ஊட்டி காவிய முகாம் 2012 – பகுதி 2

காலையமர்வில் ஜடாயுவின் கம்பராமாயண உரை. ஜடாயு கம்பராமாயணப்பாடல்களை மரபான முறையில் பாடிக்காட்டவும் செய்தார். கம்பராமாயணம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலியவற்றின் இயல்பான நீட்சியாக அமைந்திருப்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தார்.

ஜடாயு

அதன்பின் கடலூர் சீனு அழகிரிசாமி பற்றி பேசினார். தான் நேரடியாக அறிந்த இரு வாழ்க்கையனுபவங்களைச் சொல்லி அழகிரிசாமியின் கதைகளுக்கு வந்த கடலூர்சீனு அழகிரிசாமியின் உலகம் பெரும்பாலும் குழந்தைகளினாலானது என்றார். அழகிரிசாமி நேரடியாக வாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவங்களை எந்தவகையான கொள்கைகளும் கோட்பாடுகளும் கலக்காமல் சொல்ல முயல்கிறார். அவரது குழந்தைகளைப்பற்றிய கதைகளே மிகத்தீவிரமான அனுபவங்களை அளிப்பவையாக உள்ளன என்றார். அவர் எல்லாக் கதைகளையுமே குழந்தைகளின் கோணத்திலேயே எழுதியிருக்கிறார் என்றார்.

அழகிரிசாமி நேரடியாகவே மனித வாழ்க்கையின் அவலத்தையும் எதிர்மறைத்தன்மையையும் எழுதியிருந்தாலும் அவரது நல்ல கதைகள் எல்லாமே நம்பிக்கையின் ஒளி கொண்டவையாக இருந்தன என்றார் சீனு. மனிதமனத்தின் புரிந்துகொள்ளமுடியாத சிக்கல்களை எந்த விதமான புனைவு உத்திகளும் மொழிச்சிக்கல்களும் இல்லாமல் அவரால் சொல்லமுடிந்திருக்கிறது. உதாரணம் அழகம்மாள். அழகம்மாள் அவள் இழந்துவிட்ட வாழ்க்கையை திருப்பி வாழமுயல்வதன் அவலமும் சோகமும் அக்கதையில் உள்ளது. ஆனால் அழகிரிசாமி அவரது உச்சத்தைத் தொடுவது அன்பளிப்பு, ராஜாவந்திருக்கிறார் போன்ற கதைகளில்தான்.

அழகிரிசாமியின் கதைகளைப்பற்றிய விவாதத்தில் நான் அழகிரிசாமியின் சிறப்பியல்பு என்பது அவர் உண்மையான கிராமிய விவேகத்தின் நேரடி வெளிப்பாடு போன்ற கதைகளை எழுதியவர் என்பதுதான் என்றேன். பலகதைகளை பேருந்தில் நம்மருகே வந்து அமர்ந்து சகஜமாக பேச்சுக்கொடுக்கும் கிராமத்துப்பெரிசு பேசுவதுபோலவே உணர்கிறோம். அந்த கிராமத்துத்தன்மை கிரா கதைகளில் கூட இல்லை. கிரா கிராமியவாழ்க்கையை சமத்காரத்துடன் சொல்லும் வெளியாள்போலவே இருக்கிறார் என்றேன்.

அழகிரிசாமியின் கதைகளில் அவர் சாதிகளைப்பற்றிச் சொல்வது முக்கியமான உதாரணம். கதாபாத்திரத்தை சுப்பு என்று சொல்வதற்குப்பதில் சுப்புசெட்டியார் என்று சொல்லும்போது நுட்பமான ஒரு தொடர்புறுத்தல் நிகழ்கிறது. சட்டென்று ஒரு மனிதர் நம் கண்முன் வந்து நிற்கிறார். பின்னர் பல்வேறு முற்போக்கு பாவனைகள் வழியாக எது நம்மைச்சுற்றி உள்ள யதார்த்தமோ அது கதையில் வராமல் பார்த்துக்கொண்டோம் என்றேன்.

