கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
 

உங்கள் வலைப்பூவில் வந்த பதிவுகளின் பெரும் பகுதியை விகடன் மூலமாகவும் அதன் எச்சத்தை உங்கள் வலைபூவிலும் படித்தேன். நான் எதை குறிப்பிடுக்கிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். உங்களை ஒரு எழுத்தாளராக நான் அறிவேன். (உங்கள் படைப்புகள் அனைத்தும் படித்திருக்கிறேன் என்று ரீல் விட விரும்பவில்லை). கஸ்தூரி மான் மூலம் ஒரு வசனகர்த்தாவாகவும் (அதன் மலையாள மூல படத்தின் வசனத்தை உள்வாங்கி) அறிமுகம். 
 

விகடனில் வெளியாகி விமர்சன கணைகள் எழுந்தவுடன் உங்கள் பதிலையும் படித்தேன். நான் அவர்களை அவமானப்படுத்தவில்லை. அவர்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். இதை வெளியிட்டதன் மூலம் விகடன்தான் அவர்களை அவதூறு செய்திருக்கிறது என்ற தொனியில் உங்கள் பதில் அமைந்திருக்கிறது.
இந்த பதிவே ஒரு அங்கத வகையை சார்ந்தது. ஆகவே இது அவமதிப்பு ஆகாது என்பது உங்கள் வாதம்.

நிற்க, ஒரு சிவாஜி ரசிகன் என்ற முறையில் உங்கள் பதிவு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது உண்மை. எனக்கு பிடித்தவர்களை கிண்டல் கேலி செய்வதை நானும் ரசித்திருக்கிறேன். ஆனால் இங்கே நீங்கள் எல்லை தாண்டியதாக தோன்றுகிறது. நீங்கள் சுஜாதா கணையாழியில் எழுதியதையும் சுந்தர ராமசாமி அவர்களையும் மேற்கோள் காட்டுகிறீர்கள். என் குடும்பத்தையே கூட கிண்டல் செய்திருக்கிறேன் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் ஒரு அடிப்படையான விஷயத்தை வசதியாக மறைக்கிறீர்கள். நீங்கள் சொன்னவர்களெல்லாம் விமர்சனம் செய்தது சிவாஜி உயிரோடு இருக்கும்போது. நீங்கள் செய்திருப்பது அவர் இறந்து ஆறரை வருடங்கள் ஆன பிறகு. இந்த இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும். விமர்சனமே கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் யாரை சொல்கிறோம் எதைப்பற்றி சொல்கிறோம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது என நான் நினைக்கிறேன். 
 

இதில் மற்றொன்றையும் குறிப்பிட வேண்டியவனாகிறேன். உங்களை போன்றவர்கள் உடனே குறிப்பிடுவது கேரளத்தில் நிலவும் சூழல். அதையும் இங்கே உள்ள சூழலையும் ஒப்பிட்டு சொல்வது. கேரளத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரியாத பல பேர் உங்களை போன்றவர்கள் இந்த மாதிரி சொன்னவுடன் ஆமாம் சாமி போட்டு விடுகிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. காரணம் தமிழகத்தில் நடப்பதை ஒரு கேரளியன் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அங்கே என்ன நடக்கிறது என்பதை இங்கே உள்ள ஒரு தமிழன் தெரிந்து கொள்ள முடியவில்லை இல்லை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு தமிழ் ஊடகங்களும் ஒரு காரணம். ஆனால் வேலை நிமித்தம் காரணமாக கேரளத்தில் பல வருடங்கள் செலவழித்தவன் என்ற முறையில் உங்கள் கருத்துகளோடு மாறுபடவேண்டியவனாகிறேன். எதிர் கருத்துகளை வன்முறை மூலமாக எதிர்கொள்வதில்லை என்ற வாதமே அடிப்படையற்றது. அப்படி இருந்திருந்தால் மார்க்சிஸ்ட் – RSS மோதல்களே ஏற்பட்டிருக்காது.எத்தனையோ உயிர்கள் பலியாகிருக்காது. 90 களில் ஆரம்பித்து சென்ற வருடம் சங்கனாசேரி N.S.S. கல்லூரி வளாகத்தில் நடந்த கொலை வரை இதற்கு சாட்சி.
தங்கள் கட்சியின் இமேஜை பாதிக்கும் வண்ணம் செய்தி வெளியிட்டார்கள் என்பதற்க்காக மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மனோரமவையும், மாத்ருபூமியையும், தீபிகாவையும் எத்தனை முறை தாக்கியிருகிறார்கள் என்பதற்கு கணக்கே கிடையாது என்பதை நீங்களும் ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன். குஞ்சாலி குட்டி பாலியல் குற்றசாட்டுக்களுகாக அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஊடங்கள் எழுதிய போது வெளி நாடு சென்றிருந்த அவர் திரும்பி வரும் போது நெடும்பாசேரி விமான நிலைய வளாகத்தில் பத்திரிகையாளர்கள் எவ்வளவு அராஜகமாக தாக்கப்பட்டனர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். மேற்சொன்ன விஷயங்களுக்கும் உங்கள் பதிவுகளுக்கும் தொடர்பு இல்லை என்றாலும் கூட நீங்கள் கொண்டிருக்கும் கருத்து தவறானது என்று சுட்டி காட்டவே இதை எழுதினேன்.

