கட்டுரையில் ஜெ சொன்ன ஒரு சுவாரசியமான கதை – கேரளத்தில் ‘இளையது’ என்றழைக்கப்படும் விலக்கப்பட்ட பிராமணப் பிரிவு உருவான கதை. மேற்குமலைக் காடுகளின் மரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக யக்ஷிகளும், நீலிகளும், சாத்தன்களும், கதைகளும் உள்ள கேரளத்தில் உள்ள ஒரு செவிவழிக் கதை. இக்கட்டுரையுடன் சேர்த்து வாசிக்கலாம். ஜாதி, வேதம் பற்றின பல விசித்திரமான தகவல்கள் உடையது. ஜெ சொன்ன ‘இளையது’ பற்றியும் அதில் உண்டு.
விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சராக இருந்த வரருசி என்கிற பிராமணனுக்கும் ஒரு பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பன்னிரு குழந்தைகளைப் பற்றிய கதை இது. ‘பறயி பெற்ற பந்திருகுலம்’ என்று கேரளத்தில் இக்கதை பிரபலம். இவர்கள் மகனாகப் பிறந்த ‘வாயில்லாக் குந்நிலப்பன்’, ‘நாராணத்து பிராந்தன்’ ஆகியோரும் இன்றும் தெய்வமாகவும், ஞானியாகவும் போற்றப்படுபவர்கள்.
கதை இப்படிப் போகிறது….
விக்ரமாதித்தன் ஒருமுறை வரருசியிடம் இராமாயணத்தில் மிக முக்கியமான வரி எது என்று கேட்கிறார். வரருசியால் சொல்ல முடியவில்லை. ராஜா நாற்பத்தியொரு நாட்கள் கெடு விதிக்கிறார். வரருசி அறிஞர்களைக் கேட்டுப்பார்க்கிறார், ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நாற்பதாம் நாள் இரவில் ஒரு ஆலமரத்தின் அடியில் கவலையுடன் அமர்ந்து ஓய்வெடுக்கும் பொழுது, இரண்டு ஆவிகள் காலமேனிப் பறவைகளின் உருவில் அம்மரத்தின் மீது வந்தமர்ந்து பேசத் தொடங்குகின்றன. அவை ராமாயனத்தைப் பற்றிப் பேசி, அதில் மிக முக்கியமான வரியாக, ராமனுடன் காட்டுக்குப் புறப்படும் லக்ஷ்மணனுக்கு சுமித்ரை சொல்லும் அறிவுரையாக வரும், “ராமனைத் தந்தை தசரதனாக நினைத்துக்கொள், ஜனகன்மகள் சீதையை நானாக (தாயாக) நினைத்துக்கொள், காட்டை அயோத்தியாக நினைத்துக்கொள், பயணம் சுகமாகிவிடும்” என்ற செய்யுள் வரிகளைக் கூறி, அதிலும் “ஜனகன் மகளைத் (நானாக) தாயாக நினை” (மாம் விதி ஜனகாத்மஜம்) என்னும் வரி மிகமுக்கியமானது என்று கூறுகின்றன. கூடவே வரருசி இப்பொழுது பிறந்திருக்கிற ஒரு பறையர்குலப் பெண்ணை மணக்க வேண்டும் என்பது விதி என்றும் பேசிக்கொள்கின்றன.
மறுநாள் விக்ரமாதித்தனிடம் ராமாயணத்தின் முக்கியமான வரி என்ற விடையைக் கூறி அவன் பாராட்டுக்கு ஆளான வரருசி, இதுதான் சமயமென்று கருதி முன்கூட்டியே தெரிந்து விட்ட விதியை மாற்ற எண்ணி நேற்று பிறந்த பறையர் குலப் பெண்குழந்தையால் அரசனுக்கு ஆபத்து என்று கூறுகிறான். அரசனது ஆணைப்படி படை அந்தக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்து, சிறு தெப்பத்தில் வைத்து ஆற்றில் விடுகிறது.
பலவருடங்கள் கழித்து ஒருமுறை வரருசி பிரயாணத்தில் ஒரு அந்தணர் வீட்டில் உணவு உண்ணச் சம்மதிக்கிறார். உணவு உண்பதற்கு அவர் விதிக்கும் நுட்பமான சங்கேத மொழியில் அமைந்த விதிகளை வீட்டிற்குள் இருந்து ஒரு பெண்குரல் புரிந்து கொண்டு பதிலளிக்கிறது. அவளின் அறிவில் கவரப்பட்டுப் பின் அவளை மணக்கிறார். உண்மையில் அந்தப் பெண் நிளா நதியின் (பாரதப்புழை) கரையில் உள்ள கொடுமுண்டா கிராமத்தில் நரிபட்டாமணையைச் சேர்ந்த ஒரு பிராமண குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்ட பறைக்குலத்தில் பிறந்த அதே பெண் தான். இந்த உண்மை தெரியவந்ததும் விதியின் வலிமையை உணர்ந்தவராக வரருசி தன்னைத் தானே சாதி விலக்கு செய்து கொண்டு மனைவியுடன் அடர்ந்த காடுகளின் வழி யாத்திரையைத் தொடங்குகிறார்.
