‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். இந்து மதத்தைப் பற்றிய உங்கள் பல ஆக்கங்கள் என் மதத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளப் பெரிதும் உதவி இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சில விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெளிவுபடுத்தினால் வசதியாக இருக்கும். உங்கள் இணையதளம் முழுவதும் தேடிப்பார்த்து பதில் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே கேட்கிறேன். நீங்கள் பொதுவாகவே வைதீகம் சம்பந்தப்பட்ட பழக்கங்களைத் தேவையற்றதென ஒதுக்குவதாகவே புரிந்துகொள்கிறேன். கோவில்களை இந்து மதத்தின் குறியீடுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நடக்கும் பூசைகளிலேயோ வழிபாட்டு முறைகளிலேயோ எந்தவிதத் திட்டவட்டமான பயன்களும் இல்லை, ஆனால் ‘அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள், அவை தொன்மங்கள், குறியீடுகள், அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது’ என்பதாகவே நீங்கள் சொல்கிறீர்கள். வீட்டில் சடங்குகளின்போது கடைப்பிடிக்கப்படும் ஆச்சாரங்களைப் பற்றியும் உங்கள் கருத்து இதுவே என நான் நினைக்கிறேன்.

தமிழ்ப் பாரம்பர்ய அறக்கட்டளையில் உங்களுக்கு அடுத்த நாள் பேசிய உமாபதி ஆச்சார்யா பேசும்போது கோவில் கட்டுமானத்தின் அடிப்படை விதிகளின்படி, கோவிலில் எந்த மூலையில் இருக்கும் சக்தி, தரை வழியாகவும், விமானம் மூலமாகவும், நேராக கர்பக்ருஹத்தில் இருக்கும் மூலவருக்கு வருவதாகவும், அதனாலேயே மூலவருக்கு அபிஷேகம் செய்த நீர் விசேஷமானது என்றார். ஜக்கி வாசுதேவின் சில புத்தகங்களில், முன்னாட்களில், கோவிலுக்குப் போன காரணமே, அங்கிருக்கும் சக்தி மூலம் நம்மை recharge செய்து கொள்வதற்கே என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது. ரெய்க்கி நிபுணர்கள் இந்த சக்தியைக் கையாள்வதைப் பெரிதும் பிரபலப்படுத்துகின்றனர். கண்ணுக்குத் தெரியாத இந்த சக்தியை பற்றி, positive energy/negative energy என்பதைத் தாண்டிப் புரியவில்லை. ஒரு ரெய்க்கி நிபுணரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, வீட்டில் நடைமுறையில் இருக்கும் சில ஆச்சார வழக்கங்களும், இந்த சக்தியின் தன்மைகளை அனுசரித்தே அமைக்கப்பெற்றதாகக் கூறினார். உதாரணமாக, எங்கள் வீட்டில் நெய், மற்றும் தயிர்ப்பாத்திரத்தைத் தொடுவதற்கு முன்னரும், தொட்ட பின்னரும், தண்ணீர் விட்டுக் கையைக் கழுவும் வழக்கம் இருந்தது. எந்த ஒரு பயனும் இல்லாத வெற்று ஆச்சாரமாக இது தெரிந்ததால் காலப்போக்கில் இது கை விடப்பட்டது. ஆனால் ஆச்சாரம் என்ற பெயரில் விளக்கம் கூற முடியாத பல பழக்கங்கள் இன்னும் புழக்கத்திலேயே இருக்கிறது. நல்ல நாட்களில் மாவிலை நீர் தெளிப்பது போல.

உங்கள் கருத்துக்கு இவை முரண்பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. அல்லது என் புரிதலில்தான் தவறா? சடங்குகள் எல்லாமே மிஞ்சிப்போனால் வெறும் குறியீடுகள் மட்டும்தானா? எவை பயனுள்ள பழக்கங்கள், எவை ஆழ்ந்த குறியீடுகள், எவை இடைச்செருகல்களான வெற்று வைதீக ஆச்சாரங்கள் என்று பிரித்தறியக் குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்த முடியுமா ?

