பழசி ராஜா

கேள்வி: முதல்முறையா ஒரு டப்பிங் படத்துக்கு வசனம் எழுதறீங்கபோல?

பதில்: ஆமா. உண்மையிலே எனக்கு டப்பிங் வசனம் எழுதறதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அதனால இந்தபடத்தோட சம்பந்தப்பட்டவங்க கேட்டப்ப நான் ரொம்பவே தயங்கினேன். ஆனா இந்தமாதிரி ஒரு பீரியட் படத்தோட வசனங்களை கொஞ்சம் சரித்திரம் தெரிஞ்ச ஒருத்தர்தான் தமிழில செய்ய முடியும்னு நெனைச்சு எங்கிட்ட எனக்கு நெருக்கமானவங்க சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. அதனால ஒப்புக்கொண்டேன். செஞ்சு பாக்கிறப்ப சிறப்பா செய்ய வேண்டிய ஒரு வேலைங்கிற எண்ணம் வந்திருக்கு…இந்த மாதிரி ஒருபடத்தோட ஏதோ ஒருவகையிலே சம்பந்தப்பட்டிருக்கிறது சந்தோஷமா இருக்கு

கேள்வி: பீரியட் படம்னு சொன்னீங்க… சரித்திரப்படமா?

பதி; ஆமா. இது கேரளமண்ணிலே பதினெட்டாம் நூற்றாண்டிலே முதல்முதலில்யே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதுத்து போராடின ஒரு மன்னரோட வரலாறு… வீர கேரள வர்மா பழசி ராஜாங்கிறது அவரோட முழுப்பேரு. ‘வயநாட்டுச்சிங்கம்’ நு அவருக்கு பட்டப்பேருண்டு.    இப்ப உள்ள கோட்டயம் பகுதியிலே மன்னரா இருந்தார். ஆரம்பத்திலே அவர் பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவாத்தான் இருந்தார். திப்புசுல்தானை எதுத்து பிரிட்டிஷ் படைகள் போர்செய்தப்போ அவர் அதுக்கு ஆதரவு தெரிவிச்சார். ஆனா போர் முடிஞ்சதுமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மத்த ராஜாக்கள் மேலே கடுமையான வரிகளைச் சுமத்த ஆரம்பிச்சாங்க. அதுக்கு எதிரா போராடின பழசி ராஜாவுக்கு மத்த ராஜாக்களோட உதவிகள் கிடைக்கல்லை. ஆனாலும் அவர் தன்னந்தனியா நின்னு போராடினார். கட்டாய  வரிவசூலை அவர் எதிர்த்தார். அதனால அவரை பிரிட்டிஷ்காரங்க எதிரியா நினைக்க ஆரம்பிச்சாங்க.

பழசி ராஜா பழைய சிலை

 

லெப்டினெண்ட் கோர்டான்  தலைமையிலே அவரது அரண்மனையை தாக்கி அதை சூறையாடினாங்க. அதுக்குமுன்னாடியே அவர் ஊரைவிட்டு போயிருந்தார். தன் படையோட மலைப்பகுதியான வயநாட்டுக்குப்போய் இன்னைக்குள்ள மானந்தவாடி பக்கம் மலைகளுக்குள்ள முகாமிட்டு அங்க உள்ள ஆதிவாசிகளான குறிச்சியரை ஒண்ணாச்சேத்து ஒரு நல்ல படையை உண்டுபண்ணினார். பிரிட்டிஷார் அவரை பிடிக்க பலதடவை முய்ற்சிசெய்ஞ்சாங்க. முடியலை. அதனாலே அவர்கிட்ட சமாதானம் பேசினாங்க. ஆனா சமாதானம்கிற பேரிலே அவங்க போட்ட நிபந்தனைகளை பழசிராஜா ஏத்துக்கலை. அவர் மலைக்குப்போய் கொரில்லா முறையிலே போராட ஆரம்பிச்சார். அவரோட ஆதரவாளர்களான சுழலி நம்பியார், பெருவயல்நம்பியார், கண்ணவத்து நம்பியார் முதலிய நிலப்பிரபுக்களையெல்லாம் பிரிட்டிஷ்காரங்க பிடிச்சு ஜெயிலிலே போட்டாங்க. 1802லே அவரோட முக்கிய தளபதியான எடச்சேன குங்கன் நாயரும் இன்னொரு தளபதியான தலைக்கல் சந்துவும் சேந்து பனமரம் கோட்டையை கைப்பற்றி 70 பிரிட்டிஷ் துருப்புகளைக் கொன்னாங்க. அது பிரிட்டிஷ்காரங்களை பதற வைச்சுது. மும்பையிலே இருந்து இன்னும் படைகளை வரவழைச்சு அந்த எதிர்ப்பை அழிக்க திட்டம்போட்டாங்க.     

