வினவு ஆணித்தரமாக வினவியிருக்கிறது. நல்ல விஷயம். இவர்கள் வினவுவதனால்தான் நாட்டில் இன்னும் கொஞ்சம்பேர் நல்ல சம்பளத்தில் அரசூழியராக வேலைபார்த்து லோன் எடுத்து வீடுகட்டி கூடவே புரட்சிப்பாவலாவுடன் வாழமுடிகிறது.
நித்ய சைதய யதியின் ஊட்டி குருகுலம் இருக்குமிடம் ஊட்டியில் அல்ல, மஞ்சணகெரே என்ற கிராமத்தில். அந்நாளில் இது சாலைவசதி இல்லாத ஒரு காட்டுப்பகுதி. அன்று அந்நிலத்துக்கு விலை என ஏதும் இல்லை.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கொடுமையான பஞ்சங்களால் தமிழகக் கிராமங்கள் சூறையாடப்பட்டன. அதிலிருந்து தப்ப எளியமக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து சென்றனர். பல லட்சம்பேர் இலங்கை ,மலேசியா உள்ளிட்ட அன்னியநாடுகளுக்குச் சென்றனர்.
நம்முடைய மலைகளில் அந்தக்காலகட்டத்தில்தான் மக்கள்குடியேற்றம் நிகழ்ந்தது. மலைகளை வெட்டி வெள்ளையர் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள். அங்கே வேலை செய்ய வந்த மக்கள் மலைகளில் காட்டை அழித்துக் குடிசை போட்டார்கள். ஊட்டியில் மக்கள் குடியேற ஆரம்பித்த காலம் அது.
உள்காட்டுப்பகுதியாக இருந்த மஞ்சணகெரேயில் 1890 வாக்கில்தான் மக்கள் குடிசை போட ஆரம்பித்தனர். அவர்கள் பெரும்பாலும் தலித்துக்கள். இப்போதும் தலித் மக்களின் குடிசைகள் சூழ்ந்த பகுதியாகவே அது உள்ளது, சுற்றுலா மையமாக அல்ல.
நாராயண குரு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதியான ஈழவர்களிடையே இருந்து உருவாகி வந்தவர். ஆகவே அவரது செயல்திட்டத்தில் எப்போதுமே அடித்தளச்சாதி மக்களின் கல்வி மற்றும் மருத்துவச்சேவைகள் முதலிடம் வகித்தன. நாராயணகுருவின் எல்லா குருகுலங்களும் தலித் மக்களின் குடிசைப்பகுதிகளியே அமைந்துள்ளன.
இன்றேகூட ஊட்டியின் இப்பகுதியில் வாழ்வது கடினம். அன்று கடுங்குளிரும் மழையும் கொண்ட இங்கே குடிசைகளில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயமே. இங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துக்கொண்டிருந்தனர். காலரா ,வருடம் தோறும் உண்டு. எப்போதும் மலேரியா மரணக்குழி என்றே இப்பகுதி அழைக்கப்பட்டது.
நாராயணகுருவின் கவனத்துக்கு இந்த இடம் கொண்டுவரப்பட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. யூகலிப்டஸ் மரம் அக்காலகட்டத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மிக உயரமான அந்த மரத்தில் ஏறி அதன் தழைகளை வெட்டி எண்ணை எடுக்க மரமேறும் தொழிலாளர் தேவைப்பட்டனர். அவ்வாறாகக் கேரளத்திலிருந்து ஈழவர்கள் இங்கே கொண்டுவரப்பட்டனர். கணிசமானவர்கள் கொத்தடிமைகளாகவே வந்தார்கள்
அவர்களில் சிலர் நாராயண குருவிடம் இந்த மரணக்குழியைப்பற்றிச் சொன்னார்கள். நாராயணகுருவால் செய்யமுடிந்தது அவரது மாணவரான சுவாமி போதானந்தரை அனுப்புவது மட்டுமே. போதானந்தர் எந்த வசதியும் இல்லாமல் தனிமனிதனாக வந்து அந்தசேரியிலேயெ குடிசை கட்டி வாழ்ந்து அங்கிருந்த தலித் மக்களுக்கு மருத்துவச்சேவை செய்தார். ஆனால் நோயுற்றமையால் அதைத் தொடர முடியவில்லை. அவர் விரைவிலேயே இறந்தார்.
