ஓணம்பாக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் சென்று வந்த ஓணம்பாக்கம் என்ற ஊரை பற்றியும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஓணம்பாக்கம் மதுராந்தகம் வட்டம், செய்யூரில் இருந்து, 6 கி மீ தொலைவில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள குரத்திமலையிலும் கூசமலையிலும் சமண படுக்கைகளும், பிம்பங்களும் இருப்பதை கேள்விப்பட்டு, அங்கு சென்றேன்.

பாலாஜி என்ற MCA படிக்கும் மாணவரின் உதவியோடு குரத்திமலையில், இரண்டு இடங்களில் படுக்கைகள் இருப்பதை கண்டறிந்தேன். மலைக்கு கிழக்கே இருக்கும் ஐந்து படுக்கைகள் இதுவரை பதிவாகவில்லை. இந்த புதிய படுக்கைகளை பற்றி, சமண ஆய்வாளர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் தெரிவித்தேன். தானும் வந்து பார்த்துவிட்டு, செய்தி கொடுத்து விடலாம் என்றார். பிறகு அருகில் உள்ள கூசமலை சென்றேன். அந்த மலையில் பந்தக்கல் என்னும் இடத்தில் ஐந்து படுக்கைகள் காணப்படுகின்றன. மலையின் ஒரு பகுதி, அருகில் உள்ள ஒரு கல் குவாரியால் உடைக்கப்பட்டுள்ளது (ஓராண்டுக்கு முன்னர் நடந்த போராட்டத்தால், கூசமலையின் பிற பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன).

பிறகு சில நாள்கள் கழித்து, குரத்திமலையில் உள்ள சமணபிம்பங்களுக்கு (பார்சுவநாதர், ஆதிநாதர், மகாவீரர்) பூஜை செய்யும் ஜீவகுமார், மலையில் புத்தர் போல காணப்படும் சுடுமண் பொம்மை இருப்பதாகக் கூறினார். பின் இரண்டாவது முறையாக அங்கு சென்றேன். இம்முறை அந்த ஊரை சேர்ந்த அய்யனார் என்பவர் அறிமுகமானார். என்னை கூசமலைக்கு அழைத்துச் சென்று அனைத்து இடங்களையும் சுற்றிக் காட்டினார். கூசமலையில் இருக்கும் குகை குறித்து சில தகவல்களை சொன்னார். பின் என்னை குறித்து விசாரித்தார். நான் அவரிடம் உங்கள் ஊரை பற்றி இணையத்தில் எழுதப் போகிறேன் என்று கூறினேன். மிகவும் சந்தோஷப்பட்டார். பின் கூசமலை முழுவதும் சுற்றிக் காட்டினார். அவரிடம், உங்கள் ஊர் வரலாற்று சிறப்பு வாய்ந்தது, அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறினேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கிருக்கும் மக்களுக்கும் கல் குவாரி இருப்பது பிடிக்கவில்லை என்று அறிந்தேன். பின் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு, ஜீவகுமாரிடம், சுடுமண் சிற்பத்தை பெற்றுகொண்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து, அய்யனாரிடம் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. அவர் குரல் மிகவும் பதற்றமாக இருந்தது. கல்குவாரியில் வெடி வைத்ததில், பாறைத்துண்டு ஒருவர் தலையில் விழுந்து இறந்து விட்டார் என்று கூறினார். நான் அதிர்ச்சி அடைந்தேன். கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க நான் ஏதாவது செய்யுமாறு கூறினார். நான் என்னுடைய எல்லைகளை விளக்கி, என்னால் முடிந்தவரை முயல்கிறேன் என்று கூறினேன். பின், உடனடியாக, அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு, இந்த விஷயத்தை சீக்கிரம் செய்தியாக்க வேண்டும் என்று கூறினேன். அவரும் தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். அவர்களும், தங்கள் நிருபரை அனுப்பி வைப்பதாக கூறினர்.பின் அடுத்த ஞாயிற்று நாங்கள் செல்வதாக முடிவானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஓணம்பாக்கம் மக்களின் ஒருங்கினைந்த போராட்டத்தால், (http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=37738&cat=504) அந்த குவாரி சீல் வைக்கப்பட்டது (ஜனநாயகத்தில், மக்கள் தங்களை ஒன்று திரட்டி போராடினால் நிச்சயம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற, தங்களது வரிகளை நினைத்து கொண்டேன்). மூன்றாவது முறையாக சென்றபோது, தமிழாக்கம் செய்யப்பட ஓணம்பாக்கம் விக்கிபீடியா கட்டுரையை நகல் எடுத்து அய்யனார் மூலமாக மக்களிடம் விநியோகித்தேன்.

அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, கூசமலையில் மேலும் சில படுக்கைகள் இருந்ததற்க்கான அறிகுறிகள் காணப்படுகிறது என்றார். மேலும் படுக்கைகளில் காணப்படும் குறியீடுகளையும் பற்றி சில தகவல்களை சொன்னார். இக்குறியீடுகள் பெரும்பாலான சமண படுக்கைகளில் காணப்படுகிறது. இவை மூலம் காலத்தையும், மழை வரும் நேரத்தையும் முனிவர்கள் கணித்தனர் என்றார். பின் அவரிடம் சுடுமண் பொம்மையை அளித்தேன். 60 வயதாகியும், வெயிலில் எங்களுக்கு இணையாக அவர் அலைந்தது ஆச்சர்யமாக இருந்தது.

இந்த செய்தி, 04-05-2012 தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பில் வெளியாகி இருக்கிறது. அதை இக்கடிதத்துடன் இணைத்து இருக்கிறேன்.

இவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவை:

விக்கிப்பீடியா கட்டுரை

ஓணம்பாக்கம்

யு டியூப் காணொளிகள்

1) http://www.youtube.com/watch?v=KwUs8GatcH4&feature=g-upl ( பார்சுவநாதர், ஆதிநாதர்)

2) http://www.youtube.com/watch?v=K0EQyh5ngHg&feature=relmfu ( மகாவீரர்)

3) http://www.youtube.com/watch?v=DNsR9kAvuro&feature=plcp (குரத்திமலை சமண படுக்கைகள்)

4) http://www.youtube.com/watch?v=UZWaUetPJyc&feature=plcp (கூசமலை சமண படுக்கைகள்)

5) http://www.youtube.com/watch?v=SExt-k0V-ec&feature=plcp ( புதிதாக கண்டறியப்பட்ட குரத்திமலை சமண படுக்கைகள் )

6) http://www.youtube.com/watch?v=AFgTwSiBHnw&feature=plcp (அய்யனார் பேட்டி)

7) http://www.youtube.com/watch?v=hvjTHDxUBZ4&feature=plcp (கூசமலை வறண்ட குளம் )

8) http://www.youtube.com/watch?v=lj9X3vts8iw&feature=plcp (விளக்குமலை)

9) http://www.youtube.com/watch?v=Ywn9rE6OmmY&feature=plcp (சுடுமண் பொம்மை)

விக்கிமப்பியா இணைப்பு சுட்டி

1) குரத்திமலை

2) கூசமலை

நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.

முந்தைய கட்டுரைஊட்டியிலே
அடுத்த கட்டுரைவாசிப்பும் பகுத்தறிவும்