கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது personalized reply எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. எனக்காக தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்கி மறுமொழி (விரிவாக) எழுதியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

சோ அவர்களைப் பற்றிய தங்களது கருத்துகளும் என்னுடைய எண்ணமும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது இன்னொரு மகிழ்ச்சி. தாங்கள் சொல்வது போல் அவரது எழுத்துக்கள் பலவும் காலத்தால் பழமையாகிவிட்டன. உதாரணமாக அவர் எழுதிய நகைச்சுவைத் தொடர்கள் இப்போது படிக்கும்போது எவ்வளவு பேருக்கு, அவர் கிண்டலடிக்கும் அரசியல் நிகழ்ச்சிகள் பற்றின context தெரிந்திருக்கும் என்பது ஸந்தேஹமே. அதை அவரே ஒரு புத்தகத்தின் முன்னுரையில் ஒத்துக் கொண்டுள்ளார் என்பது வேறு விஷயம் :)

எனினும் அதைத் தாண்டி அவர் எழுதிய சில neutral புத்தகங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்றே நம்புகிறேன். உதாரணம் ”எங்கே பிராமணன்”. பிராமணனாகத் தன்னை எண்ணி இறுமாந்திருந்தவர்களுக்கு, இருப்பவர்களுக்கு அப்புத்தகம் என்றுமே ஒரு சம்மட்டி அடி கொடுக்கும் என்று நினைக்கிறேன். ஹிந்து மஹா சமுத்திரம் உண்மையிலேயே சமுத்திரம்தான். அதன் முதல் பாகத்தைப் படிக்க ஆரம்பித்து மலைத்து விட்டுவிட்டேன்.

தாங்கள் கூறியுள்ளபடி, பழமையாக இருப்பதாலே அவற்றை நியாயப்படுத்தும் அபாயம் சோ அவர்களிடம் இருக்குமென்றாலும், பழமையை அவற்றின் பெருமையை எடுத்துச் சொல்லும் சில ஆட்களும் தேவை என்று நினைக்கிறேன். ஒரு சமநிலைக்காகவாவது :)

ராஜாஜி அவர்கள் எழுதிய புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்று ஆசைதான். அவரின் ராமாயணம் மற்றும் மஹாபாரதம் இரண்டு மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. வேறு என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றும் தெரியவில்லை :(

வி.ஸ. காண்டேகர் அவர்கள் எழுதியவற்றைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர் எழுதிய ”கண்ணீர்” மற்றும் ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகவும் நன்றாகவே இருந்ததாக ஒரு அபிப்பிராயம். தங்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதவும்.

எனக்குப் புரியாத வார்த்தைகளை, ஏற்கனவே நீங்கள் விளக்கியிருக்கும் பட்சத்தில், மீண்டும் மீண்டும் உங்களை விளக்கச் சொல்வதும் சரியல்லதான். அதைத் தங்களின் பதில் கண்ட பின்னரே உணர்கிறேன். விக்கிபீடியா போன்று சுட்டிகளை அங்கங்கே தெளித்துக் கொண்டு சென்றாலும், பெரிய பயன் இருக்குமென்று தோன்றவில்லை. படிப்பவருக்கு ஒரு distractionஐ கொடுக்கும் அபாயமும், தங்களின் நேர விரயமும்தான் கண்ட பலனாக இருக்கும் :) விக்ஸனரி நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. நிச்சயம் பயன்படுத்துகிறேன்.

தங்களின் “ஆன்மிகம், போலி ஆன்மிகம்” தொடரை நேற்றுப் படித்தேன். மிகவும் மலைப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. Corporate சாமியார்களைப் பற்றி ஒரு தெளிவு கிடைத்தது போல் இருந்தது. மிக்க நன்றி.

தங்களின் நீண்ட பதிலுக்கு மறுபடியும் என் நன்றிகள்.

அன்புடன்,
கணேஷ் பெரியசாமி

அன்புள்ள அய்யா,

தங்களது உருவ வழிபாடு பட்டிய கட்டுரையில் படித்த இந்த வரிகள்…

“பிரபஞ்ச ஆற்றலை சின்னக் கண்ணனாக உருவகித்துக்கொண்டு பாலூட்டி சோறூட்டி தொட்டிலில் ஆட்டி மடியிலிட்டுக் கொஞ்சி கண்கசியும் ஒரு பக்தன் அந்த படிமத்தை பேருருவம் கொள்ளச் செய்கிறான். அவனுக்கு மட்டும் அனைத்து அர்த்தங்களையும் அளிக்கும் ஒரு படிமப்பெருவெளி உருவாகிவிடுகிறது. அதனூடாக அவன் அறியும் தரிசனங்களும் ஞானங்களும் பிரம்மாண்டமானவை”