1804லே கர்னல் மாக் லியோட் பழசிராஜாவை பிரிட்டிஷ் எதிரியா அறிவிச்சு தலைக்கு விலை வைச்சார். அவரைப்பற்றி தகவல்களை மறைக்கிரவங்களுக்கும் தூக்குத்தண்டனைன்னு அறிவிச்சார். 1804ல் தலைச்சேரிக்கு சப்கலக்டரா வந்த தாமஸ் ஹார்வி பாபர் பழசிராஜா விஷயத்தை கொஞ்சம் மென்மையா கையாளனும்னு நெனைச்சவர். ஆனால் பிரிட்டிஷ் படைகள் ரொம வெறியோட இருந்தாங்க. 1805 அக்டோபரிலே  தலைக்கல் சந்து பிடிபட்டார். 1805 நவம்பர் 30 ஆம்தேதி பாபரின் படைகள் வயநாடு மலைகளில்கே பழசிராஜாவைச் சூழ்ந்து தாக்கிநாங்க. கடுமையான துப்பாக்கிச்சண்டைக்கு முன்னாடி பழசிராஜாவோட அம்புகளால பெரிசா ஒண்ணும் செய்ய முடியல்லை.  சுட்டுக்கொன்னுட்டாங்க. அதோட அந்த கலகம் முடிவுக்கு வந்தது
 
பழசிராஜாவோட உடலை பாபர் தலைசேரிக்குக் கொண்டுட்டுபோய் உரிய மரியாதையோட அடக்கம்செய்தார். ‘நம்ம எதிரியா இருந்தாலும் அவர் ஒரு பெரிய வீரன்’ அப்டீன்னு தன் மேலிடத்துக்கு அவர் எழுதியிருக்கார். 

பழசிராஜாதான் கேரள சரித்திரத்திலே முதல் முதலா பிரிட்டிஷ் படைகள் கூட போராடினவர். அதுக்குப்பிறகுதான் வேலுத்தம்பித்தளவாய் மாதிரி பலர் வந்தாங்க. இந்திய சுதந்திரப்போராட்டத்தை தொடங்கிவச்ச முன்னோடிகளிலே ஒருவர் அவர்…அவரோட கதைதான் இந்தப்படம்

கேள்வி: அவர்கூட ஆரம்பத்திலே வெள்ளைக்காரங்களை ஆதரிச்சிருக்காரே..

பதில்: உண்மைதான். ஆனா நீங்க பாத்தீங்கன்னா ஆரம்பகட்ட சுதந்திரப்போராளிகள் அத்தனைபேருமே வெள்¨ளைக்காரங்களை ஆதரிச்சவங்கதான். வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி லட்சுமிபாய்… என்ன காரணம்னா வெள்ளைக்காரன் அன்னைக்கிருந்த மத்த ஆக்ரமிப்பாளர்களோட ஒப்பிடுறப்ப அடிப்படையிலே நியாயவான். வெள்ளைக்காரன் படைகள் எங்கயுமே ஜனங்களை நேரடியா தாக்கவோ கொள்ளையடிக்கவோ செய்யலை. அவன் ஆண்ட எடங்களிலே நீதி நிர்வாகத்தை உண்டுபண்ணினான். அதனால நம்ம மன்னர்களிலே யாருக்கெல்லாம் மக்கள்மேலே பிரியம் இருந்ததோ அவங்கள்லாம் வெள்ளைக்காரனை ஆதரிச்சாங்க

ஆனா கொஞ்சம் கொஞ்சமா வெள்ளைக்காரனோட உள்முகம் அவங்களுக்கு தெரிய வந்தது. நேரடியா கொள்ளையடிக்கிறதிலே வெள்ளைக்காரங்களுக்கு ஆர்வம் இல்லை. வரிங்கிற பேரிலே திட்டம்போட்டு கொஞ்சம் கொஞ்சமா ஒட்டுமொத்த ரத்ததையும் உறிஞ்சி குடிச்சாங்க அவங்க. வெள்ளைக்காரன் பெரும்பாலான இடங்களிலே சிற்றரசர்களையும் ஜமீன்தார்களையும்தான் நேரடியா நாடாளவிட்டான். அவங்க கிட்ட இருந்து கடுமையான வரிகளை வாங்கினான். வரிகளை வருஷம்தோறும் கூட்டிக்கிட்டே இருந்தான். ஜமீன்தார்களும் சிற்றரசர்களும் அதுக்காக ஜனங்களை வாட்டி வதக்கினாங்க. ஜனங்கள் பசியாலேயும் பட்டினியாலேயும் லட்சக்கணக்கிலே செத்தாங்க.

