் அதை எழுதாமல் தள்ளிப் போட்டவர்கள் இருக்கிறார்கள். சல்மான் ருஷ்டியின் ‘மறுபடியும் பிறப்பதற்கு முதலில் ஒருவர் இறக்கவேண்டும்’ என்ற ஆரம்ப வசனம் மறக்கமுடியாதது.

உங்கள் நாவல்களின் ஆரம்ப வசனங்கள் கவர்ந்திழுக்கும் வகையாக இல்லை. இந்தச் சிறுகதையில்கூட ஆரம்ப வசனம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றுகிறது?

ஜெ: ஆரம்ப வசனத்தில் ஏதோ ஒரு விதையிருக்கும். ஆனால் அது என்ன என்பது நமக்குச் சொல்லமுடியாது. சில சமயங்களில் அது கவித்துவமான வசனமாகவும் இருக்கலாம். இதிலும் அந்த ஆரம்ப வசனத்தில் அந்த விதையிருக்கும். ‘யானைத் துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக்கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்’ என்பதுதான் வசனம். அதிலே ஒரு படிமம் இருக்கு. இது ஒரு முக்கியமான படிமமாக எனக்குத் தோன்றியது. ஓர் ஆள் உயரமான துப்பாக்கியைப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டு ஒரு தோழனை அணைத்து நிற்பது போல துரை தோன்றும் காட்சிதான் முதல் சித்திரம். துப்பாக்கி பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு சிம்பல். துரையை அந்த ஆயுதத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அந்தக் காலத்து பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் சித்திரமே அந்த பிம்பத்திலிருக்கிறது. அடிமை நினைக்கிறான், இந்தத் துப்பாக்கி துரையினுடைய தம்பி போல என்று. துரை அதைத் தோழி என்று பெண்பாலாகச் சொல்கிறான். 1800 களில் இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிதான் யானை சுடுவதற்குப் பயன்பட்டது. இன்றுகூட அதைத் திருவனந்தபுரத்தில் பார்க்கலாம். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் வலிமை அந்த இரட்டைக் குழல்துப்பாக்கிதான்.

நான்: உங்களுடைய அனுபவங்களுக்கு வருவோம். William Thomas Stead என்ற எழுத்தாளர் 100 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தார். டைட்டானிக் கீழே போனபோது அவரும் போய்விட்டார்.

விபச்சார விடுதிகள் எப்படித் தொழில் செய்கின்றன என்ற விவரம் அவருக்கு எழுதுவதற்குத் தேவையாக இருந்தது. ஒரு 13 வயதுச் சிறுமிக்கு 10 பவுண்டு கொடுத்து ஒரு விடுதியில் விபச்சாரம் செய்யவைத்து அதன் முழு விவரங்களையும் திரட்டினார் என்று சொல்வார்கள். அவருடைய எழுத்துக்கு அந்த அனுபவம் முக்கியமாக இருந்ததாம். உங்கள் சிறுகதைகளில் அசாதாரணமான அனுபவங்களுக்கு பெரும் இடம் இருக்கிறது. ஊமைச் செந்நாய் சிறுகதையில் காடு, மான் வேட்டை, யானை வேட்டை, பாம்புக்கடி என்று நுணுக்கமான விவரங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. இவை எல்லாம் சொந்த அனுபவங்களா, புத்தகங்களில் படித்து சேகரித்தவையா அல்லது மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டவையா?

ஜெ: எனக்குக் காடுபற்றி நிறைய விஷயங்கள் தெரியும். காடு, காட்டோடு ஒட்டியிருக்கும் கிராமமக்களின் வாழ்க்கை, ஆற்றோடு வாழும் மக்கள் இவர்களிட மெல்லாம் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. நான் எழுதினது ஒரு சின்னப் பகுதிதான். இதைவிடப் பலமடங்கு அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் காட்டைவிட்டு வெளியே என்னால் உலவமுடியாது. அந்த sphere – ஐ விட்டு எனக்கு வேறு ஒன்றுமே தெரியாது. உதாரணத்துக்கு கடலைப் பற்றி என்னால் எழுத முடியாது. எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தர்மபுரியில் ஐந்து வருடம் வாழ்ந்திருக்கிறேன். வறண்ட பூமி. அதை வைத்து ஒரு கதை எழுதியது கிடையாது. காசர்கோட்டில் நாலு வருடம் வாழ்ந்திருக்கிறேன். அதன் பின்னணியில் ஒரு கதைகூடக் கிடையாது. காடு பற்றி எது எழுதினாலும் அது வந்துகொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை. இன்னும் எழுதாத விஷயம் நிறைய இருக்கிறது.

என்னுடைய வீடு காட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரம்தான். நான் நிறைய காட்டுக்குள் அலைந்திருக்கிறேன். மான் வேட்டையை ஒரு தடவை அல்ல பல தடவைகள் கண்டிருக்கிறேன். அது சாகும்போது அதன் கண்கள் எப்படியிருக்கும், அது கடைசி நேரத்தில் கமறி அழும்போது குரல் எப்படி ஒலிக்கும் என்பதெல்லாம் நான் அறிந்ததுதான். ஆனால் என்னுடைய வட்டம் சின்ன வட்டம் அதனால் என்னால் ஆழமாகப் போக முடிகிறது. அதற்கு வெளியே எழுதுவதுதான் கஷ்டம்.

நான்: பாம்புக்கடி, அந்த வைத்தியம்?

ஜெ: ஒருநாள் நான் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்தவர் சட்டென்று விழுந்துவிட்டார். என்னவென்று பார்த்தால் கண்ணாடி விரியன் கடித்திருக்கிறது. அது கடித்ததே அவருக்குத் தெரியவில்லை. எங்களுடன் வந்த கைட்தான் ஒரு பச்சிலையைப் பறித்து வைத்தியம் செய்தான். விஷம் முறிந்து அவர் தப்பிவிட்டார். அந்தப் பச்சிலையை இப்ப என்னால் அடையாளம் காட்ட முடியாது. கவனித்து வைக்கவில்லை.