ஆஹா! ஆஹா! அற்புதம்! கருத்து களஞ்சியம் தாங்கள்! வார்த்தைக்குள் அடங்காத தத்துவ அறிவு தங்களுடையது! அந்த வரிகளை படிக்கும் பொழுது என் சின்ன கண்ணனின் உருவம் வழியாக இந்த எல்லை இல்லா பிரபஞ்சத்தைத்தான் நான் இவ்வளவு நாட்களும் கண்டு பரவசம் அடைந்து இருக்கிறேன் அன்பதை உணர்ந்து கண்களில் ஆனந்த கண்ணீர்!
ஐயம் நீங்கி தெளிந்த நீரோடை போல இருக்கிறது மனது!

நன்றிகள்!

தாழ்மையுடன்,
சரவணகுமார்.

ஆசிரியருக்கு,
வணக்கம். தங்களது ஊட்டி சந்திப்பு குறித்து பதிவுகள் வாசித்தேன். இது போன்ற நிகழ்வுகள் ஊருக்கு திரும்புவதற்கான காரணங்களை ஆடி போல் பெரிதாய் செய்கின்றன. ஒரு ஆசிரியரின் எழுத்தே முக்கியம். அவரை சந்திப்பதோ,உரையாடுவதோ முக்கியம் அல்ல என்று ஒரு காலம் எண்ணி இருந்தேன்.ஒரு ஆசிரியரின் உரையை நேரில் கேட்பதும் , அவருடன் உரையாடுவதும் எத்தனை பலமானது என்று நீங்கள் நேரில் வரும்போது தெரிந்தது. பல நாள் வாசிப்பினை காட்டிலும் அது வலுவானதாய் பதிகின்றது. ஒரு நல்ல கல்வி சுழலும் , நெறிபடுத்த பட்ட உரையாடல்களும் புதிய எண்ணங்களை உருவாக்கவும் , இருப்பதை விரிவு படுத்தும் என்று இந்த கூட்டங்கள் காட்டுகின்றன.

இப்போது நாஞ்சில் ஐயா இங்கு வருகிறார்கள். அவரோடு இரு நாட்கள் செலவிடும் வாய்ப்பு உள்ளது. அதை முறையாக செய்ய முயல்வதே தற்சமய குறிக்கோள்.

நன்றி.
-நிர்மல்

அன்புக்குரிய எழுத்தாளருக்கு,

வணக்கம் அண்ணா.தங்களின் மிகுந்த வேலைப்பழுவுக்கு இடையிலும் என்னுடைய கேள்விக்குப் பதிலளித்தமைக்கு மிகவும் நன்றி.தங்களின் பதிலில் இருந்து எனக்கு இன்னுமொரு புதிய திறப்பொன்று கிடைத்தது.”இம்மதங்களில் கடவுள் உணர்ச்சிகள் கொண்டவராக காட்டப்படுகிறார். எதிர்வினையாற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.”

என்றவரி சிந்தனையை கிளரி விடக்கூடியது.இந்துமதப் புராணங்களில் இறைவன் அநீதிக்கு எதிராக செயற்பட்டதாக பல்வேறு கதைகள் பேசப்படுகின்ற போதிலும் அவை இறைவன் உணர்ச்சிவசப்பட்டு செய்தசெயல்களாக காணப்படுவது குறைவே.நல்லவர்களின் வேண்டுதலிற்கான பதிலளிப்புக்களாகவே அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.நன்றி.

இஸ்லாத்தின் அடிப்படையில் இறைவனுக்கு உருவம் உண்டா என்பது குறித்து தமிழ் நாடு தௌஹீத் ஜமாதிற்கும் சுன்னத்ஜமாஅத் பேரவைக்கும் இடையில் நடைபெற்ற நீண்ட விவாதத்தின் கண்ணியொன்றை இத்துடன் இணைத்துள்ளேன்.

மேலும் ஏபி செய்தி நிறுவனத்தின் படமொன்றையும் இணைத்துளேன்.அற்புதமான அப்படம் எனக்கு பின்வரும் வரிகளை மீளூட்டியது.

‎”பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்…”

“சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே…”

ந.சிவேந்திரன்

  • குறிச்சொற்கள்
  • சோ
முந்தைய கட்டுரைசிந்துவெளிநாகரீகம் அழிந்தது எவ்வாறு?
அடுத்த கட்டுரைஒரு குழந்தைப் பாடல்