பழசிராஜா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

பழசிராஜாவைப்பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன். இந்திய சுதந்திரவேள்வியிலே தொடக்கப்புள்ளிகளாக அமைந்த பல வீரர்களை நாம் அறிவதேயில்லை. தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், பழசி ராஜா மாதிரி ஆந்திராவிலே அல்லூரி சீதாராம ராஜு முக்கியமான ஆரம்பகால சுதந்திரப் போராட்ட வீரர்.

அல்லூரி சீதாராம ராஜு 1897ல் பிறந்தவர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மொகல்லு கிராமத்தில் பிறந்தவர். 1922 முதல் 1023 வரை பிரிட்டிஷாரை எதிர்த்து தன் பழங்குடி இனக்குழுவை திரட்டி ஒரு போரைநடத்தினார். அந்த போராட்டம் பிரிட்டிஷாரால் மோசமாக ஒடுக்கப்பட்டது. அது ராம்பா கலகம் என்று ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்க மறுத்த ஆந்திரப் பழங்குடிகளை ஒடுக்க ஆங்கில அரசு பல சட்டங்களைக் கொண்டுவந்தது. அவர்கள் கள் இறக்குவதும் விறகுவெட்டுவதும் தடுக்கப்பட்டது. அதை நம்பி வாழ்ந்த பல லட்சம் மக்கள் பட்டினியானார்கள்.

அதை எதிர்த்து அந்த பழங்குடிகளில் ஒருவராக உருவானவர் அல்லூரி சீதாரம ராஜு. ஆனால் அவர் முறையாக கல்வி கற்றவர். விசாகபட்டினம் ஏ.வி.என் கல்லூரியில் அவர் பட்டப்படிப்புக்குச் சேர்ந்தார். ஆனால் முடிக்கவில்லை. தன் மக்களின் துயரம் கண்டு உள்ளூர் அதிகாரிகளுடன் மோத ஆரம்பித்த ராஜு மெல்லமெல்ல கொள்ளைக்காரராக முத்திரை குத்தப்பட்டார். 1922 அக்டோபரில் அவர் தன் முதல் தாக்குதலைத் தொடுத்தார்.

 

View Full Size Image

சென்னை மாகாண கவர்னர் சாண்டர்ஸ் துரையை அனுப்பி சீதாராமராஜுவை அடக்க முனைந்தது. அவர் மலைகலில் ஒளிந்துகொண்டு கெரில்லா போர்முறையை நடத்தினார். அவரை பிடிக்கமுடியாத அரசு அவரது இன மக்களை கொன்று ஒழிக்க ஆரம்பித்தது. ஆகவே அவர் 1923 அக்டோபரில் சரண் அடைந்தார். ஆனால் விசாரணை இல்லாமல் 1924 மேமாதம் அவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

ஆந்திடாவில் அவர் ‘மலைவீரர்’ [மான்யம் வீருடு] என்று அழைக்கப்படுகிறார். நடிகர் கிருஷ்ணா அல்லூரி சீதாராமராஜுவாக நடிக்க டி.ராமசந்திர ராவ் இயக்கத்தில் ‘அல்லூரி சீதாராமராஜு’ என்ற படம் 1983ல் வெளிவந்தது. பெரும்ச் எலவில் எடுக்கப்பட்ட வெற்றிப்படம் இது.

சீதாராம்
சென்னை
[தமிழாக்கம்]

 

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

பழசி ராஜா படம் பற்றிய தங்களது பேட்டியில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசர்கள் ஆரம்பத்தில் பிரிட்டிஷாரை ஏற்றுக் கொண்டதற்கான காரணமாக அவர்களின் நீதி, நிர்வாக முறைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது முற்றிலும் சரி. அதேபோல் சாதாரண மக்கள் அந்த ஆட்சியாளர்களை அதிக மனக்குறையின்றி ஏற்றுக் கொண்டதற்கு இன்னொரு காரணம் – பெரும்பாலான பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெண்கள் விஷயத்தில் காட்டிய கண்ணியம். அப்படி யாரேனும் ஒருவர் நெறிதவறி நடந்தாலும் அவர்களைப் பற்றி முறையிட அவர்களுக்கும் மேலான அமைப்பு ஒன்று இருக்கிறது என்கிற நம்பிக்கை.