நான்: ரஷ்ய எழுத்தாளர் செக்கோவ் தன் 26வது வயதில் The Huntsman என்ற சிறுகதையை எழுதினார். சும்மா பொழுது போவதற்காக முழுக் கவனமும் செலுத்தாமல் எழுதிய கதை அது. அதைப் படித்த ரஷ்ய மூத்த எழுத்தாளர் டிமிட்ரி கிரிகோறி விச் ‘அது மிகவும் அருமையான கதை’ என்று எழுதிப் பாராட்டியதுடன் செக்கோவை ரஷ்யாவின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் என்று வர்ணித்தார். செக்கோவ் இதை எதிர்பார்க்கவில்லை. மலைத்துப் போய்விட்டார். அவருக்கு தான் எழுதியது இன்றைக்கும் பேசப்படும் உயர்தரமான கதை என்பது தெரியவில்லை.

உங்களுக்கு இந்தச் சிறுகதையை எழுதி முடித்தபோது அது ஓர் உன்னதமான கதை (நீங்கள் எழுதிய கதைகளில் இதுவே ஆகச் சிறந்தது என்பது என்னுடைய கருத்து.) என்று உங்களுக்கே தோன்றியதா?

ஜெ: எனக்கு அப்படி ஒன்றும் பெரிசாகத் தோன்றவில்லை. நல்ல கதை என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் சொல்வதுபோல உன்னதமானகதை அப்படி ஒன்றும் நினைக்கவில்லை. ஏனென்றால் எழுதி முடித்தபிறகு திரும்ப அதைப் படிக்கவே முடியாது. நான் நினைத்ததற்கும் எழுத்திலே கிடைத்ததற்கும் இடையில் நிறைய டிஸ் டன்ஸ் இருக்கும். ஆனால் கதை வெளிவந்த பிறகு நிறையபேர் அதைப் பாராட்டி எனக்கு எழுதினார்கள். போனிலும் ‘நல்லாயிருக்கு நல்லாயிருக்கு’ என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்பொழுதுதான் இது நல்ல கதையாக இருக்குமோ என்ற ஐயம் உண்டானது. கதையை ஒருமுறை திருப்பி படிக்க வைத்தது.

நான்: இப்பொழுது எழுதும் சிறுகதை எழுத்தாளர்களில் Karl Iagnemma என்பவர் உச்சத்தில் இருக்கிறார். இவர் போலந்து அமெரிக்க எழுத்தாளர். ஒரு கதை எழுதுவதற்கு சராசரி நாலு மாதம் எடுப்பதாகச் சொல்லும் இவர் சிறுகதைகளைத் திட்டமிட்டு எழுதுகிறார். இவர் எழுதிய Zilkowski’s Theorem என்ற சிறுகதை 2002ஆம் ஆண்டு அமெரிக்கச் சிறுகதைகளில் ஆகச் சிறந்த ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது.

நீங்கள் உங்கள் சிறுகதைகளை தொடக்கம், நடு, முடிவு என்று ஒருவிதத் திட்டமிடாமல் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்?

ஜெ: நான் கம்புயூட்டரின் முன் போய் அமரும்போது ஒரு படிமம் இருக்கும் அல்லது ஒரு கவிதை போன்ற வசனம். அதிலிருந்து ஆரம்பித்துத்தான் எழுதிக் கொண்டு போவேன். ஏற்கனவே கதையைத் திட்டமிட்டு அது எனக்குத் தெரிந்துபோனால் எழுதும் ஆர்வம் எனக்கு வடிந்துபோகும். அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. மெசின் போல எழுதவேண்டும், உற்சாகமே இல்லாமல். என்ன வரப்போகிறது என்று தெரியாமல் இருந்தால்தான் சஸ்பென்ஸ் போல எனக்கே எழுதி அதன் முடிவை அறியும் ஆர்வம் உண்டாகும். வாசகரைப்போல அந்த முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆசை எனக்குள்ளும் இருக்கும்.

நான்: குறைந்தது இருபது வெளிநாட்டு எழுத்தாளர்களிடம் நான் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் திட்டமிட்டுத்தான் எழுதுகிறார்கள்.

ஜெ: இருக்கலாம். நான் கம்புயூட்டரின் முன்னால் உட்கார்ந்து ‘ஜெயமோகன் ஜெயமோகன்’ என்று திருப்பி திருப்பி அடித்தே என்னால் ஒரு கதையை உருவாக்க முடியும். தமிழில் புதுமைப்பித்தன், மௌனி போன்றோர் அப்படித்தான் திட்டமிடாமல் எழுதினார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான்: கவிதைக்கு அடுத்தபடி சிறுகதை என்பார்கள். இஸபெல் அலெண்டே என்ற சிலி தேசத்து எழுத்தாளர் சொல்வார், நாவல் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். எழுத எழுத அது வளரும். சிறுகதை அப்படியல்ல. கடினமானது, கவிதைக்கு மிகவும் சமீபமானது என்பார்.

நீங்கள் எழுதிய ஊமைச் செந்நாய் சிறுகதையில் ஒரு பழ உண்ணி வரும். அது மூன்று முக்கியமான இடங்களில் தோன்றும். அது கவிதையான தருணம். ஆனால் சிறுகதையில் அது தொடரப்படவில்லை. ஏதாவது குறியீடாக அது வந்ததா?

