அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் சென்னை வாழ் சமணர்களுடன், சென்னையைச் சுற்றி உள்ள சமணக் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
விளாங்காடுபாக்கம், சென்னை புழல் தாலுகாவில் உள்ள சிறு கிராமம். இங்குள்ள சமணக் கோவிலில், இந்த ஊருக்கு அருகில் உள்ள ஊர்களில் (பெரவள்ளூர், மெதவாயில், வல்லூர்) கிடைத்த பழங்கால சமணச் சிலைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. சம்பத் ஐயர் என்ற சமணரின் முயற்சியால், 1934 ஆம் ஆண்டு, இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் உள்ள மூலவரின் சிலையும் இந்த ஊரிலே கண்டெடுக்கப்பட்டதுதான் .
விச்சூர், பொன்னேரி தாலுகாவில் உள்ள சிறு கிராமம். இங்கு தற்போது புதிதாகக் கட்டப்பட்ட ஆதிநாதர் கோவில் ஒன்று உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த, எண்ணெய் வணிகர்களால் முதலில் கட்டப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் இடம்பெயர்ந்து, வேறிடம் சென்றதும், இக்கோவில் கைவிடப்பட்டு, அருகில் உள்ள ஹிந்துக்களால் “எம்மான் சாமி” என்று வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது 2004-ல், ராஜஸ்தானை சேர்ந்த திகம்பர சமணர்களால் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. நான் போயிருந்தபோது, பூஜை நடந்து கொண்டிருந்தது. நானும் சென்று அமர்ந்தேன். எனக்கு அவர்கள் வேறு மதத்தவர் என்ற எண்ணமே எழவில்லை.
சின்னம்பேடு, பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ள ஊர். சிரவணம்பேடு சின்னம்பேடு ஆக மருவியுள்ளது. பழமையான பார்சுவநாதர் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், முருகன் கோவில் ஆகிய கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள முருகன் கோவில் புகழால், தற்போது சிறுவாபுரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பார்சுவநாதர் கோவில் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பார்சுவநாதரின் இடப்பக்கம் சங்கும், வலப்பக்கம் தாமரையும் காணப்படுவது இங்கு மட்டுமே உள்ள சிறப்பு. முன்பு பெரிய கோவிலாக இருந்துள்ளது. இடையில், கைவிடப்பட்டதால், இங்குள்ள் தூண்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, அருகிலுள்ள, வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டபம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் பெருமாள் கோவிலில், சமண உருவங்களுடன், அந்தத் தூண்கள் இருக்கின்றன.
பெருவயல், பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ள ஊர். இங்குள்ள ஏரிக்கு அருகில் மகாவீரர் சிலை காணப்படுகிறது. தற்போது ஒரு பீடத்தில் சிலை வைக்கப்பட்டு, சிமெண்ட் கூரை போடப்பட்டுள்ளது. இந்த மகாவீரர் சிலை, ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த முதல் சிலை என்று ஒரு சமண நண்பர் கூறினார்.
இந்த ஊர்கள் அனைத்திலும் ஒவ்வொரு ஏரி அமைந்திருக்கிறது.
இவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவை
யு டியூப் காணொளிகள்
விளாங்காடுபாக்கம்
1) http://www.youtube.com/watch?v=ucvH2ojI0IA&feature=plcp
2) http://www.youtube.com/watch?v=0zrGlqz95kk&feature=relmfu
விச்சூர்
1) http://www.youtube.com/watch?v=9wPBCQu7FBI&feature=relmfu
சின்னம்பேடு
1) http://www.youtube.com/watch?v=jBWbClm58fc&feature=relmfu
பெருவயல்
1) http://www.youtube.com/watch?v=6HeJ7HYMNkA&feature=relmfu
விக்கிமப்பியா இணைப்பு சுட்டி
1) விச்சூர் ஆதிநாதர் கோவில்
2) சின்னம்பேடு பார்சுவநாதர் கோவில்
3) பெருவயல் மகாவீரர் சிலை
நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.