ஈஸோவாஸ்யம்- முன்னுரை

சமீபத்தில் என் நண்பரான ஜடாயு ஈசாவாஸ்ய உபநிடதத்தைத் தமிழாக்கம் செய்து தமிழ்ஹிந்து என்ற தளத்திலே வெளியிட்டார். அதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இப்படி ஒரு கேள்வி இருந்தது.

’உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப்பட்டன. பிரம்மத்தைத் தேடுபவர்களே கூட முறையாக ஆன்மீகக் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதிகாரம் பெற்றுத்தான் அணுக முடிந்தது என்று தெரிகிறது. எப்படியாயினும் உபநிடதங்கள் – வேதத்தின் கருத்து முடிவாக, இறுதி உண்மையாகக் கருதப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.

…அதனை நாடி வருகிற ஒருவனை இவ்வாறு ’பிறர் பொருளை விரும்பற்க’ (வடமொழியில் ’மா கஸ்யஸ்வித் தனம்’) என்று கூறுவது ஏன்? பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலைத் துறந்து பிரம்மத்தைத் தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா?’

நித்ய சைதன்ய யதி

இயல்பாகவே எழக்கூடிய கேள்வி. இந்தக் கேள்விக்கு ஜடாயு ’இங்கு ஒரு சாதாரண நீதிபோதனையாக இது சொல்லப் படுவதில்லை. இதற்கு முன்பு உள்ள வாசகங்களையும் சேர்த்துப் பார்த்தால் அது அளிப்பது ஒரு தரிசனம் – தியாகம்’ என பதிலளித்திருந்தார். சரியான பதில் அது.

சென்ற காலங்களில் உபநிடதத்தைக் கற்றமாணவர்கள் எவருக்கும் இந்த ஐயம் வந்ததில்லை, ஆகவே இப்படி ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டதில்லை. இப்போது மட்டும் இந்த வினா ஏன் எழுகிறது? இதற்கான தனிச்சூழல் இன்று உருவாகியிருக்கிறதா என்ன? அப்படி உருவாகியிருந்தால் அச்சூழலில் இந்நூலின் ஞானம் எப்படி பொருள்படுகிறது.

முக்கியமான ஒரு மாற்றம் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம். உபநிடதம் என்ற சொல்லுக்கே அருகமர்தல் என்றுதான் நேர்ப்பொருள். ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்கவேண்டிய நூல்கள் இவை. குரு என்பது இங்கே எப்போதுமே ஒரு நீண்ட குருமரபுதான். ஆகவே ஒரு ஞானவழியில் நின்று கற்கவேண்டிய நூல்களாக இவை இருந்தன.

ஆழ்வார்கள் அல்லது நாயன்மார்களின் பக்திப்பாடல்களை வாசிக்கும்போது அவற்றில் உபநிடதக் கருத்துக்கள் சர்வசாதாரணமாகப் பயின்றுவருவதைக் காணமுடிகிறது. அப்படியென்றால் உபநிடதங்கள் இங்கே தொடர்ந்து பயிலப்பட்டன என்று பொருள்.இருந்தும் ஏன் அவை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை? இந்தியமொழிகள் எவற்றிலுமே அவை மொழியாக்கம் செய்யப்படவில்லையே?

சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் நமக்கு இருக்கவில்லை. பௌத்தநூல்கள் திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டபோதுதான் நமக்கு அந்த வழக்கம் உருவானது. ஆனாலும் அது அதிகமாகக் கையாளப்படவில்லை. நாம் நூலின் சாராம்சத்தை மறு ஆக்கம்செய்வதையே மரபாக கொண்டிருந்தோம். அவ்வாறு ராமாயணம் மகாபாரதம் புராணங்கள் என பல நூல்களை நாம் மொழியாக்கம் செய்திருக்கிறோம். ஆனால் உபநிடதங்களை நாம் மொழியாக்கம் செய்யவில்லை

அதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்குப் பதில் ஒன்றே. உபநிடதங்கள் அவ்வாறு நூல்வடிவில் கற்பதற்கானவை அல்ல. அவை குருவழியாகக் கற்கப்பட வேண்டியவை. அவற்றைக் கற்பதற்கான ஒரு முறைமை முன்பு இருந்தது. அந்த முறைமையே அவற்றின் வடிவத்தைக்கூடத் தீர்மானித்தது.