ஜெ: நான் அதை அப்படிக் குறியீடாக ஒன்றும் பார்க்கவில்லை. அடிமை ஒரு காட்டுவாசி. கொடிக்கயிற்றில் மழைத்துளி நகர்வதுபோல பழ உண்ணி நகர்வதைப் பார்க்கிறான். தேன் கூட்டைப் பார்க்கிறான். எப்படிப் பொறி வைத்தால் பழ உண்ணியைப் பிடிக்கலாம் என்று யோசிக்கிறான். இன்னொரு சமயம் தோமா பெண்ணிடம் உடலுறவு கொள்வதைப் பார்க்கிறான். அதேசமயம் பழ உண்ணியையும் பார்க்கிறான். எந்த நேரத்திலும் அவன் மனத்தில் காடுதான். அவன் மனம் வேறு ஒன்றிலுமே லயிக்கவில்லை. காடு மட்டும்தான். அதைச் சொல்வதற்குத்தான் அந்தக் காட்சி.

நான்: 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் எட்கார் அலன் போ சொல்வார், சிறுகதை ஒரு புள்ளியை நோக்கி நகரவேண்டுமென்று. அதிலே flashback போன்ற பின்னோக்கிப் போகும் உத்தி சிறுகதையின் வேகத்தை மட்டுப்படுத்திவிடும். அவசியம் என்றால் மட்டுமே அந்த உத்தியைப் பயன்படுத்தவேண்டும் என்பார். ஆனால் பின்னோக்கிப் போகும் உத்தியை சரியான இடத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்தினால் அது சிறுகதையின் தரத்தைப் பல மடங்கு உயர்த்திவிடும். இப்படி ஓர் அருமையான கட்டம் உங்கள் கதையில் வருகிறது. அடிமை (ஊமைச் செந்நாய்) சோதியை ஓடையருகில் அணைக்கும் காட்சி. ஆனால் அங்கே என்ன நடந்தது என்பது சொல்லப்படவில்லை. பின்னர் அடிமை மானைக் கொல்லும்போது அதன் சாகும் கண்களைப் பார்க்கிறான். அந்தச் சமயம் சோதியுடன் உடலுறவு கொண்டபோது உச்சத்தில் அவள் கண்கள் அப்படித்தான் இருந்தன என்பது நினைவுக்கு வருகிறது. அவள் எழுப்பிய ஒலியும் அந்த மானின் மரண ஓலம்போல இருக்கிறது. இந்த உத்தி எப்படி அவ்வளவு இயற்கையாக வந்து பொருந்திக் கொள்கிறது?

ஜெ: திட்டமெல்லாம் போடாமல் வந்தது தான். ஏனென்றால் வேட்டையைப்பற்றிச் சொல்ல வந்த கதை இது. சோதியுடனான உடலுறவு இடையில் வந்தது. அதற்குக் கதையில் இடமேயில்லை. ஆனால் அந்தமான் சாகும்போது அதன் கண்கள் அவனுக்கு அவளை நினைப்பூட்டுகின்றன. அந்த இடத்தில் அதை சொல்வது பொருத்தம் போலப்பட்டது. அவ்வளவுதான்.

நான்: சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற அரவிந் அடிகா பற்றி ஒரு விசயம் படித்தேன். அவர் தன்னுடைய நாவலை முதலில் படர்க்கையில் எழுதினார். ஆனால் எழுதி முடித்தபின் அவருக்கே அது பிடிக்கவில்லை. ஆகவே முழு நாவலையும் திரும்பவும் வேலைக்காரன் கோணத்தில் அவன் பேசுவது போல தன்மையில் எழுதினாராம். உங்களுக்கும் எப்போதாவது எந்தக் கோணத்தில் எழுதுவது என்ற குழப்பம் உண்டாகியிருக்கிறதா?

ஜெ: எந்தக்கோணத்தில் எழுதுவது என்பது முற்றிலும் தற்செயலாகத்தான் தீர்மானமாக வேண்டுமென நான் நினைக்கிறேன். தற்செயல் என்ற சொல்லை மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறேன். தற்செயல் என்பது முழுக்க முழுக்க ஆழ்மனத்தைச் சார்ந்திருப்பதன் விளைவு. என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஆழ்மனத்தை மொழியில் வெளிப்படுத்த வேண்டிய ஒரு செயல்பாடுதான். ஆழ்மனம் மிக அருவமானது. ஆகவேதான் கதை, கதைச்சூழல், படிமங்கள் போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதாவது என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஒருவகைக் கனவு காண்பதுதான். சில பயிற்சிகள் மூலம் நாம் தானாகவே கனவுகளை உருவாக்கிக் கொள்வது. கனவுகளில் நம்முடைய கட்டுப்பாடு ஏதுமில்லை. அவை முற்றிலும் தன்னிச்சையானவை.

நான்: மறுபடியும் திட்டமிடுவது பற்றிய சந்தேகத்தைத் தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். Gone with the Wind நாவலை எழுதிய மார்கிரெட் மிச்செல் அதை எழுதுவதற்காக ஒருவிதத் திட்டமும் போடவில்லை. அவர் முதலில் எழுதியது நாவலின் கடைசி அத்தியாயம். கடைசியில் எழுதியது நாவலின் முதல் அத்தியாயம். நேரம் கிடைக்கும்போது அங்கும் இங்குமாக எழுதி நாவலை முடித்தாராம். அதற்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. உங்கள் எழுத்து முறையும் அப்படியானதா? அவுட்லைன் திட்டம் கூடக் கிடையாதா?

