அப்பாவுக்கு மூன்று கவிதைகள்

பழைய கடிதங்களுக்காக தூசு படிந்த கோப்புகளை துழாவிக்கொண்டிருந்தேன். இக்கவிதைகள் அகப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே  மிக அந்தரங்கமான கவிதைகள். அன்றைய கொந்தளிப்பை மட்டுமே அவை வெளிப்படுத்துகின்றன. அப்பாவும் அம்மாவும் தற்கொலைசெய்துகொண்ட நாட்களின் குற்றவுணர்ச்சியை, தூக்கமின்மையை, தனிமையை இவ்வரிகள் மூலம் கடந்துசெல்ல முயன்றிருக்கிறேன்.

இக்கவிதைகள் மூன்றுக்கும் முக்கியமான பொது அம்சம் உண்டு. நான் இவற்றை சுந்தர ராமசாமிக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களில்தான் எழுதினேன். மூன்றாம் கவிதை மட்டும் அவர் நடத்திய காலச்சுவடு இதழில் 1988ல் வெளியாகியது. விரைவிலேயே நான் கவிதைகளை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஒற்றைப்புள்ளியில் குவியக்கூடிய அவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட வடிவம் என் தேடலுக்கு உதவவில்லை. உருமாறி  உருமாறி பல்வேறு தளங்களுக்குச் செல்லச் சாத்தியமான,  விரிந்து பரந்த ஒரு வடிவத்தையே நாடினேன். ரப்பர் மூலம் அது நாவல்தான் என கண்டுகொண்டேன்.

இக்கவிதைகள் வழியாக இன்றிரவு அப்பாவையும் சுந்தர ராமசாமியையும் உணர்ச்சிகரமாக எண்ணிக்கொள்கிறேன்.
A baby hand holding his father's finger

மனம் கைவிட்டுப்போன இரவொன்றில் எழுத எண்ணிய கடிதத்தில் இருந்து சில வரிகள்….

 

இந்த இரவு இத்தனை நீளமானதென்று எப்போதும் அறிந்திருக்கவில்லை.
எண்ணும்தோறும்நீளும் காலத்தின் விசித்திரத்தையும் அறிந்திருக்கவில்லை.
தனித்திருக்கும்போதுஎவரேனும் பிறரை நினைக்கிறார்களா என்ன?
தன்னை உண்ணும் விலங்கொன்றுகண்டேன்
ஒருபோதும் ஆறாத பெரும்பசியுடன்.
நண்பரே, நணபரே, இழந்துகொண்டேஇருப்பதென்றால் என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?
சென்றநாட்களிலேயே வாழவிதிக்கப்பட்டவனின் உடல்
நூறுமடங்கு எடைகொள்ளுமென்று தெரியுமா?
நண்பரே, இழந்துகொண்டே இருப்பதென்றால் என்னவென்று
தெரியாதா உங்களுக்கு?
சொல்லப்படாதுபோன சொற்கள் எப்போதும் முளைக்கின்றன
குருதியின் ஈரத்தில்.
அறியமுடியாதவிஷயங்கள் எப்போதும் இருக்கின்றன நம்முடன்
நண்பரே, இப்போது அவர்களை நினைத்துக்கொள்கிறேன்.
அவர்களுக்கான உலகில் அவர்கள் இருக்கிறார்களென்று.
[
இல்லாதவர்களாக எவரையேனும் நினைக்கமுடியுமா என்ன?]
அங்கே அவர்கள் கொண்டுசென்றதென்ன?
எஞ்சியவற்றையாஅடியில் தங்கியவற்றையா? உப்பில் விளைந்தவற்றையா?
எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?
இக்கணம்அறிய விரும்புகிறேன்,
என் மொத்தக் குருதியாலும் கேட்கவிரும்புகிறேன்
இப்போதாவது அவர்கள் பேசிக்கொண்டார்களா என்று.
ஏன் அப்படிவெறுத்தார்கள் என்பதை
இப்போதாவது புரிந்துகொண்டார்களா என்று

[1987 ல் எழுதிய கவிதை. 1992ல் பிரசுரமானது]

 

 

fa1

காற்றின் வீடு

கைவிடப்பட்ட வீட்டின் உள்ளே
காற்றுதான் நுழைய துணிகிறது.
இயல்பாக தன்னந்தனியாக
சன்னல் கதவை அசைத்துக்கொண்டு
உள்ளே செல்கிறது
சுவர்களை வருடியபடி
காலியான அறைகள் தோறும்
ஒழுகிச்செல்கிறது
ஒட்டடைகள் மீது
மெல்ல ஊதி அதிரச்செய்கிறது
தரையின் குப்பைகளை அள்ளி
சுவரோரமாகக் கூட்டுகிறது.
பயனிழந்துபோன அனைத்தையும் தொட்டு
மர்மமாகச் சிரித்துக்கொள்கிறது
வெளியேறும் முன்பு
தூசுப்படலத்தின் மென்மைமீது
தன் விரல்களால்
எதையோ கிறுக்கிச் செல்கிறது

[1986ல் எழுதியது. 1991ல் பிரசுரமாகியது]

 

fa2

பலிச்சோறு

அனல் கொதிக்க எரிந்து
என் உலை வெந்தாகிவிட்டது
பசும் வாழையிலைமேல்
கத்தரிக்காயும் எள்ளும்
வினோதமாய் மணக்கும் பலிச்சாதம்
தலைசரித்து தலைசரித்துக் கரையும்
இதில்யார் நீ அப்பா?
பசியாற வேண்டும்
இது உன் சாதம்

கவளம் சுமந்து திரும்பினால்
வெறும் மணற்பரப்பாய் என் நதி
பலிச்சோறு உலர உலர தவிக்கிறேன்
எனக்குமட்டும் நீரில்லை
கங்கையில் காவிரியில்
காசியில் கன்யாகுமரியில்
அலைகிறேன்
தீர்த்தக்காவடியாய்
இறக்கத்தேம்பும் பாரமாய்
உன் பலிச்சாதம்

முழநீர் போதும் முங்கிவிடுவேன்
எங்கே
எந்த ஏட்டுச்சுவடியில்
எந்தக் கோயில் கல்வெட்டில்
இருக்கிறது வழி?
பசியின்றி தாகமின்றி நீயிருக்கலாம்
தவிப்பது நான்
இது என் பலிச்சாதம்

[1987ல் எழுதியது. 1988; பிரசுரமாகியது]

[மறுபிரசுரம் / இணையத்தில் மே 25, 2009ல்]
நன்றி: http://www.kalachuvadu.com/issue-82/gallery.asp

முந்தைய கட்டுரைகலைஞனின் உடல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12