தொடர்ந்து இலக்கியத்தில் உள்ள சாதி போன்ற பண்பாட்டுக்குறிப்புகள் எந்த அளவுக்கு தேவையானவை, அவற்றின் பொதுத்தன்மை என்ன என்பதைப் பற்றிய விரிவான விவாதம் நிகழ்ந்தது. பண்பாட்டுக்குறியீடுகள் என்பவை ஒரு நாகரீகத்துக்கு மட்டுமே உரியவை, மொழியாக்கம் செய்ய முடியாதவை என்பது உண்மை. ஆனால் எல்லா நல்ல ஆக்கங்களிலும் பெரும்பகுதி மொழியாக்கம் செய்யதக்கதாக, உலகு தழுவியதாகவே உள்ளது. அந்தரங்கமான உணர்ச்சிகளையும் பண்பாட்டுக்கூறுகளையும் மொழியாக்கம் செய்ய முடியும் என்ற சாத்தியம் தான் இலக்கியத்தை உருவாக்குகிறது.

அழகிரிசாமியின் காலகண்டி என்ற கதையை முன்வைத்து நடந்த விவாதம் அவர் உருவாக்கும் இலட்சியவாதம் பற்றி விரிந்துசென்றது. அவரது அந்த இலட்சியவாதம் எந்த கொள்கையையும் சார்ந்தது அல்ல, சாதாரண மனிதனின் உள்ளார்ந்த நல்லியல்பை நம்புவதில் இருந்து எழுவது அது. அழகிரிசாமி நகரத்தை பொதுவாக நிராகரித்தே எழுதுகிறார். எப்போதும் கிராமியத்தன்மையின் எளிமையான நல்லியல்பையே அவரது நல்ல கதைகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார் சுரேஷ்.

சுரேஷ்

மதியம் ராஜகோபாலன் புதுமைப்பித்தனைப்பற்றி பேசினார். புதுமைப்பித்தன் தன் கதைகளில் மரணத்தை எப்படிக் கையாள்கிறார் என்பதை மட்டுமே மையமாகக் கொண்டதாக இருந்தது அவரது உரை. கூர்மையான கச்சிதமான உரை. புதுமைப்பித்தன் மரணத்தை நடைமுறை தளத்தில் அணுகுவதற்கு செல்லம்மாள் கதையையும் தொன்மத்தின் அடிப்படையில் அணுகுவதற்கு பிரம்மராட்சஸ், மனக்குகை ஓவியங்கள் போன்ற கதைகளையும் ராஜகோபாலன் சுட்டிக்காட்டினார்.

புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை மரணம் என்பது விளக்கமுடியாத ஒன்றாக, பதிலற்ற ஒன்றாகவே உள்ளது. தன் கதைகளில் மரணத்தின் பிரமிக்கத்தக்க அர்த்தமின்மையையே அவர் சித்தரித்திருக்கிறார் என்றார். புதுமைப்பித்தனைப்பற்றிய விவாதம் பல திசைகளில் விரிந்து சென்றது. நாஞ்சில்நாடன் அவரது காஞ்சனை போன்ற கதைகளைச் சுட்டிக்காட்டினார். அவை எழுதப்பட்டபோது அந்த வகையான புனைவுக்கான சாத்தியமே தமிழில் இருக்கவில்லை. பிற்காலத்தில் எழுதப்பட்ட எல்லா கதைவடிவங்களையும் புதுமைப்பித்தன் முயன்றுபார்த்திருக்கிறார் என்றார்.

ராஜகோபாலன்

புதுமைப்பித்தனின் மொழியின் விளையாட்டுத்தன்மை பற்றி பலரும் பேசினார்கள். பல கதைகளில் உள்ள நுண்ணிய கிண்டல் [பணத்தை மனிதமாட்டின் கையில் கொடுத்தான்] அக்கதைகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்கிறது என்றார் சுரேஷ். புதுமைப்பித்தன் ஒரு மேதை. ஒரு மேதை என்பவன் ஒருபோதும் முழுமையாகக் கடந்துசெல்ல முடியாதவனாகவே இருப்பான். சில்லறை அரசியல்களைக் கொண்டு புதுமைப்பித்தனை மதிப்பிட்டு நிராகரிக்கும்போக்கு அ.மார்க்ஸ் போன்றவர்களால் எழுப்பப்பட்டது. ஆனால் புதுமைப்பித்தன் அவரது மேதமையால் அந்த வாதங்களை அர்த்தமற்றதாக ஆக்கினார் என்றார் நாஞ்சில்நாடன்.

style=”text-align: justify;”>நானும் அதை அங்கீகரித்தேன். உதாரணமாக புதுமைப்பித்தனின் கபாடபுரம் அவரது கதைகளில் முக்கியமானது. ஒட்டுமொத்த தமிழ்ப்பண்பாட்டின் நனவிலிக்குள் படி இறங்கிச்செல்லும் கதை அது. அங்கே என்னென்னமோ வருகிறது. படிமங்கள் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. இன்றுவரை முழுக்க வாசிக்கப்படாத கதை அது. ஆனால் அக்கதை புதுமைப்பித்தனை பெரும்படைப்பாளியாக தூக்கி நிறுத்திய விமர்சனமுன்னோடிகளான க.நா.சு மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோரை கவரவே இல்லை.

