சென்னையில்….

சில நாட்களாக பயணம். சென்னை வந்தேன். சென்னை பல்கலையில் எல்லைதாண்டிய நுண்ணுணர்வுகள் என்று ஒரு கருத்தரங்கு. நான் மலையாளக் கவிதைகளை மொழியாக்கம் செய்வது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிப்போய் வழக்கம் போல சொற்பொழிவாகப் பேசினேன். நண்பர் ஷாஜி மலையாள தமிழ் திரைப்பாடல்களின் இயல்பு குறித்து ஒப்பீட்டு நோக்கில் பேசினார்.

பொதுவாக இம்மாதிரி கூட்டங்களில் நிகழ்வதுபோல சோர்வூட்டும் பேச்சுகக்ள். உற்சாகமே இலலாத ஒப்பித்தல்கள். கல்விக்கருத்தரங்குகள் மாணவர்களை பொறுமையானவர்களாக ஆக்கும்பொருட்டே உருவாக்கப்ப்ட்டுள்ளன என்று சொல்பவர்கள் உண்டு. டி.எஸ்.எலியட் லத்தீன் மொழி குழந்தைகளுக்கு அவசியம் கற்பிக்கபப்ட வேண்டும், அது அவர்களில் கட்டுப்பாட்டை வளர்க்கும் என்று சொல்கிறார். நம் குருகுல முறையில் குழந்தைகள் விளக்கெண்ணை குடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் ஐந்துவருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஒரு கட்டுரை எழுதியது பெரும் பரபரப்பை உருவாக்கியது. என்னை கடுமையாக கண்டித்து 50 கட்டுரைகள் அங்கே எழுதப்பட்டுள்ளன. கெ.சச்சிதானந்தன்,சுஜாதா, பி.பி.ராமசந்திரன் போன்ற முக்கிய கவிஞர்கள் உட்பட பலர் எழுதிய 20 கவிதைகள் அச்சில் வந்துள்ளன. காரணம் ஒப்பீட்டளவில் தமிழ் கவிதைகளை விட மலையாளக் கவிதைகள் மிகவும் பின் தங்கியவை– நவீனத்துவத்துக்கே முந்தியவை– என நான் சொன்னதே. அது மலையாள அறிவுஜீவிப்பாசாங்குகளை சீண்டியது

இப்போதும் அதே கருத்தையே சொன்னேன். அதே ஆதாரங்களுடன். மலையாளத்துக்குச் செவ்வியல் மரபு இல்லை. அதற்குள்ள செவ்வியல் மரபு சங்கத்தமிழே. ஆனால் அதை அவர்கள் அறுபதுகளுக்கு பின்னர் உதறிவிட்டார்கள். ஆகவே மலையாளக் கவிதை அதன் நாட்டார் மரபுக்கே அதிக அழுத்தம் அளித்தது. ஆகவே அது பாடலின் இயல்புகளை தன்னுள் கொண்டது. உணர்வுகளை நீட்டிப்பாடுவது, எண்ணங்களை விரித்துரைப்பது அதன் இயல்பு. தமிழ்க் கவிதை அதன் வலிமையான செவ்வியல் பாரம்பரியம் காரணமாக எப்போதுமே நுட்பம் ஆழம் ஆகியவற்றை மட்டுமே இலக்காக்குவதாக ஆகியது என்றேன்[ மூலக்கட்டுரை விரைவில் தமிழில் வெளியாகும். நான் பேசியது மலையாளத்தில்]

வழக்கம் போல மாணவ்ர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். கவிஞர் விஜயகுமார் குனிசேரி ஒரு தீவிரமான அரசியல் உரையை ஆற்றினார். செவ்வியல் பண்பு என்பது சம்ஸ்கிருதம் என்று.

ஷாஜி தன் கட்டுரையில் மலையாளத்தில் ஐம்பது வருடத்தில் கிட்டத்தட்ட முப்பது வேறுபட்ட இசையமைபபளர்கள் இசையமைத்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும் சொன்னார். அதே சமயம் மலையாளியான எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழகத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தார். தமிழர்களான ஆர்.க்.சேகர், இளையராஜா போன்றவர்கள் கேரள மண்மணத்துடன் இசையமைத்திருக்கிறார்கள் அதிலும் இளையராஜா கேரள நாட்டார் இசையை புத்துயிருடன் மீட்டெடுத்த கலைஞர்[ அவரது வீடு கேரள எல்லையோரம்] ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் தமிழ், மலையாள பண்பாட்டுக்கூறுகள் இல்லை. ஒப்புநோக்க மலையாளத்தில் இன்னும் பன்மைத்தன்மை கொண்ட திரையிசை இருந்தது என்றார். யாரும் அதைப்பற்றி கருத்து சொல்லவில்லை– அரங்கில் தமிழர்கள் அதிகம் இல்லை என்பதனாலா தெரியவில்லை

இந்நாளெல்லாம் எனக்கு வசைகள் ஃபோனில் வந்தபடியே இருந்தன. பெரும்பாலும் ஃபோன் எடுப்பதில்லை. தவறிப்போய் எடுத்தால் வசை மழை. நகைச்சுவை நடிகர் மயில்சாமி என்பவர் எனக்கு எச்சரிக்கை விடுத்து நீண்ட அறிவுரையும் சொன்னார்.

பயணத்தில் இருக்கிறேன். முடிந்துவந்துதான் மீன்டும் எழுதவேண்டும்.

முந்தைய கட்டுரைபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்
அடுத்த கட்டுரைவிகடன் பற்றி இறுதியாக….