நன்றி
கோகுல்

அன்புள்ள கோகுல்,

ஒருமுறை நித்யா கீதை பற்றிய விவாதத்தில் சொன்னதை இங்கே நினைவுகூர்கிறேன். கீதை பல யோகங்களாக வளர்ந்து செல்வது. ‘சாங்கிய யோகம் முன்வைக்கும் உலகியல்சார்ந்த விடுதலைக்குப் பல தளங்களுக்கு மேலே உள்ளது மோட்சசன்யாச யோகம். மோட்ச சன்யாச யோகத்தைத் தனக்கான பாடமாகக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ள சாதகனுக்கு சாங்கிய யோகத்தால் என்ன பயன்?’ என ஒரு வினா வந்தது.

‘தனிப்பட்ட முறையில் அந்தச்சாதகனுக்கு சாங்கியயோகம் தேவையில்லை. ஆனால் சாங்கிய யோகம் முதல் விரியும் பதினெட்டு நிலைகளையும் ஒன்றின் பதினெட்டு முகங்களாகப் பார்க்க அவனால் முடியவில்லை என்றால் அவனுக்கு மோட்ச சன்யாசயோகமும் புரியப்போவதில்லை’’ என்றார் நித்யா.

என்னுடைய கருத்துக்கள் இருவகையில் வெளிப்படுபவை என நான் சொல்வேன். ஒன்று, அவை என்னுடைய சொந்த வாழ்க்கை, என் சொந்தப்பயணம் சார்ந்தவை. நான் என் ஆன்மீக நம்பிக்கைக்கு, என் வழிகளுக்கு சடங்குகளை நம்பியிருக்கவில்லை. ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில்லை. எனக்கு பக்திமார்க்கத்தின் சின்னங்களும் குறியீடுகளும் தொன்மங்களும் பக்திமார்க்கம் கூறும் வழியில் தேவையாகவும் இருக்கவில்லை. ஆனால் அவை ஒட்டுமொத்தமாக வகிக்கும் பங்கை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றையும் சேர்த்துத்தான் நான் செல்லும்பாதை உருவாகியிருக்கிறது என உணர முடிகிறது.

ஆகவே நான் ஒரு சந்தர்ப்பத்திலும் அவை ‘தேவையில்லை’ என்றோ ‘பயனில்லாதவை’ என்றோ சொல்வதில்லை. அவ்வாறு நீங்கள் புரிந்துகொண்டிருந்தால் அது பிழை. நேர்மாறாக அவற்றைப்புரிந்துகொள்ளும் கோணத்தில்தான் நிறையவே எழுதியிருக்கிறேன்.

இந்நிலையைப்பற்றி சுவாமி விவேகானந்தர் சொல்லியது நினைவுக்கு வருகிறது ‘நான் உருவ வழிபாடு செய்பவனல்ல. ஆனால் உருவ வழிபாடுசெய்த ஒருவரின் காலடியில் அமர்ந்தே என் ஞானத்தை முழுக்க நான் கற்றுக்கொண்டேன்’ என்றார் அவர்.

நம் மரபில் மாபெரும் ஞானிகளும் யோகிகளும் உருவ வழிபாடு வழியாக, ஆசாரங்கள் தொன்மங்கள் வழியாகவே அந்த நிலையை அடைந்தனர் என்னும்போது அதை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பவனுக்கு என்ன புரிதல் இருக்கமுடியும்? நம்மாழ்வாரையும் நாராயணகுருவையும் விட மேலானவனாக நான் என்னைக் கருதிக்கொண்டால் அதன்பின் எனக்கு என்ன மதிப்பு?

அந்த வழிமுறைகள் என்னுடையவை அல்ல என்பதே என் விளக்கம். ஒருவேளை நான் இன்னொரு காலகட்டத்தில் பிறந்திருந்தால் அவை என்னுடையவை ஆகியிருக்கலாம். இன்னொரு குருமரபை சென்றுசேர்ந்திருந்தால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். நான் வாழும் சூழலும் வாசிக்கும் நூல்களும் என் அடிப்படை இயல்பும் சார்ந்துதான் இந்த வழிமுறையை என்னுடையதாக ஆக்கியிருக்கிறது.

சடங்குகளும் குறியீடுகளும் தொன்மங்களும் இல்லாமல் எந்த மதமும் இல்லை. சொல்லப்போனால் ஒரு தரிசனமானது ஒரு மதமாக நிறுவப்படுவதே அவற்றின் மூலம்தான். ஒரு மதத்தை நம்புவதென்பது அச்சடங்குகள் குறியீடுகள் தொன்மங்களை நம்புவதுதான். அந்த மதத்தின் உள்ளுறையாக உள்ள தரிசனமும் தத்துவமும் அழகியலும் அவற்றில்தான் உள்ளன.