கைரளி தொலைக்காட்சி பற்றியும் அதில் வரும் மார்க்சிஸ்ட் கிண்டல் பற்றியும் சொல்லியிருக்கீர்கள். ஆனால் இதுவும் ஓரளவிற்க்கே உண்மை. மார்க்சிஸ்ட் கட்சியில் நிலவும் V.S , பினராயி விஜயன் கோஷ்டி மோதலால் சில விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆசியா நெட் தொலைகாட்சியில் வரும் சினிமாலவில் கருணாகரனை கிண்டல் செய்ததும் அவரே முக்கிய விருந்தினராக வந்தது பற்றியும் சொல்லும் போது மீண்டும் அதே பாயிண்ட் அவர்  உயிரோடு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது ஈ.எம்.எஸ். அவர்களின் திக்குவாயை பற்றியோ அல்லது ஈ.கே. நாயனார் (இருக்கும் போது எதிர்கட்சிகள் அவரை கோமாளி என்றே குறிப்பிட்டு வந்தன) அவர்களையோ யாரும் கிண்டல் செய்வதில்லை. இவ்வளவு ஏன் மிமிக்ரி நிகழ்ச்சிகளில் மறைந்த நடிகர் ஜெயனை போன்று பேசுவதற்கும் எதிர்ப்பு தோன்றுகிறது.

ஆக உங்கள் மேற்கோள்படி பார்த்தாலும் உங்களின் இந்த பதிவு எல்லை தாண்டியதாகவே எனக்கு படுகிறது. சிவாஜி ரசிகனாக இருப்பதால் உங்களுக்கு ரசனை குறைவு என்று சொல்லிவிட மாட்டீர்கள் என நம்புகிறேன். காரணம் வேறு ஒரு விவாதத்தில் என்னை பற்றி(அதாவது உங்களை பற்றி) எழுதுவதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள்.
 

உங்கள் பதிவில் கண்ட வேறு சில முரண்களையும் சொல்லி விடுகிறேன். ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் பிடித்த நடிகர்கள் வரிசையில் முத்துராமன் மற்றும் சிவகுமாரையும் சொல்லியிருக்கிறீர்கள். கேரளதவர்கள் அல்லது அந்த சிந்தனையோட்டத்தோடு ஒத்து போகிறவர்கள் பெரும்பாலோர் சொல்லும் பதில் இது. சிவாஜி பிடிக்காது ஆனால் அவரின் நடிப்பை பகர்த்தும் முத்துராமனையும் சிவகுமாரையும் பிடிக்கும். என்ன ஒரு Hypocracy? சிவாஜி போலவே முகபாவம் காட்டும், பேசும் போது செயற்கையாக பேசும் இவர்கள் நல்ல நடிகர்கள் ஆனால் சிவாஜி மோசமான நடிகர். அப்படித்தானே?
நீங்கள் பெரிதும் பிடிக்கும் என்று சொன்ன மோகன்லால் நரசிம்மம் படத்திற்கு பின் நடித்தது நடித்துகொண்டிருப்பது எல்லாம் மீசை பிரித்து வந்த Larger than Life ரோல் தானே, இடைக்கு அத்தி பூத்தார் போன்று வந்த தன்மாத்ரா மற்றும் பரதேசியை தவிர. “போடா மோனே தினேசா” விட ஒரு செயற்கையான வசனம் இருக்கிறதா என்ன?

