அன்புள்ள ஜெ
இந்திய அரசியலில் காந்தி செய்த முன்று துரோகங்கள் என்று சொல்லப்படுகின்றவை உங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றனவா?
1. அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நியாயமற்ற முறையில் கட்சித் தேர்தலில் தோற்கடித்தார்
2. அவர் பகத் சிங் தூக்கிலேற்றப்பட்ட போது அதை ஆதரித்தார்
3. தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமையை ஆங்கில அரசு கொண்டுவந்தபோது அதை உண்ணாவிரதம் இருந்து தோற்கடித்தார்.
இந்தக்காரணத்துக்காகவே அவர் இன்று துரோகி என்று சொல்லப்படுகிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
‘செம்மணி’ அருணாச்சலம்
***
அன்புள்ள அருணாச்சலம்,
பொதுவாக நம்முடைய பொது அரட்டைகளில், ஆழ்ந்த வாசிப்போ வரலாற்றுப்புரிதலோ இல்லாத மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் திரிபுகளும் அவதூறுகளும்தான் இவை.
பல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும் போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான் காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர் என்று சொல்லவருகிறார்கள். இவ்வளவுதான் காந்தியில் அவரது மோசமான எதிரிகள் கூட கண்டுபிடிக்கக்கூடிய பிழைகள் என்றால் இதுவே காந்தியின் மேன்மைக்கான சான்றாகும்.
ஒன்று: சுபாஷ் சந்திர போஸ் காந்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர். அப்படி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். பின்னாளில் சுபாஷ் எப்பரடி உருவானார் என்று பார்க்குபோது அவரை வரலாற்றுணர்வும் நிதானமும் இல்லாத கற்பனாவாதி என காந்தி மிகச்சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. சுபாஷை காந்தி காங்கிரஸ் தலைவராக ஆக அனுமதித்திருந்தால் காங்கிரஸை அவர் வன்முறைப்பாதைக்கு இட்டுச்சென்றிருப்பார். இந்திய மண்ணுக்குள் ஜப்பானியரை கொண்டு வந்திருப்பார். இங்கே உலகப்போர் நிகழ வைத்திருப்பார். தன் முதிராத வரலாற்றுப்பார்வையின் விலையாக கோடி மனித உயிர்களை பலிகொடுத்திருப்பார்.
ஆகவே தெள்ளத்தெளிவாக கண்முன் தெரியும் ஓர் அபாயத்தைத் தவிர்க்க தன் அனைத்து சக்திகளையும் காந்தி பயன்படுத்தியது மிக இயல்பானது. அதை அவர் செய்யாமல் விட்டிருந்தால்தான் அது மாபெரும் வரலாற்றுப்பிழை. சுபாஷ் துடிப்பான இளம்தலைவராக இருந்தார். அந்த வசீகரமே அவரது வெற்றிக்கான முதல்காரணம். அதற்கு எதிராக காந்தி தன்னுடைய வசீகரத்தை பயன்படுத்தினார்.
அதைவிட மேலான இன்னொரு காரணம் உண்டு, அன்றைய காங்கிரசில் வங்கத்துக்கு இருந்த அதிகப்படியான பங்கு. வங்க பிராந்திய உணர்வை சுபாஷ் தன் தேர்தலில் அப்பட்டமாகவே பயன்படுத்திக்கொண்டார். அதற்கு எதிராக காந்திசெய்யக்கூடுவதாக இருந்தது ஒன்றே, தென்னிந்தியப் பங்களிப்பை திரட்டுவது. பட்டாபி சீதாராமையா வழியாக அதை செய்யமுயன்றார் அவர்.