உபநிடதங்கள் உபதேசங்கள் அல்ல. தத்துவ விவாதங்கள் அல்ல. கவிதைகள் அல்ல. இவை எல்லாம்தான் என்று சொல்லமுடியும். ஆனால் அவற்றின் வடிவம் அவற்றை வேறுபடுத்துகிறது. இவை மந்திரங்கள். மந்திரம் என்ற சொல்லுக்கு ரகசியமானது என்று பொருள். மறைந்திருப்பது என்று பொருள். இவ்வரிகள் மந்திர வடிவில் உள்ளன.

மந்திரங்கள் வெறுமே வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் விவாதிப்பதற்கும் உரியவை அல்ல. மந்திரம் என்ற வடிவம் ஒரு ஒட்டுமொத்த ஞானத்தின் மொழியுருவம் என்று சொல்லலாம். ஒரு மெய்ஞான தரிசனத்தை சில சொற்குறிகளில் அடக்கினால் அது மந்திரமாகிறது. அந்த மந்திரத்தில் இருந்து அந்த மெய்ஞான தரிசனத்தை நாம் முழுமையாகவே மீட்டு விரித்து எடுக்கமுடியும். ஒரு பெரிய ஆலமரத்தை திரும்ப விதையாக ஆக்கி வைப்பதைபோல ஞானம் மந்திரமாகிறது.

அதாவது பல்லாயிரம் வருடம் விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்ட ஒரு மெய்ஞானமே செறிவான சொற்களால் இந்த மந்திரங்களாக ஆக்கப்பட்டுள்ளது. ஒரு ஆயிரம் பக்க நூலை கற்றபின், நினைவுகூர்வதற்காக அதை ஒரு வரியாக சுருக்கி குறித்து வைப்பது போல. அந்த ஒரு வரி மட்டும் கையில் கிடைத்தால் அந்நூலை அறியமுடியாது. ஆனால் உரிய முறையில் கற்பிக்கப்பட்டால் அந்த வரி அந்நூலை நோக்கி நம்மைக் கொண்டுசெல்லும்.

பழங்காலத்தில் இவை எப்படி கற்கப்பட்டன? முதலில் இவை முழுமையாக மனனம் செய்யப்பட்டன. மனப்பாடமான அந்த நூலை குரு மிகவிரிவாக விளக்குவார். சீடனுடன் விவாதிப்பார். மற்ற சீடர்களுடன் விவாதிக்கச்செய்வார். அவ்வாறு அந்த மந்திரத்தின் எல்லா அர்த்தங்களும் வெளிப்படுத்தப்படும். அவ்வாறு கற்பதற்குரிய முறைமை ஒன்று அன்று இருந்தது

அவ்வாறு அம்மந்திரத்தின் அர்த்தங்கள் முழுக்கத் திறந்தபின்னர் அம்மந்திரங்களை தியானம் செய்யச்சொல்வார். திரும்பத்திரும்ப அகத்தில் இச்சொற்களை ஓடவிட்டுக்கொண்டே இருத்தல்தான் அது. மெல்ல மெல்ல சொற்கள் கற்றறிந்த அர்த்தங்கள் நிறைந்த மேல்மனதைக் கடந்து அறியாத அர்த்தங்களால் ஆன ஆழ்மனம் நோக்கிச் செல்லும். ஜாக்ரத்தில் இருந்து ஸ்வப்னத்துக்கும் அங்கிருந்து சுஷுப்திக்கும் செல்லும்.

அச்சொற்கள் மாணவனின் கனவுகளுக்குள் ஒலிக்கும். கனவையும் தாண்டிச்செல்லும் ஆழங்களில் எதிரொலிக்கும். அவ்வாறு அவற்றில் அவன் தன்னுடைய சொந்த அர்த்தங்களைக் கண்டுகொள்வான். அந்நூலில் ஒட்டுமொத்தமான மானுட ஞானத்தையே அவன் கண்டடைய முடியும்.

ஒரு கட்டத்தில் இந்த மந்திரத்தில் எதையேனும் ஒரு வரியை அந்த மாணவனுக்கான ஆப்தவாக்கியமாக -அணுக்க மந்திரமாக- குரு சீடனுக்குச் சொல்லலாம். அல்லது சீடனே அதைக் கண்டடையலாம். அந்த ஒரு வரி அவனுக்கு அனைத்து ஞானங்களையும் தொகுத்தளிக்கக்கூடிய, ஞானப்பெருவெளியில் வழிகாட்டியாக அமையக்கூடிய ஒன்றாக ஆகலாம்.

ஏதோ ஒரு கட்டத்தில் அது அர்த்தத்தை இழந்து வெறும் ஒலியாக ஆகலாம். அவனை அர்த்தமின்மை நிறைந்த முதல்முழுமையில் நிலைகொள்ளச் செய்யலாம். உபநிடதங்கள் அதற்கானவை. அவை ஞானமும் ஞானத்தைக் கடந்து செல்லும் வழியும் ஆனவை.