இன்னொன்றும் சொல்ல்யிருக்கிறீர்கள். வெகு ஜன பத்திரிக்கையில் எழுத சொன்னால் அந்த வாசகர்களுக்கு தகுந்த மாதிரி எழுதி தருவேன் என்று. அப்போது சூழலுக்கு தகுந்த மாதிரி உங்கள் எழுத்தை மாற்றி கொள்வீர்கள். அப்படித்தானே? அப்போது எழ்த்து சுதந்திரம்,நவீன இலக்கியம், வணிக நோக்கிலாமல் கருத்தை பதிவு செய்தல் என்ற வார்த்தை ஜாலங்கள் எதற்கு?
 

நீண்ட மின்னஞ்சல் ஆகி விட்டது. இதை படிப்பீர்களா,உங்கள் வலைப்பூவில் இடம் பெறுமா? இல்லை இதற்கு ஏதாவது பதில் வருமா என்று எதுவுமே தெரியாது. என்னை விட சிறப்பாக தங்கள் கருத்துகளை எழதுபவர்களையும் நீங்கள் பார்த்திருக்க கூடும். அந்த தராசில் வைத்து பார்க்கும் போது I may not measure upto your standard. இருந்தாலும் உங்களுக்கு இந்த அஞ்சல் அனுப்பி விட வேண்டும் என்று தோன்றியது அனுப்பி விட்டேன். முழுமையாக படித்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி.

அன்புடன்
 

முரளி 
 


அன்புள்ள முரளி அவ்ர்களுக்கு

உங்கள் கடித்த்தை நீங்கள் விரும்பியதற்கேற்ப முழுமையாகவெ வெளியிடுகிறேன். விவாதத்திற்கான தகுதி என நான் சொன்னது இரண்டே ஒன்று தன்னை முன்வைக்கும் நேர்மை. இரண்டு தன் வாசிப்பு மற்றும் இடம் குறித்த பிரக்ஞை. அதிலிருந்து வரும் தன்னுணர்வு.

உங்கள் கடிதம் ஒரு குறிப்பிட்ட உணர்சியை வெளிப்படுத்துகிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். தங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அப்படிபபட்ட நோக்கமேதும் எனக்கு இல்லை. இக்கட்டுரை முதலில் எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் முன்வைக்கப்ட்ப்ட்டது. அங்கே பெரும்பாலானவர்கள் தீவிர சிவாஜி ரசிகர்கள் அவர்கள் அதை வெறும் கிண்டலாகவே எடுத்துக் கொண்டார்கள். சிலர் என்னை திருப்பிக் கிண்டல் செய்தார்கள். இணையத்தில் வெளியாகியும் நீண்டநாள் அப்படித்தான் அது வாசிக்கபப்ட்டது — விகடன் வரும் வரை.

கேரளம் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது உங்கள் மனப்பதிவு. அதில் ஒன்று மட்டும் உண்மை. வடகேரளம் என்பது ஒரு பழங்குடி மனநிலை நிலவும் ஒன்று. அங்குள்ள அரசியல் கொலைகள் நீண்ட நாள் குடிப்பகை நிலவிய ஒரு சமூகத்தின் எச்சங்கள்.

ஆனால் எல்லாரிடமும் கேரள டிவி சானல்கள் உள்ளன. அவற்றை சாதாரணமாக பார்த்தே நான் சொல்வதை புரிந்துகொள்ள முடியும். அந்த கிண்டல்கள் இங்கே சாத்தியமா, அன்ங்குள்ள எழுத்தாளார்களின் எதிர்வினைகளும் பதிவுகளும் இங்கே சாத்தியமா என சாதாரணமாகவே யோசிக்கலாம்.

இறந்தவர்களை விமரிசிக்கக் கூடாது என்ற கொள்கைக்கே இலக்கியத்தில் இடமில்லை. அது பிதா வழிபாட்டின் ஒரு நம்பிக்கை. சென்ற காலத்தவரே கருத்துகக்ளை உருவாக்கி நமக்கு தந்திருக்கிறார்கள். பிம்பங்களை உருவாக்கி அளித்திருகிறார்கள். அவற்றை உடைக்காமல் நமக்கு சிந்தனை நிகழ முடியாது. வழிபாட்டில் இருந்து சிந்தனை உருவாவதில்லை. அங்கதம் ஒரு வகை உடைப்பு மட்டுமே

அப்புறம் உங்கள் விருப்பம்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபெரியார்-ஒருகடிதம்
அடுத்த கட்டுரைபெரியார் ஒரு கடிதம்