உங்களுக்குத்தெரியுமா, இந்திய சரித்திரத்திலேயெ பெரிய பஞ்சங்கள் பிரிட்டிஷ்காரன் ஆட்சிக்காலத்திலே வந்ததுதான். தாதுவருஷப்பஞ்சம்னு கேள்விப்பட்டிருப்பீங்க. தமிழ்நாட்டு ஜனங்களிலே கால்வாசிப்பெர் பஞ்சம் பொறுக்க முடியாம புள்ளைகுட்டிகளோட தங்களை அடிமைகளா வித்துகிட்டாங்க. இன்னைக்கு ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் முதல் இலங்கை, மலேசியா பர்மா பாலி பிஜி எல்லா ஊர்லயும் இருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்தக்காலத்திலே அப்டி போனவங்கதான். பத்தாயிரம் வருஷமா நம்ம நாட்டிலே கொஞ்சம் கொஞ்சமா சேந்திருந்த மொத்த செல்வத்தையும் இருநூறே வருஷத்திலே வெள்ளைக்காரன் கொண்டுபோனான். இன்னைக்கு பிரிட்டனோட களஞ்சியத்திலே இருக்கிற தங்கத்திலே முக்காவாசித்தங்கம் இந்தியாவிலே இருந்து போனது.

அந்தமாதிரி நுட்பமா வெள்ளைக்காரன் நம்மை உறிஞ்சுறாங்கிறத அண்ணைக்குள்ள பெரும்பாலான ராஜாக்களால புரிஞ்சுக்கிட முடியல்லை. புரிஞ்சுகிட்டவங்க எதுத்து போராடினாங்க. மத்தவங்களோட ஆதரவு அவங்களுக்கு கெடைக்கலை. தனியா போராடி அழிஞ்சாங்க. இதான் கதை.

இதிலே பழசி ராஜா ரொம்ப முன்னாடியே பிரிட்டிஷ்காரங்களோட சுரண்டலைப் புரிஞ்சுகிட்டவர். பிரிட்ஜிஷ் ஆட்சி வந்து அப்ப அம்பது அவ்ருஷம்கூட ஆகலை. அப்ப அவன்  இந்தியாவிலே முழுசா பரவலை. சுரண்டல் முழுவீச்சிலே ஆரம்பிக்கவும் இல்லை. இருந்தாலும் அவர் தெரிஞ்சுகிட்டார். அவர் பிரிட்டிஷ்காரன்கிட்டே மோதினதுக்கான காரணம் ஒண்ணுதான். விவசாயிகளுக்குமேலே பிரிட்டிஷ்காரன் போட்ட வரி ரொம்ப அதிகம். கேரளத்திலே அந்தக்காலத்திலே விவசாயம் ஒருபோகம்தான். மத்த நாளிலே வயலிலே குளம் மாதிரி தண்ணி நிக்கும். விளைச்சல் அடிக்கடி வெள்ளத்திலே போயிடும். வெள்ளைக்காரன் போட்டவரி விவசாயிகளைப் பட்டினி போட்டிரும்னு நெனைச்சார் பழசிராஜா.. அதுக்காக அவர் போராடினார்

கேள்வி: இந்தப்படத்தை எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியிருக்கார். அவரை உங்களுக்குதெரியுமா?

பதில்: நான்லாம் எம்.டியோட கதைகளை வாசிச்சு வளந்தவன். நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கிரப்ப அவரோட ‘நாலுகெட்டு’ங்கிற நாவலைப்படிச்சு பித்துபிடிச்சவன் மாதிரி அலைஞ்சிருக்கேன். அவர் என்னோட அபிமான எழுத்தாளர்களிலே ஒருத்தர். 1992லே எனக்கு தமிழ்க்கதைக்கான  கதா விருது ஜகன்மித்யைங்கிற கதைக்காக கிடைச்சப்ப மலையாளத்திலே எம்.டிக்கு அந்த விருது கிடைச்சது. அப்ப இருந்த ஜனாதிபதி சங்கர் தயால் சர்மா அந்த விருதை குடுத்தார். அப்ப டெல்லியிலே ராஷ்டிரபதி மாளிகையிலே எம்.டியைப் பாத்தேன். கொஞ்சநேரம் பேசிட்டிருந்தேன். அப்ப ஒரே புல்லரிப்பா இருந்ததனால சரியா பேசமுடியலை.