அங்கே சேவையைத் தொடரும்படி நடராஜ குருவை நாராயணகுரு அனுப்பி வைத்தார். 1922 இல் அங்கே வந்த நடராஜகுரு அங்கே காடருகே ஒரு குடில் கட்டி சேவையை தொடர்ந்தார். அவர் மீது ஈடுபாடு கொண்ட ஒரு தமிழ் வணிகர் இன்று குருகுலமிருக்கும் இடத்தை இலவசமாகக் கொடுத்தார். ஏழு ஏக்கர் காடு அது. அங்கே டீ இலை பதப்படுத்தும் ஒரு கொட்டகை மட்டும் இருந்தது.
அங்கே நடராஜகுரு தன்னுடைய கைகளால் மண் குழைத்து வைத்து ஒரு குடிசை கட்டினார். நடராஜகுருவுக்கு அங்கே கிடைத்த நண்பரான ஆதிவாசி ஒருவரும் உதவினார். [அந்த ஆதிவாசியும் நடராஜகுருவும் மிகமுதிய வயதுவரை நட்புடன் இருந்தனர். இரு கிழவர்களும் சிரித்தபடி மல்யுத்தம்செய்வது போன்ற ஒரு அழகிய புகைப்படம் உண்டு]
பயிற்சியில்லாமல் கட்டப்பட்ட ஒழுங்கில்லாத மண்சுவர்களும் காட்டுமரத்தாலான கூரையும் கொண்ட அந்தக்குடிலில்தான் கடைசிவரை நடராஜகுரு வாழ்ந்தார். அது சென்றவருடம் வரை சமையலறையாகப் பயன்பாட்டில் இருந்தது. இப்போதுதான் கூரையும் தரையும் மாற்றப்பட்டுள்ளன.
1923ல் அந்தக்குடிலில் நாராயணகுருகுலத்தை முறையாக நடராஜகுரு ஆரம்பித்தார். நாராயணகுரு வந்து குருகுலத்தைத் தொடங்கி வைத்தார். நான்கு வருடம் அங்கே நடராஜகுரு சேவை செய்தார். காலரா மற்றும் மலேரியாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அனாதைவிடுதி ஒன்றும் இலவசப்பள்ளியும் மருத்துவமனையும் அங்கே நடத்தப்பட்டன.
நடராஜகுருவின் அப்பா டாக்டர் பல்பு மைசூர் சமஸ்தானத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர். கேரளத்தில் அடித்தள மக்களின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்த தலைவர் அவர். தன் செல்வத்தை முழுக்க அக்காலத்தில் அடித்தள மக்கள் வாழ்ந்த பகுதிகளைத் தாக்கிய கொள்ளைநோய்களை எதிர்கொள்ள செலவிட்டவர். நாராயணகுருவின் இயக்கத்தைக் கட்டி எழுப்பியவர் அவரே
நடராஜகுரு தன் அப்பா தன் பங்குக்கெனத் தந்த சிறு பணத்தைச் செலவிட்டுத்தான் குருகுலத்தை அமைத்தார். ஆனால் நான்குவருடங்களுக்குள் 1927இல் குருகுலத்தை மூடவேண்டியிருந்தது. நிர்வாகப்பொறுப்பு அளிக்கப்பட்டவர்கள் நிதியை மோசடிசெய்து குருகுலம் நடக்கமுடியாதபடி செய்ததே காரணம்.
