அனல் காற்று – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

என் நண்பன் பரிந்துரைக்க, நான் தங்களுடையஅனல் காற்றுநாவலைப் படித்தேன்.

 

என்ன சொல்ல ? தங்களின் எழுத்து என்னை வேறு ஓரு உலகுக்கு கொண்டு சென்று விட்டது.  படித்த இரண்டு நாட்களாக அருண், சந்திரா, சுசி இவர்களின் உலகிலேயே இருக்கிறேன். 14ஆவது அத்யாயத்தை படித்த முடித்த அன்று நான் சில நண்பர்களுடன் வெளியே செல்ல நேர்ந்தது….இன்னும் ஒன்றை முடிக்க இயலவில்லையே என்று ஒரு பக்கம்….அருண், சந்திரா, சுசி இவர்களின் ஆட்சி என் மனதில் இன்னொரு பக்கம்சகஜமாக இருக்க இயலவில்லை.  அவ்வளவு பாதிப்பு, தாக்கம் தங்களின் எழுத்துக்கு. பரிந்துரைத்த நண்பனுக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.

 

நாவலைப் பற்றி :

 

தங்களின் சொற்களின் நீர் பரப்பில் ஆழ்ந்து போனேன்ஆழம் அதிகமான சில இடங்களில் தத்தளித்தேன் என்பது உண்மை. சில இடங்களில் நான் சற்று சப்தமாக சிரித்துக்க் கொண்டேன். சில இடங்களில் அழுதேன்.  இப்படி இது வரை என்னில் நிகழ்ந்ததில்லை.

 

சுசி ஆயிரம் அன்னனகளுக்கு சமம் என்று அருண் சொல்லும் இடத்தில் மேலே படிக்க இயலாமல் சிறிது நேரம் தவித்தேன்….எல்லா பெண்களும் பிறக்கும்போதே தாயாய் பிறக்கிறார்கள் என்று மற்றுமொரு இடமும்….இதே நிகழந்தது….

 

நடுத்தர வீட்டில் வீட்டார் இடத்தை தேடுவதும், விருந்தினர் பொருள்களில் சிக்கிக் கொள்வதும் யோசித்துப் பார்க்கையில் எவ்வளவு உண்மை என்றே தோன்றுகிறதுஇப்படி பல இடங்கள்….

 

என்னில் அனலின் கங்குகள் : 14ஆம் அத்தியாயம், அருணின் ஒயா செல் ஃபோன் ஒளிர்தல்கள், ஃபோனை செஸ்டில் வைத்துக் கொள்ளுதல், அருணை இம்சிக்கும் சந்திராவின் அடிக் குரல்…. காற்று வீசினால் மறுபடி பற்றிக்கொள்ளக் கூடும் !

 

உவமைகள் ப்ரம்மிக்க வைத்தன : உறவுகள் நின்று போவதற்கு இளனீரிலிருந்து தண்ணீர் வற்றுதல், உறவுகளும் சதுரங்கமும் இத்யாதி இத்யாதி

 

நாவலின் மையக் கருத்து, அருணின் இந்த வரிகளில் இருப்பதாகவே தோன்றியது எனக்கு :

 

ஏன் எதைப்பற்றியும் கவலைபப்டாமல் எது பிடிக்கிறதோ அதைமட்டும் செய்துகோண்டு செல்லக்கூடாது? எதர்கு இந்த அவஸ்தை? நான் பிரரைப் பயப்படுகிறேனா? ஏன்? இல்லை இது அதுவல்ல. நான் செய்வதை நானே நியாயப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. அப்படி நியாயபப்டுத்திக்கொள்ளத்தான் உலகில் கோடானுகோடி சொற்கள் கணம்தோறும் கொட்டப்படுகின்ரன கோடானுகோடி எண்ணங்கள் கணந்தோறும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 

எதையும் நியாயப்படுத்திக்கொள்ளாமல் பிடித்ததைச் செய்து வாழ்பவர் எவராவது உண்டா என்ன? அது சாத்தியமா? எல்லாருமே ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். ஆனால் மண்ணில் எதையும் நியாயபப்டுத்திவிடலாம். கொஞ்சம் கண்ணீரும் கொஞ்சம் சொற்களும்போதும். ஆனால் நான் நல்லவன் என்று நம்பாமல் மண்ணில் உயிர்வாழவே முடியாது. கால்கீழ் பூமி சவ்வாகக் கிழிந்து பாதாளத்துக்குத் தள்ளிவிட்டுவிடும்.