ஜெ: நான் எப்போதுமே எந்தக் கதைக்கும், நாவலுக்கும் விரிவான திட்டங்களை முன்னரே போட்டுக்கொண்டதில்லை. சில சமயம் ஓர் உணர்ச்சித் தூண்டலில் உடனடியாக எழுத ஆரம்பித்துவிடுவேன். சில சமயம் அப்படிப்பட்ட தொடக்கம் வராது. ஏழெட்டுத்தடவை கூட எழுதிப்பார்ப்பேன். எழுத எழுத அந்தக்கனவு வளர்ந்தபடியே செல்ல வேண்டும். அப்படி நிகழாதபோது அதை அப்படியே விட்டுவிட்டு வேறு வகையில் எழுத ஆரம்பித்துவிடுவேன். ‘கொற்றவை’ நாவல் என் மனதில் ஒரே பிம்பமாகத்தான் இருந்தது. பாலைவனத்தில் கைவிடப்பட்ட கோயில் ஒன்றின் கருவறைக்குள் கண்ணகி காளிசிலையாக நிற்கிறாள். அவள் கண்கள் உயிருள்ள கண்கள். அதைப் பலவகையில் எழுதிப்பார்த்தேன். எதுவுமே சரிவரவில்லை. பல இடங்களில் தொடங்கிப் பார்த்தேன். திருப்தியில்லை. அப்படி நான்கு வருடங்கள் சென்றன. பின்னர் ஒரு வரி மனதில் வந்தது. ‘அறியமுடியாமையின் நிறம் நீலம்.’ அந்தவரி ஒரு பெரிய எழுச்சியைக் கொடுத்தது. அந்தவரியிலேயே நாவலின் மொழிநடையின் அமைப்பு உள்ளது. படிமங்கள் கொண்ட மொழி. உணர்ச்சிகரமானது. செந்தமிழ். அப்படியே தொடங்கி அந்நாவலை எழுதி முடித்தேன்.

நான்: சில நாவல்களுக்கு நிறைய தகவல்கள் தேவைப்படுமே?

ஜெ: திட்டமிடுவது ஓரளவுக்குத் தேவையாக இருப்பது வரலாற்றுப் பின்னணி கொண்ட நாவல்களுக்குத்தான். தகவல்களைச் சேர்ப்பது ஒருங்கிணைப்பது போன்றவற்றுக்கு. மற்றப்படி திட்டமிடல் என்பது பிரக்ஞை சார்ந்தது. அது இலக்கியத்தின் அக இயக்கத்துடன் சம்பந்தமற்றது. நன்றாகத் திட்டமிடப்பட்ட ஒரு படைப்புக்கு இலக்கியத்தன்மையே இருக்காது. என் பல நாவல்கள் மிகச் சிக்கலான ‘பொறியியல் அமைப்பு’ கொண்டவை என்று சொல்லப் படுகின்றன. தேர்ச்சியும் திட்டமிடலும் கொண்ட எழுத்து என்று அவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவற்றை வெளியிட்ட வசந்தகுமார் போன்றவர்களுக்குத் தெரியும், அவை தன் போக்கில் எழுதப்பட்டு அவ்வப்போது அனுப்பப்பட்டு எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே நூலாக வெளிவந்தவை. நான் என் நூல்களை திரும்பப் படிப்பதுகூட இல்லை. வசந்த குமார்தான் பிழைகளைக்கூடத் திருத்துவார்.

நான்: உலகப்பிரபல ரஷ்ய எழுத்தாளர் கோகொல் அவர் எழுதி வெளியிட்ட முதல் புத்தகத்தை திரும்பவும் அவரே வாங்கி எரித்தார். அதே போல இறுதிக் காலத்தில் இறப்பதற்கு முன்னர் அவருடைய Dead Souls இரண்டாம் பகுதியையும் எரித்தார். கோகொலுக்கு இறுதிவரை தன் எழுத்தில் மதிப்பு கிடையாது.

பல எழுத்தாளர்களுக்கு தாங்கள் எழுதுவது திருப்தியைக் கொடுப்பதில்லை. நீங்கள் எப்பொழுதாவது எழுதி முடித்ததை திருப்தியில்லாமல் தூக்கிப்போட்டதுண்டா?

ஜெ: என்னைப் பொறுத்தவரை எழுத ஆரம்பித்ததும் எழுத்து வந்துகொண்டே இருக்க வேண்டும். வயலில் மடையைத் திறந்து விட்டதும் நீர் வந்து நிறைவதுபோல அந்த வடிவத்தை என் மனதில் உள்ள மொழி வந்து நிறைக்க வேண்டும். அது நிகழாவிட்டால் தூக்கிப் போட்டுவிடுவேன். அப்படி பல நாவல்களைத் தூக்கிப் போட்டிருக்கிறேன். கைவசம் பல சிறுகதைகள் முடிவடையாமல் இருக்கின்றன. சில சமயம் அவை மீண்டும் தொடங்கப்படலாம். சிலசமயம் அப்படியே அழிந்தும் போகலாம்.

நான்: திருத்துவதும் உங்களுக்குப் பிடிக்காத ஒன்று. சு.ரா தன் எழுத்தைப் பல தடவைகள் திருத்துவார். ஒரு 300 பக்க நாவலை எழுதுவதென்றால் 1500 பக்கங்கள் எழுதவேண்டியிருக்கும் என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அசோகமித்திரன் திருத்துவது மிகவும் கடினமான வேலை. அது தனக்கு அலுப்பைத் தருவது என்று கூறுகிறார். ஒஸ்கார் வைல்டு ஓர் அரைப்புள்ளி இடுவதற்கு அரை நாள் எடுத்தது எல்லோருக்கும் தெரியும். மார்க் ட்வெய்ன் தன்னுடைய புகழ்பெற்ற Huckleberry Finn நாவலைப் பல தடவை திருத்தி எழுதுவதற்குப் பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டார்.

நீங்கள் திருத்தங்கள் செய்வதே இல்லையா?