புதுமைப்பித்தனின் கயிற்றரவு கதையை ராஜகோபாலன் அவரது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கவேண்டும் என்று நான் சொன்னேன். பரமசிவம் பிள்ளை பொட்டல்காட்டில் பனைமரத்தடியில் கொல்லைக்குப்போகுமிடத்தில் நடத்தும் வேதாந்த விசாரமும் அங்கே மரணம் பாம்பாகி வருவதும் அதை கயிறா பாம்பா என மயங்குவதும் புதுமைப்பித்தனுக்கே உரிய பகடியும் அவரது சைவப்பின்னணி கொண்ட தத்துவஞானமும் பிசிறில்லாமல் கலக்கும் கதைவெளி என்றேன்.

புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள புராணநுட்பம் கவனிக்கப்படவே இல்லை என்றார் ஜடாயு. உத்தானபாலகனின் குழந்தை என்று மட்டுமே மனக்குகை ஓவியங்களில் புதுமைப்பித்தன் சொல்கிறார். அது துருவன் என்று தெரிந்தால்தான் மரணமின்மையை கடவுள் ஒரு நட்சத்திரத்தில் வீசி எறிந்துவிட்டுச் சென்றார் என்ற வரிக்குப் பொருள் கிடைக்கும். அது துருவநட்சத்திரத்தை குறிக்கிறது என்று தெரிந்தவனுக்கு அந்தக் கடைசி வரி ஆழமான மன எழுச்சியைக் கொடுக்கும் என்றார்.

நாஞ்சில்நாடனும் அதை ஏற்று புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள மொழிசார்ந்த, மரபுசார்ந்த நுட்பங்களைப்பற்றி பேசினார். ‘மூன்றாக முகிழ்த்து எழுந்ததன்மீது அடி விழுந்தது’ என்று அவர் சொல்லும்போது சிவனைக்கண்டதும் பார்வதியின் மூன்றாம் முலை மறைந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் என்பதை வாசிக்கலாம். எப்போதும் முடிவிலே இன்பம் என்ற கதையில் ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு சாதியைச் சுட்டுகிறது. நரி வேளாளர்களைச் சுட்டுகிறது என்று பார்க்கும்போது அவர் வாதவூரார் நரிகளை பரியாக்கிய கதையை எப்படி பகடி செய்திருக்கிறார் என்பது புரியும்.

புதுமைப்பித்தனை எந்த சாதியும் வெறுக்கவே முடியும். பிராமணர்களை பகடிசெய்கிறார். வேளாளர்களை கடுமையாகச் சாடுகிறார். பிற சாதிகளை கிண்டல்செய்கிறார். தலித்துகளைக்கூட நக்கல்செய்கிறார். அவரது மனம் எல்லா அடையாளங்களையும் நிராகரிக்கிறது. யாருமே அவரைச் சொந்தம்கொண்டாட முடியாது என்றார் நாஞ்சில்.

கோபி ராமமூத்தி, அரங்கசாமி

ராஜகோபாலன் பேசும்போது புதுமைப்பித்தனின் ஒட்டுமொத்தக் கதைகளை வாசிக்கையில்தான் அவரது உண்மையான தோற்றம் தனக்குக் கிடைத்தது என்றார். அதுவரை பரவலாக அறியப்பட்ட கதைகள் வழியாகத் தெரியவந்த புதுமைப்பித்தன் சாதாரணமக்களின் அவல வாழ்க்கைபற்றி எழுதியவர் என்றே தோற்றமளித்தார். மொத்தத் தொகுதியையும் வாசிக்கையில்தான் அவரது பலதளங்களிலான கதைகளின் எல்லை தெரிந்தது. அவரது வழக்கமான முகத்தைப்பற்றிப் பேசக்கூடாதென்பதனால்தான் இந்தத் தலைப்பில் பேசினேன் என்றார் ராஜகோபாலன்.