 

 

(என் மனதில் சுசி மற்றும் சந்திராவுக்கு ஒரு பிம்பம் தோன்றியது

சுசி மற்றும் சந்திராவின் உடலமைப்புகளை வர்ணித்த நீங்கள் அருணைமேன்லிஎன்பதோடு விட்டதற்கு ஏதும் காரணங்கள் உள்ளதோ, தெரியவில்லைகண்ணாடியில் அருண்  தன்னை பல இடங்களில் பார்த்துக் கொள்கிறான்…)

 

நான் இதே கதையை அருண் சுசிசுசி என்று அறற்றுவதுக்கு பதில் சந்திராவின் கோணத்திலோ அல்லது சுசியின் கோணத்திலோ அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். சந்திராவும் அருண் சொன்ன நாவலின் அதே மையக் கருத்தை தான் சொல்லி இருப்பாள் என்று எனக்கு தோன்றியது !

 

சில விஷயங்கள் மட்டும் satrae நெருடலாய் எனக்கு தோன்றியவை :

 

முதல் 3 சேப்டரில், சுசி இரண்டாவது நாளே அருணிடம் புடிச்சிருக்கா என்று கேட்பது

– 15ஆம் அத்தியாயத்தில் சந்திராவும் நவீனும் அருணை பின் தொடர்ந்ததாகச் சொல்வது

நவீனின் பாத்திரம் ஒரு முறையே வருவது…(சந்திரா நவீனுக்கு எல்லாம் தெரியும், ஏற்றுக்கொண்டான் என்று 15ஆம் அத்தியாயத்தில் சொல்லும் பொழுது , அதற்கு வலு சேர்ப்பதர்க்குமுன்பு ஏதாவது சித்தரித்திருக்கலாமே)

இந்த சிறு விஷயங்களை விட, 14ஆம் அத்தியாயத்திலயே முடித்திருந்தால் நான் இன்னும் 10 நாட்கள் சரியாக தூங்கி இருக்க மாட்டேனோ !! (என் நண்பன் ஒருவனுக்கு எப்பொழுதும் சுபமான முடிவுகள் தான் பிடிக்கும்.  படத்தின் கிளைமேக்ஸ் சோகமாக இருந்ததோ, தொலைந்தேன்.  இயக்குனரையும், அருகிலிருக்கும் என்னையும் திட்டித் தீர்த்து விடுவான்எனக்கோ சோகம் ஆழமாய்ப் பதியும் எனும் ரகம்.)

 

மேற்சொன்னவை என் தாழ்மையான கருத்து.

 

 

கடைசியாக, அருண் சொல்வது போல் சில சமயங்களில் மனம் ஏதேதோ சொல்ல நினைத்தாலும் வார்த்தைகள் வெளிப்படும் போதுஎன்ன இதுஎன்று நினைக்க வைக்கக் கூடும்….என் இந்தக் கடிதமும் அப்படித்தானோநான் தங்களின் எழுத்தால் வெகுவாக பாதிக்கப் பட்டேன் என்பதை இப்படித் தவிர எனக்கு சொல்ல வேறு வார்த்தைகள் தெரியவில்லை.

 

அன்புடன்,

செந்தில் குமார்,

ரஸ் அல் கைமா

ஐக்கிய அரபு நாடுகள்

 


அன்புள்ள செந்தில்

அனல் காற்று குறித்த உங்கள் கருத்துக்களைக் கண்டேன். பொதுவாக ஒரு கதையின் முஇவு என்பது விவாதித்து முடிவுசெய்யக்கூடிய ஒன்றல்ல. விவாதிக்க ஆரம்பித்தால் அது முடிவிலாது செல்லும் சாத்தியப்பாடுகள் கோண்டது. ஒருந் அல்ல கதை என்பது அந்த எழுத்தாளனின் மனம் அதில் எங்கெங்கே ஈடுபட்டிருக்கிறது என்பதைச் சார்ந்தது. அது இயல்பாக ஒரு இடத்தைச் சென்றுசேர்கிறது. அதை அவன் மாற்றக்கூடாது. சிலசமயம் அது சரியில்லாமல் இருக்கலாம்,. ஆனால் அதுதான் அது.