ஜெ: இல்லை. திருத்துவதென்பது எனக்கு மிக எந்திரத்தனமான வேலை. எழுதியபின் மீண்டும் படிப்பதைக்கூட நான் விரும்புவதில்லை. திருப்பித்திருப்பி எழுதும் எழுத்தாளர்கள் உண்டு. திருப்பி எழுதவே எழுதாத எழுத்தாளர்களும் உண்டு. முன்னது என்பது ஒரு மனச்சிக்கல்தான். ஒரு சொல்லைத் திருப்பி எழுதுவதனால் ஒன்றும் பிரதி மேம்பட்டுவிடப்போவதில்லை. சிலருக்கு வீட்டை சுத்தம் செய்துகொண்டே இருப்பது ஒரு வகையான ‘அப்ஸெஷன்’. அதுபோலத்தான் இதுவும்.

அத்துடன் திருத்துவது மிகவும் பிரக்ஞை பூர்வமானது. தர்க்க பூர்வமானது. ஒரு படைப்பை உருவாக்கிய படைப்பூக்கத்துக்கு நேர் எதிரானது. அறியமுடியாமையின் நிறம் நீலம். அதை, தெரிய முடியாமை என்று மாற்றலாம். அறியாமை என்று மாற்றலாம். அறிவின்மை என்று மாற்றலாம். அறியப்படாமை என்று போடலாம். இந்த சாத்தியங்களை உட்கார்ந்து சிந்தித்தால் ஒருவரியில் ஒரு நாளைக் கழித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை அதில் எனக்கு படைப்பு இன்பம் இல்லை. ஆகவே அதை நான் ஈடுபட்டுச் செய்யமுடியாது. அந்த நேரத்தில் நான் அடுத்த படைப்பைப் பற்றிக் கனவு காண்பேன். கடிதங்களைக்கூட நான் முதலில் வரும் கைப்பிழைகளுடன் தான் அனுப்புவேன். திருத்தும் நேரத்தில் இன்னொன்று எழுதலாமே.

நான்: எழுத்துத் துறையைப் பற்றிச் சொல்லுங்கள். ப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு முன்னர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய கடிதங்கள், நாட்குறிப்புகள், கையெழுத்துப் பிரதிகள் என்று அனைத்தையும் எரித்துவிடச் சொல்லி வேண்டினார். ஆனால் நண்பர் அந்த வேண்டுகோளை நிறைவேற்றாததால் இலக்கியம் தப்பியது. உலகம் எவ்வளவு தான் மதித்தாலும் காஃப்கா தன் எழுத்தை மதிக்கவில்லை. தான் இந்தத் துறைக்குத் தவறுதலாக வந்துவிட்டதாகவே இறுதிவரை நினைத்தார்.

நீங்கள் எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? திட்டமிட்டு எழுத வந்தீர்களா அல்லது தற்செயலானதா?

ஜெ: நான் என் உளச்சிக்கல்களை எழுத்துமூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்றுதான் எழுத வந்தேன். வெறிபிடித்தது போல எழுதி என் மொழி வடிவத்தைக் கண்டுகொண்டேன். எழுதுவது எனக்கு ஒரு சுய கண்டடைதல். தியானம். என் யோக சாதகம் அதுவே. என் வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கும் வழியும்கூட. ஆகவே நான் எழுதுகிறேன். ஒரு ஓட்டப்பந்தயவீரன் அவனால் முடிந்தவரை வேகமாக ஓட முயல்வதுபோல முடிந்தவரை உச்சத்தை அடைய முயல்கிறேன். அளவிலும் தரத்திலும்.

நான்: அசிமோவ் தன்னுடைய 21வது வயதில் Nightfall என்னும் சிறுகதையை எழுதினார். அதற்கு பின்னர் 51 வருடங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதினார். ஆனால் அவரால் Nightfall சிறுகதையின் உச்சத்தைத் தாண்டமுடியவில்லை. அறிவியல் சிறுகதைகளில் அது இன்றைக்கும் ஒரு மைல்கல். ஆனால் கோகொலின் எழுத்துத் தரம் வரவர அதிகமாகிக்கொண்டே வந்திருக்கிறது. அவர் கடைசியாக எழுதிய The Overcoat சிறுகதை மூலமே அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். உங்கள் விசயத்தில் வயது ஏற ஏற படைப்பூக்கம் குறையுமா அல்லது கூடுமா? முந்திய படைப்புகளைத் தாண்டி உங்கள் படைப்புகள் மேலும் உயர்ந்த தரத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா?

ஜெ: முதுமையில் இப்படி எழுதுவேனா என்று கேட்டால் எழுதலாம். எழுதாமலும் போகலாம். என்னைப் பொறுத்தவரை எழுத்து என் கடைசி இலக்கு அல்ல. எழுத்தாளனாக இருப்பது என் திட்டமும் அல்ல. எழுத்து ஏணி மாதிரி. ஏணியிலேயே நின்று கொண்டிருப்பதைவிட மேலே ஏறிவிட்டால் நல்லதுதானே?

நான்: எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் பற்றி ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் அப்பொழுது யூலிசிஸ் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுதுவதற்கு அவர் பொறாமை உணர்வை முழுமையாக அனுபவிக்கவேண்டும். தன் மனைவியை யாருடனாவது தொடர்பு வைக்கச் சொல்லி வற்புறுத்தினார். மனைவி மறுத்துவிட்டார். தன்னால் உச்சமான பொறாமை உணர்ச்சியை நேரடியாக அனுபவிக்காமல் அதை நாவலில் சித்தரிக்கமுடியாது என்பது அவர் வாதம். ஆனால் உங்கள் கதைகளில் எல்லாவிதமான உணர்ச்சிகளும் தத்ரூபமாகப் பதிவாகின்றன. ஏராளமான அக அனுபவங்களும் புற அனுபவங்களும் கட்டுரை, நாவல், சிறுகதைகள் வழியாக வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன. இந்த வேகத்தில் நீங்கள் படைத்தால் விரைவில் எல்லாமே முடிந்து எழுத ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்ற பயம் உங்களுக்கு ஏற்படுவதில்லையா?