எம்டிவாசுதேவன் நாயர்தான் மலையாள சினிமாவோட நம்பர் ஒன் பர்சனாலிட்டி. ஒரு வாட்டி  என்னோட பர்சனல் வெப்சைட்டிலே நான் மலையாளத்திலே உள்ள பெஸ்ட் படங்களை லிஸ்ட் போட்டேன். அதிலே கிட்டத்தட்ட கால்வாசிப்படம் எம்டி திரைக்கதை எழுதின படம். நாப்பது வருஷமா எம்டி உலகத்தரமான படங்களை உருவாக்கிக்கிட்டே இருந்திருக்கார். அவர்தான் மலையாள ரசனையையே உருவாக்கினவர்.

எம்டிவாசுதேவன் நாயர்

இலக்கியத்திலேயும் அவர் பிதாமகர் மாதிரி. ஞானபீடம் முதல் அவர் வாங்காத விருது கெடையாது. இன்னைக்கும் மலையாளத்திலே மிகப்பிரபலமான சீரியஸ் இலக்கியவாதி யார்னா அது எம்.டிதான்.

ஹரிஹரன் மலையாளத்திலே மிகப்பெரிய டைரக்டர். நாப்பது வருஷமா ·பீல்டிலே வெற்றிகரமா இருக்கிற டைரக்டர். மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்ஸ் குடுத்திருக்கார். மறுபக்கம் தேசிய விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் அள்ளிய பல கலைபப்டங்களையும் எடுத்திருக்கார். அவரோட சரபஞ்சரம்ங்கிற சண்டைபப்டத்தை நான்லாம் காலேஜ் நாட்களிலே வெயிலிலே கியூவிலே நின்னு சண்டை போட்டு பாத்திருக்கேன். அவரோட பெஸ்ட் படம்னா பரிணயம்ங்கிற படத்தைத்தான் சொல்வேன். அற்புதமான ஒரு காவியம் அது.

எம்டிக்கும் ஹரிஹரனுக்கும் சமவயசு. ரெண்டுபேரும் நெருக்கமான நண்பர்கள். எம்டி எழுதி ஹரிஹரன் எடுத்த பல படங்கள் கேரளத்தை உலுக்கியிருக்கு. பல படங்கள் உலகம் முழுக்க பரிசுகளை அள்ளியிருக்கு. இந்தப்படம் அந்த வரிசையிலே வருது. என்னோட பங்கு இதிலே ரொம்பக் கொஞ்ச்ம்னாலும் அவங்களொட சேந்து வேலைபாக்கிறது  ரொம்ப சந்தோஷமா இருக்கு.

 

 

கேள்வி: மம்மூட்டியா சரத்குமாரா இந்தபப்டத்திலே ஹீரோ?

பதில்:மம்மூட்டிதான் பழசி ராஜா. அவரோட தோற்றமும் குரலும் கம்பீரமான நடிப்பும் அந்தக் கதாபாத்துரத்தை அப்டி உயிரூட்டமா ஆக்கியிருக்கு. ஒரு செப்பேட்டிலே பழசி ராஜாவொட அசல் தோற்றம் இருக்கு. இப்ப அதைப்பாத்தா அது பழசிராஜானே நம்ப முடியல்லை. அந்த அளவுக்கு மம்மூட்டியோட வடிவம் நம்ம மனசிலே தங்கிடும் . சரத்குமார் மம்மூட்டியோட படைத்தலைவரான எடைச்சேனை குங்கன்நாயர்ங்கிற் கதாபாத்திரத்திலே நடிக்கிறார். சுமன் வில்லன் பழயம்வீட்டு சதுங்கிற ரோலிலே நடிக்கிறார்.

கேள்வி; கனிஷ்கா, பத்மபிரியா ரெண்டுபேரோட கேரக்டர் பத்தி சொல்லுங்க…

பதில்: ரெண்டுபேருமே அழகா இருக்காங்க. பத்மபிரியா குறிச்சியர் குலப்பெண்ணா வராங்க. கனிஷ்கா அரசகுலப்பெண். அரச உடையிலே கன்ஷ்காவைப்பாக்க இன்னும் அழகா இருக்கு. கதாபாத்திரங்கள் கொஞ்சம் சஸ்பென்சா இருக்கட்டுமே…

 

 

 

 

 

கேள்வி; பொதுவா இந்தமாதிரி படங்கள் ஒரு வகையான டாகுமெண்டரியா ஆகிடறதுக்கான வாய்ப்பிருக்கு இல்லியா?