பல கோணங்களில் ஒரு கதையைச் சொல்லலாம். அந்த வாசிப்புகளை வாசகன் நிகழ்த்தவேண்டும்/ அதற்கான வாய்ப்புகளை அளிப்பதே நல்ல கதை.

ஜெ

அன்புள்ள ஜெ,
 
உங்களிடம் நான் இக்கதையை படிக்கப்போவதில்லை என்று சொல்லியிருந்தேன். இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து வந்த கடிதங்களைப் படித்தபோது ஒரு கலங்கலான ஓவியத்தைப் பார்ப்பதுபோலவே இருந்தது. படித்துப்பார்த்துவிடுவது என்று உட்கார்ந்து ஒரேமூச்சில் படித்தேன்.

மிகச்சுலபமாக மனதுக்குள் நுழைந்துவெளிவரும் வித்தையை உங்களைவிட யாரும் இப்போது நல்லமுறையில் செய்வதற்கில்லை. உங்கள் குருவிடமிருந்து பெற்ற உளவியல் ஞானம்  மனித மனங்களை கூர்ந்து கவனிக்கப் பெரும் துணைபுரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
 சில இடங்களில் நேரடியாக ஃப்ராய்டின் தத்துவங்கள் வந்திருந்தது என்று நினைக்கிறேன். நீங்கள் அவரது கோட்பாடுகளை பின்னர் ஏதாவது ஒருநான் உரையாடுவீர்கள் என்று நம்புகிறேன்.

எனக்கு இதைப் படிக்கும்போதும், படித்து முடித்தவுடனும் ஒரு பெரும் அமைதியும், ஆழமான மௌனமும் மட்டுமே வாய்த்தது. படிக்கத் தொடங்கியதிலிருந்து இவ்வரியை எழுதும் இந்த நிமிடம்வரை நான் உதடுகள் கூட பிரிக்கவில்லை. பலரும் அனுபவித்ததுபோன்ற பதட்டமோ, அழுகையோ, உணர்ச்சிவசப்பட்ட நிலையோ ஏதும் ஏற்படவில்லை. உணர்ச்சிகள் எல்லாம் மரத்துப்போய்விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு ஆழ்ந்த மௌனம்.

அருண் கதாபாத்திரம் தனக்கான முடிவுகளை எப்போதும் அடுத்தவர்களையே எடுக்கவைத்திருக்கிறது அல்லது நிகழ்வுகளுக்காக காத்திருப்பது ஒரு நுணுக்கமான படைப்பு. சுசியைப்போன்ற பெண்களின் அதீதக்காதல்களின்  சாத்தியம் கேள்விக்குறியதாக இருக்கிறது. சந்திரா கதாபாத்திரம் கல்கியின் “நந்தினி” கதாபாத்திரத்தின் கூறுகளை நினைவுபடுத்துகிறது, தலைகீழாக. அத்தகைய பெண்களின் குணாதிசயம் ஒரேவிதத்தில்தானே இருக்கமுடியும்.

மரணத்தைப்பற்றிய உங்களது கருத்துகளை முழுவதும் ஏற்கும் நேரத்தில், காமம் பற்றிய உங்களது கருத்துகளோடு ஒத்துப்போக்கமுடியவில்லை.

கீழிருக்கும் வரிகள் மொத்தமாக தலைகீழாக இருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய புரிதலில் தவறிருந்தால் தயவுசெய்து திருத்தவும்.

“காமத்தில் சுயசமர்ப்பணம் இல்லை. காமத்தில் தியாகம் இல்லை. காமத்தில் நாம் ஒரு கணம் கூட இல்லாமலாவதில்லை. காமத்தில் நாம் எதையுமே கொடுப்பதில்லை.காமம் ஒரு முடிவிலாத போர். அங்கே வெலவது ஒன்றே இலக்கு என இரு உடல்கள் போராடுகின்றன.”