ஜெ: இல்லை. என் அக அனுபவங்களில் சிறு பகுதியை மட்டுமே எழுதியிருக்கிறேன். புற அனுபவங்களிலும் பெரும்பகுதியை எழுதியதில்லை என்பதே உண்மை. உதாரணமாக என் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டார்கள். எவ்வளவு பெரிய நிகழ்ச்சி அது? இன்றுவரை அது என் படைப்புகளில் வந்ததில்லை. இனிமேல் தான் அதை நான் எழுதவேண்டும். எந்த மனிதனுக்கும் வாழ்க்கையனுபவங்கள் எழுதித்தீராது. நான் ஓயாது பயணம் செய்பவன். ஓயாது வாழ்க்கையை எதிர்கொள்பவன். எழுதும் ஆற்றல் தீர்ந்து போகலாம். எழுதுவதற்கான தேடல் முற்றுப்பெறலாம். அனுபவம் தீர்ந்துபோய் யாருமே எழுதாமல் ஆவதில்லை.

நான்: சில வருடங்களுக்கு முன்னர் ஜாக்கிசான் நடித்த Shangai Noon திரைப்படம் பார்த்தேன். 19ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து கடத்திவரப்பட்ட அரச குமாரியை மீட்பதற்காக அனுப்பப்பட்ட அரண்மனை சேவகனாக ஜாக்கிசான் வருகிறார். அரசவிசுவாசம் என்பது அவர் ரத்தத்தில் ஊறியிருப்பதால் மனச்சாட்சிக்கு விரோதமாக அரசகட்டளைக்கு அடிபணிவார். அரசகட்டளைக்குப் பணியவேண்டும் என்பது அவர் உயிரணுக்களில் எழுதிவைத்திருந்தது.

உங்கள் ஊமைச் செந்நாய் கதையில் வரும் அடிமையின் செயல்பாடும் அப்படித்தான், வியப்பாக இருக்கிறது. என்னதான் கொடூரமான முறையில் நடத்தப்பட்டாலும் அவன் எசமானுக்கு விசுவாசமானவனாகவே நடந்துகொள்கிறான். இந்த ஆண்டான் -அடிமை உறவுதான் கதையின்அடிநாதமா?

ஜெ: என்னை ரொம்ப நாளாகவே நான் ஏற்கனவே சொன்ன ஆதிவாசியின் நீலக் கண்கள் தொந்திரவு செய்தபடியே இருந்தன. ஆண்டான் அடிமை உறவு என்பது அநாதியானது. எல்லா விதமான சமூகங்களிலும் ஏதோ ஓர் உருவத்தில் இன்றுவரை இந்த ஆண்டான் அடிமை உறவு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சமூக மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அடிப்படையில் இந்த உறவு மாறுவதில்லை. ஒரு மேலதிகாரி – கீழதிகாரி, ஆபிஸர் – பியூன் இப்படி. ஆண்டானுக்கு ஒரு அடிமை தேவை. அடிமைக்கும் ஒரு கடமை இருக்கு. இந்த ஆண்டானுடைய மனநிலைக்குள் என்ன இருக்கும்? இந்த அடிமையின் மனதுக்குள் என்ன நடக்கிறது? இன்னொரு மனிதனை நாயிலும் கேவலமாக, குரூரமாக நடத்தும் ஆண்டானின் மனதுக்குள் ஏதோவொரு குற்றவுணர்வு இருந்துகொண்டேயிருக்கும். எவ்வளவுதான் அடிமைத்தனமாக, விசுவாசமாக உழைத்தாலும் அந்த அடிமையின் ஆழ் மனதுக்குள்ளும் ஒரு பழிவாங்கும் குரூரம் பதுங்கியிருக்கும். இவற்றை இந்தக் கதையின் மூலம் வெளிக்கொணரலாம் என்று நினைத்தேன்.

நான்: ஊமைச் செந்நாய் கதையின் முடிவைப் பற்றி பல விவாதங்கள் இப்பவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஏர்நெஸ்ட் ஹெமிங்வே எழுதிய Old Man and the Sea நாவல் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. அவர் எழுதிய நாவல்களில் அது கடைசி காலத்தில் எழுதப்பட்டது, 100க்கு சற்று கூடிய பக்கங்கள் கொண்டது. அதை நாவல் என்றுகூடச் சொல்லமுடியாது, நீளமான சிறுகதை என்று சொன்னால்கூட பொருத்தம்தான். ஹெமிங்வேயுடைய சாண்டியாகோ கிழவன் வெற்றி பெற்றானா, தோல்வியடைந்தானா? வெற்றியும் தோல்வியும் அவனுக்குக் கலந்து வருகிறது. வாழ்க்கையில் முழு வெற்றி இல்லை, முழு தோல்வியும் கிடையாது. உங்கள் கதையில் ‘நரகத்துக்கு போ’ என்று சொல்லிவிட்டு அடிமை இறுதியில் மரணத்தைத் தழுவும் இடம் தோல்வியும் வெற்றியும் கலந்தே வருகிறது. இந்த அருமையான முடிவு கதை நகர்வில் தானாகவே உண்டானதா?

ஜெ: இந்தக் கதை வெளியான பிறகு நிறைய கேள்விகள் வந்தன. அவர்களுக்கு பதில் சொல்ல நான் கதையைத் திருப்பி படித்தேன். கடைசி முடிவுக்கான விதை ஆரம்பத்திலேயே விழுந்துவிட்டது. துரை தூங்கும்போது அடிமை அவன் துப்பாக்கியைத் தூக்கி இலக்கு பார்ப்பான். அவன் சாராயத்தைத் திருடிக் குடிப்பான். எவ்வளவு விசுவாசியாக இருந்தாலும் அந்த அடிமையின் அடிமனதில் ஒரு வெறுப்பு வளர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பழிவாங்கும் உணர்வுதான். இப்படி முடிவு வரவேண்டும் என்று பிளான் பண்ணி நான் கதை எழுதவில்லை. அதை அதன் போக்கில் விட்டு எழுதியதுதான்.