ஆறுமாத காலம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊட்டி சந்திப்புகளில் நின்று மக்களிடம் பிச்சை எடுத்து குருகுலத்தை நடத்தினார் நடராஜ குரு. தொடர்ந்து நடத்தமுடியாத காரணத்தால் குருகுலம் நின்றது. குழந்தைகள் வற்கலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அதன்பின் அந்நிலம் அங்கேயே கிடந்தது. நடராஜகுரு வற்கலைக்குச் சென்று அங்கே ஸ்ரீநாராயண கல்விச்சாலை முதல்வராகப் பணியாற்றினார். ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபையின் கல்விநிலையங்களை உருவாக்குவதில் பெரும்பணியாற்றினார்.அவை கேரள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் புரட்சிகரமாக மாற்றியமைத்தவை.
அதன்பின் நடராஜகுரு நாராயணகுருவின் ஆணைப்படி ஐரோப்பா சென்றார். ஜெனிவா சென்று ஆசிரியராகப் பணியாற்றினார். சார்போனில் கல்வியியல் தத்துவத்தில் தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் கீழ் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுசெய்தார்.
1933இல் நடராஜ குரு இந்தியா திரும்பினார். 1928இல் நாராயணகுரு மறைந்தபின் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா மெல்ல மெல்ல ஈழவர்களின் ஒரு சாதியமைப்பாக மாற ஆரம்பித்திருந்தது. கல்வியும் பொருளியல் ஆதிக்கமும் பெற்ற ஈழவர்கள் சாதியாகத் திரண்டு அரசியலதிகாரம் நோக்கிச் செல்ல விரும்பினார்கள்.தலித் மக்களுக்கான சேவைகளை ஈழவத் தலைவர்கள் ஆதரிக்கவில்லை.
அதை எதிர்த்து அவ்வமைப்பில் இருந்து விலகிய நடராஜ குரு இந்தியா முழுக்க இரண்டாண்டுக்காலம் அலைந்து திரிந்தார். 1935இல் அவர் மீண்டும் மஞ்சணகெரே வந்தார். அந்த நிலம் அங்கேயே கைவிடப்பட்டுக் கிடந்தது. அங்கே அந்தக் குடிலை மீண்டும் தன் கைகளால் கட்டி எழுப்பினார். பதினைந்தாண்டுக்காலம் அங்கே தனியாக வாழ்ந்தார்.
இக்காலகட்டத்தில் நடராஜ குருவுடன் சார்போனின் சகமாணவராக விளங்கிய ஜான் ஸ்பியர்ஸ் வந்து அவருடன் சேர்ந்துகொண்டார். இருவரும் சேர்ந்து வேல்யூஸ் என்ற மாத இதழை நடத்தினர். ஜாஸ் ஸ்பியர்ஸின் எழுத்துப்பணியால் வந்த வருமானத்தால்தான் பெங்களூர் சோமனஹள்ளி குருகுலம் ஆரம்பிக்கப்பட்டது.
நடராஜகுரு முழுக்கமுழுக்க பசுமாடு மேய்த்து அந்த வருமானத்தால்தான் அப்போது வாழ்ந்து வந்தார். கணிசமான நாட்கள் பட்டினியும் இருந்தது. காட்டுக்குள் இருந்து விறகு கொண்டு வரவேண்டும். முந்நூறடி ஆழத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரவேண்டும்.
சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக இருந்த நித்யா அதைத் துறந்து நடராஜகுருவிடம் வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து தன்னந்தனியாக அந்தக் குடிலில் தங்கி மாடு மேய்த்து வாழ்ந்தார்கள். அப்பகுதியில் கல்வி மருத்துவச்சேவைகள் செய்தார்கள். பயணங்களில் ஈடுபட்டார்கள். நடராஜகுருவின் பிற மாணவர்கள் அதன்பின்னர் வந்தவர்கள்தான்.
1969 இல் நித்ய சைதன்யயதி ஆஸ்திரேலியாவுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் சென்றார். அங்கே பல்வேறு பல்கலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் இந்தியா திரும்பினார். 1973இல் நடராஜ குருவின் மறைவுக்குப்பின் ஊட்டி குருகுலத்திலேயே தங்கியிருந்தார்.