கி.ராவின் கோபல்ல கிராமத்தில் ஒரு இடம் வரும். வெள்ளையர்கள் முதல் முறையாக தங்களின் ஆட்சிக்கு உட்படுத்திக் கொள்ளச் சொல்லி அந்த கிராமத்து மக்களை கோருகையில் அது பற்றி முடிவெடுக்க கூடும் சபைக்கு நூறு வயதைக் கடந்த தொட்டவ்வாவை தூக்கி வருவார்கள். அவரிடம் விவரத்தைக் கூறியதும் அவர் கேட்கும் முதல் கேள்வி – இந்த வெள்ளக்காரன் எங்கயாவது துளுக்க ராஜாக்களைப் போல நம்ம பொண்ணுங்களை அபகரிச்சிருக்கானா? என்பதுதான். இந்த ஒற்றைக் கேள்வியிலேயே அவர்களின் சபையின் முடிவு எடுக்கப் பட்டு விடும். அந்த கிராமத்து நாயக்கர்கள் விஜயநகர வீழ்ச்சியின் பின்னான முகலாயர்களின் வெறித்தனமான தாக்குதலில் – குறிப்பாக பெரும் அழகியான ஒரு பெண்ணை காப்பதற்காகவே ஆந்திரத்திலிருந்து தென் தமிழகத்திற்கு தப்பி வந்தவர்கள். அதிலும் ஆபத்து மிகும் ஒரு போதில் அப்பெண் தீப்பாய்ந்து அவர்களின் குலதெய்வமாகவே ஆகியிருப்பாள். எனவே அதுவே அந்த ஒன்றே அவர்களின் முடிவைத் தீர்மானிக்கும் கருவியாக ஆகிறது.

முகலாயர்கள்தான் என்றில்லை, இங்கிருந்த சுதேச மன்னர்கள், ஜமீன்தார்கள் முதல் கொஞ்சம் வசதியுள்ள நிலப் பிரபுக்கள் வரை எல்லோருமே பிரிட்டிஷார் இங்கே நுழைந்த காலகட்டத்தில் கண்ணில் பட்ட அழகிய பெண்களை எல்லாம் அந்தப் புரத்திற்கு கொண்டு செல்வதையே தங்கள் ஸ்வதர்மமாகக் கொண்டிருந்தார்கள். பெண்ணடிமைத் தனத்தை மிகவும் உக்கிரமாக்கியது இது போன்ற அவலங்கள்தான். எனவே இப்படி நொந்து போயிருந்த மக்கள் ஒரளவு பரவாயில்லை என்று தோன்றக் கூடிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை முழுமனதாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததில் வியப்பில்லை அல்லவா?

பொதுவாகவே எனக்கு மம்முட்டியை மிகவும் பிடிக்கும். இப்படியானதொரு படத்தில் அவரது நடிப்பை காண மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஏற்கனவே இப்படத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். இப்போது நீங்களும் அதில் வேலை செய்கிறீர்கள் என்பது இன்னமும் ஆர்வமூட்டுகிறது. படத்திற்காக காத்திருக்கிறேன்.


அன்புடன்,
பெரியநாயகி.

 

 

அன்புள்ள பெரியநாயகி

நன்றி. பழசிராஜா ஒரு ‘அகன்ற’ படம் . நிறைய விரிவான காட்சியமைப்புகள் கொண்டது. கேரளநாட்டு வீரபாண்டிய கட்டபொம்மன். வசனம் எழுதுவது மிகவும் சிக்கலான வேலை. ஒருவகையில் மொழியை அளைந்து விளையாடுவது. ஒருவகையில் சள்ளை. பக்ஷே [ஆனால்] , சம்சாரிக்குக [பேசுதல்] பறையுக[ சொல்லுதல்] போன்ற பல சொற்களுக்கு சமானமான வாயசைவுள்ல அதே பொருள்கொண்ட சொற்களைக் அக்ண்டுபிடிப்பது பெரும் சிரமம். முயல்கிறேன்
ஜெ

 

பழசி ராஜா

முந்தைய கட்டுரைதேர்தல் முடிவுகள்
அடுத்த கட்டுரைதேர்தல்:கடிதம்