சுபாஷ் வென்றபின் காந்தி காங்கிரசில் நீடிப்பது சரியல்ல. சுபாஷை தேர்வுசெய்தது காங்கிரஸ் பொதுக்குழு. ஆனால் காங்கிரசின் உண்மையான பலம் என்பது காந்திக்கு மக்கள் மேல் இருந்த செல்வாக்கு. பொதுக்குழுவின் தேர்வை மதித்து காந்தி சுபாஷ் தலைமையிலான காங்கிரஸில் நீடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? காந்தியின் அகிம்சைநோக்கை நம்பி காங்கிரசுக்கு வந்த மக்களை அவர் சுபாஷின் வன்முறை நோக்குக்கு கையளிக்க வேண்டியிருக்கும். அதை அவர் செய்திருக்க வேண்டுமா என்ன?
ஆகவே அவர் தான் விலகிவிடுவதாகச் சொன்னார். அவர் விலகினால் காங்கிரஸே இல்லை. ஆகவே பொதுக்குழு பணிந்தது. காந்தி வேண்டும் காந்தியம் வேண்டாம் என்ற காங்கிரஸ் பொதுக்குழுவின் நிலைபாட்டை காந்தி ஏற்காமலிருந்ததே நியாயமானது.
பின்னர் காந்தி ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபோதும் உயர்சாதிப்பித்து கொண்டிருந்த பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தம்தாஸ் டாண்டன், கோவிந்த வல்லப பந்த் ஆகியோர் தலைமையில் எதிர் நிலையை எடுத்தார்கள். காங்கிரசுக்கு காந்தி வேண்டுமென்றால் காந்தியமும் வேண்டும் என்ற நிலைபாட்டையே காந்தி எடுத்தார். அவர்களை பணியவைத்தார். இறுதியில் அதே காங்கிரஸ் இட ஒதுக்கீடுவரை வந்ததற்கு அவரே காரணம். அதுவே அவரது அரசியல். அதில் என்ன பிழை இருக்கிறது?
இரண்டு : பகத் சிங்கை தூக்கிலேற்ற காந்தி ஆதரவளித்தார் என்பது காந்தியை அவதூறு செய்ய ஐம்பதுகளில் கம்யூனிஸ்டுக்கட்சி தடைசெய்யபப்ட்ட காலத்தில் எஸ்.ஆர்.டாங்கே என்ற நேர்மையற்ற இடதுசாரித் தொழிற்சங்கவாதி கிளப்பிவிட்ட பொய். இந்த ஆசாமி நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா அரசுடன் சேர்ந்து அடித்த சுயநலக் கூத்துக்கள் வரலாறு. அந்த அவதூறு மிகத்தெளிவாக தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழில் அ.மார்க்ஸ் போன்ற காந்திய எதிர்ப்பாளர்களே இதை விரிவாக பதிவுசெய்திருக்கிறார்கள். தீராநதி 2008 இதழ்களைப் படியுங்கள்.
காந்தி பகத்சிங்கின் வன்முறை சார்ந்த வழிகளை ஏற்றவரல்ல. வெள்ளையரைக் கொல்லுதல் அவர் நோக்கில் மாபெரும் பாவம். அவரைப்பொறுத்தவரை வெள்ளையர் ஓர் அரசியல் ஆட்டத்தில் மறுதரப்பில் இருப்பவர்கள்தான். அவர்களையும் அவர் நேசித்தார். அவர்களில் உள்ள ஏழை மக்களையும் தன்னவராகவே கண்டார். ஆகவே அவர்களுக்கும் அவர் தங்களவராக இருந்தார்.
இங்கிலாந்துக்கு வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற காந்தியை துணிதுவைக்கும் மக்கள் தங்கள் தலைவராக தங்கள் குப்பத்துக்குக் கூட்டிச்சென்றுதங்க வைத்தது அதனால்தான். வெள்ளையருடன் எந்நிலையிலும் பேச காந்தி தயாராக இருந்தார். பகத்சிங் செய்த கோலைகளை நியாயபப்டுத்தியபின் அவர் எப்படி உலக மனசாட்சியுடன் பேச முடியும்? எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கி பேச முடியும்? அதன்பின் சத்யாக்ரகத்துக்கு என்ன மதிப்பு?