22 வருடத்திற்கு முன் என்று நினைக்கிறேன், காட்டுக்குள் நான் ஒரு பாறையின் மேலே ஏறி நிற்கிறேன். அப்ப காடு அசைகிறது. என்னவென்று பார்த்தால் நான் நிற்கும் பறைதான் அசைந்தது. அந்த அனுபவம் தான் கடைசியில் வருகிறது. பாறையில் இருந்து அடிமை வழுக்கிவிழுந்தபோது தவிட்டைச் செடியைப் பிடித்துத் தொங்குகிறான். கீழே அதலபாதாளம். துரை ஓடி வந்து பெல்ட்டை எறிகிறார். அவன் அதைப் பிடித்து ஏறித் தப்பிக்கொள்ளலாம். இந்த மனிதனின் பெல்ட்டைப் பிடித்து ஏறிப்போய் நான் வாழவேண்டுமா? ரொம்ப அடியிலிருந்து அவனை மீறி வரும் முடிவு அது. ஒருவனுடைய பிரியத்தை, கருணையை, பெருந்தன்மையை மூர்க்கமாக நிராகரிப்பது என்பது சாவையும் தாண்டிய ஒரு பெரிய தண்டனை துரைக்கு.

நான்: ஆனால் அந்த துரை, பாம்பு கடித்த அன்றிரவு அடிமையிடம் சொன்ன வார்த்தைகள் அவனுடைய மறுபக்கத்தைக் காட்டின அல்லவா?

ஜெ: இந்தியாவை போர்த்துக்கீசியர், பிரெஞ்சு, பிரிட்டிஷ் எல்லோருமே ஆண்டார்கள். இந்த இடத்தில் பிரிட்டிஷாரின் நல்ல குணம் தெரிய வருகிறது. போர்த்துக் கீசியர்களிடமோ, பிரெஞ்சுக்காரர்களிடமோ இந்தப் பண்பு கிடையாது. துரை அந்த இரவில் அடிமையிடம் மனம்விட்டுப் பேசுவார். ‘எங்கள் சமூகத்தில் நாங்களும் கடைப்பட்டவர்கள்தான். ஒரு நல்ல குடும்பத்துப்பெண் எங்களை ஏறிட்டும் பார்க்கமாட்டாள். அதனாலேயே உங்களை வெறுக்கிறோம். சாட்டையால் அடிக்கிறோம். ஆனால் நான் கெட்டவனல்ல.’ இதுதான் உண்மையான பிரிட்டிஷ்காரனின் பண்பு.

நான்: சரி, சந்தைப்படுத்துதலுக்கு வருவோம். சி.சு.செல்லப்பா தன் நூல்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று தானே விற்று வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்குப் பணம் தேவைப்பட்டது மட்டுமல்ல காரணம். நூல்களைப் பதிப்பித்தால் போதாது அவை வாசகருக்கும் போய்ச்சேரவேண்டும் என்ற நல்லெண்ணமும்தான்.

சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்தில் மட்டும் திறமை காட்டவில்லை. சந்தைப்படுத்துவதிலும் வல்லவராய் இருந்தார். அவருடைய புத்தகங்கள் அனைத்தும் அவர் காலத்திலேயே அமோகமாக விற்றன. அவருடைய தொடர்நாவல் பத்திரிகைகளில் வெளியான போது அந்தப் பத்திரிகையைக் காவிய கப்பல்கள் நியூயார்க் துறைமுகத்தை அடையும்போது 6000 வாசகர்கள் அந்தக் காலத்திலேயே காத்துக்கொண்டிருப்பார்களாம். சார்லஸ் டிக்கன்ஸ் இறந்தபோது அவருடைய புத்தக வருமானச் சேமிப்பு 93000 பவுண்டுகளாக ( இன்றைய மதிப்பில் ஒரு கோடி டொலர்கள்) இருந்தது. எழுத்தாளருக்குப் பணம் தேவை, அத்துடன் அவருடைய நூல்கள் வாசகரையும் சென்றடைய வேண்டும். நீங்கள் ஏன் உங்கள் நூல்களை சந்தைப்படுத்துவதைப் பற்றி யோசிப்பதில்லை?

ஜெ: சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டால் படைப்பூக்கத்தை இழந்துவிட வேண்டியது தான். நான் அன்றாட வாழ்க்கையின் சாதாரணச் செயல்களைக்கூட செய்வதைத் தவிர்க்கிறேன். எழுத்து, பயணம் இவ்விரண்டுமே என் வாழ்க்கை. வேறு எதைச்செய்தாலும் என்னுடைய எழுத்தாற்றலின் ஒரு பகுதியைக் கழித்துக்கொள்கிறேன். இந்நிலையில் என் எழுத்தை ‘புரமோட்’ செய்ய நான் முயல்வதென்பது என்னை நானே அழிப்பதற்குச் சமம். அதுவும் படைப்பூக்கம் வேகமாக இருந்துகொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் அதையெல்லாம் செய்வதென்பது மிக மிகத் தவறான செயல். இப்போது என் நேரத்தின் கவனத்தின் ஒவ்வொரு துளியும் இலக்கியத்துக்கு மட்டுமே உரியது.

நான்: ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் சந்தைப்படுத்துவதால் பெரும் பிரபல மடைந்துவிடுகிறார்களே?