-ஜெ

காமத்தில்தான் ஒருவன் தன்னிலை இழந்து நிற்க முடிகிறது. அது தெய்வநிலைக்கு மிக அருகில். அந்த அனுபவம் சில நொடிகளின் விரிவு. அந்த தவறவிட்ட அவ்வனுபவக் க்ஷணங்களுக்காகவே மனிதருக்கு காமம் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறது. காமத்தின் ஒரு கணத்திலும் நாம் இருப்பதில்லை. காமத்தில் நாம் தன்னிலைமுதற்கொண்டு அனைத்தையும் இழந்துவிடுகிறோம். காமமெனும் முடிவிலாப்போரில் வெல்வதல்ல இலக்கு ஒருவரிடம் ஒருவர் தோற்றுவிடுவதையே விரும்புவதாகப்படுகிறது.  ஆனால் வெற்றி/தோல்வி மனநிலையில் நிகழ்த்தப்படும் காமத்தில் நீங்கள் சொன்ன அத்தனையும் சாத்தியமே. ஆனால் அது காமத்தை ஒரு சாதாரண உடலனுபவமாக மாற்றிவிடும் சிந்தனை உடையதாகப்படுகிறது. தோற்கத்தயாராக இருக்கும் காமத்தின் நிகழ்வுக்குப்பின் வெளிப்படும் உவகையும், சிரிப்பும், மகிழ்ச்சியும் வெற்றி/தோல்வி மனநிலையில் நிகழ்த்தப்படும் காமத்தில் இருப்பதில்லை. அது ஒரு அகங்காரவெளிப்பாடாக மட்டுமே இருக்கமுடியும்.
 
காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில் நிற்கக் காண்கிறோம் . இந்தவரிகளின்மீது எனக்கு ஒப்புதல் உண்டு. ஆண்களின் காமத்தில் அகங்காரம் நுழைந்தபொழுதே, பருவங்களை மதியாது உறவுகொள்ளும் பழக்கம் தொடங்கியது என்று நம்பும் வகை நான். ஆனால் குற்றவுணர்ச்சியில்லாது நிகழும் காமத்தில் அகங்காரம் காணப்படுவதில்லை. அது இருத்தலின் நிகழ்வாக மட்டுமே நிகழ்ந்துவிடுகிறது.

நான் கற்ற கல்வியும் நான் வாசித்த நூல்களும் என்னை கைவிடுகின்றன என்ற வரிகள் அருணுக்கு அர்ஜுனன் என்ற பெயர் பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணவைக்கிறது.  அவர் உள்ளூர மீண்டும் ஓர் உயர்சாதிப்பெண்ணை விரும்புகிறாரா?   என்ற வரிகள் மனிதமனத்தின் நிதர்சனத்தின் உச்சம்.

எனக்கு கதையின் கடைசி அத்தியாயம் மிகவும் பிடித்திருந்தது. ஏன்? தான் எவ்வித தவறுகளும் செய்யும் சாத்தியம் இல்லை என்று நம்பும் மக்களுக்கு உலகில் சில விஷயங்களை மன்னித்து கடந்துவிடுவதை விட உயர்ந்த ஒன்று எப்படி இருந்துவிடமுடியும் என்ற கேள்வி நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும் என்றே நம்புகிறேன்.
 
அற்புதமான படைப்பென்றாலும், எனக்குத் உங்கள் செவ்வியல்கதைகளில் தென்படும் ஆளுமையின் உச்சம் இதில் தென்படவில்லை. ஒருவேளை இது ஒரு மனதுக்குள் நுழைந்துவெளிவரும் வித்தைக்காட்டும் கதையோ,  இதில் நமது கலாசாரத்தின் ஜீவனில்லையோ, இது மிகவும் அதிகமாக மேற்கத்திய உளவியல் பாணியைக்கையாண்டுள்ளதோ என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை உங்கள் செவ்வியல் கதைகளின்மூலம் எனக்கான ஒரு தனி உலகை நான் சிருஷ்டித்துக்கொள்கிறேன், நிகழ்கால உண்மைகளை மறுக்கிறேனோ என்ற எண்ணமும் இருக்கிறது.

-ராம்

முந்தைய கட்டுரைதிருத்தம்
அடுத்த கட்டுரைபழசி ராஜா