ஆகவே பகத்சிங்கை அவர் முழுக்க நிராகரித்ததே இயல்பானது. வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன. அவர் தூக்கிலேற்றப்படவிருக்கையில் தேசமே உணர்ச்சிக்கொந்தளிப்புடன் அவருக்கு சார்பாக நின்றது. அவர் செய்ததை காங்கிரசிலேயே முக்கால்வாசிப்பேர் நியாயப்படுத்தினார்கள். அது பொதுமக்களின் மனநிலை. வீர வழிபாடும் தியாக வழிபாடும் நம் மக்களின் மனதில் ஊறியவை. காரணம் நாம் பல நூற்றாண்டுகளாக போரிடும் சமூகமாக இருந்திருக்கிறோம். அதற்கான மனநிலைகளும் படிமங்களும் விழுமியங்களும் நம் பண்பாட்டில் ஊறியிருக்கின்றன
அந்த அலையைக் கணித்துக்கொண்டு தன் கொள்கையை மறந்து பகத்சிங்கை நியாயப்படுத்தினாரென்றால்தான் காந்தி அயோக்கியர். அல்லது பகத்சிங்கை நிராகரித்துவிட்டு தன் சொந்த மகன் அதைச்செய்திருந்தால் அதை நியாயப்படுத்தியிருந்தால் அது சுயநலம். எது காந்தியமோ அதுவே காந்தி. அதில் அவர் சமரசம்செய்துகொள்ளவே இல்லை. இந்தியாவே காந்தியத்தை ஒடுமொத்தமாக நிராகரித்திருந்தாலும் அவர் தன் நோக்கில் தெளிவாகவே இருந்திருப்பார்.
ஆனால் அவர் பகத்சிங் மற்றும் தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்டமுறையில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். அனைத்துக்கும் இன்று திடவட்டமான கடித ஆதாரங்கள்னாஅவணகாப்பகங்களில் உள்ளன. பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிற புரட்சியாளர்கள் உயிர் பிழைத்தமைக்கு ஆங்கில ஆட்சியாளர்கள் காந்திமேல் கொண்டிருந்த மதிப்பும் காந்தி அவர்களால் புறக்கணிக்கப்பட முடியாத இடத்தில் இருந்தார் என்பதுமே காரணம்.
காந்தியின் கடிதங்கள் : http://www.mkgandhi.org/faq/q26.htm
தலித் பிரச்சினையில் காந்தியின் கொள்கை வெளிப்படையானது, திட்டவட்டமானது. தலித்துக்கள் தங்கள் சமூக இழிவிலிருந்து கல்வி, தொழில் மூலம் மேலே வருவது ஒரு பக்கம். அவர்களைப்பற்றிய உயர்சாதியினரின் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதும், அவர்களிடம் குற்றவுணர்வை உருவாக்குவதும் இன்னொரு பக்கம். தலித்துக்களை பிறருக்கு எதிராக நிறுத்தும் ஒரு போராட்டம் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்றும் ஒட்டுமொத்தமாக தலித்துக்களுக்கு எதிரான உணர்வுகளையே உருவாக்கும் என்றும் காந்தி உறுதியாக நினைத்தார்.
இதையே காந்தி இஸ்லாமியர் விஷயத்திலும் எண்ணினார். காந்தியின் அணுகுமுறை என்பது இந்திய சமூகத்தை முழுக்க அரசியலுக்குக் கொண்டுவருவதும், அவர்களுக்கு இடையே உள்ள வரலாற்று முரண்பாடுகளை மெல்லமெல்ல சமரசப்படுத்துவதும்தான் என்று நாம் காணலாம். எல்லா சமூக உறுப்புகளையும் ஒன்றுடன் ஒன்று உரையாட வைக்கவே அவர் முயன்றார்.