உதாரணமாக நடராஜர் சிலை இல்லாமல் சைவத்தின் பிரபஞ்ச தரிசனத்தை அல்லது சைவசித்தாந்தத்தை அல்லது சைவ அழகியலை உள்வாங்கிக்கொள்ள முடியுமா என்ன? பழங்குடி உள்ளுணர்வில் முளைவிட்டுப் பல்லாயிரம் வருடங்களாக வளர்ந்து கிளைத்து விழுதுவிட்டு வாழும் அனைத்து மெய்ஞானங்களும் தொன்மங்களாகவும் குறியீடுகளாகவும் சடங்காசாரங்களாகவும்தான் நமக்கு வந்துசேர்கின்றன. ஒருபோதும் அவற்றை நிராகரித்துவிடமுடியாது.

அவற்றை எதிர்கொள்வதில் பல கோணங்கள் உள்ளன. அவற்றை அறிவார்ந்த முறையில் அணுகி ஞானமாக உள்வாங்கிக்கொள்வது ஒரு வழி. அதையே நான் செய்ய முயல்கிறேன். அவற்றை நம்பிக்கையுடன் அணுகி அப்படியே நேரடியாக மனத்துக்குக் கொண்டுசெல்வது இன்னொரு வழி. அதையே பக்திநோக்குள்ளவர்கள் செய்கிறார்கள்.அவற்றை நுண்ணிய சடங்குகள் மூலம் அன்றாடச்செயல்களாக ஆக்கி நேரடியாக ஆழ்மனத்துக்குக் கொண்டு செல்வது தாந்த்ரீகர்களின் வழி.

ஒட்டுமொத்தமாக சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் குறியீடுகள் அனைத்தையும் சேர்த்து விக்ரகம் என்று சொல்வது மரபு. இப்படிச்சொல்லலாம். ஞானத்தின் வழி விக்ரகத்தை நம் மனதின் மேல்பகுதியான ஜாக்ரத் தளத்துக்கு கொண்டு செல்கிறது. பக்தியின் வழி அதை அடுத்த தளமாகிய ஸ்வப்னத்துக்கு கொண்டுசெல்கிறது. தாந்த்ரீகர்கள் அதை நேராக சுஷுப்தியுடன் உரையாடச்செய்யமுடியுமா என பார்க்கிறார்கள்.

ஆகவே விக்ரகங்கள் முதன்மையாக தாந்த்ரீகர்களுக்கே உரியவை. நம்முடைய சிலைகளும் வழிபாட்டுச்சடங்குகளும் புராணங்களும் பெரும்பாலும் தாந்த்ரீகத்தால் உருவாக்கப்பட்டவை. நம்முடைய சிற்பமரபுக்கு தாந்த்ரீகத்துடன் நெருக்கமான உறவுண்டு. சிற்பிகளும் தச்சர்களும் இன்றும்கூட பல தாந்த்ரீக மறைச்சடங்குகளைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த மூன்று போக்குகளும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை அல்ல. சொல்லப்போனால் இந்தப்பிரிவினையே சாத்தியமில்லை என்ற அளவுக்கு அவை ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று வலுப்படுத்தியிருக்கின்றன. ஞானவழியையும் தாந்திரீகவழியையும் ஓரளவு பிரித்துப்பார்க்க முடியும். பக்திவழி என்பது பிற அனைத்தையும் தன்னுள் இழுத்துத் தனக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒருகோணத்தில் பார்த்தால் ஞானமரபின் நூல்களும் தாந்த்ரீக மரபின் சிலைகளும் சடங்குகளும் சேர்ந்துதான் பக்திமரபே உருவாகிவந்திருக்கிறது.

ஞானமரபைப் பொறுத்தவரை தாந்த்ரீகத்தின் சிருஷ்டிகளான விக்ரகங்கள்தான் அவர்களின் ஞானத்தை உள்வாங்குவதற்கும் விவரிப்பதற்குமான குறியீடுகளை அளிக்கின்றன. அவற்றைத் தவிர்த்து ஞானமரபின் எந்த விஷயத்தையும் சொல்லிவிட முடியாது.