இன்று நாம் உபநிடதங்களை மொழியாக்கம் செய்கிறோம். மொழியாக்கம் என்பது நூலின் ஒரு வடிவம் மட்டுமே. மலையின் புகைப்படம் போல. உபநிடதங்களை நாம் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்கிறோம். சாதாரணமாகப் பத்து ரூபாய்க்கு வாங்கிப் பேருந்திலேயே அரைமணி நேரத்தில் வாசித்துவிடுகிறோம். இந்த வேறுபாடுதான் இன்றுள்ளது.

வாசிக்கக்கூடாதென்று சொல்ல வரவில்லை. அந்த வாசிப்பை முழுமையாக உபநிடதத்தை அறிந்துவிட்டோம் என்று எண்ணும் நிலையாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அது ஒரு தொடக்கமாக இருந்தால் போதும். அங்கிருந்து மேலும் மேலும் வினாக்களுக்கும் விளக்கங்களுக்கும் சென்றால்போதும். உபநிடத வரிகளை வரையறைகளாகவோ அறிவுரைகளாகவோ கொள்ளாமல் மந்திரங்களாக எடுத்துக்கொண்டால் போதும்.

மேலே சொல்லப்பட்ட ஐயம் அத்தகைய முதல் வாசிப்பில் வருகிறது. அவ்வாசிப்பை மேலும் விவாதங்கள் மூலம் முன்னெடுக்கவேண்டும். அதற்குரிய ஆசிரியர்களைத் தேடிச்செல்லவேண்டும். நேற்றிருந்ததுபோல குருநாதர்களோ அமைப்புகளோ இன்றில்லை. ஆனால் நேற்றை விட அதிகமான நூல்கள் இன்றுள்ளன. குருநாதர்களின் சொற்கள் அழியாமல் கிடைக்கின்றன. அவற்றினூடாகச் செல்லும் வாய்ப்பு நமக்குள்ளது.

உபநிடதங்கள் ஒரு ரகசியத்தன்மையுடன் எப்போதும் பேணப்பட்டன. ஒரு ஞானத்தை அதற்கான தேடலும் அறிவுத்தகுதியும் இல்லாதவர்கள் கற்கலாகாது என்ற எண்ணம் அன்றிருந்தது. ஒருவன் தாகத்துடன் தேடி அலைந்து தன் குருவை கண்டு அவர் வழியாகவே அதைக் கற்கவேண்டும் என்று கொள்ளப்பட்டது. தவறான விளக்கங்கள் வழியாக உபநிடதங்கள் திரிக்கப்படலாகாது என்பதற்காக இவ்வழி கடைப்பிடிக்கப்பட்டது.

உபநிடத ரகசிய ஞானத்துக்குள் கதவுதிறந்து நுழைய இரு சாவிகள் உண்டு. ஒன்று, அவற்றின் தலைப்பு. மாண்டூக்யம், சாந்தோக்யம் என்றெல்லாம் உபநிடதங்களுக்கு இருக்கும் பெயர் அவற்றின் மொத்த ஞானத்தையும் புரிந்துகொள்ள மிக அவசியமான ஒரு குறிப்பு. இரண்டு அந்த உபநிடதங்களில் இருந்து மையத்தரிசனமாக திரண்டு வரும் ஒரு வரி.

அந்த வரி சிலசமயம் சாதாரணமாக நூலுக்குள் இருக்கும். ’பிரக்ஞானம் பிரஹ்ம’ என்பது போல. சிலசமயம் திரும்பத்திரும்ப வரும் ‘தத்வமசி ஸ்வேதகேது’ போல. சிலசமயம் நூலின் முதல்வரியே அதுவாக இருக்கும். ஈஸோவாஸ்ய உபநிடதத்தில் அதன் தலைப்பும் முதல்வரியும் மையவாக்கியமும் ஒன்றே– ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்.