ஒவ்வொரு முறை மனைவி பிரசவிக்கும் போதும், ’குழந்தைக்கு வாய் இருக்கிறதா? என்று கேட்கிறார். மனைவி ‘இருக்கிறது’ என்று சொன்னவுடன், “வாயைக் கொடுத்த இறைவன் அதற்கு உணவையும் கொடுப்பான். குழந்தையை அங்கேயே விட்டுவிடு!” என்று சொல்லிவிடுகிறார். இப்படிப் பதினோரு குழந்தைகளை இழந்த மனைவி, பண்ணிரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அதற்கு வாய் இல்லை என்று பொய் சொல்லி விடுகிறாள். ‘சரி குழந்தையை எடுத்துகொள்’ என்று கூறுகிறார் வரருசி. பின்னர் பாலூட்ட எண்ணிக் குழந்தையைப் பார்க்கையில் நிஜமாகவே அதற்கு வாய் இல்லை. பதறிய மனைவி ஞானிகளின் வாக்கு பலிக்கும் என்பதை உணர்கிறாள். தன் தவறால் தன் குழந்தைக்கு நேர்ந்ததை எண்ணி வருந்துகிறாள். வரருசி அந்தக் குழந்தையை அந்தக் குன்றின் மேலேயே தெய்வமாகப் பிரதிஷ்டை செய்கிறார். அது ‘வாயில்லா குந்நில் அப்பன்’ (குன்றில் இருக்கும் வாயில்லா தெய்வம்) என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கோயில் பாலக்காடு மாவட்டம் கடம்பாழிபுரம் என்னும் ஊரில் இன்றும் உள்ளது.
அதற்கப்புறம் வரருசி கேரளத்தின் மண்ணூர் என்னும் இடத்தில் சமாதியடைந்தார் என்று கதை முடிகிறது. வரருசிக்கும், பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பதினோரு பிள்ளைகளும் பின்னாளில் வளர்ந்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் மூத்த மகனின் வீட்டில் தந்தை இறந்த நாளன்று கூடி அவருக்கு நீர்க்கடன் செய்கின்றனர். இன்றும் அவர்கள் பரம்பரையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பதினோரு பிள்ளைகளும் வெவ்வேறு ஜாதி, மதங்களில் வளர்க்கப்பட்டனர். பதினோரு பிள்ளைகளும் முறையே; மேழத்தோள் பிரம்மதத்தன் அக்னிஹோத்ரி (பிராமணர்), பாக்கனார் (பறையர்), ராஜகன் (வன்னார்), நாராணத்து பிராந்தன் (இளையது), காரக்கல் மாதா (உயர்குல நாயர்), அகவூர் சாத்தன் (வைஸ்யன்), வடுதல நாயர் (படை நாயர்), வள்ளோன் (வள்ளுவர் குலம்), உப்புக்கொட்டான் (இஸ்லாமியர்), பாணனார் (பாணர்), பெருந்தச்சன் (தச்சர்). (வாயில்லா குந்நிலப்பன் – தெய்வம்)
பெரும்பாலானவர்களின் தலைமுறைகள் இன்றும் பாலக்காடு மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் (ஷொரனூர், பட்டாம்பி, த்ரிதல) வசிக்கின்றனர்.
எனக்கு இந்த நாட்டார் செவிவழிக்கதை முக்கியமாகப் படுவதற்குக் காரணம் உண்டு. கேரளத்தின் ஜாதி வேறுபாடுகள் மிகுந்த சூழ்நிலையில் வித்தியாசங்களை அழித்து எல்லாரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்னும் கருத்தை முன்னிறுத்த இந்தக் கதை ஏற்பட்டிருக்கலாம். எல்லோருடைய உடம்பிலும் பறைச்சி பார்ப்பனன் இருவரின் ரத்தமும் கலந்து ஓடுகின்றது, எனவே பிறப்பால் வித்யாசமில்லை என்று சொல்ல வந்திருக்கலாம். இந்தக் கதையின் படி வெவ்வேறு ஜாதியில் பிறந்தவர்கள் வேதக்கல்வி கற்று அதில் முக்கிய ஆளுமைகளாக உருவாகியிருக்கின்றனர். ஆளும் தம்பிரான்கள் யாரென்று நியமித்திருக்கின்றனர். உதாரணமாக சில..
