கொற்றவை – ஒரு கடிதம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலம் அறிய ஆவல். எட்டு மாதங்களுக்கு முன்பு வாங்கிய “கொற்றவை” புத்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக, கவனமாக தற்போதுதான் வாசித்து முடித்தேன். எனக்கு 60% தான் புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் நான் புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு இன்னும் இந்த நாவலை உள்வாங்கிக் கொள்ளப் பக்குவம் வரவில்லை என்ற குற்ற உணர்வு வந்துவிட்டது. ஆனால் புரிந்த வரை எனக்கு மிகுந்த வியப்பு தந்ததையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நிஜமாகவே எனக்கு பிரமிப்பை இந்த நூல் தந்தது. இன்னும் இந்த நூலைப் புரிந்து கொள்ள இன்னும் சில வருடம் விட்டு மீண்டும் படிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

நான் விஸ்வகர்மா வகுப்பைச் சேர்த்தவன். “கொற்றவையில்” ஒரு பகுதியில் ஒரு தலைமைப் பொற்கொல்லன் தனது சிஷ்யனிடம் “இவ்வுலகில் களவு கொள்ளாப் பொற்கொல்லன் எங்கு உள்ளான்”. என்ற வரி என் நினைவுகளை எங்கெங்கோ இட்டுச் சென்றது. என் தந்தை அவர்கள் காலத்தோடு எங்கள் குலத் தொழில் நசிந்து விட்டது. நான் MBA முடித்து விட்டு பெங்களூரில் வேலை செய்து வருகின்றேன். முன்பு ஒரு கட்டுரையில் நீங்கள் திரு.தேவதச்சன் அவர்களை சந்தித்த போது அவர்கள் நகைத் தொழிலைப் பற்றிக் கூறிய ஒரு பகுதியில் அவர் “முன்பெல்லாம் திருமணம் நிச்சயம் ஆனவுடன், நகை செய்பவரிடம் தான் முதலில் வருவார்கள், அவர்கள் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இப்போது காலம் மாறிவிட்டது’’ என்று கூறி இருந்தார். அதைப் படித்த போதும் எனது சிறு வயது நினைவுகளில் மூழ்கினேன். எனக்கு சிறு சந்தேகம் “கொற்றவையில்” ஒரு பகுதியில் சேர மன்னனின் படை எதற்காக 100 பொற்கொல்லர்களை பலி இட்டார்கள் எனத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் விரிவாகக் கூறவும்.

எனக்கு உங்களின் படைப்புகள் பற்றி நிறைய கூற வேண்டும் போல இருக்கிறது, ஆனால் அதை வார்த்தையில் கோர்க்க வரவில்லை. நிச்சயம் உங்களை நேரில் சந்திக்கும் வாயப்பு வரும்போது உரையாடலில் வரும் என நினைக்கின்றேன்.

உங்களின் இணையதளத்தைக் கடந்த 4 வருடங்களாக வாசித்து வருகின்றேன். உங்களின் ரப்பர், கன்னியாகுமரி , ஏழாம் உலகம், காடு, சங்க சித்திரங்கள், இன்றைய காந்தி, தற்போது கொற்றவை படித்துள்ளேன்.அடுத்தது “விஷ்ணுபுரம்” வாங்க உள்ளேன்.

இப்படிக்கு அன்புடன்

ரா. அ. பாலாஜி
பெங்களுரு

அன்புள்ள பாலாஜி,

பொற்கொல்லர்களை பலியிட்டது சேரன் அல்ல பாண்டியன். அவனுடைய குலத்துக்குப் பழிவந்தமையால் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் அது கூடப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு பொய்ச்செய்தியாகவே இருக்கும். அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொன்மம் பாண்டியர் குலத்தின் மீது சிலப்பதிகாரம் வழியாக உருவான பழியைத் துடைக்க உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைநாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபெண்ணின் கதை