சமணம் ஒரு கடிதம்

அன்பு நிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் எழுத்துக்களை வாசிக்கும் சாதாரண வாசகர்களில் நானும் ஒருவன்.  தங்களின் “சிந்தாமணி” கட்டுரையை படிக்கும் பேறு பெற்றேன். அதில் ” சமண மதத்தினர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தாமணியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் அமைப்புகளை உருவாக்கி அதை முன்னெடுக்க வேண்டும்.” என்ற கருத்தினை வரவேற்கிறேன். நானும்  தமிழை தாய் மொழியாய் கொண்ட பிறப்பால் ஒரு  ஜைனன். பிழைப்புக்காக வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிப்பவன். என்றாலும், மிக குறைந்த அளவிலே (எண்ணிக்கையில்) உள்ள ஆர்வம் மிக்கவர்களிடம்  தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறேன்

எனக்கு ஆச்சரியமான ஒரு விஷயம் கிராமங்களில்  தமிழ் ஜைனர்கள் வீட்டில் காணப்படும் திருத்தக்க தேவர் படத்தை தங்கள் இணையதளத்தில் கண்டதுதான். தங்களின் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்.

 
த.வர்த்தமானன்
சிங்கப்பூர்.

 

 

அன்புள்ள வர்த்தமானன்

நலம்தானே? தங்கள் கடிதம் மகிழ்ச்சியை அளித்தது. எனக்கு எப்போதுமே சமண மதத்தில் ஆழமான ஈடுபாடு உண்டு. இந்தியப்பண்பட்டின்  வளர்ச்சிக்கு சமணத்தின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. உலக மதங்களில் அமைதியின் மதம் என ஏதாவது ஒரு மதம் உண்டு என்றால் அது சமணம் மட்டுமே. இன்றுவரை இந்தியாவில் அமைதியின் அடித்தளம் ஒன்று உள்ளது என்றால் அது சமணத்தின் கொடை. இந்திய மதங்கள் அனைத்திலுமே சமணத்தின் தத்துவ- ஆன்மீகப்பங்களிப்பு உண்டு. குறிப்பாக வட இந்தியாவில் புஷ்டிமார்க்கம் போன்ற வைணவ இயக்கங்கள் தமிழ்நாட்டில் சைவம் போன்றவை சமணத்தின் தாக்கத்தைக் கொண்டவை.

இந்திய இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் சமணத்தின் பங்களிப்பு பிரம்மாண்டமானது. பெஉம்பாலும் எல்லா பிராந்திய மொழிகளும் சமணத்தால்தான் தனித்தன்மையும் வளர்ச்சியும் பெற்றுள்ளன. இந்திய பிராந்திய மொழிகளில் கணிசமானவை சமணர்களால் இலக்கணம் அமைக்கப்பட்டவை. தமிழுக்கு சமணம் இன்றைய இலக்கண வடிவை அளித்தது.

எனக்கு சமண தத்துவங்கள் கோயில்கள் ஆகியவற்றில் கடந்த இருபதாண்டுக்காலமாகவே ஆர்வம் அதிகம். சமண பெரியவர்களுடன் உறவும் உண்டு. தொடர்ச்சியாக பல சமண தலங்களுக்கு நண்பர்களுடன் பயணம் செய்திருக்கிறேன். கர்நாடகமே சமணச் சிற்பக்கலையின் உச்சங்கள் உள்ள இடம்.

தமிழ்நாட்டில் உள்ள சமண தலங்களை பற்றி எழுதியிருக்கிறேன். நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்கள். தமிழக சமணர்களின் மையத்தலமான மேல்சித்தமூர் குறித்து அறிவீர்கள் என நினைக்கிறேன்.  

சமணம் குறித்து ஒரு நூல், குறள் குறித்து ஒரு நூல் எழுதும் எண்ணம் உண்டு.பார்ப்போம்
ஜெ

 

பௌத்த நூல்கள் மொழியாக்கம் 

இந்திய சிந்தனை மரபில் குறள் 5

சிந்தாமணி

முந்தைய கட்டுரைகாந்தியும் அம்பேத்காரும்
அடுத்த கட்டுரைஅஞ்சலி ஏ.பி.சந்தானராஜ்