ஜெ: மேலைநாடுகளில் புகழ்பெறும் இந்திய இலக்கியம் ஒரு குறிப்பிட்ட வகையானது. அவர்களுக்கு இந்தியாவைப்பற்றி இரு மனப்பிம்பங்கள் உள்ளன. (ஒன்று) இந்தியா ‘பாக’ மத நம்பிக்கையால் கண் மூடிப்பழக்கங்கள் கொண்டு சீரழிந்த நிலையில் இருக்கும் ஒரு தேசம். இது அங்கே செல்லும் இந்தியப் பாதிரிகள் உண்டாக்குவது. (இரண்டு) இந்தியா ஐரோப்பியர் விட்டுச் சென்றபின் அழிந்துகொண்டிருக்கிறது. சல்மான் ருஷ்டி முதல் இப்போது அரவிந் அடிகா வரை எல்லா எழுத்துகளிலும் உள்ள பொது அம்சம் என்பது ‘இந்தியாவைப் பழித்தல்’ தான். இந்தக் காரணத்தால்தான் நமது ஆங்கில இந்திய எழுத்தாளர்கள் பெரும் புகழ் பெறுகிறார்கள். தாராசங்கர் பானர்ஜி போன்ற மேதைகள்கூட அங்கீகாரம் பெறுவதில்லை. மேலைநாட்டு இலக்கிய வாசகர்கள் இந்திய இலக்கியம் என்பது ஆங்கில இந்திய எழுத்து மட்டுமே என நம்ப விரும்புகிறார்கள். மேலைநாட்டில் புகழ்பெற்ற இந்திய இலக்கியங்கள் கூட இந்த எதிர்மறைப் பண்பு கொண்டவை. இந்தியாவை இருட்டாகக் காட்டக்கூடியவை. உதாரணமாக வெங்கடேஷ் மாட் கூல்கரின் பன்கர் வாடி, யூ. ஆர். ஆனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா போன்றவை. இந்தியாவை இகழ்ந்து வெறுத்து எழுதும் காஞ்சா ஐலயா போன்ற விமரிசகர்களுக்கும் இதே போல மேலைநாடுகளில் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கின்றன.

இன்னொரு மனநிலையும் உண்டு. ஐரோப்பிய மேட்டிமைத்தனம்தான் அதுவும். அதாவது தத்துவப்பிரச்சினைகள், ஆன்மீகப் பிரச்சினைகள், அழகியல்கூறுகள் நம்மால் எழுதப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதைத் தாங்களே எழுத முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். நமது வாழ்க்கையை ‘தெரிந்துகொள்ள’ மட்டுமே விரும்புகிறார்கள். அதாவது அவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பதை ஒட்டி தெரிந்து கொள்ள. அதை மட்டும் நாம் எழுதினால் போதும் என்பது அவர்களின் எண்ணம். ஆகவே நம்முடைய ‘ரிப்போர்ட்டிங்’ வகையான தட்டையான சமூக ஆவணங்களை மட்டுமே அவர்கள் ரசிப்பார்கள். இதையெல்லாம் செய்து நான் அங்கே வெளியாக வேண்டுமா என்ன?

நம் எழுத்தை நாம் முதலில் ரசிப்போம். பிறகல்லவா அவர்கள். இங்கே ஒரு நாவல் வந்தால் 100 பிரதிகள் விற்க ஒருவருடம் ஆகிறது. ஒரு தமிழ் நாவலைப் படித்தேன் என்று சொல்ல தமிழனுக்கு மனம் கூசுகிறது. நம் இலக்கியம் நமக்காக எழுதப்படுவது. நாம் அதை மதித்தால் பிறரும் மதிப்பார்கள்.

இன்று ஆங்கிலத்தில் எழுதுபவர்களில் தரத்துடனும் அதிவேகத்துடனும் எழுதுபவர் ஜோன் அப்டைக். 76 வயது தாண்டியும் அவர் சோர்வில்லாது எழுதிக்கொண்டிருக்கிறார். 23 நாவல்களும் கணக்கிலடங்கா கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்றும் எழுதிவருகிறார். அதி உயர்ந்த இலக்கியப் பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். ஒரு 300 பக்க நாவலை வாசித்து முடிப்பதற் கிடையில் ஒரு 300 பக்க நாவலை அவர் எழுதிமுடித்துவிடுவார் என்று அவரைப் பற்றிச் சொல்வதுண்டு.

இன்று அதே வேகத்துடனும், உயர் தரத்துடனும் தமிழில் எழுதுபவர் ஜெயமோகன். ஒரு ஓட்டப்பந்தய வீரர் நீள்தூரம் ஓட வேண்டும், வேகமாகவும் கடக்கவேண்டும். தினமும் முந்தியதை முந்துவதற்கான முயற்சி. ஜெயமோகனும் அப்படித்தான். முதலி எழுதியவற்றை மீறும் வேகமான பயிற்சியில் இருக்கிறார்.

எழுத்தாளர்களின் மனைவிமார் கணவர்களின் எழுத்துகளைப் படிப்பதில்லை. ஜேம்ஸ் ஜோயிசின் மனைவி நோறா ஜோயிசின் இறுதிக் காலத்தில் அவரிடம் இப்படிக் கூறினார். ‘ஜிம், உங்கள் புத்தகத்தை நான் படித்ததில்லை. ஆனால் அவை விற்கும் வேகத்தைப் பார்த்தால் அவை நல்லவையாகவே இருக்கும் என்று படுகிறது. நான் அவற்றைப் படிக்கவேண்டும்.’

ஜெயமோகன் அதிர்ஷ்டக்காரர். அவருடைய மனைவி அருண்மொழி அவர் எழுதுவது அனைத்தையும் படிக்கிறார். அவர் சமீபத்தில் ஜெயமோகனைப்பற்றி அவரிடம் நேரில் இப்படிச் சொன்னார். ‘ஜெயன், நீ ஒரு unique writer.’ ஊமைச் செந்நாய் படித்தபிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. தமிழில் இன்று ஜெயமோகன் ஓர் அபூர்வமான எழுத்தாளர்தான்.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1253

முந்தைய கட்டுரையானைடாக்டர் – ஒரு கட்டுரை
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய் (சிறுகதைத்தொகுப்பு)