1. பறையர் குலத்தில் வளர்க்கப்பட்ட பாக்கனார் தான் நம்பூதிரிகளில் இருந்து ‘ஆழ்வாஞ்சேரி தம்பிராக்கள்’ என்கிற தம்பிராக்களை (ஒருவகையான ஆளுனர்கள்/ தலைவர்கள்) உருவாக்கி அந்தப் பகுதியின் தலைவர்களாக நியமித்தார்.
2. வன்னார் குலத்தில் வளர்ந்த ராஜகன் என்பவர் மிகப்பெரும் வேத நிபுணராக இருந்துள்ளார். பூர்வ மீமாஸ்கரான குமாரிலபட்டரின் மாணவராக இருந்து அவரின் பட்டா பள்ளியிலிருந்து மாறுபட்டு பிரபாகர பள்ளியை கேரளத்தில் பிரபலமாக்கியவர். அவர் தொடங்கியது தான் கடவல்லூரிலுள்ள வேதவித்யாலயம். கேரளத்தின் மிகமுக்கியமான வேதக்கல்வி நிலையம் இது. மாநிலத்தின் எந்த கல்விக்கூடத்தில் வேதம் பயின்றாலும் ராஜகன் தொடங்கிய கடவல்லூர் கல்வி நிலையத்தில் தேர்வில் வென்றால் மட்டுமே அவர்கள் கல்வி அங்கீகரிக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கடவல்லூர் அன்யோன்யம் என்று இன்றளவும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெ கூட ஒரு அங்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதன் புதியபரிணாம வளர்ச்சியை எழுதியது ஞாபகம் இருக்கலாம்.
3. கீழ்சாதி பிராமண குலத்தில் வளர்ந்த நாராணத்து பிராந்தன் வானவியல் பண்டிதர். ஹரிதகாரணம் என்னும் சோதிட நூலை எழுதியவர். ஆத்மஞானியான இவர் சுடுகாட்டில் சாம்பலில் புரண்டு கொண்டும், மலையில் கல்லை உருட்டிவிட்டுக் கொண்டும், ஆற்றின் கரையில் இரவில் மல்லாந்து படுத்தபடி நட்சத்திரங்களையும் பார்த்தபடி இருந்ததனால் பிராந்தன் (பைத்தியம்) என்று அழைக்கப்பட்டார். நாராயணமங்கலம் மனை என்னும் நம்புதிரிக் குடும்பத்தில் வளர்ந்து நாராணத்து பிராந்தன் என்று அழைக்கப்பட்டார்.
4. வள்ளுவர் குலத்தில் வளர்ந்த பிள்ளையே தமிழில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் என்கிறது கேரள நாட்டார் மரபு. கேரளத்திலும் வள்ளுவர் குலம் வானவியல், சோதிடம், மருத்துவம், மந்திரவாதம் முதலியவற்றில் பாரம்பரியமாக தேர்ந்தவர்கள்.
5. பாணர் குலத்தில் (இசைக்கலைஞர்கள், கேரள சாதி அடுக்கில் தாழ்த்தபட்ட வகுப்பினர்) – தொல்காப்பியம், அகநானூறு, பதிற்றுப்பத்து போன்றவற்றில் குறிப்பிடப்படும் பாணர் இவர்களே என்கிறது நாட்டார் மரபு.
6. மேழத்தோள் அக்னிஹோத்ரி குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதிலும், சைவ-வைணவ ஒற்றுமைய உண்டாக்கியதிலும் கேரளத்தில் மிகமுக்கியமானவர்.
ஆராய்ந்தால் இன்னும் பல தகவல்கள் பல திறப்புகளைக் கொடுக்கக் கூடும். வரருசி என்னும் பெயரில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பலகாலகட்டத்தில் பலர் குறிப்பிடப்படுகின்றனர். கேரளத்தில் குறிப்பிடப்படுபவரின் காலம் பொது ஆண்டு 4ம் நூற்றாண்டு. ஆனால் தொன்மக் கதையாக (விக்ரமாதித்தனும் வேதாளமும்) விக்ரமாதித்தரின் காலம் பொது ஆண்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன். ஆனால் விக்ரமாதித்தன் என்ற பெயரிலும் பல அரசர்கள் இருந்துள்ளதால் இவர் வேறு விக்ரமாதித்தன் என்று கொள்ளலாம். அதன்படி ராஜகன் குமரிலபட்டரின் மாணவர் என்னும் செய்தியிலிருந்து சங்கரர் காலத்தை பற்றிய கணக்கீடுகளை ஆராயலாம். நாட்டார் கதைகள் எப்பொழுதும் வரலாற்றெழுத்தில் எழுத்திலறியா சுவாரஸ்யமான புதிய தகவல்களைக் கொடுக்ககூடியவை- உரிய கவனம் கொடுக்கப்பட்டால்!
-பிரகாஷ்.