புதுமைப்பித்தனை ஆரம்பகால மார்க்ஸியர்கள் நச்சிலக்கியவாதி என்று வசைபாடினார்கள். ஆனால் அவர்களை மீறி புதுமைப்பித்தன் மேலெழுந்து வந்தார். அப்போது அவரை அவர்கள் தங்களவராக ஆக்கிக்கொண்டார்கள். அதற்காக அவரது எளிய கதைகளை, வறுமைச்சித்தரிப்புகளை முன்னிறுத்தி அவருக்கு தங்களுக்குச் சாதகமான முகத்தை அணிவித்தனர். இன்று புதுமைப்பித்தனின் நூற்றாண்டை இடதுசாரிகள் மட்டுமே கொண்டாடினார்கள். அவர்கள் உருவாக்கிய அச்சித்திரம்தான் அதிகம் வாசிக்காதவர் மத்தியில் உள்ளது என்று நான் சொன்னேன்.

புதுமைப்பித்தனை தொடர்ச்சியாக முன்வைத்து நிறுவியவர் க.நா.சு. ஆனால் ஒருகட்டத்தில் புதுமைப்பித்தன் மெல்ல மறக்கப்படலானார். அப்போது சுந்தர ராமசாமி புதுமைப்பித்தன் நினைவு மலர் மூலம் மீண்டும் புதுமைப்பித்தனை முதன்மைப்படுத்தினார். பின்னர் சு.ரா. இலக்கியதளத்தில் இருந்து விலகியிருக்க க.நா.சு. டெல்லியில் இருந்த இடைவெளியில் புதுமைப்பித்தன் மீண்டும் மறக்கப்பட்டார்.  ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் மூலம் சுந்தர ராமசாமி மீண்டும் மைய இடத்துக்கு வந்து அவரைச்சுற்றி ஓர் இளைஞர்படை உருவானபோதுதான் புதுமைப்பித்தன் இன்றிருக்கும் மையத்துக்கு வந்து அமர்ந்தார் என்று நான் சொன்னேன்.

புதுமைப்பித்தனைப்பற்றி எல்லாருக்கும் ஏதாவது சொல்வதற்கு இருந்தது. அவரது வாழ்க்கையின் கடைசியில் அவர் சிதம்பரத்துக்கு எழுதிய கடிதங்கள் மிக முக்கியமானவை, அவை புதுமைப்பித்தனை நன்றாகவே அடையாளம் காட்டுபவை என்றார் நாஞ்சில். புதுமைப்பித்தன் தன் கதைகளை எப்படி ஒரேமூச்சில் எழுதி உத்வேகம் ஓய்ந்ததுமே கைவிடுகிறார் என்பதைப்பற்றியும் அவரது பல்வேறு கிண்டல்கள் பற்றியும் விரிவாகவே விவாதம் நிகழ்ந்தது.

புதுமைப்பித்தன் போன்ற ஒரு மேதையை எந்தக் கருத்தியல்தரப்பும் சொந்தம் கொண்டாட முடியாது. அவரது படைப்புகளின் மைய இழை என்பது அவரது அவநம்பிக்கையும் விரக்தியும் தான். அதை அவர் ஆழமன தத்துவஞானத்தைக்கொண்டு எதிர்த்து சமநிலைக்குக் கொண்டுவர முயன்றார். அந்த முரணியக்கத்தையே அவரது ஆக்கங்களில் காண்கிறோம். பலகதைகளில் மொழியில் அவநம்பிக்கை மிக்க கிண்டலும் ஆழத்தில் தத்துவதரிசனமும் ஒரே சமயம் காணக்கிடைக்கின்றன என்று நான் சொன்னேன்.

அரங்குக்கு வெளியேயும் புதுமைப்பித்தனைப்பற்றி நிறையவே பேசிக்கொண்டோம். மாலைநடை சென்றபோதும் புதுமைப்பித்தன் பற்றிய விவாதம் தொடர்ந்தது. குருகுலம் அருகே அமைந்த சிறிய காட்டுக்குள் நடந்து அங்கிருந்த கண்காணிப்பு கோபுரம் வரை சென்று திரும்பினோம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம்- ஒரு பதிவு
அடுத்த கட்டுரைலா.ச.ரா: ஜடாயு கட்டுரை