சென்ற பதினைந்து நூற்றாண்டுகளாக இந்திய மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மதப்பரிணாமம் என்பது பக்திமரபின் வளர்ச்சிதான். பக்திமரபு தாந்த்ரீகத்தை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது. வழிபாட்டுமுறைகளை நெறிப்படுத்தும் ஆகமங்கள், நிகமங்கள் என்னும் வகையான எல்லா நூல்களும் தாந்த்ரீகஞானத்தை பக்திக்குள் பொருத்திக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவைதான்.

தாந்த்ரீகம் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் வேறுபடக்கூடியது. பலநூறு உள்போக்குகள் கொண்டது. ஆகவே ஆகமங்கள் பெருகின. அவற்றை ஒன்றாகத் தொகுத்துப் பொதுநூல்களாக ஆக்கிக்கொண்டே இருந்தனர். இவ்வாறாக மைய ஆகமங்களும் துணை ஆகமங்களும் உருவாகின.

தாந்த்ரீக மரபு உருவாக்கிய பல்லாயிரம் குறியீட்டுச்சிலைகளும் ஆசாரங்களும் ஆகமங்கள் வழியாக பக்திமரபுக்குள் வந்தமர்ந்தன. தாந்த்ரீக தெய்வங்கள் பெரும்பாலும் பழங்குடி மரபில் உருவாகி தாந்த்ரீகத்தால் எடுத்துக்கொள்ளப்படுபவையாக இருக்கும்.பழங்குடி வழிபாட்டுமுறையில் இருந்தே தாந்த்ரீகம் முளைத்தது என்பதே அதற்கான காரணம். குமரிமாவட்டத்தில் மலைக்குடிகள்தான் தாந்த்ரீகவழிபாடுகளைச் சென்ற பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவர்களுடைய குளிகன், மாதி போன்ற மலைத்தெய்வங்கள் சென்ற நூறாண்டுகளில் தாந்த்ரீகம் வழியாக பக்தி மரபுக்குள் வந்துவிட்டன. இன்றுகூட இந்தச்செயல்பாடு நடந்துகொண்டே இருக்கிறது.

இங்கே முக்கியமான சிக்கல் ஒன்று நிகழ்கிறது. நீங்கள் கேட்கும் கேள்விக்கு அடிப்படையான நம்பிக்கைகள் பிறக்கும் புள்ளி என்பது இதுவே. தாந்த்ரீக மரபு என்பது மூடுண்டது. அதை நூல்கள் வழியாக அறியமுடியாது. குருமரபாகவே அதன் ஞானம் பகிரப்படுகிறது. மிக நுட்பமான சடங்குச்செயல்பாடுகள் மற்றும் யோகவழிமுறைகள் கொண்டது அது. எல்லாவற்றையும் குறியீடாக ஆக்கிக்கொள்ளமுயல்வது அதன் வழிமுறை. தாந்த்ரீக மரபை முழுமையாகப் பின்பற்றுபவர்கள் அதற்கான தகுதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது அம்மரபிலேயே தலைமுறைகளாக வாழ்பவர்கள் மட்டுமே.

நேர்மாறாக பக்தி மரபு அனைவருக்கும் உரியது. சொல்லப்போனால் பெரும்பாலும் லௌகீகத்துக்கு அப்பால் ஏதுமறியாத எளியமக்களால் ஆனது. தாந்த்ரீக மரபை பக்திமரபு உள்வாங்கிக்கொள்ள முயன்றபோது தாந்த்ரீக மரபின் குறியீடுகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களுமெல்லாம் எளிமைப்படுத்தப்பட்டன.பக்தி சார்ந்த விளக்கங்களுக்கு ஆளாயின. லௌகீகமான அர்த்தங்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் தாந்த்ரீகத்தை பக்தியால் விளக்கும் இந்தப் போக்கு நிகழ்ந்து வருகிறது. மிகச்சிறந்த உதாரணம் திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். அந்த மூல ஆக்கங்கள் சென்றகால தாந்த்ரீகமரபைச் சேர்ந்தவை. அவற்றின் பெரும்பகுதி எவருக்கும் பொருள்புரியாதபடி மூடுண்டது. திருமந்திரத்தின் இரண்டாம் இருநூறுபாடல்களில் பெரும்பாலானவை மர்மமானவை. சித்தர்பாடல்களில் கம்பிளிச்சட்டைநாயனார் போன்றவர்களின் பாடல்கள் நமக்கு என்னவென்றே தெரியாதவை. அவற்றை எல்லாம் பக்திநோக்கில் மிகமிக எளிமைப்படுத்திப் பொருள்கொண்டு இந்த உரைகள் எழுதப்பட்டுள்ளன.