கிட்டத்தட்ட 200 வருடம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலித்துக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்பது வரலாறு. அவர்களின் ஜமீந்தார்களின் கீழேதான் தலித்துக்கள் வரலாற்றிலேயே ஆகப்பெரிய கொடுமைகளை அனுபவித்தார்கள். அப்படிப்பட்ட பிரிட்டிஷ் அரசு திடீரென இரட்டை வாக்குரிமையை கொண்டு வருவதென்பது அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை அறிய ராஜதந்திரம் ஏதும் தேவையில்லை.
அந்த இரட்டை வாக்குரிமை அப்போது ஏற்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? தலித்துக்களில் ஒருசாரார் பிரிட்டிஷ் தாசர்களாக சில்லறை அதிகாரத்தை அடைந்திருப்பார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இருபது வருடம் அந்த சலுகை நீடித்திருக்கும். ஆனால் அதன் விளைவாக தலித் சமூகமே பொது ஓட்டத்தில் இருந்து முற்றிலும் அன்ன்னியமாகிவிட்டிருக்கும். சுதந்திரத்துக்குப்பின் அம்பேத்கர் காங்கிரஸ் ஆதரவுடன் சட்ட அமைச்சராக ஆகி இட ஒதுக்கீட்டை 90 சதவீதம் உயர்சாதியரால் ஆன காங்கிரஸ் ஆதரவுடன் அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச்ச்ய்திருக்க முடியுமா என்ன?
தன் வாழ்நாளின் இறுதியிலேனும் அம்பேத்கார் காந்தி இரட்டை வாக்குரிமைக்கு எதிராக இருந்தது எத்தனை நன்மை பயத்தது என அந்தரங்கமாக உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். தலித்துக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவேண்டும். ஆனால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் இருந்து அன்னியப்பட்டு அவர்கள் எதை அடைய முடியும்?
காந்தி உண்ணாவிரதம் இருந்து அக்கோரிக்கையை முறியடித்தார். ஆமாம், அவர் முற்றிலும் தவறென நம்பிய ஒரு கோரிக்கையை முறியடிக்க தன் உயிரை பணயம் வைத்தார். அதுவே இயல்பான காந்திய வழி. தலித்துக்களுக்கு எதிராக பிரசாதியினரை அவர் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்கிறார்களா இவர்கள்? அது மிக எளிய விஷயம். அம்பேத்கார் அடங்கிப்போனதற்குக் காரணம் காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பு மட்டும் அல்ல. இன்றுபோலவே அன்றும் இந்திய தலித்துக்களில் பெரும்பான்மையினர் காந்தியையே தலைவராக எண்ணினார்கள். ஏனென்றால் வரலாற்றில் முதல்முறையாக அவர்களின் பிரச்சினையைக் கேட்ட, அவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்த, அவர்களின் நலன்களை பிறர் கவனிக்கச் செய்த அமைப்பு காந்தியின் காங்கிரசே.
தன் கருத்துக்களுக்கு எதிரான அனைவரையுமே கொன்றே ஒழித்த ஸ்டாலினையும் மாவோவையும் பிறரையும் தலைவர்களாகக் கொண்டாடுகிறவர்கள் தன் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து சாகத்துணிந்த காந்தியை சர்வாதிகாரி என்கிறார்கள். தான் எதிர்க்கும் ஒருவர் மேல் இம்மி கூட வெறுப்பை உமிழாமல் தன் தார்மீக வல்லமையை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்தியவரை துரோகி என்கிறார்கள்.
உண்மை என்பதுதான் எத்தனை தனியது ! எவ்வளவு வேட்டையாடபடுவது ! எத்தனை வெறுக்கப்படுவது ! இருந்தும் அது எப்படியோ வெற்றிபெற்று வருவதன் மாயம்தான் என்ன? வரலாறெங்கும் நிரம்பியிருக்கும் எளிய மக்கள் உண்மையை தங்கள் ஆத்மாவால் எப்படியோ அடையாளம் காண்கிறார்கள் என்பதுதானா?
ஜெ
***