குருநித்யாவின் இந்நூலின் வாசலில் நின்று நான் இதை விளக்குவது அதிகப்பிரசங்கித்தனம். ஆனாலும் முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கான விளக்கத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். உபநிடதத்தைக் கற்கும்போது அந்த மைய வாக்கியத்தைச் சுற்றி அந்நூல் இருப்பதாகவே எண்ணிக்கொள்ளவேண்டும். அதில் உள்ள ஒவ்வொரு வரியுடனும் அந்த மையவாக்கியம் வந்து இணைந்துகொள்வதாக உருவகம் செய்துகொள்ளவேண்டும்

ஈஸோவாஸ்ய உபநிடதத்தின் எல்லா வரியுடனும் ‘இவையனைத்திலும் இறை உறைகிறது’ என்ற வரி இணைகிறது. ’பிறர் பொருளை விரும்பற்க’ என்ற வரியுடன் அவ்வாறு மைய வரி இணையும்போது அது அளிக்கும் அர்த்தமே சரியானது. தனித்து எடுத்தால் ‘திருடாதே’ என்றுதான் பொருள். ஆனால் இந்தப் பிரபஞ்சமே இறைவடிவம், இங்குள்ள அனைத்துமே இறைவன் என்னும்போது பிறர் பொருளை விரும்பாதே என்றால் என்ன அர்த்தம்?

திருட்டு என்பது தனியுடைமையை அங்கீகரிக்கும்போதுதான் உருவாகி வருகிறது. ஒருவன் இப்பூமியில் சிலவற்றை சொந்தம்கொண்டாடுவதை சரியானது என்று அனுமதித்தால்தான் இன்னொருவன் அதை எடுத்துக்கொள்வது திருட்டாகிறது. என்னுடைய மண்ணை அவன் எடுத்துக்கொள்கிறான் என்பது திருட்டாக இன்று கருதப்படுகிறது, என்னுடைய மூச்சுக்காற்றை அவனும் விடுகிறான் என்ற திருட்டுக்குற்றச்சாட்டு இன்னும் உருவாகவில்லை.

இங்குள்ள எல்லாப் பொருளும் இறைவடிவே என்னும்போது இவற்றை எவர் உரிமை கொண்டாட முடியும்? அப்படியென்றால் திருட்டு எங்கே வருகிறது? இந்த வினாவுடன் இச்சொற்களை யோசிக்கவும் மேலும் விவாதிக்கவும் ஒரு கட்டத்துக்குமேல் தியானிக்கவும் முடிந்தால் இந்த வரி திறந்துகொள்ளும். அவ்வாறு எல்லா வரிகளையும் திறந்துகொள்ளவேண்டும். அதுவே உபநிடத வாசிப்பு.

இந்த வரியை இப்படிப் புரிந்துகொள்ளலாம். இயற்கை என்பதே இறைவன். இறைவனின் கருணை ஒவ்வொருவனுக்கும் உள்ளது. ஆகவே ஒட்டுமொத்த இயற்கையும் எனக்குரியதுதான். அதேசமயம் என் இருத்தலுக்கு தேவையான அளவுக்கே நான் எடுத்துக்கொள்ளவேண்டும். எனக்காக இயற்கை அளித்ததற்கு அப்பால் நான் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் பிறர் பொருளே. அதை நான் எடுத்துக் கொள்ளலாகாது– காந்தி இந்தவரியை இப்படித்தான் பொருள்கொண்டார்.

இப்பிரபஞ்சத்தில் எனக்களிக்கப்பட்டவற்றுக்கு அப்பால் ஆசைப்படாமலிருக்கும்போதே நான் என்னை அறிய ஆரம்பிக்கிறேன். என்னைச்சூழ்ந்துள்ள ‘அதை’ அறிய ஆரம்பிக்கிறேன்.பிரம்ம வித்தை என்று சொல்லப்படும் தன்னைஅறிதலின் முதல் படியே இந்தத் தன்னுணர்வுதான். இதையே துறவு என்றனர். அதைச்சொல்லித்தான் நூல் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் ஒவ்வொரு வரியும் அந்த தரிசனத்தின் நீட்சியாக ஆகிறது.

கற்று ,உய்த்து, ஊழ்கத்திலமர வேண்டியவை உபநிடதங்கள். அதற்கான ஒரு பொன்வாசல் நித்யாவின் இந்தக் கவித்துவமான உரை. பத்தாண்டுகளுக்கு முன் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எம். கோபாலகிருஷ்ணன் இதை மொழியாக்கம் செய்தார். இந்த மறுபதிப்பு வெளிவரும்போது நண்பரை அன்புடன் நெஞ்சாரத்தழுவிக்கொள்கிறேன்

இக்கணத்தில் குரு நித்யாவின் பாதங்களை முழுமையாக வணங்கிச்சரணடைகிறேன்

ஜெ

[எம் கோபாலகிருஷ்ணன் மொழியாக்கத்தில் வெளிவரும் நித்ய சைதன்ய யதியின் ஈஸோவாஸ்ய உபநிடத உரை நூல் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைவேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?
அடுத்த கட்டுரைஇருண்மை-கடிதங்கள்