அன்புள்ள ஜெ,
உங்கள் வலைத்தளத்தில் சமீபத்திய யானை பற்றிய பதிவான யானைப்பலி வாசித்த பிறகு உறங்கச் சென்றேன். இரவு தோன்றிய (நிகழ்ந்த?) கனவு இது.
போர்க்களம் போல ஒரு விளையாட்டு மைதானம் அல்லது விளையாட்டு மைதானம் போல ஒரு போர்க்களம். ஒரே ஒரு யானை மைதானத்தில்; சுற்றிலும் நிறைய மனிதர்கள், அவர்களில் நானும் ஒருவன். யானை என்னை கவனிக்கிறது; கவனிப்பதை நான் உணர்கிறேன். யானையின் தும்பிக்கையில் ஒரு பெரிய கல்; என்னை நோக்கி வீசுகிறது. பறந்து வரும் கல்லைக் கவனித்தபடி, நான் அதிர்ச்சியில் செயலற்று நிற்கிறேன். இங்கேதான் ஆச்சர்யம். கல் என்னைத் தாக்கவில்லை. மென்மையாக என்னைத் தொட்டபடி கீழே விழுகிறது. நான் அதிசயித்து, யானையின் நோக்கம் என்னைத் தாக்குவது இல்லை என்பதை உணர்ந்து, வேறு எதனால் என்று குழம்பி யோசித்தபடி, அவ்விடத்திலிருந்து நகரத் தொடங்குகிறேன். இப்போது சுற்றிலும் நிற்கும் மனிதர்கள் என்னை நோக்கிக் கற்களை வீசுகிறார்கள், ஒருவர் பின் ஒருவராக. ஆனால், ஒரு கல் கூட என்னைத் தாக்கவில்லை. நான் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒன்றை உணர்கிறேன்; கற்கள், கால் பந்துகளாக மாறுகிறது. கற்கள் மாறுகிறபோதே மனிதர்களும் மாறுகிறார்கள். வன்மம் விட்டு, கால் பந்து விளையாடுவதில் மும்முரமாகிறார்கள். இப்போது அவர்களுடைய லட்சியம் கால் பந்து மட்டுமே.
காலை எழுந்ததும் இக்கனவை நினைவு கூர்ந்த போது, இரண்டு விஷயங்களைத் தொடர்புறுத்த முடிந்தது. ஒன்று யானை பற்றிய உங்களது பதிவு. இரண்டாவது, ‘ஆழ் நதியைத் தேடி’ கட்டுரைத் தொகுப்பில் நீங்கள் பேசுகிற ‘உன்னதமாக்கல்’ (sublimation). முன்பு போர்க்களங்களில் வெளிப்பட்ட வீரம் இப்போது விளையாட்டு மைதானங்களில் வெளிப்படுவதும், காமம் காதலாக உன்னதமாக்கப்படுவதும் பற்றிய கட்டுரை. கட்டுரையும் யானையும் கலந்து ஒரு கனவு. கட்டுரையை மீண்டும் வாசிக்கத் தோன்றியது; கொண்டுவரவில்லை. சென்னை வந்த பிறகே வாசிக்க வேண்டும்.
‘ஆழ் நதியைத் தேடி’ எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைத் தொகுப்பு. ஆழமும் அழகும் ஒருங்கே கொண்ட கட்டுரைகள், தலைப்பைப் போலவே. அப்புத்தகத்தின் மேல் ஒரு தனிக் காதல் உண்டு எப்போதும்…..கூர்மையும் அழகும் கொண்ட ஓர் இளம் பெண்ணாய் என்னை வசீகரித்த வண்ணமே உள்ளது.
நன்றி,
வள்ளியப்பன்
அன்புள்ள வள்ளியப்பன்,
எனக்கும் கனவுகள் என்னை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வழிமுறையாகவே இருந்துள்ளன. என் கனவுகள் பெரும்பாலும் புனைகதைகளாகின்றன. விஷ்ணுபுரம் கொற்றவை ஆகியவற்றில் உள்ள கனவுகளை வாசகர்கள் எளிதில் சென்றடையமுடியும். கனவை மொழியால் அள்ள முயலும் ஆக்கங்கள் அவை என்பேன்.
அபூர்வமாக வாசிக்கும் கட்டுரைகளையே கனவுகளாகக் காண்பதுண்டு. அக்கனவில் அவை தெள்ளத்தெளிவாக புதிய கோணத்தில் புரியவருவதை ஆழ்மனதின் அற்புதம் என்றே சொல்லவேண்டும்.
ஜெ