ஊட்டியின் இன்றைய குருகுலம் நித்ய சைதன்ய யதியால் எண்பதுகளில் விரிவாக்கிக் கட்டப்பட்டது.பெரும்பாலும் அவரது நூல்களின் வருமானத்தால். முதலில் மையக்கட்டிடம். அதன்பின்னர் பத்தாண்டுகள் கழித்து வருகையாளர் தங்கும் அறைகள். கடைசியில் 1997 ல்தான் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டது
இக்கட்டிடங்கள் எவையுமே ஆடம்பரமானவை அல்ல. எல்லாமே உயரமற்ற தகரக்கொட்டகைகள்தான்.மிகமிகக் குறைவான செலவில் ஆசிரமவாசிகளின் உழைப்பில் உருவானவை. ஆகவே ஊட்டி கூட்டத்துக்கு வருபவர்களிடம் வசதிகளை எதிர்பார்க்கவேண்டாம் என்று சொல்லி அழைக்கிறோம்.
இக்கட்டிடங்களைக் கட்டுவதில் ஐரோப்பியர் நேரடியாக அளித்த உடலுழைப்பே பெரும்பங்கு. நித்யாவின் மாணவர்களும் நண்பர்களுமாக எப்போதும் ஏராளமான ஐரோப்பியர் அங்கே இருப்பதுண்டு. அவர்களில் பலர் மிகக்கடுமையான உழைப்பாளிகள். அவர்களே அந்த நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக்கி விவசாயம்செய்தவர்கள்.
ஐரோப்பியர்கள் தச்சு , கொத்துவேலை உட்பட எல்லாவற்றையுமே செய்வதை கவனித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் தத்துவ ஆய்வாளர்கள், உளவியல் ஆய்வாளர்கள். நான்கு பேர் ஒரு மாதத்தில் எந்த வெளி உதவியும் இல்லாமல் ஒரு கட்டிடத்தைக் கட்டி முடித்ததை நான் கண்டிருக்கிறேன். இன்றைய குருகுலம் அப்படி உருவானதே.
எப்போதுமே நாராயணகுருகுலம் என்பது பொருள்வலிமை கொண்ட அமைப்பு அல்ல. இன்றும் அது அன்றன்றைய வருமானத்தில் தள்ளாடி நடக்கும் அமைப்புதான். அந்தந்த இடத்திலுள்ள துறவிகள் அவர்களே தங்கள் நிதியாதாரத்தை சம்பாதித்துக்கொள்ளவேண்டுமென்பதே விதி.
நித்யா 1999இல் சமாதியானபோது எந்த நிதியும் மிச்சம் வைக்காமல்தான் சென்றார். நிரந்தர நிதி வழியாக நிலையான அமைப்பை உருவாக்கக் கூடாது என்பது அவரது கொள்கை. ஓர் அமைப்பு மக்களால் நடத்தப்படவேண்டும், மக்களுக்குத் தேவையில்லாமலாகும்போது இயல்பாக அழியவேண்டும் என்பது அவரது கூற்று.
இன்று ஊட்டி குருகுலத்தில் மிகச்சிலரே நிரந்தரமாக உள்ளனர். சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] ஒரு அலோபதி மருத்துவர், ஆயுர்வேத ஆய்வாளர். அவரது சொந்தப் பணத்தாலும் எங்களைப்போன்றவர்களின் சிறு நன்கொடைகளாலும்தான் குருகுலம் பராமரிக்கப்படுகிறது. நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக முந்நூறு நூல்களை எழுதியவர். அந்நூல்களின் உரிமைத்தொகை குருகுலத்தின் பொதுவருமானமாக உள்ளது.
இதெல்லாம் நானே இந்தத் தளத்தில் பலமுறை சொன்னவை. சாதாரணமாக விக்கிப்பீடியாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளக்கூடியவை. ஆனால் வசவு தளத்துக்கு அதில் எல்லாம் என்ன அக்கறை? ஆளைப்பார்த்தா வசைபாட முடியும், தொழில் என்று வந்துவிட்டால் செய்யவேண்டியதுதானே?