இவற்றில் மிகச்சிறந்த உரைகள் தாந்த்ரீக விக்ரகங்களைக் குறியீடுகளாகக் கண்டு அக்குறியீடுகளுக்கு பக்தி சார்ந்த பொருளைக் கொடுக்கின்றன. அவற்றைக் கவித்துவமாக விரிக்கின்றன. ஆனால் பெரும்பாலான உரைகள் அற்ப லௌகீக அர்த்தங்களை அந்நூல்களுக்கு மேல் ஏற்றுகின்றன. லௌகீகபக்தியில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு விஷயமும் லௌகீகமாக அர்த்தம் அளித்தாகவேண்டியிருக்கிறது. ஆகவே இது நிகழ்கிறது.

உதாரணமாக, தாந்த்ரீக மரபு பிரபஞ்சத்தின் ஆதாரவிசை எதுவோ அது பிரபஞ்சத்தின் எல்லா அணுவிலும் இருக்கும் என்றது [அண்டத்திலுள்ளது பிண்டத்திலும்]. நாம் அறியக்கூடிய, நாம் கையாளக்கூடிய பிரபஞ்சத்துளி நம் உடல் தான். ஆகவே நம் உடலைப் பிரபஞ்சத்தின் அலகு என எடுத்துக்கொண்டு அதைப் பிரபஞ்சமாக அறிய முயன்றது. நம் உடலை இயக்கும் விசைகளை அது உருவகித்துக்கொண்டது.

முதல்பெரும் விசை, உயிர்க்குலத்தை இயக்கும் ஆதார விசை, உயிரின் நீட்சிதான். அதாவது காமம். அதை மூலாதாரம் என்ற புள்ளியாக உருவகித்துக்கொண்டது. ஒரு பருப்பொருள் இன்னொரு பருப்பொருளை உருவாக்குகிறது. அந்த விந்தையில் உள்ளது பிரபஞ்சவிசையின் முதன்மையான ரகசியம்.

அடுத்த விசை பசி. ஒரு பருப்பொருள் இன்னொரு பருப்பொருளை அழித்துத் தானாக ஆக்கிக்கொள்கிறது. அதில் உள்ளது இரண்டாவது பிரபஞ்ச ரகசியம். அதை சுவாதிஷ்டானம் என்றார்கள்.

பருப்பொருள் நுண்மையான உயிராற்றலால் செயல் வடிவமாக ஆவது இன்னொரு ரகசியம். அதைப் பிராணசக்தி என்றார்கள். அதை மணிபூரகம் என்று அடையாளப்படுத்தினார்கள். பருப்பொருட்கள் எல்லாம் சிந்தனையாக, எண்ணங்களாக மாறுவது அடுத்த ரகசியம். இப்படிப் பல விசைகளை உருவகித்தனர்.

இவ்விசைகள் மையங்களை உடலில் உருவகித்தனர். இந்த உருவகங்களை தாந்த்ரீக மரபு விரிவாக்கிக்கொண்டே சென்றது. அவற்றைத் தாமரைகளாகவும், சக்கரங்களாகவும், சுழிகளாகவும் உருவகித்திருக்கின்றனர். அவற்றை ஆலயங்களாகவும், தெய்வங்களாகவும் உருவகித்திருக்கின்றனர். அவற்றுக்கான நிறங்கள், ஒலிகள் உருவகிக்கப்பட்டன. அவற்றுக்கான சொற்களும் சின்னங்களும் வகுக்கப்பட்டன. அது தனி ஞானப்பரப்பு.

