அன்புடன் ஜெயமோகன்,
கற்பழித்ததா இந்திய ராணுவம்? என்ற குறிப்புப் படித்தேன். உங்கள் பதிலிலும் இது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் என்பதுபோன்ற மயக்கம் இருக்கிறது. என் கவிதைகளூடாக என் அரசியல் கருத்தை அறிவீர்கள். புலிகளுக்கோ அல்லது அரசுக்கோ ஆதரவான கருத்துக் கொண்டவன் அல்ல. இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதியில் அதற்குள் வாழ்ந்தவன். இந்திய ராணுவத்தின் பாலியல் வதைக்கு உள்ளாகாத பெண்கள் இருக்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் இருந்தது. அது பகிடிவதைகள் பாலியல் நோக்கோடு தொடுதல் தடவுதல் என்பவற்றிலிருந்து பாலியல் வல்லுறவு வரை இருந்தது.
ஈழப் போராட்டத்தில் முழு ஈழ மக்களின் ஆதரவும் புலிகளுக்கு அல்லது போருக்கு ஆதரவாகவோ இருந்ததெனச் சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவம் வந்த ஒரிருமாதங்களுக் குள்ளேயே ஈழமக்களின் முழு எதிர்ப்பும் இந்தியராணுவத்திற்குக் கிட்டியதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவத்தின் பாலியல் வதைகள்தான். உங்களுக்கு நிறையவே ஈழத்து நண்பர்கள் உண்டு. நிச்சயமாக உங்களுக்கு உண்மையும் தெரியும். இதற்கு மேல் மழுப்பல் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
நன்றி.
திருமாவளவன். (கனடா)
அன்புள்ள திருமாவளவன்,
உங்கள் கடிதம் கண்டேன். ஏதேனும் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு அதை அதிதீவிரமாக பொதுவெளியில் பேசுவதனூடாக தங்கள் பிம்பத்தை கட்டமைக்கும் போலிக்குரல்களையே நான் ஈழப்போர் விஷயத்தில் இந்தியாவில் அதிகம் கேட்கிறேன். அவற்றின் மீது ஆழமான அவநம்பிக்கை எனக்குண்டு.
ஆனால் நீங்களும் சரி, ஷோபா சக்தியும் சரி என்னுடைய ஆழமான மதிப்பிற்குரியவர்கள். உங்கள் படைப்புத்திறன் மீது மட்டுமல்ல நேர்மை மீதும் பெருமதிப்பு கொண்டவன் என அறிவீர்கள்.
என்ன பிரச்சினை என்றால் கடிதம் எழுதிய ஜாஸ் டயஸ் அவர்களும் என் நெடுநாள் வாசகர். உங்களைப்போல என் பெருமதிப்புக்குரியவர். அவரது அதே தரப்பைக் கூறக்கூடிய இந்திய ராணுவத்தினர் ,இதழாளர்கள் பலர் எனக்கு வாசகர்களாக, நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
நான் அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் ஆக்கிரமிக்கும் மண்ணில் மட்டுமல்ல சொந்த மண்ணிலேயே கொடுமைகளைச் செய்யும் என்றே நான் நினைக்கிறேன். போர் என்பதே அழிவுதான். அந்தக் கூற்றுக்கே ஜாஸ் பதில் சொல்லியிருக்கிறார்.
இந்திய அமைதிப்படையின் தரப்பாக எப்போதும் சொல்லப்படுவது அவர்கள் கைகள் கட்டப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள், அவர்களின் மரண எண்ணிக்கை ஒருபோதும் எவராலும் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதே. அவர்கள் போரில் நிகழ்ந்த அழிவுகள் ஒருபக்கச்சார்புடன் மிகைப்படுத்தப்படுகின்றன என்றே திடமாகச் சொல்கிறார்கள்.
ஜாஸ் டயஸின் கடிதம் உண்மையில் எனக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்கியது. அது வந்து நான்கு மாதமாகியும் அந்தக் கடிதத்துக்கு நான் பதிலளிக்கவில்லை.அந்தத் தரப்பைக் கருத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறேனா என்ற எண்ணத்தை அடைந்தேன். எனக்கு நேரடியாகத் தெரியாத ஒரு விஷயத்தில் கிடைத்த தகவல்களைக்கொண்டு கருத்துநிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறேனோ என ஐயம் கொண்டேன்.