பதில்; இந்தப்படம் அப்டி இல்லை. இது பழசி ராஜாவோட வாழ்க்கையிலே இருக்கிற உணர்ச்சிகரமான  சந்தர்ப்பங்களை காட்டுற படம். ரொம்ப டிரமாட்டிக்கான படம். பெரும் பணத்தை அள்ளி இறைச்சு எடுத்திருக்காங்க. அதனால சரித்திரத்திலே சுத்தமா ஆர்வமே இல்லாதவங்க கூட ஜாலியா ரசிச்சுபாக்கிற மாதிரித்தான் இருக்கு படம். வெள்ளைக்காரங்க கூட பழசிராஜாவுக்கு ஏற்படுற மோதலிலே படம் ஆரம்பிச்சு உச்சகட்ட நாடகத்தனத்தோட மேலே போய்ட்டே இருக்கு…

கேள்வி:வடக்கன் வீரகதா மாதிரியா?

பதில்;ஆமா. அதுவும் ஹரிஹரன் எம்டி டீம் எடுத்த சரித்திரப்படம்தான், ஆனா மிகப்பெரிய எண்டர்டெயின்மெண்ட் மூவியா இருந்தது. தமிழ்நாட்டிலேகூட அந்தப்படம் ரொம்பநல்ல ஓடிச்சு. இதுவும் அதே மாதிரித்தான். அதில உள்ள பல காட்சியமைப்புகளைக்கூட நினைவிலே வச்சுகிடறவங்க இருக்காங்க. குறிப்பா மாதவி அலங்காரம் பண்ணிக்கிற காட்சி. மம்மூட்டி குதிரையிலே வங்களை தேடிவாற காட்சி. ஹரிஹரன் எப்பவுமே அபாரமான காட்சியமைப்புகளை எடுக்கிறதிலே பெரிய திறமைசாலி

 

கேள்வி: இளையராஜாதானே மியூசிக்?

பதில். ஆமா. ராஜாவுக்கு ஒரு தனித்திறமை உண்டு. அவரால இசைவழியா பண்பாட்டுக்கு உள்ளே போயிட முடியும். பல வருஷங்களுக்கு முன்னாடி மலையாளத்திலே அதர்வம்னு ஒரு மாந்த்ரீக படம் வந்தது. அதிலே ராஜா தான் இசை. அந்த இசையிலே பெரும்பாலான வாத்தியங்கள் கேரளத்துக்கு மட்டுமே உரிய தாளவாத்தியங்கள். ஒரு கேரள இசை தவிர வேற ஒண்ணுமே தெரியாத ஒரு மேதை போட்ட இசை மாதிரி இருந்தது. அதான் அவரோட திறமை

இந்தமாதிரி படங்களுக்கு அந்த களம் பண்பாடு எல்லாம் தெரியாம இசையமைக்க முடியாது. அதுக்கு இப்ப ராஜாவை விட்டா வேற யார்? அதேசமயம் அந்த இசை நம்முடைய தென்னிந்திய இசைமரபிலே கச்சிதமா பொருந்தியும் இருக்கு. அற்புதமான பாட்டுகள் இருக்கு இதிலே. வாலி பாடல்களை எழுதியிருக்கார்.

கேள்வி;படம் ரொம்ப தாமதமாச்சு இல்ல?

பதில்; ஆமா கிட்டத்தட்ட ரெண்டு வருஷம். அதுக்குக் காரணம் இதோட பட்ஜெட்தான். சராசரி மலையாளப்படத்தைக் காட்டிலும் அஞ்சுமடங்கு பட்ஜெட். மிகப்பெரிய ஸ்டார்காஸ்ட். மம்மூட்டி சரத்குமார் சுமன் அப்டின்னு பலர் நடிச்சிருக்காங்க. அப்புறம் நெறைய பிரிட்டிஷ் நடிகர்கள். பெரிய அளவிலே செட்டிங் போட்டிருக்காங்க…

 

 

பழசி நினைவிடம்

கேள்வி; அந்த பட்ஜெட்டிலே எடுத்தா படம் பெரிய அளவிலே போகணுமே

பதில்: ஆமா …உண்மையிலே இது மலையாளப்படம் இல்லை. ஒரு தென்னிந்தியபப்டம். எல்லா தென்னிந்திய மொழிகளிலேயும் படம் போகுது. இந்தியிலேயும் டப் பண்றாங்க. இந்தியா முழுக்க பேசபப்டுற படமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

பேட்டி: திருவட்டர் சிந்துகுமார்

முந்தைய கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிதை–ஒரு கடிதம்