ஆனால் இது ஆயுர்வேதம்போல அல்லது சிற்ப சாஸ்திரம் போல ஒரு புறவயமான அறிவியல் அல்ல. இது குறியீடுகள் மூலம் பரிமாறப்பட்ட ஒரு அகவய ஞானம் மட்டுமே. அதை அக்குறியீடுகள் மூலம் சென்றடைய முடியாது. அதை குருமுகத்தில் இருந்து கற்று கடைப்பிடிக்கப்படும் அனுஷ்டானங்கள் மூலமே அறியமுடியும். அவ்வாறு அறிவதற்கு இந்தக்குறியீடுகள் உதவிசெய்யும் , அவ்வளவுதான்.

ஆனால் இந்த ஞானம் பக்தித் தளத்துக்கு வந்தபோது இதை சர்வசாதாரணமாக எல்லாரும் விளக்க ஆரம்பித்தார்கள். கையால் தொட்டுப்பார்த்து உடலில் இருக்கும் மூலாதாரத் தாமரையை அறிந்தேன் என்று சொன்னவர்களை நான் கண்டிருக்கிறேன். மலச்சிக்கலுக்குக் கூட ஒரு சக்கரத்தை நோக்கி ஒரு மந்திரத்தை ஜெபித்தால்போதும் என்று அறிவுரைகூறுபவர்களைக் காணநேர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக, நுட்பமான குறியீடுகளாகவும் தியான உருவகங்களாகவும் சொல்லப்பட்டவை அனைத்தும் அப்படியே நேர்ப்பொருள் கொண்டு புரிந்துகொள்ளப்பட்டன.

தாந்த்ரீக ஞானமரபு அனைவருக்கும் உரியதல்ல. எப்போதும் அப்படி இருந்ததில்லை. அது தன்னுடைய அறிவு மற்றும் அர்ப்பணத்தால் தனக்கான குருவை தேடிக்கொண்டு, அதையே வாழ்க்கையாகக் கொள்ளும் மிகச்சிலருக்கு மட்டுமே உரியது. அவர்களின் இயல்பும் எல்லைகளும் அறிந்து குருவால் கற்பிக்கப்படுவது. ஆனால் இன்று அம்மரபு அனைவருக்கும் உரியதாக பிரம்மாண்டமாகப் பிரச்சாரம் செய்யப்படும்போது அனைவருக்கும் புரியக்கூடிய எளிமையான லௌகீகமான நேர்ப்பொருள் கொடுத்தாகவேண்டியிருக்கிறது.

அதை அரைகுறையாகப் புரிந்துகொள்பவர்கள் மேலும் அதை அரைகுறையாக விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அபத்தமான ஒரு மூடநம்பிக்கையாக இது எங்கும் காணக்கிடைக்கிறது. இன்று டீக்கடைப்பேச்சில் எல்லாம் குண்டலினி என்றும் மூலாதாரம் என்றும் ஆளாளுக்கு அளந்துகொட்டுகிறார்கள். அதன் சாராம்சமான ஞானத்தேடலைப் பேசவே இடமில்லாமலாகிவிட்டிருக்கிறது.

ஆன்மீகமான அறிதல் என்பது ஓர் அகவய நிகழ்வு. முழுக்க முழுக்க ஆழ்மனம் சார்ந்தது, ஆழ்மனம் கடந்தது. அந்தப் பயணத்தில் குறியீடுகளின் இடமென்பது அளவுகடந்தது. சொல்லப்போனால் குறியீடுகள் வழியாக மட்டுமே சென்றடையக்கூடிய ஒரு நுண்வெளி அது. ஆலய அமைப்புக்கள், சிலைகள், சடங்குகள் போன்றவை எல்லாமே குறியீடுகள்.

இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். குறியீடுகள் வேறு, குழூஉக்குறிகள் வேறு. வெறுமே அர்த்தத்தை அறிந்து கொள்ளுவதற்கான அடையாளங்களே குழூஉக்குறிகள். அவை சிந்தனைசார்ந்தவை. குறியீடுகள் அர்த்தங்களால் ஆனவை அல்ல. அவை தலைமுறை தலைமுறையாக அவற்றின் மேல் ஏற்றப்பட்ட அர்த்தங்களும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் எல்லாம் அடங்கியவை. நேராக நம் ஆழ்மனத்துடன், அதாவது ஸ்வப்னத்துடனும் சுஷுப்தியுடனும், உரையாடுபவை.