நீங்கள் சொல்வதுபோல எனக்கு நிறைய ஈழ நண்பர்கள் எப்போதும் உண்டு. அவர்கள் அளித்த தீவிரமான சித்திரங்கள்தான் என்னுள் இருப்பவை. ஆனால் இப்போது இக்கடிதம் எனக்கு ஒரு சஞ்சலத்தைக்கொடுத்தது. அன்றைய கருத்துக்களில் போருக்காக மிகைப்படுத்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளன . நானே அப்படி நிறைய எழுதியிருக்கிறேன்.
ஆனால் போர்ச்சூழலில் உருவாக்கப்பட்ட அதிதீவிர பிரச்சாரங்களைப் பின்னராவது மறுபரிசீலனை செய்யவேண்டுமென ஆசைப்படுகிறேன். அந்த மனநிலைகள் இந்தியாவில் பிரிவினைநோக்கையும் அழிவையும் உருவாக்குபவர்களால்தான் இன்று பயன்படுத்தப்படுகின்றன என்னும்போது அது முக்கியமானதாக ஆகிறது.
இலங்கையிலேயேகூட சராசரி சிங்கள மக்களைப்பற்றிய மனச்சித்திரங்கள் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். இன்று ஈழக்குழுக்கள் தங்களுக்கிடையேயான மனப்பிளவுகளை மறுபரிசீலனை செய்கிறார்கள் என்பதனால் அதுவும் சாத்தியம்தான்.
ஈழத்தில் இந்திய அமைதிப்படை செய்ததாக சொல்லப்பட்ட கொடுமைகள் போர்ச்சூழலில் ஓர் உத்தியாக மிகைப்படுத்தப்பட்டவை என்றால் அதை வெளிப்படுத்தி, உண்மையான சித்திரம் நோக்கி நகர்வதன் மூலம் இந்தியா மீது இன்று இருக்கும் கசப்புகளை இலங்கைத்தமிழ் மக்கள் தாண்ட முடியும் என்றும் நினைத்தேன்.
இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் புலிகள் செய்த உக்கிரமான பிரச்சாரம் ஒருகட்டத்தில் இந்திய வெறுப்பாளர்களாக அவர்களைக் கட்டமைத்தது. அது நடைமுறையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாகவே ஆகியது . அதை இந்தியாவில் , ஏன் தமிழகத்தில் அரசியல்சாராத எளிய மக்களிடையே பேசிப்பார்த்தால் புரியும்.
இலங்கையில் நிகழ்ந்த கடைசிப்போரின்போது சராசரித் தமிழர்கள் காட்டிய அக்கறையின்மையை நான் கண்கூடாகவே கண்டேன். எண்பத்திமூன்றில் எழுந்த ஆதரவு அலைக்கும் அதற்கும் கொஞ்சமும் தொடர்பில்லை. அந்த மனநிலையை உருவாக்கியது அத்தகைய பிரச்சாரமே.
இன்று இங்கே இந்திய எதிர்ப்புக்காக ஈழத்து அரசியலைக் கையாள்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான தூரத்தை அதிகரிக்கிறார்கள்.
ஆனால் உங்களுடைய கடிதம் , அது எத்தனை சுருக்கமானதாக இருந்தாலும் அது கவிஞனின் குரல். அது ஒரு நிலையான ஆவணம்தான். என்னைப்பொறுத்தவரை அதுவே போதும். அது என்னைத் தீவிரமான தர்மசங்கடத்தில் நிறுத்துகிறது.
ஒரு சாமானிய இந்தியனின் நிலையில் , முற்றிலும் குழம்பியவனாக , சொல்ல ஏதுமற்றவனாக உணர்கிறேன். ஒரு இந்தியனாக ஒரு மௌனமான ஒரு மன்னிப்புக் கோரலையே சொல்லமுடியும். ஜாஸ் டயஸ் அவர்களையும் உங்கள் கடிதம் இப்படித்தான் உணரச்செய்யும் என நினைக்கிறேன்
மனிதனைப்பற்றி, இன்றைய இந்தியாவைப்பற்றி மேலும் சங்கடமும் அவமானமும் கொள்பவனாக ஆக்குகிறது உங்கள் கடிதம்.ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நெருங்கிவரவேண்டும் என்றே சொல்வேன்.
அத்தனை ரத்தத்தையும் மறந்து மெல்லமெல்ல அவர்கள் இந்தியாவை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இனிமேலும் வரலாற்றில் வேறு வழியே இல்லை. இந்தியாவின் அதிகாரபீடமோ ராணுவமோ அல்ல இந்தியா.
ஜெ