அந்த அறிதல் முழுக்கமுழுக்க அகவயமானது. அதன் ஆற்றலும் அகவயமானதே. அதை பக்தித் தளத்துக்குக் கொண்டு வந்து அனைவருக்குமாக விளக்கும்போது புறவயமான ஒன்றாக விவரிக்கிறார்கள். அங்கேதான் நீங்கள் சொல்லும் மனக்குழப்பம் நிகழ்கிறது. புறவயமாக அதை நிரூபிக்கவே முடியாது. ஒரு குறியீட்டின் வல்லமையை அந்த மனநிலைக்குள் வர மறுப்பவருக்குக் காட்டிவிட முடியாது. அந்நிலையில் இந்த ஒட்டுமொத்த ஞானப்பரப்பே வெறும் மோசடி அல்லது மூடநம்பிக்கை என முத்திரைகுத்தப்பட வாய்ப்பாகிறது. இன்று நடந்துகொண்டிருப்பது இதுவே.

இன்று ஆலயங்களில் இருக்கும் ‘ஆற்றலை’ ‘அதிர்வுகளை’ எல்லாம் ஏதோ புறவயமான ஒரு விசையாக விளக்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த ஆற்றலை நவீனக்கருவிகளைக் கொண்டு அளவிடலாமென்றுகூட சொல்லி வருகிறார்கள். இதெல்லாமே பெரும்பான்மையினரின் லௌகீக உலகுக்கு அதற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் வந்து சேரும்போது உருவாகும் புரிதல்பிழைகளே.

இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எங்குமே காணலாம். சாதாரண மனிதர்களுக்கு லௌகீகத்துக்கு அப்பாற்பட்ட எதுவும் புரிவதில்லை. ஒரு கவிதையை எழுதினேன் என்று சொல்லுங்கள், ‘அதுக்கு என்ன குடுப்பான்?’ என்றுதான் கேட்பார்கள். கவிதையை வாசித்தேன் என்று சொல்லுங்கள் ‘நல்லதுதான்…ஜெனரல் நாலெட்ஜ் இருந்தா காம்பட்டிஷன்ஸ்லே நல்ல மார்க் கிடைக்கும்’ என்பார்கள்.

ஞானிகளும் யோகிகளும் இங்குள்ள லௌகீக பக்தியாளர்களால் எப்போதுமே தங்கள் லௌகீக உலகுக்குள் வைத்தே மதிப்பிடப்படுகிறார்கள். ஞானம் என்பதன் முழுமையை அவர்களால் உள்வாங்கவே முடிவதில்லை. ‘அவரு முக்காலமும் உணர்ந்த மகான். முன்னாடி போய் நின்னா பளிச்சுன்னு நம்ம எதிர்காலத்தைச் சொல்லிடுவாரு’ என்பார்கள். தாங்கள் ஞானிகள் என நம்புபவர்களைப்பற்றி அவர்கள் சொல்லும் எல்லா விவரணையும் சோதிடர்களுக்கு அல்லது மந்திரவாதிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கும். ஞானம் தங்கள் லௌகீக வாழ்க்கைக்கு எப்படி லாபகரமாக இருக்கிறது என்பதே அவர்களின் அளவுகோல்.

யோகி என்றால் அவர் அமானுடராக இருந்தாகவேண்டும். யோகி சும்மா இருந்தாலும் விடமாட்டார்கள். ‘சாமி தண்ணி மேலே நடக்கும். காத்தைக்குடிச்சு உயிர்வாழும். கூடுவிட்டுக் கூடுபாயும்’ என்றெல்லாம் விளக்க ஆரம்பித்துவிடுவார்கள். பல துறவிகள் என்னிடம் இந்தப் பொதுமனநிலை அளிக்கும் துன்பங்களைப்பற்றிச் சொல்லி சிரித்திருக்கிறார்கள்.

ஞானமரபை, தாந்த்ரீக மரபை சாமானியர்களின் சாமானிய அறிவு அளவிடும் முறைகள் இவை. அறிவதற்கு விரும்புகிறவர்கள் இவற்றைத் தாண்டிச்சென்றாகவேண்டும்.

ஜெ


யோகமும் பித்தும்

கடவுளை நேரில் காணுதல்

தியானம்


பொம்மையும் சிலையும்

ஆன்மீகம் போலி ஆன்மீகம் மதம்

முந்தைய கட்டுரை‘சயன்ஸே சொல்லுது!’
அடுத்த கட்டுரைகொற்றவையும் சன்னதமும்